Photo, AFP, Saudigazette
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக் காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக்கூட்டத்தில் இணைய வழியாக உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் செயற்திட்டம் ஒன்று வகுக்கப்படும் என்றும் இவ்வருட இறுதிக்குள் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கத்தைப் பெறுவதற்கு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பதற்கு தயங்குவதன் காரணத்தினால் தன்னால் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக்காண முடியாமல் இருப்பதாகவும் கூட அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வைக் காண்பதற்கு தமிழ் கட்சிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்லாத – சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிபந்தனைகளின் வழியிலான – அரைகுறைத் தீர்வொன்றுக்கு தமிழர்களின் பிரதிநிதிகளினால் இணங்கமுடியாது என்பதே அடிப்படைப் பிரச்சினை.
தமிழ் கட்சிகளிடம் தயக்கம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க இனப்பிரச்சினையின் வரலாற்றில் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தமைக்குப் பிரதான காரணம் சிங்கள பௌத்த மேலாதிக்கப் போக்கும் தென்னிலங்கை கட்சி அரசியலுமே என்பதை தெரியாதவரல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தகைய தீர்வு முயற்சியொன்றின் தோல்விக்கு எதிர்க்கட்சி தலைவராக அவரும் கூட பெருமளவுக்குப் பொறுப்பாக இருந்தார்.
1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொண்டிருக்கும் விருப்பத்துக்குத் தடையாக இருக்கும் சக்திகளையும் விக்கிரமசிங்க தெளிவாக அறிவார்.
அதனால் அரசியல் தீர்வைக் காணமுடியாமல் இருப்பதற்கு தமிழ்க்கட்சிகள் பின்னடிப்பதாக அவர் காரணம் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு காலங்காலமாக முட்டுகட்டையாக இருந்து வந்திருக்கும் தென்னிலங்கை சக்திகளையும் அவர் தனது மேதின உரையில் குறிப்பிட்டிருந்தால் ஒரு பொருத்தப்பாடு இருந்திருக்கும்.
என்றாலும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று சர்வதேச சமூகத்தின் முன்னால் அரசாங்கம் தங்கள் மீது பழியைச் சுமத்திவிடக்கூடாது என்பதற்காக தமிழ்க்கட்சிகள் தற்போது ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்று கடந்து போய்விட்ட சுமார் பத்து மாத காலத்தில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேசிய சந்தர்ப்பங்களை ஒரு தடவை நோக்குவோம்.
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து முதற் தடவையாக கடந்த வருடம் ஆகஸ்ட் மூன்றாம் திகதி தனது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய அவர், “தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகும். தமிழ் மக்கள் போரின் விளைவான சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தீர்க்கப்படவேண்டிய இனப்பிரச்சினைகளும் உள்ளன. வடக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக சிந்திக்கவேண்டியிருக்கிறது. இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறலாம் என்று நம்புகிறேன். தாய்நாட்டுக்கு வந்து அவர்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
பிறகு மூன்று மாதங்கள் கழித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 க்கு முன்னதாக சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண விரும்புவதாக ஜனாதிபதி கூறினார். தனது முயற்சியில் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு சபையில் அழைப்பு விடுத்த அவர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இன நல்லிணக்கத்துக்கான திட்டத்தை வகுக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்றையும் நியமித்தார்.
அதைத் தொடர்ந்து டிசம்பரில் நாடாளுமன்றக் கட்சிகளின் மகாநாட்டை ஜனாதிபதி கூட்டினார். அந்த மகாநாட்டின் இரண்டாவது சுற்று இவ்வருடம் ஜனவரி 26 இடம்பெற்றது. இரு சுற்றுக்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழ்க்கட்சிகளின் தலைவர்களின் தலைவர்களுடன் தனியாகவும் ஜனாதிபதி இடையில் நான்கு தடவைகள் பேச்சுக்களை நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போதும் முன்னதாக நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டிலும் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் காணப்பட்ட இடைக்கால இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் தமிழ்த் தரப்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தது.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
அவரின் இந்த ‘தைப்பொங்கல் பிரகடனத்துக்கு’ எதிராக சிங்கள தேசியவாத சக்திகள் போர்க்கொடி தூக்கின. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடுபூராவும் மக்கள் செய்த கிளர்ச்சியை அடுத்து சில மாதங்களாக ‘தலைமறைவாக’ இருந்த இந்தச் சக்திகள் மீண்டும் வெளியில் வந்து இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் அந்த அறிவிப்பு எதிர்பார்த்திராத ஒரு வாய்ப்பாக அமைந்தது.
முன்னைய ஜனாதிபதிகளில் எவரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்றே நீங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்று பௌத்த பீடாதிபதிகள் விக்கிரமசிங்கவுக்கு கூட்டாக கடிதம் எழுதினார்கள். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டில் முன்னென்றும் இல்லாத வகையில் பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்துவருகிறார்கள்.
நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவான விக்கிரமசிங்கவுக்கு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆணை கிடையாது என்றும் அவ்வாறு நடைமுறைப்படுத்த விரும்பினால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் மக்களிடம் அவர் ஆணையைப் பெறவேண்டும் என்றும் சிங்கள தேசியவாதிகள் கூறினர்.
ஜனவரி 26 நாடாளுமன்ற கட்சிகளின் இரண்டாவது சுற்று மகாநாட்டில் 13ஆவது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசியல்வாதிகளுக்கு பதிலளித்த விக்கிரமசிங்க பின்வருமாறு கூறினார்;
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது எனது பொறுப்பு. 13ஆவது திருத்தம் 36 வருடங்களாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவருகிறது. அதை நான் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அரசியலமைப்புக்கு புதிய திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் எவராவது தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும்.
“அத்தகைய சட்டமூலம் சபையில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்படுமானால் பிறகு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். அதை நடைமுறைப்படுத்தப்போவதுமில்லை, ஒழிக்கப்போவதுமில்லை என்று இரண்டுங்கெட்டான் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கமுடியாது.”
குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து சில நாட்களுக்குள்ளாகவே புதிய கூட்டத்தொடரை பெப்ரவரி 8 சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து ஜனாதிபதி கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் 13ஆவது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
‘தைப்பொங்கல் பிரகடனத்தைச்’ செய்து ஒரு மாத காலம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு விக்கிரமசிங்கவுக்கு இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒன்று நாட்டின் 75ஆவது சுதந்திரதினம். மற்றையது பெப்ரவரி 8 கொள்கை விளக்கவுரை. கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின தேசிய கொண்டாட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவில்லை. அன்றைய தினம் மாலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அதில் 13ஆவது திருத்தம் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோன்றே கொள்கை விளக்கவுரையிலும் அதைப் பற்றி வாய்திறக்கவில்லை.
தற்போது சிங்கள அரசியல் சமுதாயத்தில் எவரும் 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதில்லை. அது விடயத்தில் சிங்கள பௌத்த சக்திகளையும் மகாசங்கத்தையும் மீறி எதையும் செய்யமுடியாது என்ற நிலை. ஆனால், இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வாக அந்த திருத்தம் அமையாவிட்டாலும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளின் முதற்படியாக அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுவில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
இத்தகையதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் அதாவது ஏழு மாதங்களுக்குள் அரசியல் தீர்வொன்றைக் காண சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் இணக்கத்தை காண்பது குறித்து மேதினத்தன்று கூறியிருக்கிறார்.
முதலில் ஜனாதிபதி அழைத்துப் பேசவேண்டியது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையை தோற்றுவிக்க மகாசங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியில் ஓரளவுக்கேனும் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காமல் வருட இறுதிக்குள் தீர்வு காண்பது பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.
தென்னிலங்கையில் அத்தகைய ஒரு கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதுடன் தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்பு மற்றும் கலாசார ஆக்கிரமிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையைத் தோற்றுவித்த பிறகு தமிழ்க்கட்சிகளை மீண்டும் பேச்சுக்கு அழைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். தற்போது தமிழ்க்கட்சிகளுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்தரமாக தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளையும் ஜனாதிபதி செய்தால் தனது முன்னெடுப்புகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக அமையும்.
வீரகத்தி தனபாலசிங்கம்