படம் | AFP PHOTO/ Ishara Kodikara, WSJ

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில் இலங்கைத் தீவிற்கிருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், சீனாவின் மேலாண்மை இலங்கைத் தீவில் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது. அமெரிக்காவின் நலன்களுக்கு போட்டி சக்தியான சீனா இலங்கைத் தீவில் ஆழமாக காலூன்றுவதற்கு இடம்கொடுத்தது மட்டுமன்றி, அது ஆரோக்கியமாக வளர்வதற்கும் மஹிந்த ராஜபக்‌ஷ பக்கத்துணையாக இருந்தார். இது, அமெரிக்காவுக்கு விரும்பத்தக்கதோ அல்லது அமெரிக்காவின் நலன்களுக்கு பொருத்தமுடையதோ அல்ல.

ஆதலால், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய தேவையெழுந்தது. அதற்கமைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முதல் முயற்சி போதிய தயார்படுத்தல்கள் இல்லாமையால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தது. இருப்பினும், முயற்சிகள் தொடர்ந்தன. திட்டங்கள் மூலோபாயங்கள் வகுக்கப்பட்டு மத்திய கிழக்கு – வட ஆபிரிக்கா நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து குறைந்த இழப்புகளுடனும், குறைந்த செலவுகளுடனும் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அதன் முழுமையான பயனை அமெரிக்காவால் இதுவரை அடைய முடியவில்லை. அதேவேளை, அமெரிக்கா பொறுமை காக்க முடியாத சூழலும் உள்ளது. ஏனெனில், இலங்கை அரசாங்கத்தின் இன்றைய நிலைமை நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்குமோ என்ற கேள்வி ஒருபுறம் உள்ளது. மறுபுறம், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி நிறைவடைவதற்குள், ஒபாமா நிர்வாகித்தில் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் சாதித்தார்கள் என்ற கருத்துருவாக்கம் அமெரிக்காவில் உருவாக வேண்டும் என ஒபாமா நிர்வாகித்தில் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் எண்ணுவதாக வாசிங்டனை தளமாகக் கொண்டவர்கள் ஊடாக அறியமுடிகிறது. ஒபாமா நிர்வாகத்தின் பல வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள சூழலில், அவற்றை எதிர்கொள்வதற்கான வெற்றிகரமான விவகாரமாக இலங்கையை முன்னிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் ஒபாமா நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய பின்னணியிலேயே, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளின் இலங்கைத் தீவை நோக்கிய பயணங்கள் அமைந்துள்ளன. இலங்கைத் தீவில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீளக்கட்டியெழுப்புதல் எனக் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் தேசிய நலனை பூர்த்தி செய்தலே அதன் மைய இலக்கு.

பூகோள அரசியலில் உருவாகியுள்ள போட்டி நிலையானது, சிறிய ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே, இலங்கைத் தீவின் அரசியல் சூழலில் செல்வாக்கும் செலுத்தும் நகர்வுகளை அமெரிக்கா விரைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த நகர்வென்பது, கடந்த காலங்களில் அமெரிக்காவின் தேசிய நலனுக்கு எதிராக காணப்பட்ட சக்திகளையும் காரணிகளையும் பலவீனப்படுத்தல் தொடங்கி கடந்த காலங்களில் இழந்தவற்றை ஈடுசெய்தல் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நலன்களுக்கு சார்பான அரசியல் சூழல் இலங்கைத் தீவில் நிலவுவதை உறுதிப்படுத்தல் என பல்வேறு முனை நகர்வுகளை கொண்டது.

கடந்த மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஜோன் கெரி, இலங்கையைத் தொடர்ந்து கென்யாவுக்கும் ஜிபுத்திக்கும் (Djibouti) பயணம் செய்தார். கென்யாவும் ஜிபுத்தியும் சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தில் உள்வாங்கப்பட்ட நாடுகள்.

ஜிபுத்தி சுமார் எட்டரை இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய நாடு. ஒரு புறம் எத்தியோப்பியா, எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளும், மறுபுறம் செங்கடலும் ஏடன் வளைகுடாவும் (Gulf of Aden) ஜிபுத்தியை சூழ்ந்துள்ளன. இங்கு 1990களில் ஆரம்பித்த உள்நாட்டுப் போர் 2001இல் போரிட்ட இருதரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு படையினர் நீண்டகாலமாக ஜிபுத்தியில் நிலைகொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஜப்பானும் தனது படைகளை அங்கு நிறுத்தியுள்ளது. தற்போது அமெரிக்காவும் சீனாவும் பனிப்போரில் ஈடுபடும் களமாக ஜிபுத்தி மாறியுள்ளது.

அமெரிக்காவின் பொது அரசியலில் இலங்கைத் தீவு தொடர்பாக பேசுமளவிற்குக் கூட ஜிபுத்தி தொடர்பாகப் பேசப்படுவதில்லை. ஆனால், இலங்கைத் தீவு போன்று ஜிபுத்தியும் பூகோள அரசியலில் முக்கியத்துவம் மிக்கது. இந்துசமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது போல, ஆபிரிக்காவில், குறிப்பாக யெமனில் (Yemen) மோதல்கள் உக்கிரமடைந்த பின் ஜிபுத்தியின் முக்கியத்துவம் இரட்டிபடைந்துள்ளது. அமெரிக்காவின் ஆபிரிக்காவை மையப்படுத்திய ஒரேயொரு இராணுவத் தளம் ஜிபுத்தியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. லெமொனியர் முகாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளத்தில் சுமார் 4000 வரையான அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிலைகொண்டுள்ளனர். அத்துடன், இங்கே அமெரிக்காவின் தாக்குதல் விமானங்களும் உலங்குவானூர்திகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 13 வருடங்களாக அமெரிக்கா இந்த இராணுவத் தளத்தை பயன்படுத்திவருகிறது. அத்துடன், எதிர்வரும் 20 வருடங்களுக்கு இந்த இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தை பயன்படுத்துவதற்கான குத்தகை உடன்படிக்கை மே 2014இல் கைச்சாத்திடப்பட்டது. கடந்த காலத்தில் வழங்கியதை விட இரட்டிப்புத் தொகையை (வருடத்துக்கு 70 மில்லியன் அமெரிக்க டொலர்) அமெரிக்கா குத்தகையாக ஜிபுத்திக்கு வழங்கியுள்ளது. 88 ஏக்கரிலிருந்த இந்த இராணுவ முகாம் 500 ஏக்கருக்கு விரிவாக்கப்படவுள்ளது. இந்தத் தளத்தை பலப்படுத்துவதற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக் டொலரை இதுவரை பென்ரகன் செலவிட்டுள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் நாடுகளின் மனித உரிமை நிலவரம் தொடர்பான அறிக்கை, ஜிபுத்தியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக ஜிபுத்தியை விமர்சித்திருந்தது. ஆயினும், அமெரிக்கா கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக கைக்கொண்ட இறுக்கமான நிலையை ஜிபுத்தி தொடர்பாக இதுவரை கைக்கொள்ளவில்லை. மஹிந்தரைப் போன்று ஜிபுத்தியின் ஜனாதிபதி ஸ்மெயில் ஒமார் கில்லேயும் ஒரு சர்வாதிகாரியே. இருமுறை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அவர், அரசியலமைப்பில் மாற்றங்களை உருவாக்கியதன் ஊடாக மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக நீடிக்கிறார். 2006இல் ஜனாதிபதி ஒபாமாவும், 2014இல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஒபாமாவுக்கான ஆலோசகர் சுசான் ரைஸும் ஜிபுத்திக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இத்தகைய பின்னணியிலேயே இவ்வருடம் மே மாதம் ஜோன் கெரி இலங்கைக்கான பயணத்தை அடுத்து ஜிபுத்திக்குச் சென்றார்.

இதேவேளை, ஜிபுத்தியை மையமாகக் கொண்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான போட்டி தீவிரமடைகிறது. அது பொருளாதார ரீதியிலான போட்டியைத் தாண்டி, இராணுவப் போட்டியாக பரிணமித்துள்ளது. இந்த நிலை ஒருவகை மறைமுக பதற்றத்தை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தியுள்ளது.

சீனா தனது முதலாவது வெளிநாட்டு ‘இராணுவத் தளத்தை’ ஜிபுத்தியில் அமைக்கவுள்ள செய்தியை கடந்த நவம்பர் 26ம் திகதி உறுதிப்படுத்தியது. ஆயினும், அதனை இராணுவத் தளம் எனக் கூறாது புறக் காவல் மையம் என சீனா குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனது படையினரின் நலனுக்காவும், தனது வர்த்தக செயற்பாடுகளுக்கான பாதுகாப்பாகவும் மற்றும் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டே இந்த புறக் காவல் மையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய காராணங்களை சீனா வெளிப்படையாக கூறினாலும், சீனாவின் பொருளாதார, இராணுவ நலன்களை நீண்டகால அடிப்படையில் பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில், சர்வதேச கடற்பாதையில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக ஜிபுத்தி அமைந்துள்ளமையே, சீனா தனது மேலாண்மையை ஜிபுத்தியில் அதிகரிப்பதற்கான உண்மைக் காரணம்.

சீனா ஜிபுத்தியில் ரயில் பாதை, விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மீதான முதலீட்டை ஆரம்பத்தில் செய்தது. பின்னர், ஜிபுத்தி துறைமுகத்தை சீன கடற்படையின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் பெப்ரவரி 2014 ல் கைச்சாத்திட்டது. இது அமெரிக்காவை ஆத்திரமூட்டியது. இந்த நிலையில், சீனாவின் நிரந்தர இராணுவத் தளத்தை ஜிபுத்தியின் ஒபொக் பிராந்தியத்தின் நிறுவுவதென்ற முடிவு அமெரிக்காவுக்கு ஆத்திரமூட்டக்கூடியது மட்டுமல்ல மாறாக, அமெரிக்காவின் ஆபிரிக்காவை மையப்படுத்திய இராணுவ, பொருளாதார நலன்களுக்கும் சவாலானது.

சுமார் பத்து வருடங்களாக சீனாவின் மேலாண்மைக்கு உட்பட்டிருந்த இலங்கையை தனது தேசிய நலனுக்கு சார்பாக மாற்றியமைக்க அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பத்து வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்த ஜிபுத்தியில் தனது மேலாண்மையை அதிகரிப்பதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

இலங்கையும் ஜிபுத்தியும் சிறிய நாடுகளாக இருந்த போதும், அவை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதையில் அமைந்துள்ளமையால், அவற்றில் மேலாண்மை செலுத்துவதற்கு அமெரிக்காவும் சீனாவும் போட்டியிடுகின்றன. அதற்காக, உள்ளக வெளியக சூழல்களை தமக்கு சார்பாக மாற்றியமைப்பதில் அவை ஆழ்ந்த அக்கறை காட்டுகின்றன. பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டி நிலையானது, தனித்து அரசுகள் மட்டுமின்றி குறித்த நாடுகளிலுள்ள தமது உரிமைகளுக்காக போராடும் இனங்களும் தமது நலன்களை அடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியுள்ளது. பூகோள அரசியலில் நிலவும் போட்டி நிலையானது, மே 2009இற்குப் பின்னர் தமிழர் தேசத்துக்கு சார்பாக வாய்ப்புகளை வழங்கிய போதும், தமிழர் தரப்பு அதனை சரிவர கையாளாததால் தவறவிட்டது.

இனக்குழுமங்களின் நேர்த்தியான தயார்ப்படுத்தல், ஆக்கபூர்வமான கொள்கை வகுப்பு மற்றும் விவேகமான நிகழ்ச்சி நிரலே ஒரு தேசத்தினதோ, அரசினதோ நலனைப் பூர்த்தி செய்யக்கூடிய பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு எதிர்வரும் காலத்தில் தன்னிலும் தமிழர் தரப்பு தனது நகர்வுகளை முன்னெடுக்குமா?