Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News

இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதாக கனடா அரசாங்கம்  வெளியிட்ட அறிவிப்பாகும்.

கனடாவில் அவர்களுக்கு இருக்கக்கூடிய எந்தவொரு சொத்தும் முடக்கப்படமுடியும். அவர்கள் கனடாவுக்கு பயணம் செய்வதும் தடைசெய்யப்படும். முன்னர் மனித உரிமை மீறல்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவே குறிப்பாக அமெரிக்காவினால் மட்டுப்படுத்தப்பட்ட பயணத்தடைகள் விதிக்கப்பட்டன.

இரண்டாவது எதிர்பார்க்கப்படாத நிகழ்வு 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதின்றம் வழங்கிய தீர்ப்பாகும். அந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற நேரத்தில் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்படவில்லை என்று குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்ட குழுக்கள் தங்கள் சார்பிலும் பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் சார்பிலும் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் இந்த இழப்பீட்டை வழங்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்த இழப்பீட்டுத்தொகை இலங்கையின் தராதரங்களின் பிரகாரம் நோக்கும்போது மிகவும் அதிவிசேடமானதாகும். ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அரச அதிகாரிகள் நீதித்துறையின் நடவடிக்கைக்கு உட்படவேண்டியவர்களாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் மேலும் உத்வேகம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கனடாவின் தீர்மானம் அந்த நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் காட்டிய அக்கறையின் விளைவானதாகவே இருந்திருக்கிறது எனலாம். புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதியொருவர் கனடா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். ஏனைய மேற்கு நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள் இதேபோன்ற நடவடிக்கைகளை தங்களது அரசாங்கங்கள் எடுக்கக்கூடியதாக செல்வாக்கு செலுத்துமளவுக்கு பெருவாரியானவர்களாகவோ அல்லது செல்வாக்கு கொண்டவர்களாகவே இல்லை.

ஆனால், சகல மேற்கு நாடுகளும் சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டை ஆதரிக்கின்றன. இதன் மூலம் உலகின் எந்தப்பகுதியிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய  மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் (அவற்றைச் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்) அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட முடியும். அந்த நாடுகளின் பிரசைகள் தனிப்பட்ட முறையில் தங்களது முறைப்பாடுகளின் நம்பகத்தன்மைக்கான பூர்வாங்க சான்றாக கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பயன்படுத்தி வழக்குகளைத் தொடரமுடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இத்தகைய நாடுகளின் வரிசையில் இறுதியாக சேர்ந்திருக்கிறது அமெரிக்கா. உக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து தோன்றிய சூழ்நிலைகளில், மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கக்கூடிய ஒரு நாடாக அமெரிக்கா நோக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் சர்வதேச சட்டத்துக்கு இசைவான முறையில் தனது சட்டக்கோவையை வாஷிங்டன் கொண்டுவந்திருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் இந்த மாதம் புதிய சட்டம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார். சர்வதேச மனித உரிமைகளை மீறியதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அமெரிக்காவில் இருந்தால் – அவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த மீறல்கள் எந்த நாட்டில் இடம்பெற்றிருந்தாலும் – சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இந்த சட்டம் அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கிறது. இலங்கையின் பல தலைவர்களின் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. நிதிச் சொத்துக்களையும் அங்கு அவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்புலத்தில் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டமாற்றத்தினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இந்தத் தலைவர்கள் கவலைப்படுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளை இலக்குவைத்து கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளில் ஒப்பீட்டளவில் கீழ்மட்டத்தில் உள்ள இரு இராணுவ அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். மனித உரிமைகளை மீறியிருக்கக்கூடிய பரந்தளவு பிரிவினரை இந்தத் தடைகள் இலக்காகக் கொண்டுள்ன என்பதே இதன் அர்த்தமாகும். அந்த உரிமை மீறல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப்படாதவர்களும் இதில் உள்ளடங்கியிருக்கலாம். ஆனால், உத்தரவுகளை வழங்குகின்ற தொடர் கட்டளை பொறுப்புக்களில் அவர்கள் இருந்திருக்கலாம்.

இதனால் இலங்கையின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள் அல்லது பாதுகாப்பு நிறுவனத்தில் உள்ளவர்கள் மனதில் ஒரு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றும். சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் வழக்குகளைத் தொடுப்பதற்கு அனுமதிக்கின்ற நாடுகளில் வழக்குகளை எதிர்நோக்குவதில் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் உணருவார்கள். தற்போது  கூட போர்க்காலத்தில் படையணிகளில் சேவையாற்றிய ஆனால் எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத நற்பெயரைக் கொண்ட இராணுவ அதிகாரிகள் மனித உரிமைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தங்களுக்கு பயிற்சிக்கான சர்வதேச வாய்ப்புக்களையோ அல்லது சர்வதேச சேவைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்புக்களையோ பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ இழப்பீட்டு மட்டத்துடன் அல்லது உயர் நீதிமன்றத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முடிவுகளுடனோ திருப்திப்படக்கூடிய சாத்தியம் இல்லை. குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் பற்றிய உண்மையை அறிய அவர்கள் விருப்புவார்கள். அத்துடன், எந்தளவு இழப்பீட்டை கொடுத்தாலும் அது மாண்டுபோன தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் மதிப்புக்கு ஈடாகாது என்று அவர்கள் கூறுவார்கள்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே கூறியிருக்கின்ற போதிலும், குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை அது தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. “உயர்நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய உண்மையை கண்டறிவதில் மேலும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகிறோம். தாக்குதல்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஸ்கொட்லண்ட் யார்ட்டின் உதவியுடன் புதிய விசாரணையொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தற்போதைய ஜனாதிபதியும் கூறினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் கூறினார்.

இதேபோன்ற நிலைமையே மூன்று தசாப்தகால இனப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையிலும் காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை போரில் இழந்தார்கள். இந்த இழப்பு ஒரு இனத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக இல்லாமல் சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், தமிழர்களே கூடுதல் இழப்புகளைச் சந்தித்தார்கள்.

இவற்றில் சில சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன. இராணுவ நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் குற்றச்செயல்களுக்காக இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிவில் நீதிமன்றங்களினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு  ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். அதனால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கவலைகொண்டுள்ளார்கள். போர்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கங்கள் அக்கறையில்லாத மனோபாவத்தையே வெளிக்காட்டி வந்திருப்பதுடன் அந்த பிரச்சினைகள் வேண்டிநிற்கும் கவனத்தையோ  முன்னுரிமையையோ கொடுக்கத் தவறிவிட்டன.

தேசிய பொறிமுறைகள்

முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகள்  மனித உரிமை மீறல்கள் விவகாரம் எந்தளவு பரந்த வீச்செல்லையக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் உரியமுறையில் கையாளப்படவேண்டிய தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பிரச்சினைகளை அலட்சியம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது. அவை கிளப்பப்பட்ட பிறகு காணாமல் போய்விடாது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது (1983 – 2009) திட்டமிட்ட முறையில் முழு அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக கனடா அரசாங்கம் விளக்கம் அளித்திருக்கிறது.

இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு திட்டமிட்ட முறையில் சட்ட விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போக்கு தொடருவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளளில் முன்னேற்றம் ஏற்படமுடியாமல் இருப்பதுடன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன. அரசியல் தலையீட்டின் விளைவாக – குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷவினதும் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் காலங்களில் – போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்பகமாகக் கூறப்பட்ட பெருவாரியான முன்னாள் மற்றும் தற்போதைய அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டன அல்லது குற்றவாளியாகக் காணப்பட்டவர்களுக்கு எதிரான தீர்ப்புகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன என்று கனடா கூறியிருக்கிறது.

உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசாங்கம் அதன் உள்ளகப் பொறிமுறைகள் வலிமைவாய்ந்தவை என்றும் சர்வதேச தராதரங்களுக்கு இசைவானவை என்றும் காண்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் செயலூக்கம் உடையது என்றும் சர்வதேச சமூகம் நம்புவதற்கு ஓரளவுக்கு உதவும். பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இணங்கியிருக்கிறது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடிகள் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகள். அவற்றுக்காக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையோ எதிர்க்கட்சிகளையோ குற்றஞ்சாட்ட முடியாது. இறுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை படுமோசமான தோல்வியைச் சந்தித்தது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். நிதி முறைகேடுகளுக்காகவும் தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்காகவும் குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ மற்றும் 36 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். இந்த வழக்குகள் ட்ரான்ஸ்பேரென்சி இன்டர்நஷனல் இலங்கைப் பிரிவினாலும் வேறுபலராலும் தொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 203 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள்,  சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவதில் காட்டிய தாமதம், வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி 18 ஜனவரி 2022ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசாங்க பிணைமுறியை செலுத்தியமை ஆகியவை தொடர்பில் கணக்காய்வு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பொருளாதாரக் குற்றங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் ஒரு முன்னோடியான நடவடிக்கையை எடுக்குமேயானால் ஆட்சிமுறையில் பொறுப்பக்கூறலை நாடிநிற்கின்ற நாடுகளின் முன்னரங்கத்தில் இலங்கையும் இடம்பெறக்கூடிய சூழ்நிலை தோன்றும். அதன் மூலம் நாட்டின் நிர்வாக மற்றும் அரசியல் பதவிகளை மனமுவந்து முன்வந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையொன்று உருவாகி போராட்ட இயக்கம் நாடிநின்ற ‘முறைமை மாற்றத்துக்கு’ வழிவகுக்கக்கூடியதாக இருக்கும். அத்தகைய சாதகமான மாற்றங்கள் மீண்டும் சர்வதேச ஆதரவு பெருமளவில் கிடைக்கவும் கடந்த பல தசாப்தங்களாக தாழ்ந்த மட்டத்துக்குச் சென்ற முதலீடுகள் வந்து குவியவும் வழிவகுக்கும்.

கலாநிதி ஜெகான் பெரேரா