Photo: Selvaraja Rajasegar

எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை

தோழர் சாந்திகுமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திகுமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய நேரத்தில் கடந்தகால நினைவுகள் பல எழுவது இயற்கையே. அவரை முதலில் சந்தித்தது 1970களின் நடுப்பகுதியில் என நம்புகிறேன். கூர்மையான சமூகப்பார்வையும் அரசியல் ஆர்வமும் மிக்க ஒரு இளைஞனாகவிருந்தார். அப்போது நான்  கொழும்பில் வாழ்ந்துவந்தேன். அன்று ஏற்பட்ட தொடர்பு சில பொதுவான ஈடுபாடுகளால் தொடர்ந்தது, வளர்ந்தது. ஒரு மாக்சிசக் கல்வி வட்டத்தை உருவாக்குவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை அவரும் பகிர்ந்து கொண்டார். சாந்தியுடனும் வேறு சிலருடனும் சேர்ந்து ஒரு கல்வி வட்டத்தை ஆரம்பித்தோம். அதில் பலர் இணைந்தனர். மற்றையோர் எல்லோரும் என்னை விட வயதில் இளையவர்களாகவும் அவர்களில் சிலர் பல்கலைக்கழக மாணவர்களாகவும் இருந்தனர். கல்வி வட்டம் சில ஆண்டுகள் மிகவும் நன்றாக இயங்கியது. மாக்சிசக் கோட்பாட்டுடன் இலங்கை மற்றும் உலக அரசியல், கலை இலக்கியம் போன்றவை உரையாடல்களின் முக்கிய விடயங்களாயின. 1970கள் இலங்கை அரசியலில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கோட்பாட்டு ரீதியான விவாதங்கள் தீவிரமடையத் தொடங்கிய காலம். வடக்கு – கிழக்கு தமிழர்களின்  தேசிய சுயநிர்ணய உரிமை மாக்சியவாதிகள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகியது. இந்த விவாதங்களும் கருத்துப் பரிமாறல்களும் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான கேள்விகளையும் உள்ளடக்கும் வகையில் விரிந்தன. மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் நான் பங்குபற்றிய கலந்துரையாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இவற்றில் சாந்திகுமாரின் பங்களிப்பும் ஈடுபாடும் மிக முக்கியமானது. சாந்திகுமாரை நினைவுகூரும் இவ்வேளை அவருடைய இதயத்திற்கு நெருக்கமானதாகவும் அறிவுரீதியான தேடலின் பிரதான விடயங்களில் ஒன்றானதுமான மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றிய அவரது பதிவுகள் பற்றி உரையாடுவது பயன்தருமென நம்புகிறேன். விசேடமாகச் சாந்திகுமாரின் ஆக்கங்கள் இன்றைய இளம் சந்ததி அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என விரும்புவர்களில் நானும் ஒருவன்.

படம்: நமதுமலையகம்

மலையகத் தமிழ் சமூகம் பற்றியும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் 197982 காலத்தில் சாந்திகுமார் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 1979இல் யாழ். பல்கலைக் கழகத்தின் வெளியீடான ‘மானுடம்’ சஞ்சிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றைய ஐந்து கட்டுரைகளும் 1980-82 காலத்தில் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.[1]

அவர் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவராகவும் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர். அந்தச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய ஆக்கங்கள் பன்முகரீதியானவை. ஆயினும், அப்போது சூடுபிடித்திருந்த தேசிய இனப் பிரச்சினை தொடர்பான விவாதங்களில் தனது கோட்பாடு ரீதியான நிலைப்பாட்டையும் மலையகத் தமிழரின் தேசிய இனத்தன்மையின் பரிணாமம் பற்றிய தனது கருத்துக்களையும் முன்வைப்பதில் ஆர்வமாயிருந்தார். இலங்கையில் ஏற்கனவே எழுச்சி பெற்றுவிட்ட இனத்துவமைய அரசியல் கலாச்சாரச் சூழலிலேயே இந்த விவாதங்கள் இடம்பெற்றன. பல்லின நாடான இலங்கையின் அரசை சிங்கள பௌத்த ஒற்றை இனத்தேசத்தின் அரசாக நிர்ணயிக்கும் பேரினவாதத் திட்டம் நடைமுறையிலிருந்தது. இன ஒடுக்குமுறை இதன் ஒரு அம்சமாகியது. 1970களில் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலுப்பெற்றது. கருத்தியல் மட்டத்தில் சிங்கள பெருந்தேசியவாதத்திற்கும் தமிழீழத் தேசியவாதத்திற்கும் இடையிலான முரண்பாடு இந்த நாட்டில் இரு இனங்களினதும் தொன்மையையும் தனித்துவத்தையும் நிரூபிக்கும் போட்டியாக உருவெடுத்தது. இந்தக் கருத்தியல் ரீதியான விவாதம் நவீனகால அதாவது கொலொனியத்திற்கும், சுதந்திரத்திற்குப் பின்னைய காலத்தினதும் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையும் தேசியத்திற்கான விளக்கத்தையும் புராதனத்தன்மை மிகுந்த ‘வரலாற்று’ முலாம் பூசப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு சென்றது. தேசிய இனப்பிரச்சினைக்கும் வரலாற்றுக்குமிடையிலான உறவு முக்கியமானது. ஆனால், அதை இலங்கைத் தீவின் தொன்மை மிகு இரு இனங்களில் எது மூத்த குடி எனும் அடிமூல (primordial) கருத்தியல் போட்டித் தளமாக மாற்றுவது தேசிய இனப்பிரச்சினையின் உருவாக்கத்தில் கொலோனிய மற்றும் நவீனகாலக் காரணிகள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவம் பற்றிய வரலாற்றுரீதியான புரிதலைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது.

நவீன காலகட்டத்தில், அதாவது முதலாளித்துவத்தின் காலகட்டத்தில், தேசியம் அல்லது தேசம் பிறக்கமுன் தேசியவாதம் பிறக்கிறது என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. நவீன தேசம் தோன்றுவதற்கான புறநிலைபூர்வமான வரலாற்று மாற்றச் சூழல்களில் தேசியவாதமே தேசியத்தை வடிவமைக்கிறது. தேசியவாதம் தேசியத்தின் வெகுஜனக் கற்பிதத்தைப் படைத்துப் பலப்படுத்தவும் கோரிக்கைகளை நியாயப்படுத்தவும் வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் தேடுகிறது. இந்த முயற்சி வரலாற்று நிகழ்வுகளுடன் சில திரிபுகளையும் கர்ணபரம்பரைக் கதைகளையும் புதிய கற்பனைகளையும் கருத்தியல் தேவைகளுக்கேற்பக் கலந்து பரிமாறுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கதையாடல்களிலும் இந்தப் போக்கே செல்வாக்குச் செலுத்தியது. நாட்டின் சில வரலாற்றாய்வாளர்கள் சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையிலான பண்டைய உறவுகளை இன்று மேலாட்சி பெற்றுவிட்ட குரோத இனத்துவமையப் பட்டகத்திற்கூடாக நோக்குவதின் தவறையும் ஆபத்தையும் விளக்க முற்பட்டனர். கருத்தரங்குகளில் கர்ணபரம்பரைக் கதைகளின் ஆதாரமற்றதன்மைகளைப் புட்டுக்காட்டிச் சிரமப்பட்டு விளக்கினர்.[2] ஆனால், துன்பகரமாக இந்த முயற்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாடாளுமன்ற அரசியலில் முற்றாக இறங்கிவிட்ட இடதுசாரிக் கட்சிகள் சிங்களப் பெருந்தேசியவாதத்திடம் சரணடைந்துவிட்டன. சில மாக்சிய இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையையும் சுயநிர்ணய உரிமையையும் ஜனநாயகப் புரட்சியின் அம்சமாக விளக்க முற்பட்டார்கள். ஆயினும், இனத்துவமைய அரசியலின் எழுச்சியால் இவர்கள் இரு இனங்கள் மத்தியிலும் ஓரங்கட்டப்பட்டனர். 1977இல் வந்த ஆட்சி மாற்றத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் நவதாராளமயமாக்கல் ஒரு புறமும் தேசிய இனப்பிரச்சினையின் இராணுவமயமாக்கல் மறுபுறமும் அமுலுக்கு வந்தன. இதுவே அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கையாயிற்று.  உள்நாட்டுப் போரின் வருகை தவிர்க்கமுடியாத ஒரு விதிபோலாகிவிட்டது.

இத்தகைய சூழலிலேயே சாந்திகுமார் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் பிரித்தானிய கொலொனிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சுரண்டல் தேவைகளுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம், உரிமைகள் மற்றும் கூட்டு அடையாளம் பற்றியும் தனது கருத்துக்களைப் பதிவிடுகிறார். மலையகத் தமிழ் சமூகம் பற்றி அவர் முன்வைக்கும் தகவல்களும் வாதங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் உருவாக்கத்தில் கொலோனிய – ஏகாதிபத்தியத்தின் பங்கினைச் சுட்டிக்காட்டுவதுடன் மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் குறிப்பான தன்மைகளையும் தெளிவாக்க உதவுகின்றன. தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை அவர் லெனினிசம் சார்ந்த தனது கோட்பாட்டுரீ தியான நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனப் பிரச்சினை பற்றி மாக்சிசவாதிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் இருந்ததை நன்கறிந்திருந்தார். 1979இல் எழுதிய ஒரு கட்டுரையில் மூன்றாம் உலக இடதுசாரி இயக்கங்கள் தொழிற்சங்க வாதத்திற்கும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பலியாவதைச் சுட்டிக்காட்டியபடி இவற்றின் விளைவான இரண்டு குறைபாடுகளைத் துல்லியமாக்குகிறார். ஒன்று, இந்த நாடுகளில் சிறுபான்மையாயிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நேச சக்திகளான சிறுபண்ணை விவசாயிகள் மற்றும் ‘பூதாகரமாக உருவெடுத்துவரும் வேலையில்லாப் பட்டாளம்’ ஆகிய சமூகப் பிரிவுகளை அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தை உணராதிருப்பது. மற்றது, இதைப் போலவே தேசிய இனப்பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதிருப்பது. அவருடைய வார்த்தைகளில்:

“இலங்கையில் தேசிய இனப் பிரச்சினை, ஏகாதிபத்தியத்தால் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள் ஒரு அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டதாலும், காலனித்துவப் பொருளாதார நோக்கிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருந்தோட்டப்பகுதி காலனித்துவ சிறுபான்மை மக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய அடக்குமுறைகளுக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் இவற்றைக் கவனத்திற்கு எடுக்காமல் வெற்றிபெற முடியாது. இலங்கையின் கடந்தகால இடதுசாரி தொழிற்சங்க அரசியல் தலைமைகள் பெரும்பாலும் இப்பிரச்சினைக்கு உரிய இடத்தைக் கொடுக்காததன் காரணமாகவும் அல்லது மௌனம் சாதிப்பதன் காரணமாகவும் சந்தர்ப்பவாதப் போக்கையே அனுஷ்டித்து வந்துள்ளன” (1979).

பல விடயங்கள் பற்றி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை வாசகர் மனதில் பல கேள்விகளை எழுப்பி இருக்கலாம். உதாரணமாக ‘ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள்’ என்பதற்கு விளக்கம் தேவைப்பட்டது.  இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து 1980இல் ‘தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ‘தீர்த்தக்கரை’யில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை தேசிய இனப் பிரச்சினை தொடர்பான சில விடயங்களை மேலும் தெளிவாக்க முயல்கிறது. ‘மார்க்சியமும் தேசியங்கள் குறித்த பிரச்சினையும்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் 1913ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் தேசியம் பற்றி முன்வைக்கப்படும் வரைவிலக்கணத்தை கொலோனிய – ஏகாதிபத்திய வரலாற்றுக்குட்பட்ட ஒரு மூன்றாம் உலக நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு யாந்திரீக ரீதியில் பிரயோகித்து ஒரு குறிப்பிட்ட மக்கள் தேசமாகத் தகுதியற்றவர்கள் என முடிவெடுப்பது தவறெனச் சுட்டிக் காட்டுகிறார் சாந்திகுமார். ஒரு இனம் ஒரு தேசமெனும் தகைமையைப் பெறப் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் திருப்திப்படுத்த வேண்டுமென ஸ்டாலின் கூறுகிறார்: வரலாற்றுரீதியில் நிலையாக இருக்கும் சமூகம், பொதுவான மொழி, பிரதேசம்,பொருளாதாரம் மற்றும் உளவியல் ரீதியான உணர்வு. ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒடுக்கப்படும் இனங்களுக்குப் பொதுவான பொருளாதாரம் இருப்பது சாத்தியமில்லை. இதனால் மற்ற நிபந்தனைகளைத் திருப்திப்படுத்தினாலும் ஒரு இனம் தேசிய இனமாகக் கருதப்படமுடியாதா எனும் கேள்வி எழுகிறது.

ஆகவே, ஏகாதிபத்தியம் பற்றியும் அதன் காலகட்டத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் லெனின் தெரிவிக்கும் கருத்துக்களே நமதுகால வரலாற்று நிலைமைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன என வாதிடுகிறார் சாந்திகுமார். இந்தப் பார்வையில் தேசியங்களின் பிரச்சினைகளை பின்வருமாறு மூன்றாக வகைப்படுத்துகிறார்.

“முதலாவதாக ஏகாதிபத்தியத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் விடுதலையும் சுயாட்சியும். இரண்டாவதாக காலனித்துவ பரிபாலன அமைப்பின் விளைவாக ஒருமயப்படுத்தப்பட்ட உள்நாட்டு தேசிய இனங்களின் பிரச்சினை. முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள், ஒரு தேசிய பரிபாலன அமைப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. மூன்றாவதாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டதின் விளைவாக உருவான தேசிய இனப்பிரச்சினைகள்.

இரண்டாவதிற்கும், மூன்றாவதிற்கும் முறையே இலங்கையின் வட- கீழ் பிரதேச தமிழின மக்களையும் இந்திய வம்சாவழி தோட்டப்புற (மலையக) மக்களையும் உதாரணமாக கூறலாம் (சாந்திக்குமார், 1980).

இந்தச் சமூக அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்டாலின் முன்வைக்கும் நிபந்தனைகளில் ஒன்றான பொதுப் பொருளாதாரம் செல்லுபடியாகாது எனச் சுட்டிக்காட்டுகிறார். கொலோனிய – ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகின் படத்தை தொடர்ச்சியாக மீள்வரைந்து புதிய புவியியல்களை உருவாக்கின, மீளுருவாக்கின. பல்லின சமூகங்களை ஒற்றையாட்சிக்குள்ளாக்கிய அதேவேளை அவற்றைப் பிரித்தாளும் தந்திரத்தையும் இந்த வல்லரசுகள் கையாண்டன. ‘முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள்’ எனும் சாந்திக்குமாரின் கூற்றுக்கு விளக்கம் தேவைப் படலாம்.  அந்தக் கேள்வியை இங்கு ஆராய்வது சாத்தியமில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அடிமைக் கூலி முறைமை சர்வதேசக் கொலோனிய தொழிற்பிரிவின் முக்கிய குணாதிசயமாயிற்று.  1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைக் கூலிமுறைமை சட்டவிரோதமாக்கப்பட்ட பின் பெருந்தோட்ட உற்பத்தி மற்றும் தேவைகளுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் மற்றைய கொலொனிகளுக்கு அரைஅடிமைக் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த நடைமுறை 1920கள் வரை தொடர்ந்தது. நவீன காலத்தில் பல்வேறு நாடுகளினதும் அவற்றின் தேசிய இனப் பிரச்சினைகளினதும் உருவாக்கத்தில் இந்த வரலாற்றுப் போக்கின் பங்கு தீர்க்கமானது. இந்த வரலாற்றுப் பின்னணி பற்றிய புரிதலுடன் சாந்திகுமார் மலையகத் தமிழ் சமூகத்தின் தோற்றத்தையும் அதன் உருவாக்கத்தில் காலத்திற்கூடாக இடம்பெற்ற மாற்றங்களையும் அணுகுகிறார். அவருடைய அவதானிப்புகளும் கருத்துக்களும் இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னைய வரலாற்றுப் போக்கு பற்றியன என்பதையும் குறிப்பிடவேண்டும். வரலாற்றுரீதியான தகவல்களைப் பொறுத்தவரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை சாந்திக்குமார் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. துரதிஷ்டவசமாக இந்த உசாத்துணை விபரங்கள் அவரது கட்டுரைகளில் சேர்க்கப்படவில்லை.

மலையகத் தமிழ் சமூக உருவாக்கத்தின் வரலாற்றுப் புள்ளிகள்

“… கடந்த நூற்றாண்டிற்கு மேற்பட்ட இவர்கள் வெறும் தொழிலாளர் கூட்டமாக மாத்திரம் தான் உருவெடுத்திருந்தார்களா? இவர்கள் இங்கு வாழ்ந்து தீர்த்திருப்பது ஒரு வாழ்க்கை இல்லையா? அந்தச் சுவடுகளை, ஒரு சமூகத்தின் உயிர்ப்பை கிராமங்களில் காணுவதைப் போல தோட்டங்களிலும் நாம் காணக்கூடுவதில்லையா? இம்மக்கள் தங்கள் போராட்டங்களில், நடவடிக்கைகளில் கலைக் கலாச்சார பிரதிபலிப்புக்களில் தங்களை ஒரு சமூகமாக இனங்கண்டுள்ளார்கள். மிகப் பெரும்பான்மையாக தொழிலாளர்களை மையமாகக் கொண்டு பல சமூக தட்டுக்களை தன்னுடன் உருவாக்கி வளரும் ஒரு சமூகமாக இவர்கள் உருவெடுத்துள்ளார்கள்” (சாந்திக்குமார், 1980).

நாலு தசாப்தங்களுக்கு முன்னர் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றி சாந்திகுமார் பேசவும் எழுதவும் முற்பட்டபோது அந்த விடயம் இலங்கையின் சமூக விஞ்ஞான வட்டங்களில் ஒரு மிகப்புதிய பேசுபொருளாகவிருந்ததை நான் நினைவுகூருகிறேன். அதேவேளை அவரின் இந்த முன்னெடுப்புடன் சமகாலத்தில் வேறு சிலரின் பங்களிப்புக்களும் இடம்பெற்றன. அன்றைய சூழலில் சாந்திகுமார் எழுதிய கட்டுரைகள் மலையக மக்களின் இன உருவாக்கத்தையும் அதன் முரண்பாடுகளையும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் ஒரு அம்சமாக முன்வைத்து விளக்க முற்பட்டன. முக்கியமாக அவருடைய கட்டுரைகள் ஒரு கோட்பாட்டு ரீதியான பார்வையால் ஒளியூட்டப்பட்ட முன்னெடுப்பினைக் குறித்தன. துரதிஷ்டவசமாக கடந்த தசாப்தங்களுக்கூடாக இதை அவரால் தொடரமுடியாது போனமை வருந்தத்தக்கது. அவருடைய  முயற்சி ஒரு நிறைவு பெறாத் திட்டமான போதும் அவர் விட்டுச்சென்ற கட்டுரைகள் இன்றும் பெறுமதி மிக்கவை என்பதை இந்தக் கட்டுரை புலப்படுத்தும் என நம்புகிறேன்.

இலங்கையின் மலையகத்தின் காடுகளை வெட்டி இலாபம் தரும் பணப்பயிர் தோட்டங்களாக மாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிக்கலும் துன்பமும் மிகுந்த வரலாற்றின் பல்வேறு கட்டங்களை இனங்கண்டு பதிவிடுகிறார். கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக முதன்முதலாகத் தென்னிந்தியாவிலிருந்து 1828ஆம் ஆண்டு தொழிலாளர் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு சிங்ஹப்பிட்டியவில் (இன்று பேராதெனியப் பூங்கா இருக்குமிடத்தில்) குடியமர்த்தப்பட்டனர் எனும் தகவலை நினைவூட்டுவதுடன் இதைத் தொடர்ந்து 30-40 வருடங்கள் மலைநாட்டுப் பகுதியில் கோப்பிப் பயிரிடுகையின் பகுதியில் பரவலான வளர்ச்சி பற்றியும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களின் வருகை தொடர்பாகவும் பல விடயங்களைப் பதிவிடுகிறார். கோப்பிப் பயிரின் அறுவடை காலத்திலேயே பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால், பல தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக அல்லது நீண்டகாலத்திற்கு தங்கவில்லை. மறுபுறம் இலங்கையில் தொழிலாளர் பற்றாக்குறை கொலோனிய ஆட்சியாளருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நிரந்தரப் பிரச்சினையாயிருந்தது. கோப்பிப் பயிர் வியாதிக்குள்ளாகி அழிவடைந்ததைத் தொடர்ந்து 1860களில் பெருந்தோட்ட முறையில் தேயிலை உற்பத்தி ஆரம்பித்தபோது நிரந்தரமான தொழிற்படையின் தேவை மேலும் பெரிதாகியது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யத் தொழிலாளக் குடும்பங்களை இந்தியாவிலிருந்து பெருமளவில் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆயினும், எதிர்பார்த்து வந்த வாழ்க்கை இலங்கையில் கிடையாததாலும் கடுமையான வேலை நிபந்தனைகளாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். உதாரணமாக 1893ஆம் ஆண்டு 91,676 பேர் தோட்டப்பகுதிக்குப் புதிதாக வந்தபோதும் அதே ஆண்டில் 73,181 பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர். தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து மலையகம் வரையிலான பயணம் பல இன்னல்களையும் உயிராபத்துக்களையும் கொண்டிருந்தது. ஆயினும், இந்தியக் கிராமங்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையும் பஞ்சமும் மறுபுறம் இலங்கைக்குத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஏஜண்டுகள் கொடுத்த கவர்ச்சிகரமான, ஆனால் போலியான வாக்குறுதிகளும் பலரின் புலப்பெயர்வுக்கான காரணிகளாயின. இந்த ஏஜண்டு முறையே பெரிய கங்காணி முறைக்கு முன்னோடியாக இருந்தது. பெரும் பிரயத்தனங்களுக்கூடாகச் சேர்த்துக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்திச் சுரண்டும் மூடப்பட்ட முகாமை அமைப்பாகவே தேயிலைப் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு தோட்டமும் அதற்கேயுரிய தொழிலாளக் குடும்பங்களின் நிரந்தரக் குடியிருப்புக்களாக அமைக்கப்பட்டு ஒரு பெரிய கங்காணியின் பொறுப்பில் விடப்பட்டது. இந்தத் தோட்ட அமைப்பில் கங்காணிகள் சாதிமுறைக் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினர். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இணைந்த இந்த அமைப்பில் வர்க்கமும் பாலும் சாதியும் ஒன்றை மற்றது ஊடறுக்கும் உறவினைப் பெறுகின்றன. மறுபுறம் இத்தகைய நிர்ப்பந்த நிலைமைகளில் குடியேற்றப்பட்ட இந்தச் சமூகத்தில் 1920களை அடுத்து அதுவொரு நிரந்தர சமுதாய அமைப்பின் தன்மைகளைப் பெறுவதைக் காணலாம் எனக் கூறுகிறார் (1982).

ஆயினும், “இந்தக் காலப்பகுதிகளில் மலையகத்தோட்டங்கள் இருண்ட கோட்டைகளாகவே இருந்துள்ளது” எனக் கூறும் சாந்திகுமார் தொழிலாளர் மத்தியில் ஸ்தாபன முயற்சிகள் அவர்கள் வந்து ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் 1931ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கிறது எனும் முக்கிய தகவலை நினைவூட்டுகிறார். அவருடைய கருத்தில் “இந்தக் கட்டத்தின் ஆரம்பத்தோடு மலையக மக்களின் வரலாற்றோடும், சமூக உருவாக்கத்தோடும் தொடர்புடைய பல முக்கிய அம்சங்கள் நோக்கப்படவேண்டிய – வெளிப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை நாடி நிற்கின்றன” (1981). “வெளி உலகின் நடவடிக்கைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இறுக்கமான கோட்டைகளாகவிருந்த தோட்ட அமைப்புக்களில் முதல் நுழைவாயிலாக 1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை அமைந்தது. முதன் முதலாக தோட்டப்புறங்களில் வெளியார் நுழையவும், பிரச்சாரங்கள் நடத்தவும் இது இடமளித்தது” (1982).

1931இல் வந்த சர்வஜன வாக்குரிமை மலையக மக்களையும் உள்ளடக்கியபோதும் அதன் அமுலாக்கலில் இருந்த குறைபாடுகளால் சில பகுதியினருக்கு அந்த உரிமை கிட்டவில்லை. அந்த வருடம் இடம்பெற்ற அரச சபைத்தேர்தலில் மலையகத் தமிழரின் வாக்குகளால் தோட்ட உரிமையாளர் பின்னணியைக் கொண்ட பெரி. சுந்தரம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இரு தமிழர்களும் கோடன் (Gordon) எனும் ஒரு தோட்டத்துரையும் வெற்றிபெற்றனர். இவர்கள் “மலையக மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளின் நின்றும் விலகியே இருந்தனர்” எனச் சுட்டிக்காட்டும் சாந்திகுமார் (1982) தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு நலன்களை மையப்படுத்திய பரந்த நோக்கிலான ‘அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனம்’ எனும் அமைப்பினை நிறுவிய நடேச ஐயரின் பங்களிப்பிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார். இந்தியாவிலிருந்து வந்த முற்போக்கு அறிவாளரும் கொலோனிய எதிர்ப்புச் செயற்பாட்டாளாருமான  நடேச ஐயரின் முயற்சிக்குத் தோட்டத் துரைமாரினதும் அவர்களது ஏவலாளர்களுமான பெரிய கங்காணிகள் மற்றும் பொலிஸாரினதும் எதிர்ப்புப் பலமாயிருந்தது. தோட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலையில் நடேச ஐயரின் பிரச்சாரத்திற்கு வேறு வழிகளைக் கையாளவேண்டியிருந்தது. தோட்டப் பகுதிகளின் பிரதான வீதிகளில் திறந்த காரிலிருந்து ஐயர் தனது பிரச்சாரத்தைச் செய்தார். ஆயினும், தோட்ட அமைப்பின் அதிகாரமும் அரசாங்கமும் போட்ட தடைகளாலும் 1933இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலும் நடேச ஐயரின் முயற்சியைத் தொடர்வது மேலும் கடினமாயிற்று. இறுதியாக எல்லா தோட்டத் தொழிலாளர்களையும் இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல அவர் எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால், ஏற்பட்ட வெற்றிடத்தை இடதுசாரிகள் நிரப்ப முன்வந்தனர்.[3]

இன்னல்கள் பெருகியபோதும் மலையகத் தமிழ்ச் சமூகம் ஒரு தொடர்ச்சியான நிரந்தர இருப்பைச் சந்ததிகளுக்கூடாகப் பெற்றவண்ணமிருந்த நிலையில் 1948இல் வந்த குடியுரிமைச் சட்டம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ‘சுதந்திரம்’ கொலோனிய ஒடுக்குமுறையின் முடிவாக அல்லாது “உள்நாட்டுக் காலனித்துவம் அல்லது இனக்காலனித்துவமாகத் தொடர்வதைக் காண்கிறோம்” என்றபடி ‘இனக்காலனித்துவம்’ என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.

“உண்மையில், காலனித்துவம் உள்நாட்டுக் காலனித்துவம், அல்லது இனக்காலனித்துவமாக தொடர்வதைக் காண்கிறோம். சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இருந்து இலங்கையின் நிர்வாகம், சட்டதிட்டங்கள், அரசியல் யந்திரம் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் இனக்காலனித்துவ ஆதிக்கத்திற்கு செய்த தயாரிப்புகளாக தென்படுகின்றன. இந்த தயாரிப்புக்களின் முன்னோடிகளில் ஒன்றாக 1948ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களின் வாக்கு பறிக்கப்பட்டமை இருந்தது. வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலமாகத் தொடர்ந்தும் அதீத லாபம் தரக்கூடிய அரை அடிமைத் தொழிலாளர்களாக அவர்களின் நிலைமையை நீடிப்பது சாத்தியமாயிற்று. ஏனைய துறைகளில் இவர்களின் மேல்நோக்கிய நகர்வு தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த இலங்கை – இந்திய குடியுரிமை ஒப்பந்தங்கள் உள்நோக்கில் மலையக மக்கள் மீதான அரசின் செலவைக் குறைப்பதையே கொண்டிருந்தன” (1980).

1980இல் அவர் எழுதிய அதே கட்டுரையின் பின்வரும் வாசகங்கள் அவருடைய நிலைப்பாட்டைச் சுருக்கமாகப் பிரதிபலிக்கின்றன.

“சமூக உருவாக்கம் ஒரு புறமும் இனக் காலனித்துவத்தின் செயற்பாடு மறுபுறமுமாக தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வைப் பலப்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சமூக உணர்வின், பிரக்ஞையின் பிரதிபலிப்பாகவே மலையகம் என்ற பதம் அண்மைக்காலங்களில் ஆதிக்கம் பெற்று வருகின்றது. மலையகம் என்பதில் தொனிக்கின்ற புவியியல் அர்த்தத்தை மாத்திரம் நோக்கும்போது அது பிராந்தியவாதமாகப் படலாம். ஆனால், மலையகம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையை அன்றி குறிப்பிட்ட உற்பத்தி முறையை (பெருந்தோட்டத்துறையைச்) சார்ந்து வாழ்கின்ற ஒரு சமூகத்தின் இருத்தலை, ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியை குறிக்கின்றது.

நாம் இப்படிக் கூறுவது இதுவரை இருந்துவந்திருக்கின்ற பல ஸ்தாபனங்களிற்கு, கோட்பாடுகளிற்கு ரொம்பவும் அசௌகரியத்தை ஏற்படுத்தியே தீரும். மலையக மக்களை ஒரு தொழிலாள கூட்டமாகவே மாத்திரம் கருதுவது பலருக்கு வசதியாகவிருக்கிறது.”

மலையகத் தமிழர் தொடர்பாக ‘இனக் காலனித்துவம் அல்லது உள்நாட்டுக் காலனித்துவம்’ பற்றிச் சாந்திகுமார் முன்வைக்கும் கருத்து இலங்கையின் பேரினவாத ஆட்சியாளரும் அரசும் தேசிய இனப்பிரச்சினையை கையாண்ட பொதுவான கொள்கையை விளக்கவும் உதவும் எனலாம். இனப்புவியியலை மாற்றும் நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்களுடன் தேசிய இனப்பிரச்சினையின் இராணுவமயமாக்கல், அரசியல் தீர்வை மறுத்தல் மற்றும் முடிந்தவரை மற்றைய இனங்களின் கூட்டு அடையாளங்களையும் நினைவுச்சின்னங்களையும் அழித்தல் போன்ற திட்டங்கள் எல்லாம் அதையே உணர்த்துகின்றன. சாந்திகுமார் ஏற்கனவே குறிபிட்டதுபோல் பெருந்தோட்ட உற்பத்தி முறையே இந்த மக்களின் கூட்டு இருப்பிற்கு வரலாற்று ரீதியான அடிப்படையாயிற்று. மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்தின் பரிணாமப் போக்கானது இந்தத் தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அதேவேளை சமூகரீதியான, வர்க்கரீதியான வேறுபடுத்தலையும் உள்ளடக்கியதெனும் அவருடைய அவதானிப்பும் முக்கியமானது. இலங்கையின் மலையகத்தில் ஒரு சிறுபான்மைத் தமிழ் தேசிய இனத்தை உருவாக்கும் நோக்கம் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்திற்கு இருக்கவேயில்லை. ஆனால், பொருளாதார ரீதியான சுரண்டலுக்காகக் கொலோனியம் உருவாக்கிய பெருந்தோட்ட அமைப்பு அத்தகைய ஒரு பரிணாமப் போக்கிற்கு வழிவகுத்தது. கொலோனிய ஏகாதிபத்தியம் இலங்கைத்தீவில் மலையகத் தமிழர் எனும் ஒரு இனத்தின் உருவாக்கத்தில் வரலாற்றின் உணர்வுபூர்வமற்ற (unconscious) கருவியாயிற்று.

ஆனால், பல தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களின் தாக்கங்களினால் மலையகத் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது தொடர்பாக சமீபத்திய ஆய்வுகள் முக்கியமான தகவல்களைத் தருவதுடன் பயன்மிக்க கேள்விகளையும் எழுப்பத் தூண்டுகின்றன. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு முனைவர்கள் சந்திரபோஸ் மற்றும் ரமேஷ் தொகுத்து வெளியிட்ட ‘இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் 150 வருடங்கள் (1857-2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்குகிறது.[4] இந்த நூல் தரும் தரவுகளின் உதவியுடன் முக்கியமான ஒரு சில மாற்றப் போக்குகளைக் குறிப்பிட விரும்புகிறேன். காலப்போக்கில் பல காரணங்களால் மலையகத் தமிழர்களின் மொத்த சனத்தொகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாயிருப்போரின் விகிதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்துவந்துள்ளது. ஆயினும், தோட்டத் தொழிலாளர்கள் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் புவியியலில் வகிக்கும் பங்கு முக்கியமானது. அவர்களின் போராட்ட மரபும் இன்றும் தொடரும் போராட்டங்களும் அந்த சமூகத்தின் உருவாக்க வரலாற்றின் தொடர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய மலையகத் தமிழரில் பெரும்பான்மையினர் தொழிலாளர்களே. அவர்களில் பெரும்பான்மையினர் முறைசாராத் துறைகளில் தொழிலாற்றுகிறார்கள். அதேவேளை மாற்றங்களைப் பொறுத்தவரை, ஒரு புறம் கல்விக்கூடாக ஒரு சாராரின் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் தோட்டத் தொழிலாளரின் சில பகுதியினருக்கு சொந்த வாழிட உரிமை போன்றன இடம்பெறும் அதேவேளை மறுபுறம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக 480,000 மலையகத் தமிழரை இந்தியாவிற்குப் புலம்பெயர்க்கப்பட்ட பின்னர் மலையகத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் சனத்தொகை தொடர்சியாகக் குறைந்துவரும் போக்கையும் காண்கிறோம். இன வன்முறைகளால் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகையினர் வடக்கு கிழக்குக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். இன்னொரு புறம் தொழில் காரணமாக இளம் சந்ததியினரின் நகர்நோக்கிய, வேறு பிரதேசங்கள் நோக்கிய நகர்ச்சியும் தொடர்கிறது. மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் இலங்கைக்குள்ளே மலையகத்திற்கும் அப்பால் பரந்துவிரிகிறது. அவர்களின் சமூக, அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளும் போராட்ட முனைகளும் முன்பைவிடப் பன்முகமயமாகியுள்ளன.

அவர் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற மாற்றப் போக்குகள் மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்திலும் அதன் மீளுற்பத்தியிலும், அவர்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு, வர்க்க உறவுகள் ஆகியவற்றிலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றித் தனது விமர்சனப் பார்வையிலான கருத்துக்களைச் சாந்திகுமார் கொண்டிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதேபோன்று நீண்டகால உள்நாட்டுப் போரும் அதன் விளைவுகளும், தொடரும் இராணுவமயாக்கலும் நாட்டின் தேசிய இனப்பிரச்சினையையும் இனங்களுக்கிடையிலான உறவுகளையும் எப்படிப் பாதித்துள்ளன என்பது பற்றியும் அவர் தனது கருத்துக்களைக் கொண்டிருப்பார் என நம்பலாம்.  மலையகத் தமிழரின் தேசிய இன உரிமைப் பிரச்சினையை அவர் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையின் ஒரு அம்சமாகவே பார்த்தார். இன்றைய இலங்கையில் தொடர்ந்தும் இனரீதியில் ஒடுக்கப்படும் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையகத்தமிழர் ஆகிய மூன்று இனத்தவருக்கும் கொள்கை ரீதியான பொது ஜனநாயகத் திட்டமொன்று தேவை என்பது கண்கூடு. அத்தகைய திட்டமொன்றின் அடிப்படையில் சிங்கள முற்போக்காளரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் தேடவேண்டும் என்பதும் கண்கூடு. தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு நாட்டின் ஜனநாயகப் புரட்சியின் மீட்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால், இன்றைய இலங்கையில் இவை பாரிய சவால்கள் என்பதையும் மறுக்க முடியாது. இந்தப் பார்வைபற்றிச் சாந்திகுமாரின் சிந்தனையை அறியும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. ஆயினும், நாம் அறிந்த சாந்திகுமார் இதுபோன்ற விடயத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருப்பார் என நம்பலாம். அவர் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யாமை வருந்தத்தக்கது. ஆனால், நான்கு தசாப்தங்களுக்கு முன் அவர் முன்வைத்த விமர்சனப் பார்வையும் அணுகுமுறையும் மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம் மற்றும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையின் சிக்கல்மிகுந்த உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் சமீபகாலப் போக்குகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன்.

பேராசிரியர் சண்முகரத்தினம் (சமுத்திரன்)

சமுத்திரன் எழுதிய இக்கட்டுரையையும் அவரது ஏனைய கட்டுரைகளையும் Samuthran.net இல் பார்க்கலாம்.


[1] இந்தக் கட்டுரைகள் பின்வருமாறு:

எல். சாந்திக்குமார், 1979, மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்களும் இலங்கையும், மானுடம், யாழ். பல்கலைக்கழக மானுடவியல் துறை வெளியீடு

எல். சாந்திக்குமார், 1980, மலையகம் சில குறிப்புகள், தீர்த்தக்கரை 06-08 1980

———–,1980, தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மாக்சிய கண்ணோட்டம், தீர்த்தக்கரை 10-12 1980

———–, 1981, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும், தீர்த்தக்கரை 02-05 1981.

———–, 1982, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும் II, தீர்த்தக்கரை 01-03 1982

———–, 1982, இனவெறியாட்டம்… மலையக மக்கள்… எதிர்காலம், தீர்த்தக்கரை 01-03 1982

[2] உதாரணமாக 1979ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பில் சமூக விஞ்ஞானிகள் சங்கம் இலங்கையின் இனங்கள் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த விடயம் தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் இனங்களைச் சார்ந்த சமூக, அரசியல், வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றுகூடித் தத்தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துக் கருத்துக்களைப் பரிமாறிய முதலாவது பகிரங்கக் கருத்தரங்கம் இதுவே. ஆய்வாளர்கள் இலங்கையின் இனங்களின் விசேடமாகச் சிங்கள மற்றும் தமிழ் இனங்களின் வரலாறுகள் பற்றிய பல கட்டுக்கதைகளை ஆதாரபூர்வமாகக் கட்டுடைத்து அவற்றின் பொய்மையை அம்பலப்படுத்தினர். சமர்ப்பிக்கப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் 1984ஆம் ஆண்டு Ethnicity and Social Change in Sri Lanka எனும் தலைப்பில் ஒரு தொகுப்பாகச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது.

[3] பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர் பிரச்சினைகள், தொழிற்சங்க வரலாறு ஆகியவை பற்றிய பல விபரங்களை குமாரி ஜயவர்த்தனவின் ´The Rise of the Labour Movement in Ceylon´ (1972) எனும் தலைப்பிலான நூலில் அறியலாம்.

[4] ஏ. எஸ். சந்திரபோஸ், இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள் ), 2018, இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட்.