படம்:  The Indian Express

இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர்.

கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே பெண்களை உபசரிக்கின்றன. இஸ்லாம் மத நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யப்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் உருவப்படங்களுடன் இலங்கைப் பெண்கள் வீதிகளில் பேரணி போவதும், தகனம் செய்யப்பட்ட உடல்களுக்கு ‘கபன்’ எனப்படும் தூய வெள்ளைத் துணியால் சுற்றி இறுதி மரியாதை செய்ய முடியாமல்போனதற்கான எதிர்ப்பை தங்கள் கைகளில் வெள்ளைக் கபன் துணிகளைக் கட்டிக் காண்பிப்பதும் நடந்த காலத்திலேதான் டெல்லி வீதிகளில் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டங்களில் பெண்களின் அரசியல் அணிதிரட்டல் மிக முக்கிய இடத்திற்கு வந்தது.

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலங்களை பலவந்தமாகத் தகனம் செய்கின்ற காரியத்தை உலகிலேயே இலங்கை சிங்கள அரசு மட்டுமே செயல்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்திப் பழிதீர்ப்பதில் ராஜபக்‌ஷ சகோதரர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதோடு, 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளை அழித்து சிங்கள சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் குறியாக இருக்கிறார்கள்.  கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை வேட்டையாடும் நிகழ்ச்சி நிரல் இவற்றின் பின்னணியில் இருந்தே தொடங்குகின்றது. கொரோனா பாதித்து இறந்தவர்களைப் புதைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்றொரு விஞ்ஞானத்திற்குப் புறம்பான காரணத்தைக் கண்டுபிடித்து, கொரோனா உறுதிசெய்யப்படாத பச்சிளங் குழந்தைகளையே பெற்றோரிடம் அனுமதி பெறாமல், இறுதியாக பார்ப்பதற்குக்கூட வாய்ப்புத் தராமல் தகனம் செய்தபோது மௌனத்தை உடைத்துக் கொண்டு பெண்களை அணிதிரட்டிக் கொண்டு வீதியில் இறங்கினார்கள், பெண்கள். அதன் பிறகே இந்தப் போராட்டத்தின் திசைகள் வேறு கோணங்களிலும் உருக்கொண்டு இன்று பெரு நகர வீதிகளை முற்றுகையிடுமளவுக்கு ஆண்களை அணிதிரளச் செய்திருக்கிறது.

எல்லைகளில் பெண்களும் குழந்தைகளும் போராட்டம் நடத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கவனத்தையும் பொருட்படுத்தாமல் ஜனவரி மாதம் நடந்த மகளிர் உழவர் தின நிகழ்வுகள் நாட்டின் பல மாவட்டங்களில் இதேபோன்ற பேரணிகளைத் தூண்டின.

உலகளவிலும் தேசிய அளவிலும்  ஜனநாயகத்திற்குக் குரல் கொடுப்பதிலும் குடியுரிமைகளை மீட்டெடுப்பதிலும் பெண்கள் இடையறாது செயல்பட்டு வருவது பல தசாப்தங்களாக நடக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் வழக்கமாக இருக்கும் ஒழுங்குகளை உடைத்து வழக்கத்திற்கு மாறான எதிர்ப்பு முறைகளைப் பெண்களால் உருவாக்க முடிகின்றது. ‘கீழ்ப்படியாதவர்கள்’ என்ற விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் செயல்திறன்மிக்க அடையாளங்களைப் பெண்கள் வரைகின்றனர்.

பெருநிறுவனங்களின் சதி காரணமாக நம்பியிருந்த விவசாய நிலங்களால் நஷ்டமடைந்தபோது குடிமக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமும் கைவிட்டபோது துயரத்தினாலும் ஏமாற்றத்தினாலும் கழுத்தளவு வளர்ந்துவிட்ட கடன் தொல்லைகளினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களில், விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் தீவிரவாதிகள் என்று சிறையில் தள்ளப்பட்டவர்களில் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திச் செல்வதிலிருந்து, டிராக்டர் பேரணிகளை நடத்துவது, எழுச்சிக் கவிதைகள், பாடல்கள் இசைப்பது, கடுங் குளிரில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு உணவு சமைப்பது உட்படப் போராட்ட எழுச்சியின் பொதுநிலைகளைப் பாதுகாப்பதில் பெண்கள் பங்கேற்றனர். அரசியல் செயல்பாட்டில் பெண்களின் மரபுகளையும் செயல்திறன்களையும் தூண்டுகின்ற செயல்பாடுகள் இவை. கடந்த பல மாதங்களாகக் குறிப்பாக பஞ்சாபில் அணிதிரண்ட பெண்கள் கார்ப்பரேட் அதிகாரத்தின் தளங்களைத் தொடர்ந்து அசைக்கின்றனர்.

சாதியம், வர்க்கம், வகுப்புவாதம் ஆகிய தவறான வழிகளில் ஒற்றுமையை உருவாக்க முனையும் அதிகார முதலாளித்துவ சக்திகளால் தமக்கு ஏற்படப்போகும் ஆபத்தான எதிர்காலம், நிலம், வாழ்வாதார இழப்பு போன்ற சவால்கள் துன்பங்களை நிலமற்ற விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்கள், விவசாயப் பின்னணியைச் சேர்ந்த  பெண்கள், மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். விவசாயச் சட்டங்களால் பெண்களுக்குப் பாதிப்பில்லை, இது பெண்களின் பிரச்சினையேயில்லை என்று புரட்சியில் இறங்கியிருக்கும் பெண்களின் அரசியல் பங்கேற்பின் உரிமையை இங்கு யாரும் மறுத்துவிட முடியாதவாறு, விவசாயிகள், உழவர்கள், விதை பராமரிப்பாளர்கள், அறுவடை செய்பவர்கள், கால்நடைகள், கோழி வளர்ப்பு, வன உற்பத்தியாளர்களின் மேலாளர்கள் அனைவரும் இணைந்து “இங்கு பெண்கள் சம பங்குதாரர்கள்” என்று குரல் கொடுக்கின்றனர்.

வரலாற்று ரீதியாக இருந்துவந்த முட்டாள்தனமான ‘தசை’ அரசியலுக்கு எதிரான புதிய வடிவங்களை வரலாற்று ரீதியாகப் பெண்கள் மீளுருவாக்கியுள்ளனர். செயற்கையான பிரிவினைகளை நிராகரித்து அரசியல் செயற்பாடுகளிலும் புரட்சிகளிலும் தங்களை இணைத்துக் கொள்வதைப் பெண்கள் நெடுங்காலமாகச் செய்கின்றனர். அதுவே பெண் அடையாளத்தின் மரபாக இருக்கின்றது. வாழ்வாதாரம், அபிவிருத்தி, இடப்பெயர்வு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள், பெண்கள் சிறுமிகளின் உரிமைகள், கௌவரம் – இப்படி எல்லாவற்றிற்காகவும் பெண்கள் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஒத்துழைப்புடன் புலிகள் இயக்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாத உள்நாட்டு யுத்தம், 2009 மே மாதம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசினால் மோசமான இராணுவத் தாக்குதல் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போரின் கடைசி வாரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் அதிகம். போரின்போது பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு, சரணடைந்து, உறவினர்களால் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பற்றிய தகவல்களை ராஜபக்‌ஷ அரசைப் போலவே தற்போதைய அரசாங்கமும் வழங்க மறுத்து வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்கு என்று அதற்கான ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான செயற்பாடுகள் அரசின் மோசடி நடவடிக்கை என்பதை மக்கள் வெகு சீக்கிரமே உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.

போரின் போது வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடத்தல்களும் காணாமல் ஆக்குதல்களும் நடந்தன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சிலர் பின்னர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

உலகிலேயே அதிகம் காணாமல் ஆக்கப்பட்டோர் நாடாக ஈராக் உள்ளது. இலங்கை இரண்டாம் நிலை. 1980 – 2019 வரையிலான காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் என்பவற்றின் அறிக்கைகளின் தரவுகளும் இலங்கை அரசின் தரவும் பேரளவில் வித்தியாசப்படுகின்றன. வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், தனிநபர்களினது எண்ணிக்கைக்கு சரியான தரவுகள் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கொண்டு அவர்களை தமக்கு காட்டும்படியும், அவர்கள் உயிருடன் இல்லை எனில் அதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து உருவப்படங்களை ஏந்திக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடுவது இன்றும் தொடர்கின்றது. இந்தப் போராட்டங்களைத் தொடங்கியவர்கள் பெண்கள். காணாமல் ஆக்கப்பட்ட கணவர்களுக்காக, மகள்கள், மகன்களுக்காக உருவப்படங்களை ஏந்திக்கொண்டு வீதிகளில் பேரணி சென்றும், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் செய்தும் நீதிக்காக பெண்கள் குரல்கொடுத்தபடியே இருக்கிறார்கள்.

இவர்களின் குரல்களை, ஏக்கங்களை, செயல்திறன் மிக்க அவர்களின் போராட்ட வடிவத்தினை ஆளும் அரசாங்கங்கள் பொருட்படுத்தவில்லை. இராணுவத்தினாலும் அரச புலனாய்வு சக்திகளாலும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் போராட்டக்காரர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத வாழ்வை வாழ்ந்தபடியே களமிறங்குகிறார்கள். வெள்ளை வான் கடத்தலினாலும், இறுதிப் போரின் போது சரணடைந்தவர்களும் இன்னமும் பூசா முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக சிலர் விடுவிக்கப்பட்டுமுள்ளனர். உயிரைப் பணயம் வைத்து வழக்குகளைப் பதிந்து வாதாடி தம் அன்புக்குரியவர்களை மீட்பதற்கு எல்லாப் பாதிக்கப்பட்டவர்களிடமும் பண வசதியும் மனபலமும் இல்லை.

இலங்கையாகட்டும், இந்தியாவாகட்டும் வேறெந்த நாடாகட்டும் நீதி, சமத்துவம், மனித கௌரவத்திற்கான அணிதிரட்டல்களில் இயற்கையாகவே பங்காளிகளாக மாறும் பெண்களின் அரசியல் செயல்பாட்டுக்கான உரிய இடம் கிடைக்காமல் போவதற்கு அவர்கள் தலைமைப் பாத்திரங்களில் இல்லை என்பதும், தலைமைப் பாத்திரங்களில் இருப்பவர்கள் பெண்களின் அரசியல் செயல்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது மதிப்பளிக்கவில்லை என்பதுமே முதன்மைக் காரணமாகிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு பங்குதாரர்களாக தங்களை அர்ப்பணித்துப் போராட்டத்திற்கு புதிய வடிவத்தையும் சக்தியையும் அளித்த பெண்களில் ஒருவர்கூட அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட 35 பேர் கொண்ட உழவர் தூதுக்குழுவில் இல்லை. குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் அவர்களை ஏமாற்றியுள்ளன. இது பெண்களது இடையறாத இயக்கத்தின் அகிம்சை சான்றுகளை களங்கப்படுத்தியுள்ளது.

முடிவெடுப்பதில் இருந்து  பெண்கள் ஒதுக்கப்பட்டதற்கான மேற்கோள்கள் பலதை வரிசைப்படுத்தலாம். ஆனால், பெண்கள் தங்களது உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்தும் போராட்டங்களின் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். அதுவே அவர்களின் மரபு. போராடுவது பெண்களின் மரபுரிமை.

ஸர்மிளா ஸெய்யித்