Photo: Selvaraja Rajasegar
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிக்கப்பட்டதும் , படிப்படியாக மீளவும் வழங்கப்பட்டதும் பற்றி பலரும் அறிந்துள்ள நிலையில் பறிக்கப்பட்டபோதும் மீளவும் வழங்கப்பட்டபோதும் இருந்த உள்நோக்கத்தினைப் புரிந்து கொள்வதும், அத்தகைய குடியுரிமையின் தற்போதைய நிலை குறித்தும் ஆராய்வது அவசியமாகும்.
இலங்கை சுதந்திரமடைந்த கையோடு பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேற, யாரெல்லாம் இலங்கைப் பிரஜைகள் எனத் தீர்மானிப்பதற்காக இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் 1948ஆம் ஆண்டு 18ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம், அப்போதும் இந்திய அடையாளத்தோடு இருந்த லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடியுரிமையை இழந்தனர். இதனை அடுத்து 1949ஆம் ஆண்டு 48ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் குடியுரிமை இல்லாதவர்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்ற சர்த்து சேர்க்கப்பட்டதால் அதற்கு முந்தைய 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தமது வாக்குரிமையையும் இழந்தனர்.
இந்த இரண்டு சட்டங்களும் குடியுரிமைச் சட்டம், நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் எனும் பெயர்களில் கொண்டுவரப்பட்டிருந்தாலும் அவை இந்திய வம்சாவளியினரின் பிரஜா உரிமையைப் பறிப்பதற்கான சட்டங்களாகவே அமைந்தன.
இந்திய வம்சாவளி என்ற அடிப்படையில் இந்தியர்களதும், பாகிஸ்தானியர்களினதும் குடியுரிமை நீக்கப்பட்டுவிட 1949ஆம் ஆண்டு 3ஆம் இலக்க இந்திய – பாகிஸ்தான் பிரஜைகளுக்கான குடியுரிமைச் சட்டம் ஊடாக, விண்ணப்பித்து குடியுரிமையைப் பெறலாம் எனும் மாயையை உருவாக்கி, இந்திய மேல்தட்டு வர்க்கத்துக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் (இந்தியாவுடன் பாகிஸ்தான் சேர்ந்து இருந்தபோது இலங்கை வந்தவர்கள்) மீளவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது உரிய முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படாது இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களான பாட்டாளி வர்க்கத்தினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. அப்போது முதல் இந்தியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே திருப்பி அனுப்புதல் என முடிவுக்கு வந்த இலங்கை அரசு, 1954 (நேரு – கொத்லாவல ), 1964 (சிறிமா – சாஸ்த்திரி ), 1974 (சிறிமா – இந்திராகாந்தி) ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தது.
1970களின் பிற்கூறுகளில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முனைப்புற இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியான ‘திம்பு’ கோட்பாட்டில், நாடற்ற தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் எனும் தமிழர் தரப்பின் கோரிக்கையின் பேரில் ‘1986ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க நாடற்றவர்களுக்கான குடியுரிமை சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.
அதுவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில் செயற்பட்டுவந்த இந்தச் சட்டத்திலேயே இந்த மக்கள் மீது ‘நாடற்றவர்கள்’ ( Stateless) எனும் அடையாளத்தை சுமத்தி இலங்கைக் குடியுரிமை வழங்கியது.
இதன்விபோது விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் போர்வையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு வேட்டையை இலக்காகக் கொண்டு 1988ஆம் ஆண்டு நாடற்றவர் சட்டத்தில் திருத்தம் ஒன்றை முன்வைத்து எஞ்சியோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
முன்னதாக சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திரும்பிச்செல்ல இந்திய கடவுச்சீட்டுடன் தயாராகியும், 1983 இனக்கலவரத்துடன் இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டதால் இலங்கையிலேயே வாழ நேர்ந்தது. அத்தகைய 91,000 பேருக்கான குடியுரிமையை வழங்குவதற்காக, 2003ஆம் ஆண்டு 35ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கான குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்திற்கான மேலும் ஒரு திருத்தமாக, 2009ஆம் ஆண்டு 6ஆம் இலக்கச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நாடற்றவர் நிலையில் மலைநாட்டுப் பகுதியில் இருந்து வன்னி, கிளிநொச்சி மாவட்டங்களுக்குக் குடியேறி, அங்கிருந்து யுத்தம் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்குள் அகதிகளாகச் சென்று சேர்ந்த 28,459 பேருக்கு, இலங்கைத் திரும்பினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்ற ‘ஏற்பாடு’ செய்யப்பட்டது.
இவ்வாறு 1948இல் பறிக்கப்பட்ட குடியுரிமை வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு பெயரிலான வேறுபட்ட நோக்கங்களிலான சட்டங்களின் ஊடாக திரும்ப வழங்கப்பட்டதே தவிர, இவர்களிடம் பறிக்கப்பட்ட குடியுரிமைக்காக மன்னிப்புக் கோரலுடன், உண்மையில் பிரஜாவுரிமையை வழங்க வேண்டுமென்ற உந்துதலுடன் – உள்நோக்கத்துடன் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை என்பதை 1949 முதல் 2009 வரையான குடியுரிமையை மீள் வழங்கிய சட்டங்களின் பெயர்களைக் கொண்டே இதனை உறுதி செய்ய முடியும். ஏதோ ஒரு வகையில் தீர்க்கப்பட்ட மலையகத் தமிழர் குடியுரிமைப் பிரச்சினை நிறைவுக்கு வந்த 2009 ஒரு வகையில் இலங்கையில் இரண்டு தமிழ் தரப்புகள் (இலங்கைத் தமிழர் – மலையகத் தமிழர்) மேற்கொண்டிருந்த நாட்டுரிமைக்கான போராட்டங்கள் முடிவுக்கு வந்த ஆண்டு 2009 எனலாம்.
1931ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு ஏற்பாட்டில் இலங்கையின் ஏனைய இன மக்களைப் போலவே இந்திய வம்சாவளி மக்களுக்கும் ‘சர்வஜன வாக்குரிமை’ கிடைத்தபோதும், அது பிரித்தானியர்களின் ‘இலங்கையில்’ வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்ட உள்நாட்டு சக்திகள், இந்த மக்களை உள்நாட்டு நிர்வாகத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரம் இலங்கை சுதந்திரம் அடைந்ததும் முதலாவது வருடத்திலேயே இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழருக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களால் சர்வஜன வாக்குரிமையின் கீழ் வழங்கப்பட்டிருந்த இலங்கைக் குடியுரிமையைப் பறித்ததார்கள்.
ஏற்கனவே உள்நாட்டு நிர்வாக முறையான கம்சபா (கிராம சபை) முறையிலும் இவர்களை ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தது. 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு உதவும் அடுத்த படிநிலையாக (Tier), அதுவரை நடைமுறையில் இருந்த கிராமசபை முறைமையை பிரதேச சபையாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டே பிரதேச சபைகள் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்போது மாகாண சபைகள் மூலம் தமக்கு அதிகார பகிர்வைப் பெற்றுக் கொள்ள முனைந்த வட கிழக்கு தரப்பு, மறுபக்கமாக மாற்றமுறும் கிராம சபை முறைமையில் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்காத மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரதேச சபைச் சட்டத்தில் இருந்தும் விலக்களிக்கப்படுகின்றது என்பதை கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள். வட கிழக்குத் தரப்பு மாத்திரமல்ல, அப்போது அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மலையகத் தலைமைகளும் இது குறித்து அக்கறையற்று இருந்துள்ளார்கள் என்பது இந்த மக்களின் அரசியல் சாபக்கேடு எனலாம்.
அதன் பின்னர் 30 வருடங்கள் கழித்தே 2018ஆம் ஆண்டே பிரதேசச் சபைகள் சட்டம் திருத்தப்பட்டு மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் சேவையாற்றலாம் எனும் நிலைமை உருவாக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற ஆண்டு 2018 தான்.
இத்தகைய பின்னணிகளே மலையகத்தின் இக்கட்டான நிலைக்குப் பிரதான காரணமாகும். நாற்பது வருடங்களாக நாடற்றவர்களாக வைக்கப்பட்டு இருந்தவர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் தேசிய நிர்வாகப் பொறிமுறைக்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. கிராமசேவகர் பிரிவுகள் முறையாக வழங்கப்படவில்லை. தனியார் கம்பனிகளின் தோட்ட நிர்வாகத்தால் பெருந்தோட்டச் சமூக நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகின்றது. காலம் தாழ்த்தியே இலவசக் கல்வி இவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெருந்தோட்டக் குடியிருப்புக்கான வீதிகள் ‘தோட்ட வீதிகள்’ என கணக்கிடப்பட்டு உள்நாட்டு நிர்வாக வீதி கட்டமைப்பில் சேர்க்கப்படாமல் உள்ளது. ஆபத்தான முறைமையில் மின்சாரம் பழைய லயன் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு அடிக்கடி அவை பற்றி எரிந்து மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இன்னும் தபால் சேவையில் இணைக்கப்படவில்லை. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக தோட்ட சுகாதார முறைமை என வைக்கப்பட்டு தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமல் உள்ளனர். இந்தச் சுகாதார முறைமை மாற்ற விடயம் உச்சகட்டமாக நாடாளுமன்றிலும் குழு அறையிலும் பேசப்பட்டுவந்த 2015 – 2020 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார கொத்தணிகளை உருவாக்குவதற்கான தேசிய கொள்கை வகுப்பின்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், ‘இந்த ஆரம்ப சுகாதார கொத்தணி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் பெருந்தோட்டப் பகுதியில் வாழும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் (Plantation ‘migrant Workers’ and their families ) நன்மையடைவார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இன்னும் இலங்கையின் குடிமக்களாக அல்லாது குடிபெயர்ந்த (இந்தியாவில் இருந்து) தொழிலாளர்களாகவே (Migrant Workers) தெரிகிறார்கள் என்பது இந்த மக்கள் இன்னும் இந்த நாட்டில் அர்த்தமுள்ள குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை, மாற்றப்படவமில்லை எனும் அடையாளத்துக்கான சான்றாகும். இதனைப் புரிந்துகொண்டு 2020 ஆண்டுக்குப் பின்னரும் நிவாரண அரசியலில் தங்கியிருக்காது தனது அர்த்தமுள்ள குடியுரிமையைப் பெறுவதற்கான அபிவிருத்தி அரசியலுடன் உரிமைக்கான அரசியல் நகர்வையும் முன்கொண்டு செல்லவேண்டிய ஒரு யுகத்தை மலையக அரசியல் களம் வேண்டி நிற்கிறது.
மயில்வாகனம் திலகராஜ்
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இலங்கைக் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15ஆம் திகதி ‘மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம்’ ஒழுங்கு செய்த உரை அரங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு.