மாடன் அழைத்தல் – அருள்வாக்கு சொல்லுதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் நம்பிக்கையில், பழங்கால மனிதர்கள் இயற்கையை வென்று எழுகின்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தங்களின் அதீத சக்தி அல்லது வல்லமையின் வெளிப்பாடாக கடவுளை மனித வடிவத்துக்குள் எழுச்சிபெறச் செய்யலாம் எனும் வாழ்வியல் நடத்தைகளை கட்டியெழுப்பி, இயற்கையில் பண்பாட்டு வடிவங்களை சடங்கு ரீதியிலும் சம்பிரதாய அடிப்படையிலும் வளர்த்து வந்துள்ளனர்.

ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலம் முதல் இந்தச் சடங்குப் பாரம்பரியம் இந்திய அகண்ட நிலப்பரப்பினில் தமிழர் கலை பண்பாட்டில் வேறூன்றி இருந்தபடியால் இன்று வரை தமிழர் பாரம்பரிய மரபில் இத்தகைய காவல் தெய்வங்களை தங்களது கடவுளராகவும் அதீத மனவோட்டத்தில் அந்த கடவுளரை தன்னுள் உருவேற்றி தமது வாழ்வியல் போராட்டங்களுக்கு, தமது நோய்பிணிகளை அகற்றுவதற்கு, தனது எதிரிகளை வெல்வதற்கு, தமக்கெதிரான அநியாயங்களை – வன்முறைகளைத் தடுப்பதற்கு மிக உரிமையுடன் இந்த தெய்வங்களின் உறவுகளை உறுதியாக பரம்பரை சொத்தாகக் கொண்டு, உடுக்கு அடித்து அருளாடி மாடன் உருவேற்றி தீர்வு சொல்லி, எதையும் கடந்து செல்லுகின்ற தெய்வீக சடங்கு சம்பிரதாயங்களை இன்றும் மலையக மக்கள் பின்பற்றி வருவதைக் காணமுடிகிறது.

இந்த சம்பிரதாய முறை நேற்று இரவு கோட்டாகோகமவிலும் இடம்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நடந்த மலையக மக்களின் இந்த பண்பாட்டு நிகழ்வில் மாடன் அழைக்கப்பட்டு நாட்டின் எதிர்காலம் குறித்த அருள்வாக்கு சொல்லுதலும் இடம்பெற்றது. பறை, உடுக்கு இசை முழங்க காளி மற்றும் பத்திரகாளி கடவுளர்கள் உருவேறியவர்களின் ஆக்ரோஷமான நடனும் இங்கு இடம்பெற்றது.

நேற்றைய நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பைக் கீழே பார்க்கலாம்.