Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான  கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல கட்டுரைகள் என்றால் அவற்றை நான் அனேகமாக ‘வட்ஸ்அப்’ மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். இந்தக் கட்டுரையையும் அவ்வாறே பலருக்கு அனுப்பினேன். அவர்களில் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகரவும் ஒருவர்.

அதை வாசித்த உடனடியாகவே எனக்கு அவர் செய்தியொன்றை அனுப்பினார். ‘இலங்கை வரலாறும் வரலாற்று எழுத்தாண்மையும் ‘ (History and Historiography) என்ற தலைப்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்தால் என்ன என்ற யோசனையை அதில் குணசேகர முன்வைத்தார். எமது நாட்டின் வரலாறும் தொல்பொருளியல் ஆய்வும் பல்வேறு சக்திகளினால் கீழ்த்தரமான அரசியல் நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. வரலாறு எழுதுதல் இன்றைய சிங்கள கலாசாரக் கட்டமைவில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. இது பற்றி ஒரு புரிதலை முதலில் நாம் ஊடகத்துறையினர் மத்தியில் ஏற்படுத்துவது அவசியம் என்று தனது யோசனைக்கான நியாயத்தையும் அவர் கூறினார்.

‘அறகலய’ மக்கள் போராட்டத்தையடுத்து கடும்போக்கு சிங்கள தேசியவாத அல்லது சிங்கள மேலாதிக்கவாத சக்திகளின் செயற்பாடுகளில் ஒரு ‘இடை ஓய்வு’ காணப்படுகிறது. அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆரோக்கியமான சிந்தனைகளின் வளர்ச்சிக்கு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் குணசேகர தெரிவித்தார்.

அவர் அடையாளம் கண்ட அந்த ‘ஓய்வு’ குறித்து சில விடயங்களைக் கூறுவதற்காகவே அவருக்கும் எனக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை இங்கு பகிர்ந்துகொண்டேன்.

இலங்கையில் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் என்பது காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஒன்றுதான். ஆனால், அண்மைய இரு தசாப்தங்களில் ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் கீழ் – உள்நாட்டுப்போர் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலகட்டத்திலும் – முன்னென்றும் இல்லாத அளவுக்கு தீவிரமாக அந்த அணிதிரட்டல் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் உறுதுணையாகச் செயற்பட்டுவந்தன.

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகளைப் பொறுத்தவரை  ராஜபக்‌ஷர்களின் நிலைப்பாடுகளுக்கும் அந்த தேசியவாத சக்திகளின் நிலைப்பாடுகளுக்கும் இடையில் பெரிதாக வேறுபாட்டைக் காணமுடியாத அளவுக்கு இரு தரப்பினரதும் செயற்பாடுகள் அமைந்தன. ஆட்சிமுறையின் கெடுதியான சகல போக்குகளையும் உருவகப்படுத்தி நின்ற ராஜபக்‌ஷர்களின் தவறுகளுக்குக் கூட  நியாயம் கற்பிக்கும் வகையிலான பிரசாரங்களிலும் அந்த தேசியவாத சக்திகள் ஈடுபட்டன.

இலங்கையின் வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு பிரதான  காரணமான தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கடந்த வருடம் கிளர்ச்சி மூண்டதை  அடுத்து சிங்கள கடும்போக்கு தேசியவாத அமைப்புக்கள் மக்களின் சீற்றத்துக்கு முகங்கொடுக்கமுடியாமல் பதுங்கத்தொடங்கின. தாங்கள் உறுதியாக ஆதரித்த ஆட்சியாளர்களே நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்தார்கள் என்ற உண்மைக்கு முகங்கொடுக்க முடியாமல்போன அந்த அமைப்புக்கள் பல மாதங்களாக அடங்கிப்போய்க் கிடந்தன.

நீண்டகாலத்துக்கு தங்களது குடும்ப ஆதிக்க ஆட்சியைத் தொடரமுடியும் என்று கனவு கண்டுகொண்டிருந்த ராஜபக்‌ஷர்களுக்கு குறுகிய காலத்திற்குள் நேர்ந்த கதியை சிங்கள தேசியவாத  அமைப்புக்களினால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்கள மக்கள் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கிளர்ந்தெழுவார்கள் என்று இந்த சக்திகள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், மீண்டும் தலையெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன என்பதில் சந்தேகமில்லை.

குணசேகர குறிப்பிட்ட  கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளின் செயற்பாடுகளின் ‘இடைஓய்வு’ முடிவுக்கு வரத்தொடங்குகிறது போல தோன்றுகிறது. இதை கடந்த சில நாட்களின் நிகழ்வுப் போக்குகளின் மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பையும் கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வதில் அவை குறியாக இருக்கின்றன. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் அரசாங்கம் கட்டங்கட்டமாக முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று செய்த அறிவிப்பை இந்த சக்திகள் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.

இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் கடந்த 36 வருடங்களாக அரசியலமைப்பில் இருக்கிறது. இந்தியாவின் இடையறாத வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை முன்னைய ஜனாதிபதிகள் உறுதிசெய்துகொண்டனர். விக்கிரமசிங்கவினால் அதைச் சாதித்துக்காட்ட முடியுமா என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பது ஒரு புறமிருக்க, சிங்கள தேசியவாத சக்திகள் நாட்டை பிளவுபடுத்த அவர் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றன.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் குறுகிய காலத்துக்குள் நாடு பிளவடைந்துவிடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

ஜனாதிபதிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில் அவர், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டே அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் பிரிவினைவாதக் கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு கிடைக்காது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் கடற்படை தளபதியுமான சரத் வீரசேகர காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கு தமிழ் கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்க தனது ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்துவதற்கு விக்கிரமசிங்கவுக்கு உரிமையில்லை; அத்தகைய உறுதிமொழியை வழங்குவதற்கு அவருக்கு ஆணை கிடையாது; எமக்கிருக்கும் எந்தப் பிரச்சினைக்கும் 13ஆவது திருத்தம் தீர்வாகாது என்றும் கூறினார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, “அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். அத்தகைய பாவச்செயலுக்கு பங்காளிகளாவதை தமிழ் அரசியல் தலைவர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் நிலையில் ஜனாதிபதி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப்பார்க்கிறார். வெறுமனே அரசியல் நோக்கத்துக்காகவே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அவர் முயற்சிக்கிறார். தெற்கு அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவு என்று வடக்கு  மக்களிடம் அவர்  பொய் கூறியிருக்கிறார்” என்று சபையில் பேசினார்.

அதேவேளை, தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரான கலாநிதி குணதாச அமரசேகர 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகளினதும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களினதும் நோக்கங்கள் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்று கொழும்பில் கடந்தவாரம்  செய்தியாளர்கள் மகாநாட்டில்  கூறியிருக்கிறார்.

அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு செய்யவேண்டுமானால் மக்களின் ஆணை வேண்டும்.இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டுகிறார். இந்தியா, இலங்கை மீது முழுமையான அதிகாரத்தை பிரயோகித்து திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது. அமெரிக்காவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்றும் அமரசேகர குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘யுத்துகம’ இயக்கத்தின் தலைவருமான கெவிந்து குமாரதுங்க கோட்டபாயவின் ஐந்து வருட பதவிக்காலத்தின் எஞ்சிய பகுதியைப் பூர்த்திசெய்வதே தனது பொறுப்பு என்பதை விக்கிரமசிங்க மறந்துவிடக்கூடாது என்றும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அவர் மக்களிடம் புதிய ஆணையைப் பெறவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்தத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக முடிவை எடுக்கமுடியாது. முன்னர் பிரதமராக இருந்தபோது நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு  இடைநடுவில்  குழம்பிப்போன தனது நிகழ்ச்சி நிரலை தொடருவதாக இருந்தால் அவர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் மக்களிடம் புதிய ஆணையைப் பெறவேண்டும். அது தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடனும் அவர் கண்ட இணக்கப்பாட்டின் மீதான சர்வஜன வாக்கெடுப்பாக அமையும். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி செய்த பொங்கல் பிரகடனம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் குமாரதுங்க தெரிவித்தார்.

இவர்கள் மாத்திரமல்ல, வரும் நாட்களில் மேலும் பல சிங்கள தேசியவாத அமைப்புக்கள் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிக்காட்ட பிக்குமாரையும் அணிதிரட்டிக்கொண்டு கிளம்பிவரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்க விக்கிரமசிங்கவுக்கு அதிகாரமோ ஆணையோ கிடையாது என்பதே இவர்கள் முன்வைக்கின்ற பிரதான வாதமாகும். கோட்டபாயவின் எஞ்சிய பதவிக்காலத்தில் அதாவது 2024 நவம்பர் வரை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு  நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதே  அவருக்குரிய பணி என்பது இவர்களது நிலைப்பாடு.

கோட்டபாயவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராகக் கொண்ட அரசாங்கமும் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்கமுடியாமல் பதவியில் இருந்து இறங்கிய பிறகு கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை வலுவிழந்துவிட்டது என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பலத்தினால் ஜனாதிபதியாக தெரிவான விக்கிரமசிங்கவின் பதவி நியாயப்பாடு இல்லாதது என்றே எதிரணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கூறிவருகின்றன.

ஆனால், அவரின் தெரிவு அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஒரு ஜனாதிபதி தற்போது அரசியலமைப்பில் இருக்கும் ஏற்பாடுகளை – அதாவது 13ஆவது திருத்தத்தை – நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைப் பெறவேண்டும் என்று வாதிடுவது எந்த விதமான தர்க்கநியாயத்துக்கும் பொருந்தாது. இதுகால வரையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்ததன் மூலம் ஜனாதிபதிகளும் அரசாங்கங்களும் அடிப்படையில் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக இதுவரையில் எவரும் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வராதது ஏன் என்று புரியவில்லை.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துபவர்களும் கூட உண்மையில் அரசியலமைப்புக்கு முரணாகவே குரல்கொடுக்கிறார்கள்; அரசாங்கங்கள் அரசியலமைப்பை மீறவேண்டும் என்று கூறுகிறார்கள் என்பதே உண்மை அர்த்தமாகும். இவர்கள் எல்லோரும் சட்டமீறல் ஒன்றை எந்த விதமான தயக்கமும் இன்றி சுதந்திரமாக செய்துகொண்டிருக்கிறார்கள். அது பற்றி நியாயபூர்வமாக சிந்திக்கக்கூடிய பெரும்பான்மையின அறிவுஜீவிகள் கூட எதுவும் பேசுகிறார்கள் இல்லை. சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரச்சினைகள் என்று வரும்போது தென்னிலங்கையில் அரசியலமைப்பை மீறி எவரும் செயற்படலாம் என்றாகிறது.

இது சிங்கள தேசியவாத அரசியல் கோட்பாடுகளில் உள்ளியல்பாக இருக்கும் ஒழுக்கநியாயப் பாரம்பரியமற்ற போக்கை வெளிக்காட்டுகிறது. அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த மக்களிடம் ஆணை பெறவேண்டும் என்று கோருவது எந்த வகையில் பொருத்தமானது என்று சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு  சிங்கள தேசியவாத சக்திகள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகள் மீதான வெறுப்புணர்வு வேரூன்றியிருக்கிறது. இதுவே இலங்கையின் முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாக இருந்து வந்திருக்கிறது.

இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால், இத்தகைய போக்குகளில் இருந்து அதன் அரசியல் சமுதாயம் விடுபடவேண்டியது அவசியமாகும்.

ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியை பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் தோல்வியாகவும் பார்க்கவேண்டும். அத்தகைய அணிதிரட்டலின் மூலமாக உண்மையான பிரச்சினைகளில் இருந்து  மக்களின் கவனத்தை திசைதிருப்பி ராஜபக்‌ஷர்கள் தங்களது ஊழலையும் தவறான ஆட்சிமுறையையும் குடும்ப ஆதிக்க அரசியலையும்  முன்னெடுத்தார்களே தவிர நாட்டுக்கு எந்த பயனும் கிட்டவில்லை. மக்கள் பட்டினி கிடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக ஒதுங்கியிருந்த சிங்கள தேசியவாத சக்திகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக  ஜனாதிபதி விக்கிரமசிங்க விடுத்த அறிவிப்பை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மீண்டும் சமூகங்கள் மத்தியில் குரோதத்தை வளர்க்கும் நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுக்கக் கிளம்புகின்றன. அதன் மூலம் பெரும்பாலும் பயனடையக்கூடியவர்கள் ராஜபக்‌ஷர்கள் போன்ற அரசியல் சக்திகளே.

ஊழல் மோசடிகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் தவறான ஆட்சிமுறையையும் மூடிமறைக்க பயன்படுத்தப்பட்ட பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை மீண்டும் ஒருபோதும் தென்னிலங்கை மக்கள் அனுமதிக்கக்கூடாது. அறகலய போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் சிந்தனையில் ஏதாவது ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா இல்லையா என்பதை  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிராக சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் முன்னெடுக்க முனையும் அணிதிரட்டல்களுக்கு அவர்கள் காட்டக்கூடிய பிதிபலிப்புக்களில் இருந்தே புரிந்துகொள்ளமுடியும்.

வீரகத்தி தனபாலசிங்கம்