Photo, The Guardian

Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை கொண்டு கூட்டு சித்திரவதையையும், மரணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதென்பது இலகுவானதாக இருந்திருக்கமுடியாது. அவருடைய தூரிகைதான் அவரைக் காப்பாற்றியது (M.Leclezio 2017). M.Leclezio 2017 னுடைய ஓவியங்கள், முன்னர் S -21 சித்திரவதைக் கூடமாக இருந்து தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள வெளியில் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சமகால ஓவியப்போக்கில் கம்போடிய இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், பிரதிபலிப்பதிலும் பின்னடைவு இருப்பதான தோற்றம் பற்றிய விமர்சனங்கள் எழாமல் இல்லை. தற்கால கம்போடிய ஓவியங்களில் தலைதூக்கும் அழகை மையப்படுத்தி ஆனால் இனப்படுகொலை பிரதிபலிப்பின்மை காட்சிப் படிமங்களை இன்னொரு கோணத்தில் நுகர்வதற்கான அழைப்பாக கருதலாம் என விளக்குவோரும் உளர் (Ashley Thompson 2013). ‘இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள அடக்குமுறை, அந்த அடக்குமுறையினால் ஏற்படும் வெளியை நிரப்புவதற்கு நிலக்காட்சிகளின் அழகு ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந் நிரப்புகை, இன்மையை இருப்பதாகக் காட்டுகின்றது. (the absent are present) இன்மையை முன்வைப்பதனூடு, இனப்படுகொலை அனுபவத்திற்கூடான பயணம் என்பது விபரிக்கப்பட முடியாதது அல்லது பிரதிநிதித்துவப்படுத்தமுடியாது என்பதை குறியிட்டுக் காட்டுகின்றார்கள் (Ibid).

ஓவியமும், இனப்படுகொலையும் பற்றிக் குறிப்பிடுகின்ற போது இனப்படுகொலை தொடர்பில் ஓவியம் பல்வேறு நிலைகளில், உதாரணமாக இனப்படுகொலை, பிரதிநிதித்துவம் தொடர்பில், மறுக்கப்படும் இனப்படுகொலையை எதிர்கொள்வதற்கான கருவியாக, இனப்படுகொலை நினைவுத்திறக்கட்டமைப்பில், துயருறுதல் ஆற்றுகை தொடர்பில், இனப்படுகொலைக்கான நீதி வேண்டி என பன்முக வகிபங்கைச் செலுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. மேற்கூறிக் கொண்ட ஓவிய முயற்சிகள் எல்லாமே இன்னொரு இனப்படுகொலை நிகழாமல் தடுப்பதற்கான முன் முயற்சிகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு இனப்பெடுகொலையின் பின்னரும் பயன்படுத்துகின்ற பதம், ‘மீளவும் இல்லை’ ஆனால் அதுவே மீளவும் மீளவும் பயன்படுத்தப்படுகிறது.

யூத இனப்படுகொலையை (Holocaust) ஓவியங்கள் பிரதிநிதித்துவப்படுத்தியமை தொடர்பில் தாராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, பட்டுவருகின்றன. ஆனால், 1990களில் இனப்படுகொலை தொடர்பான ஓவிய வெளிப்பாட்டில் அதிக ஈடுபாட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. யூத இனப்படுகொலையை மட்டுமல்லாது, ஆர்மேனிய இனப்படுகொலை, பழங்குடி அமெரிக்கர்களின் இனப்படுகொலை, பொஸ்னிய, ஆபிரிக்க இனப்படுகொலைகளை ஓவியத்தினூடு வெளிப்படுத்தும் போக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. Karl Stojko யூத இனப்படுகொலையினதும் ஹோமா – சிந்தி நாடோடிகளினதும் இனப்படுகொலையின் சாட்சியாக ஓவியராக வாழ்ந்து வருபவர். தன்னுடைய மனவடுக்களிலிருந்து (S.C.Feinstein 1999) வெளிவருவதற்கான ஆற்றுகையாக ஓவியத்தைப் பயன்படுத்தியுள்ளார். இனப்படுகொலைகளுக்கூடாக பயணித்த கலைஞர்களுக்கு, இனப்படுகொலையின் பின்னர் கவின்/ கலைகள் சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததை வரலாறு மறக்கவில்லை. அடிக்கடி அறிவியற் சொல்லாடல்களில் மேற்கோள் காட்டப்படுவது. அதொர்னோவின் ‘அவுஸ்விட்சுக்குப் பின்னர் கவிதை சாத்தியமா’ என்பது. ஆனால் ‘மௌனம்’ அல்லது ‘ அமைதி’ என்பது இவற்றிற்கான பதிலாக அமைய முடியாது.

20ஆம் நூற்றாண்டின் முதல் படுகொலையாக கருதப்படுவது ஆர்மேனியப் படுகொலை (1915), துருக்கி இன்னும் ஆர்மேனியப் படுகொலையை மறுத்து வருகின்றது. ஆர்மேனியாவில் பிறந்த ஓவியரான Arshile Gorky தன்னுடைய சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “நாங்கள் தொலைத்த அழகான ஆர்மேனியாவை நான் மீண்டும் என்னுடைய ஓவியங்களூடு மீண்டும் உடைமையாக்கிக் கொள்கின்றேன். என்னுடைய தூரிகைக் கொண்டு, முழு உலகமுமே பார்க்கும் வண்ணம், ஆர்மேனியாவை உயிர்ப்பிப்பேன்” (quoted in Ibid). தற்போது புலம்பெயர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை ஆர்மேனிய ஓவியர்கள் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். எவ்வாறு துருக்கி நூறு வருடங்களுக்கு மேலாக ஆர்மேனிய படுகொலையை மறுத்து வருகின்றதோ அதே போலத்தான் இலங்கையும் தமிழ் இனப்படுகொலையை மறுக்கப் போகின்றது. அதற்கான மறுப்புப் பொறிமுறையை இலங்கை ஏற்கனவே உருவாக்கிவிட்டது. ஆர்மேனியர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஓவியர்களில் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் இன்றும் ஆர்மேனியப் படுகொலையை ஓவியப்படைப்புக்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தி நீதிப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான உத்தியை ஏனைய இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியர்களும் கையாண்டு வருகின்றனர்.

தமிழினப் படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு சாரார் உள்ளனர். ஒன்று, ஈழத்தில் உள்ளவர்கள், இரண்டாவது ஈழத்திற்கு வெளியே உள்ளவர்கள். ஈழத்திற்குள்ளே வாழும் சாட்சியங்களின் (இனப்படுகொலை) இருப்பும், வெளிப்படுத்தலும் நெருக்கடிக்குள்ளாகின்ற அரசியல் வரலாற்றுச் சூழலில் தமிழினப் படுகொலையை ஈழத்திற்கு வெளியிலிருந்து சர்வதேச பரப்பில் குறிப்பாக ஓவியப்பரப்பில் பிரதிநிதித்துவப்படுத்துவது வரலாற்றுக் கட்டாயமாகின்றது. இனப்படுகொலை மறுப்பு பிரதிநிதித்துவம் சர்வதேச ஓவிய வெளியில் மிக வீரியமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. நெருக்கீடுகள் நிறைந்த ஈழத்து ஓவிய வெளியிலும் தமிழினப் படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் வெளிவந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்திலும், புலத்திலும் தமிழினப் படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த ஓவியப்படைப்புக்கள் நீதி வேண்டிய பயணத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அவற்றின் வீரியத்தன்மை குறைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது. இலங்கையின் மறுப்பு பொறிமுறையின் வீரியத்துடன் ஒப்பிடும் போது மந்துவிலில் அமைக்கப்பட்டிருக்கும் வெற்றி கொண்ட போர் வீரனின் சிலையை செய்தது. ‘தீர்த்த’ (Theertha) என்கின்ற கலைஞர்கள் குழு, இக்குழுவே தான் 2014இல் இலண்டனில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

ஹெளசன் (Howson), பொஸ்னியாவில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்துவதற்காக சென்றிருந்தார். போர் ஓவியர்கள் (war artists) என்ற குழுமத்தினுடைய இலக்காக போரை ஆவணப்படுத்தல் இருந்து வருகின்றது. இவ்வாறு தான் ஹெளசனும் பொஸ்னியாவிற்கு அனுப்பப்படுகின்றார். ஹெளசனுடைய ஓவியப்படைப்புக்களின் தனிச்சிறப்பாக விளங்குவது, ஹெளசன், பின்வருமாறு குறிப்பிடுகின்றார், ‘எனது இலக்கு நீங்கள் பார்க்காத படிமங்களைப் படைப்பது தான். குறிப்பாக … வலுச் செறிந்த படிமங்களை உருவாக்குவது’. இதை S.C.Feintein (1999) பொஸ்னியாவில் முஸ்லிம் பெண்களை சேர்பியப் படைகள் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிண்ணனியிலிருந்து விளக்குகின்றார். ‘வன்புணர்வு, குடும்பங்களை சிதறடிப்பதற்கான, குல மரபை கட்டுடைப்பதற்கான பொறிமுறையாகவும், அதே வேளையில் வன்புணர்வுக்குட்பட்டவர்களை காப்பாற்றமுடியாத வலுவிழந்த நிலையில் முஸ்லிம் ஆண்கள் இருந்ததாகவும் சேர்பிய படைகள் கட்டமைத்தன.’ இவ்வாறான நிலை யூத இனப்படுகொலையில் ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஏனெனில் தூய ஜேர்மனிய உருவாக்கமும், பாதுகாத்தலும், யூத பெண்களுடான வன்புணர்வைத் தடுத்தது (Ibid). இருந்தாலும் Jerome Witkin Dila The beating station Berlin 1933 குறிப்பிடத்தக்கது.

வன்புணர்வை ஓவியங்களிலே எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதற்கான இலகுவான பதிலை யாரும் கூறியதாக இல்லை. வன்புணர்வை பிரதிநிதித்துவப்படுத்த முயன்ற ஓவியர்களில் குறிப்பாக, Ruben (Rape of the Daughters of Leucippius), Poussin Dila Rape of the Sabino women இரண்டு படைப்புக்களுமே வன்புணர்வை பிரதிநிதித்துவப்படுத்த முயன்றாலும், அப் படைப்புக்களில் அழகியல் மேலோங்கியிருப்பதாக S.C.Feinstein (1999) குறிப்பிடுகின்றார். ஹெளசனுடைய Croatian and Muslim, Serb and Muslim, House warming ஆகிய மூன்று ஓவியங்களுமே பொஸ்னியாவில் சேர்பிய படைகளால் வன்புணரப்பட்ட முஸ்லிம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

குற்றவாளிகளை போர் ஓவியங்களிலே பிரதிநிதித்துவப்படுத்தல் என்பது பொதுவான பண்பாக இருந்து வருகின்றது. குற்றவாளிகளை விடவும் விடுதலைக்காய், சமூக நீதிக்காய், அடக்குமுறைக்கெதிராய் போராடியவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பு ஓவியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமாக விளங்குகின்றது.

ருவாண்டா இனப்படுகொலையை மையப்படுத்தி ஓவியப்படைப்புக்கள் உருவாகின. இனப்படுகொலை அனுபவத்தின் பின்னர் சிறுவர்கள் படைத்த ஓவியங்கள் இனப்படுகொலையின் கொடூர முகத்தை பிரதிநிதித்துவப்படுத்தின. இனப்படுகொலை தொடர்பான புகைப்படங்கள் அழகுக்கலை நயத்தை அவ்வளவாக பிரதிபலிப்பதில்லை. ஆனால், இனப்படுகொலை ஓவியங்கள் அழகுக்கலை நயத்தினூடு ‘இன்மையை இருப்பதாக்க’ முயற்சிக்கின்றது. எல்லா இனப்படுகொலையிலுமே வன்புணர்வு ஓர் திட்டமிடப்பட்ட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது, சமூக கட்டுமானங்களை கட்டவிழ்ப்பதற்காகவும், பலவீனப்படுத்துவதற்காகவும், மேலாண்மை ஏகாதிபத்தியத்தை உறுதிப்படுத்துவதற்காகவும். திட்டமிடப்பட்ட வன்புணர்வை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற சிக்கல் எழுந்தது. பெரும்பாலான ஓவியர்கள் இன்மையூடாக அவ்வாறான யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த முயன்றார்கள் (Make absent present). இவ்வாறான இன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முறை, ஈழத்து ஓவியப் படைப்புக்களில் உள்ளதா என்பது தெளிவில்லை. மனித உரிமை மீறல்கள் பற்றிய ஓவியப் பிரதிநிதித்துவப் போக்கு இருந்தாலும் திட்டமிட்ட வன்புணர்வை ஓவியப்படைப்புக்கள் எவ்வாறு உள்வாங்க வேண்டும் என்ற கலைநயம் உருவாக்கப்பட வேண்டும். பின்முள்ளிவாய்க்கால் அரசியற்பரப்பில் படைக்கட்டுமானம் திட்டமிட்ட வன்புணர்வை ஆயுதமாகப் பயன்படுத்திய உண்மை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. ருவாண்டா இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஓயிவர் Jaar னுடைய படைப்புக்கள் குறிப்பிடத்தக்கன.

Michael Rothberg இனப்படுகொலையும், ஏனைய மனித படுகொலைகளையும் ஓவியப்படைப்புக்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் Michael Rothberg மனவடு யதார்த்தவாதம் என்ற கருத்தியலை அறிமுகப்படுத்துகின்றார். மேற்குறிப்பிட்ட சிந்தனைக் கருத்தியலூடு இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துவது ஓர் உத்தியாகும் எனக் கருதுகின்றார். இனப்படுகொலைக் கொடூரங்களை முழுமையாக ஓவிய பிரதிநிதித்துவத்தினூடு பிரதிபலிக்க முடியுமா என்ற வாதம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்மைக்கூடு இருப்பதாக வெளிக் கொணர்ந்த பெரும்பாலான ஓவியர்கள் பயன்படுத்துகின்ற நிலையில் தமிழினப் படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஓவிய ஊடகத்தின் நுணுக்கங்கள் தனித்துவம் வாய்ந்தனவாக இருக்க வேண்டும். அந்த தனித்துவத்தன்மைதான் அல்லது தனித்துவத்தன்மை பிரதிநிதித்துவப்படுத்தல் தான் தமிழினப் படுகொலையை ஏனைய படுகொலைகளிலிருந்து வித்தியாசப்படுத்தப் போகின்றது.

தமிழினப் படுகொலை ஓவிய பிரதிநிதித்துவப்படுத்தலில் முள்ளிவாய்க்கால் பயண அனுபவம் அகவயப்படுத்தப்பட்ட நிலையும், ஈழத்தமிழ்த்தன்மையும் முக்கிய கூறுகளாக விளங்கப் போகின்றது. முள்ளிவாய்க்கால் அனுபவத்தைத் தவிர்த்து பின்முள்ளிவாய்க்கால் ஓவியப்படைப்புக்களையும், ஓவியக் கருத்தியல்களையும் முன்னெடுப்பது அசாத்தியமே.

எழில் ராஜன்