Photo, Selavaraja Rajasegar

அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கும் இலங்கை மக்கள் கிளர்ச்சி

இலங்கையில் பரந்தளவில் இடம்பெற்றுவருகின்ற மக்கள் கிளர்ச்சி பெருமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கிறது. சகல இனத்துவ அடையாளங்களையும் கடந்த வெகுஜன சீற்றத்தினாலும் கூட்டு துணிவாற்றலினாலுமே அது முன்னெடுக்கப்படுகின்றது என்பது வெளிப்படையானது. இணக்கத்துக்கு அப்பாற்பட்ட இனப்பிளவுகளைக் கொண்டதாக முன்னர் காணப்பட்ட ஒரு நாட்டில் மாற்றத்தையும் நிவாரணத்தையும் வேண்டி ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கியிருக்கும் மக்கள் தங்களது அவலங்களுக்கு மெய்யான மூலகாரணம் – பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமல் பிரமாண்டமான அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசியல் தலைமைத்துவமே – என்பதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

முற்றுமுழுதான ஆட்சி மாற்றத்தையே தவிர இடைக்கால ஏற்பாடுகளை மக்கள் கோரிநிற்கவில்லை. மக்கள் கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் வேளையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் நிர்வாகமும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கமும் மக்களின் ஆதரவையும் அரசியல் நேச அணிகளின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

பல கட்சிகளைக் கொண்ட அமைச்சரவையை அமைப்பதற்கு முன்வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற முக்கிய நேச அணிகள் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரும் பதவியை பொறுப்பேற்பது விவேகமானதல்ல என்று கைவிட்டுவிட்டார்.

ராஜபக்‌ஷ சகோதரர்களின் பதவிவிலகலைத் தவிர வேறு எதுவும் மக்களின் சீற்றத்தை தணிக்காது என்பது தெளிவாக தெரியவந்திருக்கும் நிலையில் அரசியல் முனையில் வழமைக்கு மாறான ஒரு முட்டுக்கட்டை காணப்படுகிறது. ஆனால், அதேவேளை, சமாளிக்கவே முடியாததாக தோன்றுகின்ற பொருளாதார நெருக்கடியொன்றுக்கு மத்தியில் எவராவது ஆட்சியைப் பொறுப்பேற்க முன்வருவார்களா என்பது தெளிவில்லை. 40 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் நிலையில் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்க எதிர்க்கட்சி தயாராயிருக்கிறதா என்பது மெய்யான ஒரு கேள்வியாகும்.

நிலைவரத்தின் அவசரம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. சர்வதேச கடனுதவி வழங்குநர்களை அணுகுவதற்கும் பெரும்பாக பொருளாதார உறுதிப்பாட்டை கொண்டுவருவதற்கும் பொருளாதார மீட்சிக்கான திட்டம் ஒன்று நாட்டுக்கு தேவைப்படுகிறது. இதற்கு நாட்டு மக்களின் நலன்களில் அக்கறைகொண்டதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கவேண்டியது அவசியமாகும்.

வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொறுத்தவரை மறுசீரமைப்பொன்று நடைமுறைப்படுத்தப்படவேண்டிய அதேவேளை இலங்கைக்கு சமகால இடர்பாடுகளைச் சமாளிக்க குறுகியகால கடனுதவி தேவைப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், நம்பகத்தன்மையான தலைமைத்துவம் ஒன்று ஏற்படுவதிலேயே சகலதும் தங்கியிருக்கிறது. இலங்கை தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. ஒரு வழியில் போனால் கடன்பொறியில் மாட்டுப்படவேண்டிவரலாம். கடன்செலுத்த இயலாத நாடாகி வங்குரோத்து நிலையை அடையவேண்டிவரும். மறுபுறத்தில் தற்போதைய அமைதியின்மை அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் பாரிய மாற்றத்துக்கான அதிவிசேடமான வாய்ப்பை வழங்குகிறது.

பிரமாண்டமான அமைச்சரவையைக் கொண்ட பருமனான அரசாங்கம், மிதமிஞ்சிய பாதுகாப்புச் செலவினம், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊதாரிச்செலவுகள், உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தாமை மற்றும் தீர்மானங்களை எடுக்கும் செயன்முறையில் மத்தியமயப்படுத்தல் ஆகியவை எல்லாம் சேர்ந்தே இன்றைய குளறுபடிகளுக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. இவை எல்லாம் முற்றாக மாறவேண்டும்.

அரசியல் மற்றும் பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க பெரும்பான்மையினவாத அணிதிரட்டலுக்கு இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சகல தரப்புகளையும் அரவணைக்கின்ற நோக்கு வளர்க்கப்படவேண்டும். இனம், மதம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளை மையமாக வைத்து வாக்களிப்பது ஆளும் வர்க்கத்துக்கு மாத்திரமே உதவுகிறது; தங்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் ஏற்படக்கூடிய ஒரு முக்கியமான மாற்றமே அவர்களின் பொருளாதார விமோசனத்துக்கு வழிவகுக்கும்.

At a crossroads: On Sri Lanka’s economic recovery என்ற தலைப்பில் ‘தி ஹிந்து’ தளத்தில் 6.4.2022 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கம். மொழிபெயர்ப்பு: வீ. தனபாலசிங்கம்.