படம்: universal-rights.org

இலங்கையில் மனித உரிமைகளை, நல்லிணக்கத்தை, பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 நாடுகள் ஆதரித்த நிலையிலும் 11 நாடுகள் எதிர்த்த நிலையிலும் 14 உறுப்புநாடுகள் வாக்களிப்பை தவிர்த்த நிலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமை பேரவை இதுவரையில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது இந்தமுறை கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்வதற்காக இலங்கை தீவிரமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளது.

மனித உரிமை பேரவையின் தீர்மானம் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது சிவில் நிர்வாகத்தினை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைளை தீவிரப்படுத்துதல், நீதித்துறையினதும் மனித உரிமைகளை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான முக்கிய ஸ்தாபனங்களினதும் சுதந்திரம் அழிக்கப்படுதல், தீவிர கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் தொடர்பிலான குற்றங்கள் போன்ற மனித உரிமை மீறல்களிற்குப் பொறுப்புக்கூறுதலில் அரசியல் குறுக்கீடுகள் மற்றும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் போன்ற எதிர்காலத்திற்கான எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானம் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன்  அறிக்கையிடவேண்டிய காலக்கெடுக்களையும் வழங்கியுள்ளது.

தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை மனித உரிமை நிலவரம் தொடர்பாக கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் இதில் உள்ளடக்கவேண்டும்.

48ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும், 51ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டும் ஒரு ஊடாடும் சூழமைவின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும்.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக 2.8 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பாரிய மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் தந்திரோபாயத்தை அடிப்படையாக கொண்டது. பல வருடங்களாக இலங்கை, நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறலிற்கு பொறுப்பேற்பதை வெற்றிகரமாக தவிர்த்துவந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் இந்தச் சிக்கல்களை கையாள்வதில் எந்தவொரு கூட்டு முயற்சியையும் முழுமையாக எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான – சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச சட்டம் மதிக்கப்படுவதற்கான வழிவகையை உருவாக்குவதற்கான வலுவான சர்வதேச தலையீட்டின் ஆரம்பத்தை இந்த புதிய தீர்மானம் குறித்து நிற்கின்றது.

இலங்கையின் அரசியல் அமைப்புமுறை மற்றும் நீதி வழங்கும் முறையை உள்ளடக்கிய நிர்வாக முறையில் ஏதோ பெருந்தவறு நிகழ்ந்துள்ளது என்பது குறித்த முழுமையான ஒருமித்த கருத்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என்ற பொதுவான கரிசனைகள் காணப்படுகின்றன. அதேவேளை, இந்த அரசாங்கத்திடமிருந்தும் அரசியல் கட்டமைப்பிடமிருந்தும் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வை காண்பதற்கான சாதகமான நடவடிக்கையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்ற கருத்தும் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இந்த விவகாரங்கள் குறித்த உரையாடல்களில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போதே இந்த ஆபத்தான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்ற தொலைநோக்கினை உருவாக்க முடியும்.

தற்போது தீர்வு அவசியமாகவுள்ள – கடுமையான நெருக்கடிகளிற்கான தீர்வை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு இந்தத் தீர்மானம் வழிவகுக்கும். பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளிற்கு எவ்வாறு தீர்வை காணமுடியும் என்ற விவாதங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் சுய தணிக்கை உட்பட அனைத்து வகையான தணிக்கைகளையும் தோற்கடிப்பதற்கு இந்தத் தீர்மானம் ஒரு வழியாக அமையலாம். ​

இந்தத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் மீது பெரும் பொறுப்புகளைச் சுமத்துகின்றது. இதற்கு முன்னர் சந்தித்திராத மிக மோசமான நெருக்கடியை அவர்களது தேசம் இப்போது எதிர்கொண்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான நன்கு ஆராயப்பட்ட தந்திரோபாயங்களிற்கான வாய்ப்பாக காணப்படுகின்றது. இலங்கை மக்களின் எதிர்வினையே இந்தத் தீர்மானம் எவ்வளவு தூரத்திற்கு பலன் அளிக்கும் என்பதை தீர்மானிக்கும்.

பசில் பெர்ணான்டோ

கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் UNHRC Resolution: A Ray of Hope for Sri Lanka என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.