Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal

நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். எந்தக் குற்றங்களும் பதியப்படாத நிலையில் அவர் எட்டு ஆண்டுகளின் பின்னர் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.

மெல்கம் டிரோன் கடந்த 2008ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு எந்தவித ஆதாரமும் இல்லாத காரணத்தினால் 13 ஆண்டுகளின் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார். இவருக்கெதிராக 2012ஆம் ஆண்டு இன்னொருவரோடு சேர்த்து வழக்கு பதியப்பட்டது. ஆயினும் மற்றைய நபர் மரணமடைந்த காரணத்தினால் இவருடைய வழக்கு பல தடவைகள் பிற்போடப்பட்டது. மரணித்த நபரின் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட இரண்டு ஆண்டுகள் சென்றதோடு, அவருக்கெதிராக பதியப்பட்ட குற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நாட்களில் பொலிஸார் மற்றும் சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தாலும் இவர் சார்ந்த வழக்கு மேலும் பிற்போடப்பட்டது. டிசம்பர் 2020 வரையில் இவ்வழக்கு ஒன்பது மேல் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்திரபோஸ் செல்வச்சந்திரனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு 13 அல்லது 14 வருடங்களின் பின்னர் அவர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கப்பட்டு 2019இல் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்படும்போது அவர் 27 வயதான இளைஞராக, திருமணமாகாத நபராக இருந்தார். அவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்காக அவருக்கு எதிராக இரண்டாவது தடவை ஒரு குற்றம் பதியப்பட்டது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபராக இருந்தமையினால் அவர் விடுவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் காலமானார்.

திருமதி வசந்தி ரகுபதி ஷர்மா 1999இல் கைதுசெய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு பதியப்பட்டபோதிலும் 2015ஆம் ஆண்டு, 15 வருடங்களின் பின்னர் குற்றமற்றவரென தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

திருமதி அந்தோனி சந்திரா 2008இல் கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு பதியப்பட்டபோதிலும் 2015ஆம் ஆண்டு, ஏழு வருடங்களின் பின்னர் குற்றமற்றவரென தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ரமேஷ், 2008ஆம் ஆண்டில் 18 வயதாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு 17 மாதங்களின் பின்னர் அவருக்கெதிராக வழக்கு பதியப்பட்டது. சாட்சிகள் அற்ற நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், எந்தவித நிபந்தனைகளுமின்றி அவர் விடுவிக்கப்பட்டார். மொத்தமாக, அவர் 5 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களாக தடுப்புக்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்படும்போது செல்வி அஞ்சலா க்ரூஸ் 25 வயது நிரம்பியவராக இருந்தார். அவர் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவருக்கெதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை. தடுப்பில் இருந்த வேளையில் அவருக்கு மருத்துவ பராமரிப்புக்காக அனுமதி முதலில் வழங்கப்படவில்லை. அவரது தந்தையார் உயர் நீதிமன்றத்தின் உத்தரவினைப்பெற்ற பின்னரே அவருக்கு மருத்துவர்களை சந்திக்கக்கூடியதாக இருந்தது. தடுப்புக்காவலில் இருந்த சமயத்தில் அவரது உடல்நிலை வெகுவாக மோசமடைந்ததன் காரணமாக 2012 ஒக்டோபரில் அவர் காலமானார்.

சொலமன் கஸ்பர்ஸ் போல் மற்றும் திரு முரளிதரன் ராஜா ஆகியோர் 2008 மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டபோதும், குற்றமற்றவர்களென தீர்ப்பளிக்கப்பட்டு 2011 டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

நந்தகுமார் மற்றும் திரு சித்திரகுமார் ஆகியோர் 2008 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு குற்றங்கள் எதுவும் பதியப்படாத நிலையில் 2011 ஆகஸ்ட் விடுவிக்கப்பட்டனர்.

திருமதி ஷர்மா மற்றும் திருமதி சந்திரா ஆகியோர் முறையே 15 மற்றும் 7 வருடங்கள் தடுப்புக்கு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். பன்னிரண்டு முதல் 13 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த நடேசு மற்றும் டிரோன் ஆகியோருக்கும் முறையே மூன்று மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். “பயங்கரவாத சந்தேகநபர்களின்” பிள்ளைகள் என்னும் அடையாளத்தோடு இப்பிள்ளைகள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார, மற்றும் உணர்வுசார் சவால்கள் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.

இவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தமையானது இவர்கள் முகம் கொடுத்த சவால்களைத் தணிப்பதற்கு வெகு தாமதமான தீர்ப்பாக அமைந்தது. திரு தடுப்புக்காவலில் இருந்தபோது போலுக்கு பிள்ளை பிறந்தமையினால் அவர் விடுதலையாகி வருகையில் அவரை தகப்பனாக அடையாளம் காண முடியாத சூழ்நிலையே காணப்பட்டது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோரில் பலர் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதை மூலமாகவோ அல்லது அச்சுறுத்தலோடு சேர்த்து சித்திரவதை செய்வதன் மூலம் பலரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டோருக்கு எதிராக அவ்வாக்கு மூலங்கள் முதன்மை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆயினும், பல்வேறு நீதிமன்றங்கள் இவ்வாறு பெறப்பட்ட வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வழக்குகள் இன்னும் முடிவுறாத நிலையில் 18-19 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டோர் பலரும், 15 வருடங்களாகியும் எந்தவொரு வழக்கும் பதியப்படாமல் சிலரும் தடுப்பில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி 31, 2018இன் படி இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் உள்ளோரில் 15% ஆனோர் 10 முதல் 15 வருடங்களாகவும், 41% ஆனோர் 5 முதல் 10 வருடங்களாகவும், 32% ஆனோர் 1 முதல் 5 வருடங்களாக வழக்குகள் முடிவடையாத நிலையில் தடுப்புக்காவலில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள், அவர்களின் குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் வேதனை மற்றும் வலியை நிவர்த்தி செய்யவோ அல்லது சேதத்தை கட்டுப்படுத்தவோ மிகக் குறைவான நடவடிக்கைகளை இதுவரையில் மேற்கொண்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அதிகாரபூர்வ ஒப்புதலோ அல்லது பாதிக்கப்பட்டோரிடம் அல்லது அவர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரலோ அல்லது இழப்பீடு வழங்கல், வாழ்வாதாரத்துக்கான ஒத்துழைப்பு, ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளோ  எந்தவொரு அரசாங்கத்தினாலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான மோசமான அநீதிகளுக்கு யாரும் பொறுப்புக் கூறவில்லை.
ஊடகங்கள், மதத்தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பொது சமூகம் சில சமயங்களில் நியாயப்படுத்துவதன் மூலம் அல்லது சில சமயங்களில் மறைப்பதன்மூலம் அல்லது சில நேரங்களில் மௌனம் காப்பதன் மூலம் இவர்கள் முகம்கொடுத்த துயரங்களுக்கு உடந்தையாக இருக்கின்றன. ஆயினும், சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.

எந்த ஒரு நபரும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்படும் வரை நிரபராதி என இலங்கை அரசியலமைப்பின் 13 (5) பிரிவு உறுதியளிக்கின்றது. ஆயினும், மேற்குறிப்பிடப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தாரும் நீதிமன்றங்களினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படாமல் 15 ஆண்டுகள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமையால் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மேற்குறிப்பிட்ட பதினொருவரைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்க வாய்ப்புண்டு.

இதில் ஆபத்தான விடயம் என்னவெனில், இந்தத் துயரங்கள் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வருடம் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வழக்குகள் முடியுறாத நிலையில் 29 பேர் 8 முதல் 15 வருடங்களாக தடுப்புக்காவலில் இருக்கின்றனர். நடேசுவும் மெல்கமும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 29 பேரில் சிலர் நீதிமன்றங்களினால் நிரபராதிகளாக தீர்ப்பளிக்கப்படக் கூடியவர்கள்.

பிணையானது விதிவிலக்காக அல்லாமல் விதிமுறையாக வழங்கப்பட வேண்டும் என்று 1997ஆம் ஆண்டின் பிணை சட்டத்தின் பிரிவு 2 தெரிவிக்கின்றது. ஆயினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் பிணை வழங்கும் அதிகாரத்தை நீதித்துறையிடமிருந்து பறித்துள்ளது.

எனினும், சட்டமா அதிபர் அனுமதித்தால் கைதிகள் பிணையில் விடுவிக்கப்படலாம் எனப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தெரிவிக்கின்றது. பலரது வாழ்க்கையை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட இந்த செயல்முறை அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்படுவதையும் விசாரணைகளை முடிவுக்குக்கொண்டுவருவதையும் சட்டமா அதிபரினால் துரிதப்படுத்த முடியும்.

ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாட வேண்டியிருந்தமையால் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தொடர்புபட்டவர்களுக்கு செப்டம்பர் மாதம் வேலைப்பளு நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு நியூயோர்க்கிலும் இடம்பெற்றது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான மனித உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தையும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை உட்பட 27 சர்வதேச உடன்படிக்கைகளை கடைபிடித்தலோடு மனித உரிமைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட GSP பிளஸ் சலுகையை நீடிப்பதா அல்லது மீளப்பெறுவதா எனது தீர்மானிக்கும் குழுவின் இலங்கைக்கான பயணமும் இடம்பெற்றிருக்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட சில கைதிகளை விடுவிக்கப்போவதாகவும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் சர்வதேச நாடுகளின் கரிசனையை திருப்திப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான அர்த்தமற்ற பசப்புரைகளுக்கு செவிசாய்க்காமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாது முற்றாக இல்லாதொழிப்பதற்கும், இந்த கொடுங்கோல் சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுப்பில் உள்ளவர்களை விடுவிப்பதற்குத் தீர்க்கமான கால வரையறைகளுடன் கூடிய பொறுப்புணர்வையும் கோரும் என நாம் நம்புகிறோம்.

மேலும், இன, மத மற்றும் பாலியல் சிறுபான்மையினர், கைதிகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், மற்றும் மாணவர் ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்கள் உள்ளோர் உட்பட அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியமானது ஒன்றுக்கு இன்னொன்றை மாற்றீடாக வழங்காமல், வர்த்தக நன்மைகளுடன் கூடவே மனித உரிமைகளையும் வலியுறுத்த வேண்டும்.

ஆனால், நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புக்கள் சர்வதேச கரிசனைகளினால் தூண்டப்படுமாயின், அது அரசாங்கத்தின் மீது கவலையை ஏற்படுத்தக்கூடும்.

இறுதியாக, அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்களை பிணையிலேனும் விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கெதிராக வழக்குகளை துரிதப்படுத்தவும் வேண்டும். இவை யாவும் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யக்கூடாது. ஏனெனில், இதனால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்படப்போகிறவர்களும் இலங்கையர்களே.

ருக்கி பெர்னாண்டோ மற்றும் லுஸிலி அபேகோன்