Photo: The New Indian Express
அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல்.
‘தெருக்குரல்’ என சாமானிய மக்களின் வாழ்வியலை பாடலாக்கியவர் இளம் ‘ரப்’ கலைஞர் அறிவு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் ‘தி’ எனும் இலங்கைப் பின்னணி ( வடக்கு ) கொண்ட பாடகியுடன் இணைந்து அறிவு பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை எழுதியவரும் ‘தெருக்குரல்’ அறிவு அவர்களே.
இந்தப் பாடலின் இசையும் பாடகி ‘தீ’ ( Dhee) யின் குரலும் போலவே அறிவின் வரிகளும் அந்த வரிகளுக்காக அவர் வரித்துக் கொண்ட பின்புலங்களும் பாடலுக்கு பலம் சேர்த்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் , பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் போன்ற சினிமா பிரபலங்களின் இணைப்பில் சுயாதீன பாடல்களை ஊக்குவிக்கும் ‘மாஜா’ எனும் அமைப்பின் ஊடாக தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால் அதன் தரமும் வீச்சும் வேறு எல்லைகளைத் தொட்டுள்ளது.
பாடல் வரிகளை எழுதிய அறிவு, பாடலின் வெளியீட்டு விழாவிலும் அதற்குப் பின்னரும் மேடைகளில் பேசுகையில் அவரது வரிகளுடனேயான அரசியல் முன்வைப்புகளை வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த அரசியல் முன்வைப்பை மிகுந்த அவதானத்துடனும் தெளிவுடனும் முன்வைக்கும் அவர், சாதியற்ற சமூகம் ஒன்றை நோக்கிய அவரது இலக்கினை தெளிவாக பேசுகிறார். இந்தப் பாடலை எழுதிப் பாடுவதற்கு முன்பிருந்தே Casteless Collective எனும் இசைக் குழுவில் இணைந்து இயங்கி வருபவர்.
இந்த குக்கூ குக்கூப் பாடலின் பின்னர் அல்லது இந்தப் பாடல் வரிகளின் பின்னணியில் இருக்கக்கூடிய தனது பாட்டி வள்ளியம்மை பற்றிய பதிவுகள் இன்னுமொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதனையும் கூட அவரே தனது உரைகளில் வெளிப்படுத்துகிறார்.
தனது தாயாரின் தாயாரான வள்ளியம்மா இலங்கை மலையகத்தில் பிறந்தவர் என்பதும் அவர் 1964 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய நாடுகள் செய்துகொண்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாட்டுக்கு தாயகம் திரும்பியவர்களாக வந்தவர் என்பதையும் நோக்கத்தோடு முன்வைக்கிறார். தன்னுடைய பாட்டி தன்னை ‘ஏஞ்சாமி …’ என விளித்து அழைக்கும் சொல்லையே தனது பாடலுக்கு தலைப்பாக்கியுமுள்ளார். அதேபோல பாட்டி பாடும் ஒப்பாரி பாடலின் வரிகளையும் கூட இந்த குக்கூ… பாடலில் சேர்த்துக் கொண்டுள்ளார். கூடவே தனது பாட்டியின் பெயரான வள்ளியம்மையையும் கூட பாடலில் கொண்டு வருகிறார். இது தவிர தமிழ் நாட்டு இடதுசாரி அறிவொளி இயக்க நாட்டார் பாடல் சேகரிப்புகளில் இருந்தும் சில வரிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.
தனது பாட்டி வள்ளியம்மாவுடன் அறிவு (Photo: @TherukuralArivu)
இலங்கையில் இருந்து வந்த தனது பாட்டியின் வரலாற்றை வெறுமனே பாடலுக்காக மாத்திரம் சேர்த்துக் கொள்ளாது உண்மையிலேயே அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவென இரண்டு வருடங்களுக்கு முன்பதாக இலங்கை வந்துள்ளார். புசல்லாவையில் மலையக அருங்காட்சியகத்தை நடாத்தும் கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவனம், அதன் தலைவர் பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு தனது பாட்டி பிறந்த தலவாக்கலை, ஆகரப்பத்தனை சென்.ரெகுலர்ஸ் தோட்டத்துக்கும், அவர் மணம் முடித்து வந்த கொட்டகலை மண்வெட்டி தோட்டத்துக்கும் மலையகத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கூட பயணித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் கலைஞர் அறிவு உடனான இணையவழி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த எண்ணிக்கையினரான பங்குபற்றுனர்களுடன் இடம்பெற்ற அந்தக் கலந்துரையாடலில் அறிவு இடத்தில் கேள்விகளை கேட்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதன்போது நான் (கட்டுரையாளர்) கோரிக்கை ஒன்றாக ஒரு கேள்வியை முன்வைத்து இருந்தேன்.
இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்கள் இலங்கை வந்தது ஒரு வரலாறு. அது பரவலாகப் பேசப்பட்டுள்ளது, பேசப்படுகின்றது. அவர்களுள் ஒரு பகுதியினர் மீளவும் திரும்பிச் செல்ல அல்லது திருப்பி அனுப்பப்பட்ட வரலாறும் பரவலாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தாயகம் திரும்புகிறோம் எனும் பெயரில் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்ற மலையகத் தமிழர்களின் இந்திய வாழ்வியல் குறித்த பதிவுகள் பெரிதாக பேசுபொருள் ஆகவில்லை. இப்போது கலைஞர் அறிவு அடைந்திருக்கும் பிரபலத்தின் ஊடே அவர் இணைந்திருக்கும் சினிமா பின்புலத்தின் வெகுசனத் தளத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் குறித்த தமிழ்த் திரைப்படம் ஒன்றைக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளதா ? என்பதே எனது கோரிக்கையும் கேள்வியும்.
சுருங்கச் சொன்னால் பாடலில் வந்த பாட்டி வள்ளியம்மையின் வரலாற்றைப் படமாக்கும் சாத்தியமுள்ளதா? என்பதே.
எனது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொண்டவராக பதில் அளித்த கலைஞர் அறிவு அதனைச் சாத்தியமாக்குவதை நோக்கிய நகர்வின் முன்மொழிவை வழிமொழிந்து ஏற்றார். அந்த இணையக் காணொளியின் உரையாடல் பதிவை ‘த ஹிந்து’ ஆங்கில இதழின் இலங்கை செய்தியாளர் மீரா ஶ்ரீநிவாசன் இத்தகைய திரைப்படம் ஒன்றின் எனது கோரிக்கையை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.
இத்தகைய ஒரு திரைப்படத்தின் அவசியம் என்ன எனும் கேள்விக்கு பின்னாலுள்ள அரசியல் கோரிக்கை முக்கியமானது. இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறியப்பட்டுள்ள மலையகத் தமிழ் மக்களுக்கு, இருந்த ஒரே மாற்றுத் தெரிவான இந்தியா சென்றவர்களின் வாழ்க்கை நிலைமையை பரவலாக அறிந்து கொள்ளக்கூடியதன் வாய்ப்பே அது.
இவ்வாறு தாயகம் திரும்பிச் சென்றவர்களின் வாழ்வியலைப் பேசும் படைப்புகள் வெளிவராமலும் இல்லை. அவ்வாறு சென்றவர்கள் குழுவாக இணைந்து வெளியிட்ட ‘எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்’ ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு தமிழிலும் ‘Alienated Everywhere’ என ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் மூலவரான இர.சிவலிங்கம் தொகுத்திருக்கும் In the service of the displaced – Indo – Sri Lanka Agreement 1964 & 1974, எல்.வேதவள்ளி எழுதிய SriLankan Repatriates in Kotagiri, மலையக கல்வியாளரும் ஆய்வாளருமான எம்.வாமதேவன் தனது தத்துவமாணி பட்டப்படிப்புக்காக சமர்ப்பித்து பின்னர் ஆங்கில நூலாகவும் வெளிவந்த Sri Lankan Repatriates in Tamil Nadu எனும் ஆய்வு நூலும் முக்கியமானது. இஸட் ஜெயசிங் எழுதிய ‘இலங்கை வாழ் இந்தியர்களின் குடியகல்வு’, மு.சி.கந்தையா எழுதிய ஆய்வு நூலான ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’, தமிழகன் (ராமச்சந்திரன்) தொகுத்த ‘மலையகமும் மறுவாழ்வும்’ அதேபோல சி.பன்னீர்செல்வம், அரு.சிவானந்தன், மு.சி.கந்தையா, தமிழகன் உள்ளிட்ட தாயகம் திரும்பிய முதல் தலைமுறையினரின் பல இலக்கிய படைப்புகளும் உள்ளன. தாயகம் திரும்பியவரான இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தவமுதல்வன் இயக்கத்தில் வெளியான ‘பச்சை ரத்தம்’ ஆவணப்படமும் முக்கியமானது. அதேபோல தாயகம் திரும்பியவர்கள் அல்லாத இந்திய பூர்வீக தமிழர்களான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தொகுத்த Rehabilitation of Srilankan Repatriates: A critical Appraisal எனும் ஆங்கிலநூல், தமிழ் மகன் (வெங்கடேசன் ) எழுதிய வனசாட்சி (நாவல்), இரா.வினோத் எழுதிய ‘தோட்டக்காட்டீ’ (கவிதை), முஹம்மட் யூசுப் அண்மையில் எழுதியுள்ள ‘தட்டப்பாறை’ (நாவல்) என பல படைப்புகள் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களையும், அவர்களது பூர்வீக மலையகத் தமிழர் பின்னணியையும் தொட்டுச் செல்வனவே. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களின் புனர்வாழ்வு குறித்து பதிவு செய்யும் The Directory of Rehabilitation எனும் விபரப்பதிவும் கூட உள்ளது. தாயகம் திரும்பியோர்… எனும் அடைமொழியுடன் இயங்கும் பல அமைப்புகள் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளன. இப்போது தாயகம் திரும்பியோர் எனும் சமூக அடையாளத்துடன் ஒரு சட்ட மன்ற உறுப்பினரும் உள்ளார் (பொன். ஜெயசீலன் MLA கூடலூர் 2021).
அதேநேரம் தாயகம் திரும்பிய மூன்றாந் தலைமுறை இளைஞரான 27 வயது நிரம்பிய அறிவு தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். தனது பாட்டி வள்ளியம்மையை முன்னிறுத்தி வெளிக்கொணர்ந்துள்ள கலைப்படைப்பின் காலமும், வடிவமும், நுட்பமும் வேறுபட்ட தளத்தில் இயங்குவதனால், இன்றைய நிலையில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களது சமகால வாழ்வியல் வரலாற்றுப் பின்புலங்களுடன் திரைப்படமாகும்போது சமகாலத் தலைமுறையினருக்கு இரண்டு தரப்பு மலையகத் தமிழர்களினதும் நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்த வல்லது. தமிழக (இந்திய) நிலையில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்க்கும் ஈழ அகதிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவும், இலங்கை நிலையில் மலையகம் அடைந்திருக்க வேண்டிய அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளவும் திரைமொழியின் ஊடாக சொல்லப்படும் கதை வலுசேர்ப்பதாக அமையவல்லது.
கலைஞர் அறிவு ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு கவிஞராக காலடி எடுத்து வைத்திருப்பவர்தான். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் அவர் எழுதிய உரிமையை மீட்போம் …. நிலமே எங்கள் உரிமை … நிலமே எங்கள் உரிமை…உரிமை… எனும் பாடல் இலங்கை மலையகத் தமிழர் அரசியல் கோரிக்கைகளுக்கு மாத்திரமல்ல, இலங்கையில் இருந்து இந்தியா சென்று தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ‘தனித் தொகுதியினராக’ வாழும் தாயகம் திரும்பிய மலையகத் தமிழருக்கும் கூட அவசியமானதே.
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்களின் அரசியல் ஒன்றாக இருப்பதை ஒரு திரைமொழியில் சொன்னால் இன்னும் ஓர் அகலத்திரைக்கு அது செல்லக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.
மல்லியப்புசந்தி திலகர்