பட மூலம், Selvaraja Rajasegar

இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின் ஒரு பாகமாகியுள்ளது. ஆனால், 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைச் சம்பவங்கள் இன்னமும் அவ்வாறு உலக மக்களின் கூட்டு நினைவில் ஒரு பாகமாக உள்ளடக்கப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தினம் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த அஞ்சலி நிகழ்வுக்கு, வரலாறு காணாத மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கிராமத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கைப் போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இருந்து வருகின்றது. இத்தகைய நிகழ்வுகள் இந்த மாதம் நெடுகிலும் உலகெங்கிலும் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறிருப்பினும், போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்திருக்கும் நிலையிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை தொடர்பாக தொடராக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டு, பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் பின்னணியிலும் கூட, இலங்கையில் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வருபவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் சிறிதளவு முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதாவது, இக்குற்றச் செயல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிந்து, அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை பொறுப்புக் கூற வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் சிறிது முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இனக் கலவரங்கள் குறித்த அச்சம் நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ருவாண்டா இனப் படுகொலை இலங்கைக்கு மிக முக்கியமான சில படிப்பினைகளை வழங்குகின்றது.

டுட்சி இன மக்களின் படுகொலை

ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டில் மிகக் குறுகிய ஒரு காலப் பிரிவான 100 நாட்களுக்குள் மிதவாத அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த ஹுட்டு பிரிவைச் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கிய விதத்தில் சுமார் 800,000 டுட்சி பிரிவைச் சேர்ந்த மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இனத்துவ பெரும்பான்மையினரான ஹுட்டு பிரிவினரால் திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை என்பவற்றுக்கு மேலும் பல்லாயிரக் கணக்கானோர் பலியானார்கள்.

பதினைந்து ஆண்டுகளின் பின்னர் இதே மாதிரியான மற்றொரு படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது – இம்முறை இது இலங்கையின் வட பிரதேசத்தில் நிகழ்ந்தது. இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) இயக்கத்திற்கும் இடையில் நீண்​காலம் இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் அழிவுகரமான விதத்தில் முடிவுக்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. அதனுடன் இணைந்த விதத்தில், தமிழ் சிறுபான்மையினருக்கான சுதந்திர நாடு ஒன்று குறித்த இலட்சியமும் கைநழுவிப் போனது.

இலங்கையில் இடம்பெற்ற போராட்டம் நெடுகிலும் அதில் சம்பந்தப்பட்டிருந்த இரு தரப்புக்களுமே மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கும் மதிப்பளிக்கத் தவறியிருந்தன. இலங்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோதமான கொலைகள் மற்றும் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் என்பன அநேகமாக நாளாந்த நிகழ்வுகளாக இருந்து வந்தன. தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் சிறுவர்களை போராளிகளாக பலவந்தமாக ஆட்சேர்ப்புச் செய்தமை என்பன தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அநேகமாக 2000ஐ அடுத்து வந்த ஆண்டுகள் முழுவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கிலும், கிழக்கிலும் இணையான ஒரு அரசை செயற்படுத்தி வந்தது. 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் எதிர்கொண்ட இராணுவ ரீதியான தோல்விகளையடுத்து வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அந்த இயக்கம் நடத்தி வந்த சிவில் நிர்வாகம் படிப்படியாக முறியடிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் அமைந்திருந்த ஒரு சிறு நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளும், சுமார் 330,000 தமிழ் சிவிலியன்களும் சிக்கிக் கொண்டிருந்தனர். சர்வதேச ஊடகங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், உள்ளூர் ஊடகவியலாளர்கள் மௌனிக்கச் செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில், இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வந்த ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த ஒரு சில சர்வதேச களப் பணியாளர்களை விலக்கிக் கொள்ளுமாறு அரசாங்கம் ஐ.நாவுக்குக் கட்டளையிட்டது.

கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய படுகொலைகள்

கையடக்கத் தொலைபேசி புகைப்படங்கள் மற்றும் ஒரு சில வீடியோக்கள் என்பன கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைச் சம்பவக் காட்சிகளை எடுத்துக்காட்டும் விதத்தில் சுற்றுக்கு விடப்பட்டிருந்தன. போர் இடம்பெற்ற பிரதேசங்களில் அமைந்திருந்த வைத்தியசாலைகளை இலக்காகக் கொண்டு முறையான அடிப்படையில் ஷெ​ல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேபோல, உணவு விநியோக வாகன அணிகள் மீதும், காயப்பட்டவர்களை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்களின் மீதும் கூட இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உத்தியோகபூர்வமாக “பாதுகாப்பு வலயமாக” பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஒரு பிரதேசம் ஒரு சில மாதங்களுக்குள் கொடூரமான ஒரு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அங்கு ஒன்றுதிரண்டிருந்த தமிழ் சிவிலியன்களின் மீது கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம் அதன் வெற்றிகரமான “மனிதநேய மீட்புச் செயற்பாட்டைக்” கொண்டாடியது. உண்மையிலேயே அது ஒரு இனப்படுகொலையாகும்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகள் எவையுமற்ற மரண தண்டனைகள் மற்றும் பாலியல் வன்முறை என்பன தொடர்பான மிகக் குரூரமான படங்களை ஒளிபரப்புச் செய்தது. புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும், பெருந்தொகையான சாதாரண பொதுமக்களும் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம் சரணடைவதற்கென நடந்து வந்த பொழுது இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இலங்கைப் போரின் இறுதி ஐந்து மாத காலப் பிரிவின் போது 40,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்க முடியும் என 2012ஆம் ஆண்டில் ஐ.நா. செயலாளர் நாயகம் மதிப்பிட்டிருந்தார். பல போர் நிலைமைகளில் போலவே இங்கும் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதுடன், இது மேலே குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க உயர்வானதாக இருந்து வர முடியும்.

போர் முடிவடைந்ததனை அடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வட புலத்தில் வன்னிப் பிராந்தியத்தில் அமைந்திருந்த வசதி வாய்ப்புக்கள் எவையுமற்ற, அசுத்தமான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இன்றும் கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

சாட்சிகள் இல்லாத போர்’

ருவாண்டாவில் ஓர் இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட முடியும் என்ற விடயம் முன்னரே தெரிந்திருந்தாலும் கூட, அது தொடர்பாக சர்வதேச சமூகத்தினால் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறானால் தமிழ் இனப்படுகொலை வேண்டுமென்றே மூடிமறைக்கப்பட்டதாகவும், “சாட்சிகள் இல்லாத போராகவும்” கருதப்படுகின்றது.

இந்த இரு நிகழ்வுகளிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவற்றுக்கு நேரடி எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன. ஆனால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் அவை தவிர்த்துக் கொண்டன. ருவாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் செயல்முடக்கம் “மிகவும் பாரதூரமான தோல்விகளாக” ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ருவாண்டாவின் கடந்த கால நிகழ்வுகளை கவனத்தில் எடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் “வன்முறைக் கும்பல்களின்” 61 தலைவர்களுக்கு குற்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. பாலியல் வன்முறையை ஒரு இனப்படுகொலைச் செயலாகக் கருதும் மிக முக்கியமான தீர்மானமும் அந்த நீதிமன்றத்தின் முடிவுகளில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்தது. சுமார் இருபது இலட்சம் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் உள்ளூர் “ககாக்கா நீதிமன்றங்களில்” முன்னெடுக்கப்பட்டன. ருவாண்டாவில் ஹுட்டு மற்றும் டுட்சி பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அந்நாட்டின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

ருவாண்டாவின் இந்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் கூட, உண்மையில் அந்த நாட்டில் என்ன நடந்தது, அது ஏன் நடந்தது போன்ற விடயங்களை பதிவுசெய்துள்ளன.

அதற்கு மாறான விதத்தில், இலங்கையில் போர் காலத்தின் போது இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளை நடத்தி, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என வழங்கியிருந்த அதன் வாக்குறுதிகளை இலங்கை மீண்டும் மீண்டும் மீறி வந்துள்ளது. இந்த வாக்குறுதி மீறலின் வரலாற்றுக்கு மத்தியில் ஆள் கடத்தல்கள், தடுப்புக் காவல் கைதிகளின் சித்திரவதைச் சம்பவங்கள் மற்றும் பாலியல் வன்முறை என்பன, பரவலாக இடம்பெற்று வருகின்றன.

விடுக்கப்படாத ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்

தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களும், அதேபோல முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து நாட்டில் நிகழ்ந்து வருகின்றன. இராணுவக் களைவு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடம் கையளித்தல் என்பன தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இலங்கையின் பலவீனமான அரச கட்டமைப்புக்கள், சுயாதீனமான ஒரு நீதித்துறை இல்லாதிருக்கும் நிலை மற்றும் தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் கலாசாரம் என்பன இது தொடர்பாக நாடு எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான இடையூறுகளாக இருந்து வருகின்றன.

ஹார்வார்ட் பல்கலைக்கழக அறிஞர் மார்த்தா மினோ கூறுவதைப் போல மீண்டும் மீண்டும் இடையறாது கொடூரச் செயல்கள் இடம்பெறுவதற்கு பழிவாங்கல் மற்றும் மன்னித்தல் என்பவற்றுக்கிடையிலான “அதீத மறதி” மற்றும் “அதீத நினைவுகூரல்” என்பவற்றுக்கான ஒரு பாதை தேவைப்படுகின்றது. இன்றைய இலங்கையில் நினைவு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் என்பன, கடந்த கால நிகழ்வுகளுக்கு பொறுப்புக்கூறுவதற்கு தடையாக இருந்து வரும் அரசின் உத்தியோகபூர்வ கதையாடல்களுக்கு எதிராக முன்வைக்கப்படும்  தீவிர நிலைப்பாடுகளாக உள்ளன.

யூத இனப்படுகொலைகளின் போது உயிர் தப்பிய பிரிவோ லேவி ஒரு முறை இப்படிக் கூறியிருந்தார்: “அது நிகழ்ந்துள்ளது. எனவே அது மீண்டும் நிகழ முடியும். அது எல்லா இடங்களிலும் நிகழ முடியும்.”

தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் நிலையும், மிகக் கொடூரமான குற்றச் செயல்களுக்கான மூலகாரணங்களை களையத் தவறும் நிலையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வரையில் இலங்கையைப் பொறுத்தவரையில் நிலையான ஒரு சமாதானம் என்பது ஒரு மாயையாகவே இருந்து வரும். கடந்த கால நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வது பொருள்மிக்க நல்லிணக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனையாக  இருந்து வருதல் வேண்டும்.

சேரனின் கவிதைத் தொகுதியில் இருக்கும் கவிதை வரிகள் பாரிய வன்முறைகள் நிகழும் சந்தர்ப்பங்களில், அத்துடன் எல்லாவற்றையுமே முடித்துக் கொள்ள வேண்டியிருக்கும் சவாலை எடுத்துக்காட்டுகின்றது:

முற்றிற்று என்று சொல்லி

காற்றிலும் கடலிலும் கரைத்து விட்டு

கண்மூட

காற்றும் கிடையாது

கடலும் கிடையாது

காடாற்று எப்போதோ?


கவிஞரும் வின்ட்சர் பல்கலையின் இணைப் பேராசிரியருமான சேரன் மற்றும் குயீன்ஸ் பல்கலையின் சட்டத்துறை இணைப் பேராசிரியரான ஷெரீன் எய்க்கென்  ஆகியோர் எழுதி Theconversation தளத்தில் Rwanda and Sri Lanka: A tale of two genocides என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.