Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times

இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு : அட்டூழியங்களையும், துன்பப்படுத்தல்களையும் தெரிந்து கொள்ளல் – States of Denial: Knowing about atrocities and suffering  (2001), மறுப்பு என்றால் என்னவென்பதை, ‘மறுப்பு என்பது இலகுவில் நழுவித் தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு சொற்பதம், அது பலவற்றைக் குறித்து நிற்கும் மறுப்புக்குரிய முறையான பாவனை அல்லது நடைமுறை என்பது, எப்போது நபர்கள் பார்வையாளர்களாக (audience), பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களாக (bystanders), அவதானிப்பவர்களாக (spectators), கவனிப்பவர்களாக அல்லது நோக்கர்களாக (onlookers), காண்போராக (spectators)  காட்சிகளாக, நடந்ததை, நடந்நு கொண்டிருப்பதை தெரிய வரும் போது அந்த நேரத்தில் அல்லது பின்னர், பல்வேறு காரணங்களுக்காக தெரியாது என்று உரிமை கோருதலை மறுப்பு என்று அழைக்கலாம் என்று ஸ்ரான்லி கோஹென் குறிப்பிடுகின்றார். இந்த மறுப்பு பல்வேறு தளங்களில் நிகழலாம். தனிநபர் தளத்திலும், பொது வெளியிலும், உண்மையை ஏற்றுக் கொள்ளாமை அல்லது அட்டூழியம் நடக்கின்ற போது அது பற்றி அமைதிகுலையா நிலை அல்லது அலட்டிக் கொள்ளாநிலை, அட்டூழியத்தை அடையாளங் காணாத நிலை என்பது பொறுப்பற்ற நிலை. ஒரு தனி நபரோ அல்லது குழுமமோ மறுப்பு நிலையில் இருக்கும் போது எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதில்லை. மறுப்பு என்பது ஒரு கூட்டுச் செயற்பாடு என்று குறிப்பிடும் போது, மக்கள் ஒருவர் ஒருவரிடமிருந்து எதை அலட்சியம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொள்ளுகின்றார்கள். எதைப்பற்றி பார்க்கக்கூடாது, கேட்கக்கூடாது, பேசக் கூடாது, இவ்வாறான கூட்டுச் செயற்பாடு யதார்த்தத்தின் பகிரப்பட்ட மீளுருவாக்கத்தில் (shared reconstruction of reality) தங்கியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். அவ்வாறான வெளியில் வேதனை தருகின்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரு குழுமம், இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு இனக்குழுமம், தான்  செய்த ஓர் இனப்படுகொலையை மறுத்தல், இயல்பாக சமூக, பண்பாட்டு தோற்றப்பாடுகளாக உருவாக்கலாம். இவ்வாறான நிலையில் ஒரு குழுமம் முழுவதுமே தன்னைக் கூட்டாக இன்னொரு சௌகரியமான பொய்மைக்குள்  பழக்கப்படுத்திக் கொள்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட முயற்சியை அரச இயந்திரம் முன்னெடுப்பதை அவதானிக்கலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஏற்கனவே ஒரு சில கட்டுரைகளில் கூறப்பட்டது போல ஆர்மேனியப் படுகொலையைச் சுட்டிக் காட்டலாம். துருக்கி அரசு தானே நடத்தி முடித்த ஆர்மேனியப் படுகொலையை (1715) இன்று வரைக்கும் மறுத்து வந்துள்ளது. இதை கோஹைன் நேரடியாக/ உண்மையாக மறுத்தல் (literary denial) எனக் குறிப்பிடுகின்றார். துருக்கி அரசு அதிகாரபூர்வமாக ஆர்மேனிய இனப்படுகொலை மறுப்பை அரச செயற்திட்டமாகவே மாற்றியது. அரசினால் தனது அரச இயந்திர கருத்தியலுக்கூடாக இனப்படுகொலை மறுப்பை நிறுவனப்படுத்துகின்றது. அடுத்து பொருள் விளக்கம் சார்ந்த மறுப்பு (interpretive). இது எவ்வாறெனில் ஏதோ ஒன்று நடைபெறுகின்றது, நடைபெற்றது. ஆனால் அதை வேறு அர்த்தத்தில், கோணத்தில் பார்க்க வேண்டும். இதற்கு உதாரணமாக இரண்டாம் உலக மகாயுத்தத்தில் நாசிகளினால் சித்திரவதை கூடங்களில் கொல்லப்பட்டவர்களை, அவர்கள் கடின உழைப்பால், பட்டினியால், சோர்வடைந்ததால் இறந்ததாக இன்னொரு பொருள்பட காரண விளக்கமளித்தலைக் குறிக்கும். மூன்றாவது வகையானதான நடந்தது அல்லது நடப்பது பற்றிய அற ஒழுக்கம் சார்ந்தது (implicatory). இதற்கு உதாரணமாக இரண்டாம் உலகப் போரில் நெதர்லாந்து நாட்டவர்கள், யூதர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி கண்டு கொண்டார்கள். ஆனால், அந்த நடவடிக்கைகள் பற்றிய அற ஒழுக்க முக்கியத்துவத்தை மறுத்திருந்தார்கள். அதனால் தாங்கள் தலையிட வேண்டும் என்ற அறப்பொறுப்பையும் மறுத்து விட்டார்கள். இதைத்தான் கோஹைன் தெரிந்து கொள்வதிலும், தெரிந்து கொள்ளாமல் இருப்பதிலும் முரண்பாடு (Paradox of knowing and not knowing) எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழர்களுக்கெதிரான இனத்துவேசத்தை வரலாற்று ரீதியாக இலங்கை அரசு நிறுவனமயப்படுத்தியிருந்தது. இனம் சார்ந்த பாகுபாட்டை நிறுவனமயப்படுத்தல் இனப்படுகொலையை மறுப்பதற்கு இன்னும் இலகுவாக அமைந்தது. இந்த இனப்பாகுபாட்டை வரலாற்று ரீதியாக தமிழர்கள் சிங்களவர்களின் இருப்பிற்கு எதிரானவர்கள் அல்லது அச்சுறுத்தலாக அமைகின்றார்கள் என வரையறுத்த போது தமிழர்களின் இருப்பை மறுத்தலின் அற ஒழுக்க பொறுப்பு பெரும்பான்மை இனத்தவரிடையே முக்கியத்துவத்தைப் பெறவில்லை. அதனால் கொல்லப்படுகின்ற தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய அறப்பொறுப்பு இல்லாமற் செய்யப்பட்டது. அறப்பொறுப்பின் முக்கியத்துவத்தை இல்லாமற் செய்ததில் அநாகரிக தர்மபாலவின் துட்டகைமுனுவின் போரை மீள்வாசிப்புச் செய்து, காலத்திற்கேற்ற வகையில் பொருள் விளக்கம் கொடுத்தது, மிக முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணத்திற்கு துட்டகைமுனு தனது போரை பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கெதிராக நடத்தியிருந்தார். ஏனெனில் அவர்கள் தீய வாழ்வை வாழ்கின்றவர்கள். மிருகங்களுக்கு இணையானவர்கள். ஆகவே, அவர்களைக் கொல்லுவதில் துட்டகைமுனு எந்தப் பாவத்தையும் செய்யவில்லை (ஒபயசேகர 1975). வரலாற்றுக் கதையின் மீள்வாசிப்பு என்பது பௌத்தர்கள் அல்லாத ஏனையவர்களுக்கெதிரான போரை நியாயப்படுத்தியதோடல்லாமல், அவ்வாறான போரை தூய போராகவும் வர்ணித்தது. இனப்படுகொலை மறுப்பில், இனப்படுகொலை உள்நோக்கத்தை (intent) நிறுவுவது அவசியமானது. குறிப்பாக, இலங்கை அரசிற்கு தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்கு, தமிழினத்தை அழிப்பதற்கு அதற்கான உள்நோக்கம், இருந்ததை நிறுவுவது கடினம் என சட்டத்தை கையிலெடுப்பவர்கள் வாதிடுவதை அவதானிக்கலாம்.

சிறப்பு உள்நோக்கம் (Speical intent) என்பது முக்கியமானது. இந்த சிறப்பு உள்நோக்கத்தை இல்லாமல் செய்வது தான் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கின்றது. இலங்கை அரசு இந்த சிறப்பு உள்நோக்கத்தை மறைப்பதற்காக பல பொய்த்தோற்றத்தை போட்டுக் கொண்டது. வைத்தியசாலைகள் மீது குண்டு வீசப்பட்ட போது பயங்கரவாதிகள் அங்கிருந்து எதிர்த்தாக்குதல் செய்தார்கள் என்ற சொல்லாடல் கட்டமைப்பு என்பது இந்த சிறப்பு உள்நோக்கத்தை மறைப்பதற்காகவே. சிறப்பு உள்நோக்கத்தை நிறுவவிடாது தொடர்ந்தும் இலங்கை அரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்தும் தமிழ் இனத்தின் மீதான போரை மகாவம்ச இதிகாசத்தின் நிலமீட்புப் போராகவே வடிவமைத்துக் கொண்டிருந்தது, கொண்டிருக்கின்றது. இலங்கை புத்தரால் தேரவாத பௌத்தர்களுக்கு கொடுக்கப்பட்ட தேசம், அந்த தேசத்தினை மீட்பதற்கான போராக வடிவமைத்து, போரை பௌத்த தர்ம வரைபுகளுட்பட்டே நடத்துவதால் அது நியாயமான போர் என பொரும்பான்மையினத்தை நம்பவைத்தது. இன்றும் வடக்கு – கிழக்கில் பௌத்த காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு அதே உத்தியைக் கையாளுகின்றது. புத்தர் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்களுக்கு கொடுத்த நாட்டை மீளக் கைப்பற்றுவதே புனிதப் போரின் நோக்கம் என்ற நியாயம், ஏனைய இனங்களின் அற இருப்பை நியாயமற்றதாக்கியது. இலங்கையில் இடம்பெறும் வரலாற்றுத் திரிபுகளின் செயற்திட்டத்தை இலங்கை அரசு மகாவம்ச வரலாற்றுச் சட்டகத்தை வைத்துக் கொண்டே முன்னெடுக்கின்றது. மிக அண்மைய காலங்களில் வரலாற்றுப் புலமைத்துவத்தில் இராவணனை சிங்கள மன்னனாக புனைய முனைவது இந்தச் செயற்திட்டத்தில் ஒரு அங்கமே என்பதை மறந்துவிடக் கூடாது.

பாதிக்கப்பட்டவர்களை பழிசுமத்தல், இன்னொரு உத்தியாக இனப்படுகொலை மறுப்பில் கையாளப்பட்டது. இதற்கு சிறந்த உதாரணமாக, தற்போது துருக்கி அரசின் சொல்லாடல்கள், ஆர்மேனியர்களே இனப்படுகொலையை செய்ததாக கட்டமைத்திருக்கின்றார்கள். நவ-நாசி சொல்லாடல்களும் இதையொத்து கட்டமைக்கப்படுகின்றன. அதாவது யூதர்களே யூத இனப்படுகொலையை கட்டமைத்திருந்தார்கள். ஏனெனில் பணம் பெறுவதற்காகவும், ஏனைய சலுகைகளைப் போரின் பின் ஜேர்மனிய அரசிடமிருந்து பெறுவதற்காகவும் (Mark Potok). இதே மாதிரியான பாதிக்கப்பட்ட பழிசுமத்தலை இலங்கை அரசு மிகச் சிறியளவில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இந்தப் பழிசுமத்தலில் பாதிக்கப்பட்டவர்களை தீமையானவர்களாக வடிவமைத்தல், உத்தி கையாளப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களை தீமையானவர்களாக வடிவமைத்தலில், பாதிக்கப்பட்டவர்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தி, அவர்களைப் பொய்யானவர்களாக கட்டமைத்தல் மூலம் சாட்சிய உண்மைகளை இல்லாமற் செய்கின்றது. அத்தோடு சாட்சியங்களை பயமுறுத்துவதன் மூலம் உண்மை சொல்லாடலை தடைசெய்கின்றது.

சாட்சிகளை அடக்குமுறைக்குட்படுத்தல் (testimonial oppression), இலங்கை அரசு இதனை மிகத் தீவிரமாக செயற்படுத்துகின்றது. இனப்படுகொலைச் சாட்சிகளை அடக்குமுறைக்குபட்டுத்தல், இனப் பாகுபாட்டை பல்வேறு தலைமுறைகளுக்கு தக்க வைத்துக் கொள்கிறது. அதுவே எதிர்வரும் பாதிக்கப்பட்ட தலைமுறையினர் தொடர்ந்தும் அச்சத்திற்குள்ளாக வைத்துக் கொண்டேயிருக்கும். இனப்படுகொலை மறுப்பு என்பது தலைமுறைக்கான நீதி (intergenarational justice) சார்ந்தது.

Cudd (2006) அடக்குமுறையை பின்வருமாறு விபரிக்கின்றார். அவ்வரைவிலக்கணம், சாட்சிகளை அடக்குமுறைக்குட்படுத்துவதற்கும் பொருத்தமானது, “நிறுவனமயப்படுத்தப்பட்ட தீங்கு ஒரு குழுவால் இன்னொரு குழுவின் மேல் குற்றமாக திணிக்கப்படுவது, அது நேரிடையாக மறைமுகமாக நிகழ்த்தப்படுவது, உளவியல் உத்திகளும் இதில் அடங்கும், மேற்கூறப்பட்டவை நீதியை ஆக்கிரமிக்கும் போது அல்லது தகர்க்கும் போது அடக்குமுறை வகைக்குள் அடக்கப்படும். Cudd நான்கு நிபந்தனைகளை முன் வைக்கின்றார். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடு மூலம் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. அந்தத் தீங்கு சமூக நிறுவனங்கள் மூலம் இன்னொரு சமூகத்தின் மீது நடத்தப்படுகின்றது. இச் செயற்பாட்டின் மூலம் இன்னொரு சமூகக் குழுமம் நன்மையடைகின்றது. இச் செயற்பாட்டிற்கு ‘நியாயப்படுத்தப்பட முடியாத பலவந்தம்’ (Unjustified coercion) பயன்படுத்தப்படுகின்றது. இவற்றிலிருந்து Cudd சாட்சிய அடக்குமுறையை பின்வருமாறு சுருக்கமாக வரையறுக்கின்றார். ‘நியாயப்படுத்தப்படமுடியாத அறிவியல் பூர்வமான பலவந்தம் (Unjustified epistemic Coercion) நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் சாட்சிகளுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடிய முறையில் பயன்படுத்தப்படல், இங்கு Cudd மேலும் குறிப்பிடுகையில் ‘பாதிப்பு என்பது சாட்சியினுடைய முழு மனிதனாக அவரை அவமரியாதை செய்வது மட்டுமல்ல, மாறாக அவரது தெரிதல் உண்மையிலிருந்து அவருடைய அறிவுத்திற ஆற்றலை ஒரு செயலாண்மை முகவராக செயற்படாது தடுத்து நிறுத்தல் ஆகும். தீமை இங்கு ஒரு சமூகக் குழுவினரால், இன்னொரு சமூகக் குழுவினர் மீது செயற்படுத்தப்படுகிறது. ஒரு குழுவினரின் நன்மை கருதி (M.Altawing 2020). சாட்சியத் திணறல் (Testimonial Smothering – Dotson 2011) நடைபெறலாம், எப்போது என்றால் சாட்சி தனது சாட்சியத்தை குறிப்பிட்ட பார்வையாளர்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என்று உணருகின்ற தருணத்தில்.

இதை இலங்கை அரசு தொடர்ந்து புரிந்து வருகின்றது. இறுதிப் போர்வலயத்திற்குள் இருந்து வந்த சாட்சிகளைப் பொய்யர்களாக வடிவமைத்தது, தேசத்துரோகிகளாக பிரதிபலித்தது, அதன் மூலம் அவர்கள் கூறுவது அனைத்தும் ஒரு செயற்கையான, நலன் தேடுகின்ற செயற்திட்டமாக கட்டமைத்தது அவர்களுக்கான வெளியை முடக்கியது. சாட்சிய திணறலில் மூன்று சந்தர்ப்பங்களை பற்றி Dotson குறிப்பிடுகின்றார். முதலாவது, சாட்சியம் சொல்லும் உள்ளடக்கம் அபாயகரமானது. இரண்டாவது பார்வையாளர்களுக்கு, சாட்சி சொல்லுவதைக் கிரகிக்கும் தன்மை இல்லை. மூன்றாவது கிரகிக்க முடியா தன்மை பொல்லாத அறிவீனத்தால் உண்டாகின்றது.

மேலும் பொதுவான உத்தியாக கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் கையாளப்படுகின்றது. இதை இலங்கை அரசு 2009 தொடக்கம் செய்து வருகின்றது. அதே நேரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தை மத்தியில் மையப்படுத்தப்பட்ட செயற்பாட்டுப் பொறிமுறை மூலம் மக்களைக் கொல்லுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்பதை இலங்கை அரசு எப்போதுமே மறுத்து வந்திருக்கின்றது. ஏனென்றால், திட்டமிடலின் உள்நோக்கத்தை மறைப்பதற்காக. குறைந்தளவான மக்கள் கொல்லப்பட்டதை தற்போது ஏற்றுக் கொண்டாலும், அதற்கான குற்றவாளிகளாக இராணுவத்தில் குறிப்பிட்ட தனிநபர்களை மட்டும் அடையாளங்கண்டு அரசுக்கான குற்றவாளிப் பொறுப்பிலிருந்து தப்பித்து விடுகின்றது. இவர்களை, சந்தர்ப்பம் வரும் போது, தண்டனைக்குட்படுத்துவதில் அரசு தன்னை கூட்டுப் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளும்.

இலங்கையின் மறுப்புவாதம் மிகத் திட்டமிடப்பட்ட அரசியல் கருத்தியலாக வடிவமைக்கப்பட்ட மறுப்புப் பண்பாடாக நடைமுறையிலிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடு வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றது. இனப்படுகொலை மறுப்புவாத கருத்தியல் ஒரு நம்பிக்கையாக, மறுப்பை நியாயப்படுத்தி, மீண்டும் பாதிக்கப்பட்ட குழுமத்தின் மீது பழிசுமத்தி வரலாற்று முற்கோள் காழ்ப்புணர்ச்சியை உண்டு பண்ணி, மறுப்பின் மீது அற நியாயத்தை திணிக்கின்றது.

இன்னொரு இலங்கையின் உத்தியாகப் பயன்படுத்தப்படுவது, அழிவை அல்லது இழப்பை பொதுமைப்படுத்தல். தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கட்டமைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டமையின் அரசியல் தன்மையையும், அறத்தன்மையையும் சட்ட வலுத்தன்மையையும் இல்லாமற் செய்தல். இதை வெறுமனே பொய்யான மனித நேயப் பார்வைக்குட்படுத்தி கை நழுவிவிடல். ஏனெனில் போரில் வலி, இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இரண்டு இனங்களுமே பாதிக்கப்பட்டது. அதனால் ஒரு சமநிலைத் தன்மையை கட்டமைத்து, குற்றமிழைத்த பொறுப்பிலிருந்து விலகி விடுகின்றது.

இப்படுகொலை மறுப்புவாதம், இன ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும், இலங்கை அரசு தமிழ் இனப்படுகொலையை மறுப்பதினூடாக தனது இன ஆதிக்கத்தை அரசு இயந்திரத்தினூடாக பரவலாக்கி, மக்கள் மயப்படுத்தி, கூட்டுப் பொதுப்புத்தியூடாக அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரச இயந்திரங்கள் மூலம் கற்பிதம் செய்கின்றது.

சாட்சிய அடக்குமுறை வெறுமனே உதிரிகளால், அல்லது உதிரியான செயற்பாடுகள் மூலம் நிகழ்வதல்ல. மிகத்திட்டமிடப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆதிக்கத்தினூடாக அரச இயந்திரத்தைக் கொண்டு அமுல்படுத்தப்படுகின்றது. இனப்படுகொலை மறுப்பில் அரசு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மறுப்பதினூடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடக்கு – கிழக்கில் முன்னெடுத்து வருகின்றது.

இனப்படுகொலை மறுப்பு இதே வேகத்தில் தொடர்ந்தால் இன்னொரு இனப்படுகொலையை தடுக்க முடியாது போகலாம்.

எழில் ராஜன்