பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த முதல் நடவடிக்கை இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அஹிம்சை வழியில் நடைபெற்று வந்த சக்தி மிக்க மக்கள் போராட்டத்தினை அடக்குவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையாகும். கைதுசெய்யப்பட்ட பலரில் அல்லது பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக CID/TID க்கு வருமாறு அழைக்கப்பட்டவர்களில் மூவர் குறிப்பிட்டுத் தெரிபவர்களாக உள்ளனர். விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் (PTA) பயன்படுத்தி மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்றுழைத்த மாணவத் தலைவர்கள் மூவரை 90 நாட்கள் தடுத்துவைப்பதற்கான கட்டளையின் (DO) கீழ் தடுத்துவைத்துள்ளது.

கடந்த மாதங்களில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) மூன்று தலைவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரிய பிள்ளைகள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியும் அவர்களின் நிலை என்ன என்பது பற்றியும் அறிவதற்காகக் காத்திருந்தபோது துயரத்திற்கும் கண்காணிப்புக்கும் முகங்கொடுத்தனர்.

ஹஷான் ஜீவந்த குணதிலக்க களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட மாணவராவார். இவர் மாணவர்களை அணிதிரட்டுவதில் மிகவும் முனைப்பானவராகக் காணப்பட்டார். இவரது குடும்பத்தினர் சிலாபத்தினைச் சேர்ந்தவர்கள். தனது மகனைப் படிப்பிப்பதற்குத் தான் அரும்பாடுபட்டதாக ஹஷானின் தந்தை கூறினார். “ஹஷான் அவரின் வாழ்க்கை முழுவதிலும் கெட்டிக்கார மாணவராகவே இருந்தார். பல்கலைக்கழகத்திலும் திறமையாகப் படித்தார்” என அவரின் தந்தை கூறினார். “அவர் தனது நண்பனுக்காக எதையும் செய்வார், ஹஷானுக்குச் சட்டத்துடன் ஒருபோதும் எப்பிரச்சினையும் இருக்கவில்லை. நாட்டில் உள்ள பிரச்சினைக்காகவே ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றார்.”

கல்வேவ சிறிதம்ம ஹிமி அனைத்துப் பல்கலைக்கழக பௌத்த சம்மேளனத்தின் (IUBF) தலைவராவார். இச்சம்மேளனம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஓரங்கமாகும் என்பதுடன் பிக்கு மாணவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஹம்பாந்தோட்டையினைச் சேர்ந்த சிறிதம்ம ஹிமி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பௌத்த மெய்யியல் துறையில் கற்கின்றார். “என்னுடைய மகனை இவ்வாறு பார்ப்பது எனக்குத் துயரத்தினையும் சிரமத்தினையும் ஏற்படுத்துகின்றது” என இவரின் தாயார் கூறுகின்றார்.

வசந்த முதலிகே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் தலைவராவார். முதலிகேயின் குடும்பத்தினர் மஹியங்கனையினைச் சேர்ந்தவர்கள். இவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை மாணவராவார். தானும் ஒரு பல்கலைக்கழக மாணவராக இருந்து இந்த நாட்டின் பல்கலைக்கழக முறைமையினை அறிந்த காரணத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னலம் பாராது போராட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துத் தலைமைதாங்குகின்றனர் என்பது தனக்குத் தெரியும் என வசந்தவின் சகோதரர் கூறுகின்றார். “மக்கள் வரிசைகளில் இறக்கின்றார்கள். மேலும் பட்டினியால் இறக்கின்றார்கள் – எம் அனைவரினதும் வாழ்விற்காகவும் முழு நாட்டு மக்களதும் வாழ்விற்காகவுமே எனது சகோதரனும் மாணவர் இயக்கமும் பேச முன்வந்தனர்” என அவர் கூறுகின்றார்.

வசந்தவைக் கைதுசெய்த பின்னர் அவரைக் கைதுசெய்தவர்கள் பல இடங்களில் நின்று தொலைபேசி அழைப்பு எடுத்து “ஐயா, நாங்கள் அவரை எங்கே அழைத்துச் செல்லவேண்டும்” என்று கேட்டதை வசந்த செவிமடுத்ததாகத் தனது சகோதரனைப் பார்க்கச் சென்ற மிகவும் சவால்மிகுந்த பயணத்தின்போது தன்னிடம் கூறப்பட்டதை முதலிகேயின் சகோதரர் நினைவுபடுத்தினார். இது வசந்த முதலிகேயின் கைதுக்கான கட்டளைகள் மேல் மட்டத்தில் இருந்து வந்ததையே தெளிவுபடுத்துகின்றது.

கடந்த வருடம் ஒரு தடவை வசந்த கைதுசெய்யப்பட்டதை அவரின் சகோதரர் நினைவுகூர்ந்தார். அச்சந்தர்ப்பத்தின்போது தேசபந்து தென்னக்கோனுடன் வசந்த நடத்திய சம்பாசைனையினை வசந்த தனது சகோதரரிடம் கூறியிருக்கின்றார். அச்சம்பாசைனையின் போது வசந்தவை அச்சுறுத்திய தென்னக்கோன், “IUSF முடிந்துவிட்டது, இதன் பிறகு இதனைத் தொடர்வது உங்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்” எனக் கூறியிருக்கின்றார். தென்னக்கோன் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதில் பொலிஸ் மாஅதிபர். செயற்படவேண்டிய இடத்தில் இவர் செயற்படாமையும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் இவரின் கடமையை சரிவர செய்யாதமையே ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களான குண்டர்கள் மே 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான அனுமதியினை வழங்கின.

ஆரம்பத்தில், இவர்கள் மூவரும் தங்காலை தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும், இவர்கள் நாரஹேன்பிடியவில் உள்ள TID அலுவலகத்திற்கும் தங்காலைத் தடுப்பு நிலையத்திற்கும் அடிக்கடி கூட்டிச் செல்லப்பட்டு வந்தனர். சிறிதம்ம ஹிமி அதிகமான நேரத்தினை தங்காலையில் கழித்தார். இதனால் இக்குறிப்பிட்ட இடத்தில் சிறிதம்ம ஹிமியின் பாதுகாப்புத் தொடர்பாக அவரின் குடும்பத்தினர் கரிசணை எழுப்பியிருந்தனர். இந்த மையம் ‘பழைய சிறைச்சாலையினுள்’ ஒரு பாழடைந்த கட்​டத்தில் அமைந்துள்ளதால் இந்த இடம் தங்கியிருப்பதற்குப் பாதுகாப்பற்றது எனக் குடும்பத்தினர் உணர்கின்றனர். தடுப்பு நிலையத்தினை கடற்படையினரே நிர்வாகம் செய்கின்றனர் – அந்தப் பகுதியினுள் சீருடையிலும் சிவில் உடையிலும் அதிகாரிகள் சுற்றித் திரிகின்றனர். கடற்படைத் தளபதி யாராக இருந்தாலும் கடற்படை இன்னும் ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என வசந்தவின் சகோதரர் உணர்கின்றார். இந்த வருடம் மே மாதத்தில் ராஜபக்‌ஷ பதவியில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் திருகோணமலைக் கடற்படைத் தளத்திலேயே தஞ்சமடைந்தனர். ராஜபக்‌ஷவின் மகனும் கடற்படையில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியாக இருக்கின்றார். “இந்த விசுவாசம் பல வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும்” என அவர் கூறுகின்றார்.

இந்த மூன்று மாணவர்களும் ஆரம்பத்தில் தங்காலையில் தடுத்துவைக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் அத்தடுப்பு மையத்திற்கு விஜயம் செய்ததைக் குடும்பத்தினர் நினைவுபடுத்தினர். தடுப்பு மையத்தின் உள்ளே செல்பவர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வீட்டில் கஷ்டப்பட்டுச் சமைத்துக் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை – தமது பிள்ளைகள் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகள் – அவர்களிடம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் ‘வெளியில்’ விற்கப்படும் உணவினை வாங்கி அதனை அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும். அருகிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் வாங்கப்பட்ட சீலிடப்பட்ட ‘சிலி பேஸ்ட்’ போத்தல் தாங்கள் வீட்டில் தயாரித்த இறைச்சிக் கறியினை விடப் ‘பாதுகாப்பானது’ என்பதை அதிகாரிகள் எவ்வாறு வேறுபடுத்தி அறிகின்றனர் என வசந்தவின் சகோதரர் கேட்கின்றார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகள் பற்றிக் கேட்டபோது, தாம் விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் தம்மால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமது உறவினர்களுடன் பேச முடியவில்லை என்றே குடும்பத்தினர் குறிப்பிட்டனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக அங்கே நின்றுகொண்டு தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். தாம் மகனுடன் பேசும்போது நான்கு சிஐடி அதிகாரிகள் அங்கே நின்றதாக ஹஷானின் பெற்றோர்கள் குறிப்பிட்டனர் – சிலர் சிவில் உடைகளுடன் அறையில் இருந்து செவிமடுத்ததாகக் குறிப்பிட்டனர். அவர் எவ்வாறு இருக்கின்றார் என அவரின் தாயும் தந்தையும் கேட்டபோது, அவரால் வெறும் புன்னகையுடன் தான் OK என்று கூற மட்டுமே முடிந்தது. “சிஐடியினர் எமது கிராமத்திற்கும் விஜயம் செய்தனர்” என ஹஷானின் பெற்றோர்கள் கூறினர். “அவர்கள் உண்மையில் எமது வீட்டுக்கு வரவில்லை ஆனால், அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று எமது குடும்பத்தினைப் பற்றியும் ஹஷானைப் பற்றியும் விசாரித்தனர்.”

“எம்மால் அவருடன் உண்மையிலேயே பேச முடியவில்லை” என சிறிதம்ம ஹிமியின் குடும்பத்தினர் இந்த அனுபவங்களைப் பகிர்ந்தனர். சிறிதம்ம ஹிமியினைச் சந்திக்க வேண்டிய அறைக்குள் செல்வதற்கு முன்னர், “நாம் அவரிடம் என்ன கேட்டோம் என்பதையா கேட்கப் போகின்றீர்கள்?” என்று குடும்பத்தினரிடம் வினவியுள்ளனர். “சந்திப்பின் போது பேசிய அனைத்தையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்” என்று அவர்கள் கூறினர். IUBF வில் துறவி உறுப்பினராக இருக்கும் சிறிதம்ம ஹிமியின் சகோதரரும் கொழும்பிலுள்ள TID அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு ஐந்து மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது அவர்கள் சிறிதம்ம ஹிமியின் தொலைபேசி எங்கே உள்ளது என்றே கேட்டிருக்கின்றனர்.

ஒரு சனிக்கிழமையன்று, வீட்டில் சமைத்த உணவினை எடுத்துக்கொண்டு வசந்தவின் சகோதரர் தங்காலைக்குச் சென்றார். சிறைச்சாலைக்கு அவர் சென்றபோதுதான் வசந்தவினைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர். வசந்தவினைத் தங்காலையில் சந்திப்பதற்குத் தனக்கு அன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இது எப்படிச் சாத்தியமாகலாம் என அவர் அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் ஒரு தொலைபேசி இலக்கத்தினை வழங்கி அந்த இலக்கத்திற்குத் தொலைபேசி அழைப்பினை எடுக்குமாறு கேட்டிருக்கின்றனர். அந்த இலக்கத்திற்குப் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்திய பின்னர், வசந்தவைப் பார்ப்பதாயின் அவர் பின்னேரம் 4 மணிக்கு முன்னர் கொழும்புக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மூன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் சகோதரரைப் பார்ப்பதற்காக அவசர அவசரமாக வசந்தவின் சகோதரர் அவ்விடத்தினை விட்டு 11 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

“தனக்கு சில புத்தகங்களைக் கொண்டுவருமாறு வசந்த என்னிடம் கூறியிருந்தார்” என வசந்தவின் சகோதரர் கூறினார். “அவர் ஒரு கடதாசியினைக் கேட்டு வாங்கித் தனக்கு என்னென்ன புத்தகங்கள் தேவை என்ற பட்டியலை எழுதி என்னிடம் தந்தார்.” தனது சகோதரர் வாசிப்பதற்காக அந்தப் புத்தகங்களை TID அதிகாரிகளிடம் கொடுக்க முயன்ற்போது அவர்கள் அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு புத்தகத்தினை மட்டும் அனுமதிக்கவில்லை. அந்தப் புத்தகம் கிர்கிஸ் மொழியில் சிங்கிஸ் அய்ட்மடோவினால் எழுதப்பட்ட ‘முதலாவது ஆசிரியர்’ என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘குரு கெதர’ எனும் புத்தகமாகும். இக்கதை கிர்கிஸ் கிராமம் ஒன்றில் நடைபெறுகின்றது. ஒரு இளம் மாணவனுக்குக் கல்வியின் மூலம் எதிர்காலத்திற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும் கிராமத்தில் கற்பிக்கும் ஓர் இளம் கம்யூனிஸ்டின் கதையே இந்த நூலாகும்.

வசந்தவையும் ஹஷானையும் கொழும்புக்குக் கொண்டுவந்த பின்னர் கடைகளில் விற்கப்படும் அவர்களுக்கு விருப்பமான பிஸ்கட்கள், பழச்சாறு, பால் பக்கற்றுக்கள் போன்றவற்றினை அவர்களின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பதற்குச் சென்றனர். பல நாட்களாக இந்தப் பொருட்களடங்கிய பொதிகள் TID அலுவலக மேசையிலேயே கிடந்தன – அதிகாரிகள் அவற்றினை அவர்களிடம் கொடுக்கவில்லை.

“இவை எல்லாம் வேண்டுமென்றே எங்களுக்கு உளப் பாதிப்பினை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை” எனக் குடும்பத்தினர் கூறுகின்றனர். அனுமதி பெறுவதற்கான நீண்ட செயன்முறைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருட்களைக் கொடுப்பதில் உள்ள பாரிய சிரமங்கள் ஆகியன குடும்பத்தினர் அவர்களைப் பார்ப்பதற்காக வருவதைத் தடுப்பதற்காகவும் மாணவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகவும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.

சந்திப்பிற்காக அனுமதி பெற்று நேரம் ஒதுக்கிச் சட்டத்தரணிகள் இவர்களைப் பார்ப்பதற்கு விஜயம் செய்வதற்கும் TIDயின் தயவு வேண்டியிருக்கின்றது. எவ்வாறாயினும், இந்த மாணவர்கள் தடுப்பு மையங்களில் இருட்டறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது சட்டத்தரணிகளின் விஜயங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சிறிதம்ம ஹிமிக்கு ஒவ்வொரு நாளும் சொற்ப நேரம் அவரின் அறையில் இருந்து வெளியே வருவதற்கு (தங்காலையில் இருக்கையில்) அனுமதி வழங்கப்படுகின்றது. அவர் யாருடனும் தொடர்புறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வசந்தவும் ஹஷானும் நாரஹேன்பிட்டியவில் அல்லது தங்காலையில் வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாணவர்களின் இணக்கத்தின் பேரில் மாத்திரமே குடும்பங்கள் விஜயம் செய்ய அனுமதிக்கப்படுவது விஜயங்கள் அனுமதிக்கப்படும் விதத்தில் காணப்படும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் குடும்பத்தினர் அவர்களைப் பார்க்க வரவேண்டுமா அல்லது இல்லையா என TID அதிகாரிகள் கேட்டு அதன் பின்னரே சந்திப்பினை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றது. விஜயங்கள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறுக்கப்படுவதற்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் இணக்கம் வழங்காமையே காரணம் என்ற ஐயுறவின்மை இருக்க முடியுமா? தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், மாணவர்கள் விஜயத்திற்கு இணக்கம் வழங்கவில்லை என TID அதிகாரிகள் மாணவர்களின் சட்டத்தரணிகளுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதில் கூறிவிட முடியும். தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விஜயம் செய்ய இணக்கம் வழங்கியுள்ளனர் என்று கூறுவதற்கு முன்னர் சித்திரவதையினால் ஏற்பட்ட காயங்கள் அல்லது அடையாளங்கள் சுகமடையும் வரை TID இனால் காத்திருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது.

அப்போதைய ஜனாதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தனவினால் ஆரம்பத்தில் தற்காலிக நடவடிக்கையாக இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்ற ஊகத்தினை வழங்குவதில்லை. இச்சட்டத்தின் கீழ் யாரையாவது கைதுசெய்து அவரைப் ‘பயங்கரவாதி’ என முத்திரை குத்தும் செயல் உளவியல் சித்திரவதைச் செயலாகும் என்பதுடன் அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் உரிமைகளின் ஒட்டுமொத்த மீறலுமாகும். இச்சட்டம் அது இயற்றப்பட்ட காலம் முதல் எவ்விதமான அடிப்படையும் அற்ற சந்தேகங்களின் பேரில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளவர்களை அடக்குவதற்கும் அப்பாவிகளைக் கைதுசெய்வதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றதேயன்றி எமது வரலாற்றில் எப்போதுமே இச்சட்டத்தினால் பயங்கரவாதம் தடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் யுத்தம் நடைபெற்ற காலம் முதல் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூடப் பெருவாரியாக இளம் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவர்களில் பலர் எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இன்றி, குற்றச்சாட்டினையும் குற்றத்தீர்ப்பினையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை, பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ் 5 அல்லது 10 வருடங்களுக்கு மேல் தடுப்புக்காவலில் கழித்துவருகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட ஒன்பது தமிழ்க் கைதிகள் தற்போது 5 வருடங்களுக்கும் 30 வருடங்களுக்கும் இடையிலான சிறைத்தண்டனையினைப் பெற்று சிறையில் வாடுகின்றனர். இவர்களில் ஒருவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். குற்றமிழைத்ததாகக் கண்டறியப்பட்டவர்களுக்கான பிணை தாமதிக்கப்பட்டு பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பாவனை அதீத மட்டத்தில் இனரீதியானதாக ஆக்கப்பட்டு சிறுபான்மைச் சமுதாயங்களுக்கெதிரான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ‘அரசின் பகைவராகக்’ கருதப்படும் எவரும் அரசின் பிடியில் இருந்து ஒருபோதும் தூரமாக இருப்பதாகக் கருதப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

நீண்ட காலம் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும் சிறைவைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களைப் பார்ப்பதற்கு மட்டும் செல்வதில் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சிரமங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடயத்தில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தந்திரமாகக் காணப்படுகின்றது. ‘பயங்கரவாதம்’ என அரசாங்கம் எதை வரைவிலக்கணம் செய்கின்றதோ அந்த வரைவிலக்கணத்தினுள் வருகின்ற நபரின் தோற்றப்பாடே கடந்த வருடங்களில் மாறிவருகின்ற ஒரே விடயமாக இருக்கின்றது.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் பதிலீடு செய்யப்பட வேண்டும். இல்லாவிடின் இது இன்னுமொரு குடும்பத்திற்கு மீண்டும் நிகழும். ஒவ்வொரு வருடமும் அந்த நேரத்தில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தினது தேவைப்பாடுகளின் அடிப்படையில் மக்களின் வெவ்வேறு குழுக்கள் ‘பயங்கரவாதிகளாக’ ஆக்கப்படுகின்றனர்” என்பதை வசந்தவின் சகோதரர் அறிந்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற பயங்கரமான சட்டங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்கும் வரையில் அவை அரசின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் அதிகாரத்தினைத் தக்கவைப்பதற்காகவும் எப்போதுமே ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்.

தனது மாமா எப்போதுமே தன்னைப் போன்ற இளம் மாணவர்களின் சார்பில் பேசியதாகக் குறிப்பிட்ட மாணவியான வசந்தவின் நெருங்கிய உறவுக்காரர், “அவர் ஒருபோதும் நாட்டை அழிப்பதைப் பற்றிப் பேசவில்லை, ஆனால், எம் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தினையே அவர் கற்பனை செய்தார். உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகையில், அவர் பயங்கரமானவராகச் சித்தரிக்கப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமலினி டி செய்றா மற்றும் மரிசா டி சில்வா