Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW

கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் தற்போது மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரையும் இலக்கு வைக்க பயன்படுவதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அதன் பிரயோகத்தை தடைசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நாம் முன்னர் விடுத்த கோரிக்கையை இவ்விடத்தில் மீளக் குறிப்பிட விரும்புகின்றோம். இக்கோரிக்கை குறித்த சட்டத்தினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மேற்கொண்ட கோரிக்கைகளுக்கு ஒத்திசைவானதாகக் காணப்படுகின்றது. இச்சட்டத்தினைப் பிரயோகித்து கைதுசெய்யப்பட்ட மற்றும் தடுத்துவைக்கப்பட்ட நபர்களில் பிணைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்க தகுதியற்றவர்களைத் தவிர அனைத்து நபர்களையும் பிணையில் விடுவிக்குமாறும் குற்ற ஒப்புதல் முதன்மையான அல்லது ஒரேயொரு சான்றாகக் காணப்படும் நிலைகளில் மேற்கொள்ளப்படும் வழக்குத் தொடரல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும் நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (ICCPR) போன்ற சர்வதேச ஒப்பந்தங்களில் பொதிந்துள்ள மனித உரிமை நியமங்களை பின்பற்றியொழுகாததாக அமைந்துள்ளன. மேற்குறித்து ICCPR சமவாயம் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனைப் பாதுகாக்கும் மற்றும் மதிக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் இலங்கை அரசியலமைப்பின் பல ஏற்பாடுகளை பின்பற்றியொழுகாதனவாக அமைந்துள்ளன. குறித்த சீர்திருத்தங்களில் காணப்படும் பிரதான குறைபாடுகளை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்:

  1. முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம் உள்ளடங்கவில்லை. இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் ஏழு விசேட வழிமுறை பணிப்பாணை கொண்டோர் கடந்த டிசம்பர் 9, 2021 அன்று அனுப்பிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரைவிலக்கணம் தொடர்பான அம்சங்களை உள்ளடக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகின்றோம். தற்போதைய சட்டத்துக்கு ஏற்ப பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படலாமா இல்லையா என்பது மெய்நிலையான தீர்மானமாகவன்றி அகவுணர்வு சார்ந்த தீர்மானமொன்றாக அமைகின்றது. எனவே, இத்தீர்மானம் தனிப்பட்ட முற்கற்பிதங்கள் மற்றும் பக்கச்சார்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சாத்தியம் மிக்கதாக அமைகின்றது. கடந்த காலத்தில் அரபு மொழியில் புத்தகங்களை வைத்திருத்தல், அலங்கார நோக்கத்துக்காக வாள்களை வைத்திருத்தல் மற்றும் யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களை நினைவேந்துதல் போன்ற போலிக் காரணங்களுக்காக கைதுகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
  2. நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது அவ்வாறான தடுத்துவைத்தலுடன் இணைந்துள்ள அடிப்படை பிரச்சினைகள் எவற்றையும் தீர்ப்பதாக அமையவில்லை. இங்கு தக்கவாறான வழிமுறை பாதுகாப்புகள் எவையும் காணப்படவில்லை, இந்நிலை எதேச்சையான கைது மற்றும் தடுத்துவைத்தலை இயலுமாக்குகின்றது.
  3. இச்சட்டத்தின் பிரிவு 16 இல் கைதுசெய்யப்பட்டோர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவி நிலைக்கு மேலான ஒரு அதிகாரியிடம் வழங்கும் ஒப்புதல் வாக்கு மூலம் ஒரு சான்றாகப் பிரயோகிக்கப்படும் ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. இது பல தசாப்தங்களாக குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக சித்திரவதை மேற்கொள்ளப்படுவதை இயலுமாக்கியுள்ளது. வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் இப்பிரிவை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் எவையும் காணப்படாததை நாம் அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் என்பன இந்த ஏற்பாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றன. வழக்கு விசாரணையின் போது அவ்வாறான குற்ற ஒப்புதல்கள் செல்லுபடியற்றவை எனத் தீர்மானிக்கப்பட்டாலும், இந்த ஏற்பாடு காணப்படுவது நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் கொண்டுள்ள தக்கவாறான நடைமுறை மற்றும் நீதியான வழக்கு விசாரணை என்பவற்றுக்கான உரிமையை இது மீறுவதாக அமைந்துள்ளது. ஏனெனில், இங்கு அழுத்தத்தின் கீழேயே இந்த குற்ற ஒப்புதல் பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நீதி முறைமை குற்ற வழக்கு நடைமுறையை முன்கொண்டு செல்ல குற்ற ஒப்புதல்களில் தங்கியிருக்கும் நிலை அம்முறைமையின் தகுதியுடைமையை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. நெறிமுறைகளில் இருந்து விலகிக் காணப்படும் இவ்வாறான ஏற்பாட்டுக்கு சட்டத்தில் இடமில்லை.
  1. பிரிவு 7(3), நபர் ஒருவரை நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்து வேறு எந்த இடத்துக்கும் விசாரணைக்காகக் கொண்டு செல்வதை அனுமதிக்கின்றது, அத்துடன் பிரிவு 15A நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரும் அந்நபர் தடுத்துவைக்கப்படும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதுடன் இப்பிரிவும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இது நபர் ஒருவருக்கு வழங்கப்படும் நீதிமன்ற தடுப்புக் காவல் பாதுகாப்பை அகற்றுவது தொடர்பான எமது கரிசனையை மீள வலியுறுத்த விரும்புகின்றோம். மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளவாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்படுள்ள நபர்கள் நீதிமன்றக் காவலில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைகளுக்கு ஏற்ப வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர்கள் தீவிர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை குறிப்பிடுகின்றது.
  2. பல தரப்பட்ட சிவில் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை பிரிவு 11 பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குகின்றது. இந்தப் பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் குறித்த நபர் மீது அவ்வாறான ஆணைகளைப் பிறப்பிக்க முன்னர் அவர் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நீதவானின் முன் முன்னிலைப்படுத்தும் தேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த நபரின் சிவில் சுதந்திரங்களை மீறப்படுவதில் இருந்து தடைகளை ஏற்படுத்தவோ இப்பிரச்சினையை தீர்ப்பதிலோ எந்தவித பங்களிப்பையும் செலுத்தாது.
  3. பிணை வழங்குவது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் வெறுமனே அழகுபடுத்தும் திருத்தங்களாக அமைந்துள்ளதுடன், நபர்கள் வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் நீண்டகாலம் தடுத்துவைக்கப்படுவது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்தவித பங்களிப்பையும் வழங்கவில்லை. ஒரு நபர் கைதுசெய்யப்பட்டு 12 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னரும் அவருக்கு வழக்கு விசாரணை தொடங்கப்படாத பட்சத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரத்துக்கு பதில் வைக்கப்பட்டு 12 மாதங்கள் கடந்த பின்னரும் வழக்கு விசாரணை தொடங்கப்படாத பட்சத்தில் குறித்த நபர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் என புதிய முன்மொழிவு குறிப்பிடுகின்றது. வழக்கு விசாரணை ஆரம்பமாகினால் குறித்த நபர் வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட முடியும். எனவே, நடைமுறையில் இந்த முன்மொழிவு தடுத்து வைக்கப்பட்ட நபரின் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவற்றையும் கொண்டுவரவில்லை.
  4. முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட இன்னொரு ஏற்பாட்டில், சித்திரவதையை முன்தடுக்கும் நோக்கில் நீதவான்கள் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாதமொரு தடவை விஜயம் செய்ய வேண்டும் என தேவைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்ப, நபரொருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீதவான் கருதினால் அந்நபரை சட்ட வைத்திய அதிகாரியிடம் “ஆற்றுப்படுத்தலாம்.” எனவே, சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆற்றுப்படுத்துவது கட்டாயமானதாக அல்லாமல் விருப்பத்துக்கு உரிய விடயமாக அமைந்துள்ளது. மேலும், இம்முன்மொழிவு சித்திரவதைச் சம்பவங்களை விசாரணைக்காக பொலிஸ்மா அதிபரிடம் ஆற்றுப்படுத்துவதைத் தீர்மானிக்கும் விருப்பத் தெரிவையும் நீதவானுக்கு வழங்குகின்றது.
  5. முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் நபர் ஒருவர் தனது நிர்வாக தடுத்து வைத்தலை உச்ச நீதிமன்றத்தில் பேராணை மனு (ரிட் மனு) ஒன்றை சவாலுக்கு உட்படுத்தும் உரிமையை வழங்குகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மேற்கொள்ளப்படும் எதேச்சையான தடுத்துவைத்தல் உள்ளடங்கலாக அனைத்து தடுத்துவைத்தல்களையும் சவாலுக்கு உட்படுத்தும் உரிமை இலங்கையின் அரசியலமைப்பில் பொதிந்துள்ளதுடன் முன்மொழியப்படும் இந்த உரிமை புதியதொரு உரிமை அல்ல என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நடைமுறையில், சட்ட உதவிகள் அரிதானவையாக உள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் நிதியியல் வளங்கள் இல்லாத நிலையில் அவர்கள் தகுதிவாய்ந்த சட்ட பிரதிநிதித்துவத்தை அணுகி இந்தத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வகையான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்கும் நிலையிலும் நீதித் தொடர் செயன்முறையில் காணப்படும் நீண்ட தாமதங்கள் காரணமாக இவ்வகைத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் மாதக்கணக்கில், சில வேளைகளில் வருடக் கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
  6. இதே போன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப் பொறுப்புகளில் சுதந்திரம் பறிக்கப்பட்ட நபர்களின் நலன்புரி விடயங்களைக் கண்காணித்தல் உள்ளடங்குவதுடன், அவ்வாணைக்குழுவுக்கு அறிவித்தல் வழங்காமல் எந்தவொரு தடுத்துவைத்தல் வசதியையும் அணுகும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசியலமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்தத்தின் பின்னர், அவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களின் நியமனம் ஜனாதிபதியின் விருப்புக்கு ஏற்ப இடம்பெறுவதால் அது சட்ட ரீதியாக சுயாதீனமாக செயற்படும் ஆற்றல் அற்றதாகக் காணப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள தீங்கான தாக்கங்களை எந்த வகையிலும் அகற்ற முடியாது.
  7. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் சிவில் சமூகம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மிரட்டுவதற்கும் அவர்களுக்குத் தொந்தரவுகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்நிலை அவதானிக்கத்தக்க வகையில் உள்ளது. இவ்வாறான நபர்களின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக அலுவலகங்களுக்குள் பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் செல்லுதல, அவர்கள் பயங்கரவாத புலன் விசாரணை பிரிவின் அலுவலகங்களுக்கு ஏதாவது சட்ட விரோத நிதி தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்படல், கைதுசெய்யப்படல் மற்றும் தடுத்துவைக்கப்படல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், பயங்கரவாத குற்றங்களுடன் தொடர்புடைய நிதியியல் நடவடிக்கைகளில் எந்தவொரு சிவில் சமூக நிறுவனங்கள் தொடர்பு பட்டுள்ளமைக்கான எந்தவொரு சான்றுகளையும் பாதுகாப்பு தரப்பினரால் இது வரை சமர்ப்பிக்க முடியவில்லை.

முன்னேறிச் செல்வதற்கான வழி

முன்மொழியப்பட்டுள் திருத்தங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் எந்த வித அடிப்படைக் குறைபாடுகளையும் தீர்க்கும் வகையில் அமையவில்லை. மாறாக, அவர்கள் ஏற்கனவே காணப்படும், ஆனால் அடிக்கடி மீறப்படும் விடயங்களை மாற்றங்களாக பிரேரித்துள்ளனர் அல்லது பிரேரிக்கப்பட்ட விடயங்கள் வெறுமனே அழகுபடுத்தல் மாற்றங்களாக அமைந்துள்ளனவே அன்றி தற்போதைய நிலையை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளாக அமையவில்லை. வன்முறை மிக்க தீவிரவாத மதக் கோட்பாட்டைக் கொண்டிருப்போரை தீவிரமயமற்றவர்களாக மாற்றுவதற்கான ஒழுங்கு விதிகளை வழங்குதல் போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசாங்கம் கூறும் சீர்திருத்த உறுதிமொழிகளை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளன.

வரைபு உருவாக்க செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் எனவும் முக்கிய அக்கறை கொண்டோரிடம் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும் எனவும் நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதை நாம் இங்கு ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிடுகின்றோம்.

ஏற்கனவே பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதன் மூலம் தேசிய பாதுகாப்பு எட்டப்பட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் மீள வலியுறுத்துவதோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு மீண்டும் ஒரு தடவை நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கை கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான சட்டத்தின் சட்டக வடிவம் மற்றும் அரச அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் வரலாற்று ரீதியான துஷ்பிரயோகம் என்பவற்றை நோக்கி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்தல் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் பௌதீக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தினால் பௌதீக சுதந்திரம் பறிக்கப்படல் இறுதியான வழியாகவே பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறான தீர்மானங்கள் மெய்நிலையான காரணிகளின் போதுமான அடிப்படைகளியே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறான அடிப்படைகள் மீதான நீதித்துறையின் மேற்பார்வை, சட்ட உதவி மற்றும் உடனடி வழக்கு விசாரணை அல்லது விடுதலை வழங்கப்பட வேண்டும். மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் எந்தவொரு தொடர் செயன்முறையிலும் அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்ளல் உறுதிசெய்யப்பட வேண்டியதுடன் அவற்றில் எதேச்சையான கைதுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டு உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். எதேச்சையாக சுதந்திரம் பறிக்கப்படும் நிலையை தடைசெய்தல் சர்வதேச சட்ட நிலைகளின் வழக்காறுகளைப் பின்பற்ற வேண்டியதுடன் இலங்கை தனது மக்களுக்காகப் பாதுகாக்க வேண்டிய சர்வதேச சட்ட நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்க வேண்டும்.

அரசாங்கம் அடைய விரும்பும் தனிப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு இடையான சமநிலை முரண்பாடு மற்றும் வன்முறை என்பவற்றை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளை தீர்ப்பதன் மூலம் மாத்திரமே எட்டப்பட முடியும். தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிவில் சுதந்திரங்களை மேலும் நசுக்க முனைவது அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பற்ற நிலையை மேலும் தீவிரமாக்குவதுடன் அது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.

கையெழுத்திட்டோர்

  1. Jayani Abeysekera
  2. Lucille Abeykoon
  3. K. Nihal Ahamed
  4. K. Aingkaran- Attorney-at-law
  5. Anushani Alagarajah
  6. Sanjyaya. S. Ariyadasa- Attorney-at-law
  7. Dulan Dasanayaka- Attorney-at-law
  8. Sunanda Deshapriya
  9. Marisa De Silva
  10. Philip Dissanayake
  11. S.C.C. Elankovan
  12. Sarala Emmanuel
  13. Ameer Faiz
  14. Brito Fernando
  15. Nimalka Fernando
  16. Ruki Fernando
  17. Yardsan Figurado
  18. Aneesa Firthous
  19. Nilshan Fonseka
  20. S.T. Ganeshalingam, Convenor, Movement for Plantation Peoples’ Land Rights
  21. Shammas Ghouse- Attorney-at-law
  22. Dr. Mario Gomez
  23. B. Gowthaman
  24. Rushdie Habeeb- Attorney-at-law
  25. Victor Ivan
  26. Chanaka Jayasinghe
  27. Tharindu Jayawardena- Journalist
  28. Jehan Jegatheesan
  29. Yogitha John, Vice President, Up Country Civil Society Collective
  30. Dr. Sakuntala Kadirgamar
  31. S. Kamalakanthan, Social activist; Coordinator, Forum for a Plural Democracy
  32. Dr. Chulani Kodikara
  33. Upul Kumarapperuma- Attorney-at-law
  34. Mahaluxmy Kurushanthan
  35. Dharmasiri Lankapeli
  36. K. Lavakusarasa- Coordinator, Aham Humanitarian Response Centre
  37. Buhary Mohammed
  38. P. Muthulingham, ISD, Kandy
  39. Pala Nagenthiran, Coordinator, Forum For Returning Refugees
  40. Rev Fr. Nandana Manatunga
  41. Malar Nathan, Social activist; Coordinator, Forum for a Plural Democracy
  42. Nagulan Nesiah
  43. D. Niroshkumar- Journalist
  44. Saroj Pathirana- Journalist
  45. Nadishani Perera- Executive Director, Transparency International, Sri Lanka
  46. Suren. D. Perera- Attorney-at-law
  47. P. Pushpalatha, Secretary, Social Institute for Development of Plantation Sector
  48. Kasun Pussawela- Journalist
  49. Mirak Raheem
  50. Maithreyi Rajasingham- Executive Director, Viluthu
  51. Prabodha Rathnayaka- Attorney-at-law
  52. Yamini Ravindran- Attorney-at- law; Campaign Director, Minor Matters
  53. Sampath Samarakoon- Editor, Vikalpa
  54. Kumudini Samuel
  55. Dr. Paikiasothy Saravanamuttu
  56. Shreen Saroor
  57. Ambika Satkunanathan
  58. Anurangi Singh – Lawyer; Journalist
  59. P. N. Singham
  60. Ermiza Tegal
  61. Sandun Thudugala
  62. Tharindu Uduweragedara- Journalist
  63. Indunil Usgodaarachchi- Journalist
  64. Mass Usuf- Attorney-at-law
  65. Anithra Varia
  66. Antony Vinoth
  67. Muqqadasa Wahid
  68. Dr. Tush Wickremanayake
  69. Shalika Wimalasena- Journalist
  70. Sabra Zahid

அமைப்புகள்

  1. Adayalam Centre for Policy Research
  2. All Employees Union of Information and Telecommunication
  3. Amparai District Women’s Network
  4. Centre for Policy Alternatives
  5. Centre for Society and Religion
  6. Civil and Political Rights Amayam, Batticaloa
  7. Committee for Protecting Rights of Prisoners
  8. Eastern Social Development Foundation
  9. Families of the Disappeared
  10. Federation of Media Employees Trade Union
  11. Forum for Affected Families Mannar
  12. Forum for Plural Democracy
  13. Human Elevation Organisation
  14. Human Rights Office, Kandy
  15. International Centre for Ethnic Studies
  16. Journalists for Rights
  17. Law and Society Trust
  18. Mannar Social and Economic Development Organisation
  19. Mannar Women’s Development Federation
  20. Media PRO Tech Sri Lanka
  21. Movement for Plantation Peoples Land Rights
  22. People’s Collective for Climate Change, Batticaloa
  23. Protect Union
  24. Right to Life
  25. Sri Lanka Young Journalists Association
  26. Tamil Civil Society Forum
  27. Telecommunications Engineering Diplomates Association
  28. United Threewheeler Association
  29. United Unemployed Graduates Association
  30. Viluthu
  31. Women’s Action Network
  32. Women and Media Collective