Photo, Twitter
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் கட்டங்கட்டமாக முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு ஒரு மாதம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த இரு தேசிய முக்கியத்துவமுடைய சந்தர்ப்பங்களில் அது பற்றி மீண்டும் எதுவும் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொண்டார். ஒன்று, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று மாலையில் தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரை. மற்றையது, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை.
ஜனாதிபதியின் தைப்பொங்கல் அறிவிப்பை அடுத்து உடனடியாகவே கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டன. இலங்கை அதன் வரலாற்றில் கண்டிராத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியை அடுத்து சில மாதங்களாக ‘தலைமறைவாக’ இருந்த இந்த சக்திகள் மீண்டும் வெளியில் வருவதற்கு வாய்ப்பான தருணத்துக்கு காத்திருந்தன. ஜனாதிபதியின் அறிவிப்பு அவர்களுக்கு எதிர்பார்த்திராத ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இந்த சிங்கள தேசியவாத சக்திகள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை செய்வதுடன் அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கிடையாது. ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் ஆணையைப் பெற்ற பின்னரே அதை அவரால் செய்யமுடியும் என்றும் கூறின.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முன்னைய சகல முயற்சிகளுக்கும் எதிராக கிளம்பிய தென்னிலங்கை சக்திகளின் ‘முன்னரங்கப் படையாக’ விளங்கிவந்திருக்கின்ற வரலாற்றைக் கொண்ட மகாசங்கமும் விக்கிரமசிங்கவின் அறிவிப்பை கடுமையாக எதிர்க்கின்றது. முன்னைய ஜனாதிபதிகள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அவர்களைப் போன்றே இது விடயத்தில் நீங்களும் நடந்துகொள்ளவேண்டும் என்று அவரிடம் பௌத்த பீடாதிபதிகள் கூட்டாக கடித மூலம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
விக்கிரமசிங்க கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொலிஸாருடன் மல்லுக்கட்டிய வண்ணம் 13ஆவது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
13ஆவது திருத்தத்தை ஆதரிப்பதாக ஏற்கெனவே கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளும் தற்போது கிளம்பியிருக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘அடக்கிவாசிக்கத்’ தொடங்கியிருக்கின்றன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள பௌத்த சக்திகளையும் மகாசங்கத்தையும் மீறி இலங்கையில் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார். தானும் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறிய அவர் அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய எந்த முயற்சியும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரிடம் இருந்து அரசாங்கத்தை அந்நியப்படுத்தும் என்று எச்சரிக்கை செய்தார். தீர்வு காண்பதற்கு பெருவாரியான பிரச்சினைகள் இருக்கும் இன்றைய கட்டத்தில் இந்தத் திருத்தத்தை எதற்காக விக்கிரமசிங்க கையில் எடுத்தார் என்று தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் சிறிசேன சொன்னார்.
முதலில் ஜனாதிபதி சுதந்திரதினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து இணக்கப்பாட்டைக் காண வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டு கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். அந்த முதற்சுற்று மகாநாட்டிலும் பிறகு தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்களிலும் காணப்பட்ட இடைக்கால இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தது. அதனால் சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வைக் காணும் ஜனாதிபதியின் கனவு பலிக்கவில்லை.
ஜனவரி 26ஆம் திகதி நாடாளுமன்ற கட்சிகளின் இரண்டாவது சுற்று மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி அங்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்ட உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்றும் அந்தத் திருத்தம் 37 வருடங்களாக அரசியலமைப்பின் அங்கமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியதுடன் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதுமில்லை, ஒழிக்கப்போவதுமில்லை என்ற ஒரு இடைநடு நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கமுடியாது. அதை ஒழிக்கவேண்டுமானால் அரசியலமைப்புக்கான 22 திருத்தத்தை எவராவது நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரலாம் என்று யோசனையும் கூறினார்.
இது விடயத்தில் தீர்க்கமான அறிவிப்பொன்றை நாடாளுமன்றத்தில் கொள்கை விளக்கவுரையில் செய்வதற்கு வசதியாக கட்சிகள் அவற்றின் யோசனைகளை சுதந்திரதினத்துக்கு முன்னதாக அனுப்பவேண்டும் என்றும் ஜனாதிபதி மகாநாட்டில் கேடடுக்கொண்டார். ஆனால், எந்தக் கட்சியும் அவ்வாறு செய்யவில்லை.
இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி சுதந்திரதின உரையையும் நாடாளுமன்றத்தில் கொள்கை விளக்கவுரையையும் நிகழ்த்தவேண்டியிருந்தது. இரு சந்தர்ப்பங்களிலும் அவர் தனது வழமையான பாணியில் இனப்பிரச்சினைக்குத் தீரவு காணவேண்டிய அவசியம் குறித்தும் வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்து இனநெருக்கடிக்குத் தீர்வு காணப்படும் என்று கூறிய அவர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதிகாரப்பரவலாக்கல் செயன்முறையை உரியமுறையில் நடைமுறைப்படுத்த குறிப்பிட்ட சில சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும்.
மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைப்படுத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படமாட்டாது. மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் குறைந்துள்ளதாக கூறப்படும் மாகாணங்களின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று விளக்கம் அளித்தார்.
13ஆவது திருத்த நடைமுறைப்படுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தனது இரு உரைகளிலும் தவிர்த்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஜனாதிபதி நடந்துகொண்டார். அரசியலமைப்பில் மூன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்து வரும் திருத்தம் ஒன்றின் நடைமுறைப்படுத்தல் பற்றி, (ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாது என்பதை தவிர மற்றும்படி எதையும் செய்வதற்கு சகல அதிகாரங்களையும் கொண்டது என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வர்ணித்த) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இன்று இருப்பவரால் பேசமுடியாத அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஒன்று மாத்திரம் உண்மை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை விக்கிரமசிங்கவினால் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமோ இல்லையோ கடும்போக்கு சிங்கள தேசியவாதிகள் மகாசங்கத்தின் உதவியுடன் சமூகங்கள் மத்தியில் குரோதங்களை தூண்டிவிடும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டு விட்டது.
இதை சாத்தியமாக்கியதில் அரசாங்கத்திற்குள் செல்வாக்குடையவையாக விளங்கும் சக்திகளுக்கு முக்கிய பங்கு நிச்சயமாக இருக்கிறது எனலாம். ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டின் இரு சுற்றுக்களிலும் அவர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தனது திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வேளைகளிலும் மற்றைய பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற வேளைகளிலும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். எந்த பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை.
அதிகாரப்பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கு தனது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று முன்னர் கூறிய மைத்திரிபால சிறிசேன இப்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் சிங்கள கடும்போக்கு தேசியவாதிகளினதும் மகாசங்கத்தினதும் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்து சபையில் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதிகள் அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும் அதற்கு எதிராக பேசியதில்லை. இந்தியாவிடம் இருந்தும் மேற்குலக நாடுகளிடம் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஒரு ஒப்பாசாரத்துக்காகவேனும் அவர்கள் உறுதியளித்தார்களே தவிர எதிர்ப்பை வெளிப்படுத்தியதில்லை. அதற்கு எதிராக முழுவீச்சில் வெளிக்கிளம்பிய ஒரேயொரு முன்னாள் ஜனாதிபதி சிறினேவேயாவார்.
இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க சகல ஜனாதிபதிகளும் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்துகொண்டார்கள் என்று இந்திய தலைநகரில் வைத்தே ஒரு தடவை குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருத்தமானது. தன்னாலும் கூட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதை அவர் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.
கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இனப்பிரச்சினைத் தீர்வுக்காக கடந்த வருட முற்பகுதியில் (மக்கள் கிளர்ச்சிக்கு முன்னதாக) சர்வகட்சி மகாநாடொன்றைக் கூடியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அவர் கூட 13ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாகக் கூறவில்லை. மாறாக அதில் உள்ள தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடுகள் இருப்பதாகவே அவர் கூறினார்.
தமிழ் தலைவர்கள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட முன்னைய ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதே வரலாறு. இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட காரணத்தினால் மாத்திரமே 13ஆவது திருத்தத்தில் அரசாங்கங்கள் கைவைக்கவில்லை. இப்போது 37 வருடங்கள் கழித்து அதை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளியிட்டதை அடுத்து அதற்கெதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதையும் கூட விட்டுவைக்கக்கூடாது என்று சிங்கள தேசியவாத சக்திகளும் மகாசங்கமும் கூறுகின்ற நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
13ஆவது திருத்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான விடயம் என்னவென்றால், அது நாட்டைப் பிளவுபடுத்திவிடும் என்று சிங்கள கடும்போக்காளர்கள் கூறுகின்ற அதேவேளை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்று ஆரம்பத்தில் இருந்து கூறிவருவதேயாகும். சமஷ்டி அடிப்படையிலான – நிலைபேறான அரசியல் தீர்வொன்றை நோக்கிய பயணத்தில் ஒரு முதற்படியாக 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே அந்தக் கட்சிகளின் நிலைப்பாடு.
ஜனாதிபதி கூறியதைப் போன்று 13ஆவது திருத்தத்தை ஒழிக்க அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தனிநபர் சட்டமூலமாக எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கொண்டுவரும் சாத்தியமில்லை. ஏனென்றால், அத்தகைய முயற்சி இந்தியாவுடனான உறவுகளில் நெருடலை ஏற்படுத்தும் என்பதே பல அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. தற்போது தென்னிலங்கையில் கிளம்பியிருக்கும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியா எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
அண்மையில் கொழும்பு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது 13ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்தாமல் இருப்போரிடம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கமுடியும் என்று கேட்டார். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கொழும்பிடம் புதுடில்லி 37 வருடங்களாக வலியுறுத்தியும் எந்த நகர்வையும் காணமுடியவில்லை.
அமெரிக்க தமிழர் நடவடிக்கைக் குழு (USTAG) ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரு படங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. 1957 செல்வா – பண்டா ஒப்பந்தத்தை எதிர்த்து அன்று பிக்குமார் நடத்திய கூட்டமொன்றின் கறுப்பு வெள்ளை படமும் கடந்தவாரம் பிக்குமார் நாடாளுமன்றத்துக்கு வெளியே 13ஆவது திருத்தத்தின் பிரதிகளை எரித்ததைக் காண்பிக்கும் வண்ணப் படமும் அதில் பதிவாகியிருந்தன.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளுக்கு எதிரான பிக்குமாரின் எதிர்ப்பைப் பொறுத்தவரை 66 வருடங்களுக்கு முன்னர் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையில் உள்ள ஒரேயொரு வித்தியாசம் படங்களின் நிறமே தவிர, வேறு எதுவும் மாறவில்லை என்ற கருத்து அந்த படங்களுக்கு மேலாக பதிவாகியிருந்தது.
வீரகத்தி தனபாலசிங்கம்