“சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு” என்ற தலைப்பிலான கவிதை நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிங்களப் பொருளை கூறுவதற்கு அப்பெண்மணி முயற்சித்தார். “சிறையிலிருந்து சிங்கள சகோதரர்களுக்கு”, எனது மகன் சிறையிலிருக்கும் பொழுது 2017ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் இது…” கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா பவளவள்ளி அம்மா இப்படிக் கூறுகிறார். அவருடைய மகன் சிறையிலிருக்கும் பொழுது 2017ஆம் ஆண்டு எழுதிய கவிதைப் புத்தகத்தை அவர் கையில் வைத்திருக்கிறார்.

அவருடைய மகனான சதீஸ்குமார் சுமார் பதினைந்து வருடங்களுக்கும் மேல் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

“எனது மகன் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். இப்பொழுது 15 வருடங்கள் கடந்து சென்றுள்ளன. ஆனால், இதுவரையில் எமக்கு நியாயம் வழங்கப்படவில்லை. வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மகன் மீது குற்றம்சுமத்தப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் மேன்முறையீடு செய்தோம். மேன்முறையீட்டு நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்தது. அதற்கும் நாங்கள் இப்பொழுது ஒரு மேன்முறையீட்டை முன்வைத்திருக்கிறோம். கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருக்கிறது” என்கிறார் பவளவள்ளி அம்மா.

“நான் கேட்பது ஒரேயொரு விடயத்தைத்தான். இப்பொழுது சுமார் 16 வருடங்கள் கடந்திருக்கின்றன. எனது மகனை விடுவியுங்கள்…”

ஓர் அரசியல் கைதியான சதீஸ் சிறையிலிருந்து கொண்டே கவிதை மற்றும் சிறுகதை என நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

  • இரும்புக் கதவுக்குள்ளிருந்து – (கவிதைகள் 2012)
  • விடியலைத் தேடும் இரவுகள் – (கவிதைகள் 2016)
  • சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு – (கவிதைகள் 2017)
  • வேப்ப மரமும் பவளம் ஆச்சியும் சிறுகதைத் தொகுதி.

அவ்விதம் நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலமே அவருடைய மகன் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல பல வருட காலம் இந்த அடக்குமுறைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். அவ்விதம் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னமும் சிறைகளில் துன்பம் அனுபவித்து வருகின்றார்கள். போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள இன்றைய நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்கள் கைதுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சதீஸின் தாயார் பவளவள்ளி அம்மா அது தொடர்பாக இவ்விதம் கருத்துத் தெரிவிக்கிறார்:

“இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நபர்களைக் கைதுசெய்வது எந்த அளவுக்கு நியாயமானது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இப்பொழுது ஒரு சிறிய குற்றம் தொடர்பாகவும் கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நபர்கள் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்படுகிறார்கள். அது அநீதியானது என நான் நினைக்கின்றேன்.”

“நான் ஒரேயொரு வேண்டுகோளைத் தான் முன்வைக்கின்றேன். ஜனாதிபதி அவர்களிடமும், நீதிமன்றத்திடமும் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை எமது இறுதிக் காலத்திலாவது பிள்ளைகளுடன் வாழ்வதற்கு எனது மகனை விடுவிக்க வேண்டுமென்பதாகும்.”

செல்லையா பவளவள்ளி அம்மா முன்னர் குருணாகல் பகுதியில் வசித்து வந்தவர். அவர் 1978 இல் கிளிநொச்சிக்குப் போய் அங்கு குடியேறினார். “குருணாகலில் நாங்கள் வசித்த கிராமத்தில் ஒரேயொரு தமிழ் வீடு மட்டுமே இருந்தது. வன்முறை இடம்பெற்ற காலத்தின் போது எமது வீடு இரண்டு தடவைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். அந்த நாட்களில் நாங்கள் கிளிநொச்சியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம்” என தனது கடந்த காலத்தை அவர் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த போதிலும், 15 வருட காலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் தனது மகனை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே எதிர்ப்பார்ப்புடன் இன்று தனது வாழ் நாட்களைக் கழித்து வருகிறார்.

“மகனின் கடைசி காலத்திலாவது அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரை விடுவியுங்கள்” என்பதே அந்தத் தாயின் வேண்டுகோளாகும்.

(கீழே பிரசுரிக்கப்பட்டிருக்கும் விடயம் 15 வருட காலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சதீஸ் சார்பில் நீதிகோரி நிற்கும் செல்லையா பவளவள்ளி அம்மா முன்வைத்திருக்கும் வேண்டுகோளாகும். ஆனால், இது போருக்குப் பிற்பட்ட இலங்கையில் பல வருட காலம் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் கசப்பான யதார்த்தத்தை எடுத்துக் காட்டும் ஒரு விடயமாக உள்ளது.)

எனது பெயர் செல்லையா பவளவள்ளி. பிறந்த இடம் குருணாகல். அங்கு நாங்கள் வாசித்த காலத்தில் 1977 வன்செயலின் போது எங்கள் வீடு இரு தடவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்த ஊரில்  ஒரு தமிழ் குடும்பம் மட்டும் தான் இருந்தது. 1978ஆம் ஆண்டில் அங்கிருக்க முடியாத நிலையில் நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். இங்கு வந்து குடியேறினோம். கிளிநொச்சி மிகவும் நல்ல இடமாக இருந்தது. வாழக்கூடிய ஓர் இடமாக இருந்தது. எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இங்கு வசித்து வந்தோம். அந்த நாட்களில் எமது பிள்ளைகள் பாடசாலைக்குப் போய் படித்தார்கள். இந்தப் பிள்ளைகளால் எங்களுக்கு எந்தக் குறைகளும் இருக்கவில்லை.

அப்படி இருக்கும் பொழுது அரிசி மற்றும் தேவையான சாமான்கள் எல்லாம் கிடைத்தன. இந்த மண்ணில் எதை விதைத்தாலும் நல்ல அறுவடை கிடைத்தது. போக்குவரத்துப் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இங்கு வாழ்ந்தோம்.

இந்தக் காடுகளில் நாங்கள் குடியேறி, வீடு கட்டி வசித்து வந்தோம். எனக்கு ஐந்து பிள்ளைகள். ஒரு மகன் பதினைந்து ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி தேக்கவத்தையில் வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்தார்கள். அவர் இன்னமும் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய பெயர் சதீஸ் குமார். கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியில் ஓர் ஊழியராக வேலை செய்துவந்தார். கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அப்பொழுது அந்தக் குழந்தைக்கு மூன்று வயது. இப்பொழுது அந்தப் பிள்ளைக்கு பதினெட்டு வயது.

முன்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பம் அவருடைய கைதுக்குப் பின்னர் குடும்பம் துன்பங்களை அனுபவித்திருக்கின்றது. எனது மகன் முன்னர் அநுராதபுர சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இப்பொழுது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருக்கிறார். வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாங்கள் மேன்முறையீடு செய்தோம். மேன்முறையீட்டில் அந்தத் தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இப்பொழுது நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மேன்முறையீட்டை முன்வைத்திருக்கிறோம்.

அவர் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்ற விடயம் எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் குற்றவாளி என அரசாங்கம் கூறுகின்றது. அவர் குற்றவாளியல்ல என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுடைய மகன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவரையும் கைதுசெய்வது நியாயமானது என எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு இது எந்த மாதிரியானதொரு சட்டம் என்பது புரியவில்லை. நாங்கள் மக்களுடன் உரையாடும் பொழுது இது எமக்குப் புரிகின்றது. ஒரு சிறிய குற்றத்தைச் செய்தாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று கூறி ஆட்களைக் கைது செய்கிறார்கள், சிறையிலடைக்கிறார்கள்.

நான் அரசாங்கத்திடம், ஜனாதிபதியிடம், நீதிமன்றத்திடம் கேட்கும் விடயம், ‘என்னுடைய மகன் பதினைந்து ஆண்டுகள் சிறையில் துன்பப்பட்டு வருகின்றார், இப்பொழுது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவர் அவருடைய கடைசி காலத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு வழங்க வேண்டும். அதனால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள்.

அவர் சிறையிலிருந்து ஒரு சில புத்தகங்களை எழுதியுள்ளார். “விடியலைத் தேடும் இரவு” என்ற புத்தகம்… “ஹிற கெதற சிட்ட சிங்ஹள சஹோதரயாட்ட”  – “சிறையிலிருந்து சிங்கள சகோதரருக்கு” என்ற தலைப்பில் புத்தகம்… “வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்” என்ற ஒரு புத்தகம். நாங்கள் அச்சகத்தில் அவற்றில் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து அச்சிட்டு, வாங்கி விநியோகிக்கின்றோம். அவற்றைப் பார்ப்பவர்களும் சொல்கிறார்கள், ‘பாவம்… இந்தப் பிள்ளை ஒரு நல்ல பிள்ளை, சிறையில் இவ்வாறு துன்பம் அனுபவித்து வருகின்றார்  எனக் கூறி எல்லோரும் கவலைப்படுகிறார்கள். வாசிப்பு அவருக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. நிறைய புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிப்பார். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றார். அவரை எப்படியாவது விடுவிக்க வேண்டுமென்பதே எங்களுடைய வேண்டுகோள்.

ஒக்டோபர் 4, 2022 அன்று vikalpa.org தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.