Photo, REUTERS/Dinuka Liyanawatte

தேர்தல் ஒன்றை அதுவும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செய்வதைப் போன்ற காரியங்களை உலகின் வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் செய்திருக்காது. ஜனாதிபதியின் முழுமையான தூண்டுதலில் அரசாங்க இயந்திரத்தின்  இடையறாத கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில், ஏற்கெனவே அறிவித்த பிரகாரம் மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதில்லை என்றும்  புதிய திகதி மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் இறுதியில் அறிவிப்பதை தவிர தேர்தல் ஆணைக்குழுவுக்கு வேறு வழியிருக்கவில்லை.

அந்தத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை கிடைக்கச்செய்வதில் தலையிட்டு திறைசேரியை வலியுறுத்துமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுப்பதற்கும் ஆணைக்குழு தீர்மானித்தது. புதிய திகதி அறிவிப்புக்குப் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது முக்கியமான கேள்வி.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை கொடுக்கமுடியுமே தவிர தேர்தல் போன்ற செயன்முறைகளுக்கு நிதியை ஒதுக்கக்கூடிய நிலைமை இல்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ஆனால், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தேர்தல்களை ஒத்திவைக்கும் இந்த அணுகுமுறை தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஒன்பது தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக சர்வஜன வாக்குரிமையை அனுபவிக்கும் இலங்கையில் முன்னொருபோதும் இவ்வாறு நடந்ததில்லை.

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களுக்கு சுமார் 20 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டபோது படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தகைய செலவினம் அவசியமா என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு கூட வக்கில்லாதவர்களாக இலங்கையர்கள் இருக்கிறார்களே என்று உலகம் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக செலவினத்தையும் பொருட்படுத்தாமல் கொண்டாட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது என்று கூறினார்.

அதேபோன்றே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாக்குரிமையை மதித்து ஜனநாயக செயன்முறைகளை கைவிடாத ஒரு நாடு என்று இலங்கையை உலகிற்கு காண்பிப்பதற்கு உரிய காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆணைக்குழுவுக்கு முழுமையான  ஒத்துழைப்பை வழங்கியிருக்க முடியும். ஆனால், அது விடயத்தில் எமது நாட்டைப் பற்றி உலகம் எந்தவிதமாக நினைத்தாலும் அரசாங்கம் கவலைப்படவில்லைப் போலும்.

தொடக்கத்தில் இருந்தே உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முட்டுக்கட்டைகளை போடும் அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்து வந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மக்கள் மத்தியில் படுமோசமாக செல்வாக்கை இழந்த நிலையில் அண்மைய எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பதில் அதற்கு சிக்கல் இருப்பது வெளிப்படையானது.

கடந்த வருட முற்பகுதியில் இருந்தே பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கிய போதிலும்,  ஒரு வருடத்துக்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு நிதியில்லை என்று அரசாங்கம் குறிப்பாக தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூறத்தொடங்கியது கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் அவரின் அரசாங்கத்துக்கு நாடாளுமன்ற ஆதரவை வழங்கிவரும் ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மக்கள் ஆதரவைப் பொறுத்தவரை படுமோசமான நிலையில் இருக்கின்றன. அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அண்மைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இத்தகைய பின்புலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டால் அது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீதான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக அமைந்து ஏற்கெனவே பதவியில் இருப்பதற்கான நியாயப்பாட்டைப் பொறுத்தவரை, பெரும் சவாலை எதிர்நோக்கும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அதேவேளை, எதிரணியின் மற்றைய கட்சிகள் சகலதையும் விட மக்கள் ஆதரவில் பெருமளவுக்கு முன்னணியில் நிற்பதாக நம்பப்படும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் அவற்றின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களைக் கருதுகின்றன. அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை அவை கடுமையாக எதிர்த்து நிற்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

அந்தத் தேர்தல்களில் அரசாங்கம் காணக்கூடிய படுதோல்வி இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத்தேர்தல் ஒன்றுக்குப் போகுமாறு எதிரணியிடம் இருந்து கோரிக்கை கிளம்புவதற்கு வழிவகுக்கும். தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் கடந்த வாரம் நிறைவடைந்து அதை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க பெற்றுவிட்ட நிலையில் பொதுத்தேர்தலுக்கான கோரிக்கையை நீண்டகாலத்துக்கு  அலட்சியம் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுவிடலாம்.

இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டே அனேகமாக இவ்வருடத்திற்குள் எந்தத் தேர்தலும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற தொனியில் ஜனாதிபதி அண்மையில் கருத்து வெளியிட்டார். அவரைப் பொறுத்தவரை, பொருளாதார மீட்சிக்குப் பிறகு மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தி புதிய ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யலாம் என்பதே நிலைப்பாடாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ரோட்டரி கழக வைபவமொன்றில் ஆற்றிய உரையில் அவர் அதை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நிகழ்த்திய உரை உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டும் என்ற அதன் நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் கூறிவந்த காரணங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் இருக்கின்ற அப்பட்டமான அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்தி நிற்கிறது.

தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததன் பிரகாரம் தனது ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்த பிறகு இப்போது ஜனதிபதி, தேர்தலுக்கான திகதி அறிவிப்பின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். அவரின் அன்றைய உரை ஜனநாயக செயன்முறைகளை மதிக்கின்ற ஒரு தாராளாவாத ஜனநாயகவாதி என்ற முன்னைய நிலையில் இருந்து அதிகாரத்தை தக்கவைப்பதற்காக தரந்தாழ்ந்த அரசியலையும் முன்னெடுப்பதற்கு தயங்காத ஒருவர் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

“உள்ளூராட்சி தேர்தல்களுக்கான திகதி சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை. அதனால் அந்த தேர்தல்களை ஒத்திவைப்பது என்ற கேள்வி எழவில்லை.

“தேர்தல் திகதியை தீர்மானித்த ஆணைக்குழுவின் கூட்டத்தில் சட்டரீதியாக பிரசன்னமாக இருக்கவேண்டிய குறைந்தபட்ச எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை. மூன்று உறுப்பினர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஆணைக்குழுவின் தலைவரும் இன்னொரு உறுப்பினருமே இருந்தார்கள்.

“ஏனைய மூன்று உறுப்பினர்களினதும் இணக்கத்தை இணைய காணொளி மூலம் பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறுகிறார். அவர்களை எவராவது கேட்டால் அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதை நிரூபிக்க என்னிடம் சான்று உள்ளது.

“தேர்தல் செயன்முறைகளுக்கான நிதியும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஆணைக்குழுவினால் திறைசேரியிடம் கோரப்படவில்லை. ஆணைக்குழுவின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆஜரானார். அவர் அரசியல் சார்புடையவர் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் என்னிடம் கூறினார்கள். அவரின் உதவியை ஆணைக்குழு நாடுவது  ஐக்கிய மக்கள் சக்தியையோ அல்லது தேசிய மக்கள் சக்தியையோ சேர்ந்த ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடுவதை விட வித்தியாசமானது அல்ல.

“அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிறகு தேர்தல் ஆணைக்குழு ஒழிக்கப்பட்டுவிட்டது. என்றாலும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை பழைய தலைவரும் உறுப்பினர்களும் இயங்கலாம். தற்போது இருப்பது ஒரு காபந்து தேர்தல் ஆணைக்குழுவே.

“உள்ளூராட்சி தேர்தல்களுக்காக 2023 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டாலும் கூட ஒரே தடவையில் அதை விடுவிக்கமுடியாது. ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிப்பதற்கென்று விசேடமாக திகதிகள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு விடுவிப்பதாக இருந்தாலும் கூட எதிர்பார்க்கப்படும் வருவாய் கிடைக்கப்பெறாமல் அதை செய்யமுடியாது” என்று விக்கிரமசிங்க சபையில் கூறினார்.

அதுபோக, வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் பூர்த்தியாகி தேர்தல்களும் முடிவடைந்த பின்னரே அரசாங்க அச்சகத்துக்கு தேர்தல் ஆணைக்குழு கொடுப்பனவுகளை செய்வதே இதுகாலவரையான வழமையாக இருந்துவந்திருக்கும் நிலையில் இத்தடவை மாத்திரம் அரசாங்க அச்சகர் முன்கூட்டியே கொடுப்பனவை செய்யாத பட்சத்தில் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என்று ஆணைக்குழுவுக்கு  அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தல்களுக்காக ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் நிதியை வழங்கமுடியாத நிலை இருக்கிறது என்று திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியாக கூறியது மாத்திரமல்ல அதை உயர்நீதிமன்றத்துக்கும் சத்தியக்கடதாசி மூலம் அறிவித்தார். அதேவேளை இதுவரையான உள்ளூராட்சி தேர்தல் பணிகளுக்காக ஆணைக்குழு 50 கோடி ரூபாவை செலவிட அனுமதித்தது ஏன் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அந்தப் பண விரயத்துக்கு யார் பொறுப்புக்  கூறுவது?

அரசியலமைப்பு ரீதியாக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழு அதன் அதிகாரங்களுக்கு உட்பட்ட முறையில் முன்னெடுத்த நடவடிக்கைகளை எல்லாம் அரசாங்கம் சகல வழியிலுமான கெடுபிடிகளின் ஊடாக குழப்பியடித்துவிட்டது. இது ஜனாதிபதியும் அரசாங்கமும் மகிழ்ச்சியடையக்கூடிய விடயம் அல்ல. அதன் விளைவுகளுக்கு அவர்கள் முகங்கொடுத்தேயாக வேண்டும்.

ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்காகவே அரசியலமைப்புக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்காக பெருமைப்படுகின்ற ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு செய்திருக்கும் குந்தகம் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தின் இலட்சணத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புக்கு இசைவாக செயற்படாவிட்டால் ஏனைய ஆணைக்குழுக்களுக்கும் இதே கதிதான் காத்திருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்