பட மூலம், The Hindu
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2018 பெப்ரவரியிலிருந்து 2020 ஜனவரி வரை சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்படும் முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் தொடர்பாக தேசிய ரீதியில் அதன் முதலாவது ஆய்வை நடத்தியது. விசேடமாக, கொவிட்-19 பரவுதலின் பின்னணியில் ஏப்ரல் 2020இல் அநுராதபுரம் விளக்கமறியல் சிறைச்சாலையிலும் மற்றும் கடந்த வாரம் மஹர சிறைச்சாலையிலும் நிகழ்ந்த கைதிகளின் அமைதியின்மைகளைக் கவனத்தில் கொள்கையில், அறிக்கையின் கண்டறிதல்கள் மிகவும் முக்கியம் கொண்டவையாக உள்ளன.
முப்பத்தி மூன்று பேர் வரையானவர்கள் கொண்ட ஓர் அணியுடன், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழான இருபது சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்தும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் கேள்விக் கொத்துகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாக தரவுகள் திரட்டப்பட்டு, இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர், சட்ட மா அதிபர் உட்பட, சிறைச்சாலை தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய அரச அதிகாரிகளுடனும் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கைதிகளின் நடத்துதல் மற்றும் நிலைமைகள்
சிறைச்சாலைத் திணைக்களத்தின் 2020 புள்ளிவிபரங்களின் படி, சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளவை விட 107% சன நெருக்கடி கொண்டவையாக உள்ளன. புள்ளிவிபரங்களிற்கமைய, மிகவும் அளவுக்கதிகமான ஆட்தொகையுடன் கூடியதான இட நெருக்கடியில் கைதிகள் வாழ்கின்றதுடன் இடவசதியின்மையால் இரவில் தூங்குவதற்கு கூட தங்களுடைய சந்தர்ப்பம் வரும் வரை விழித்திருப்பது1 அல்லது கழிவறைகளில் அவர்கள் தூங்குவதை ஆய்வு கண்டறிந்தது. “செமன் மீன் அடுக்குதல்” என கைதிகள் இதனை விபரித்தனர், பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் சிறை வார்டின் நீளத்திற்கு ஒருவரின் முதுகிற்கு மற்றையவர் முகம் காட்டியவாறு, பக்கவாட்டாக இருக்கச் செய்யப்பட்டதுடன் அந்த நிலையிலேயே தூங்குவதற்கும் தேவைப்படுத்தப்பட்ட ஒரு முறையை, இது குறிப்பிட்டது.
சிறைச்சாலைக் கட்டடங்கள் பெரும்பாலும் உடைந்து போன கட்டமைப்புகள் மற்றும் ஒழுகும் கூரைகள் என மிகவும் காலங் கடந்த பழமையானவையாக இருந்ததுடன், அவை கைதிகளின் உயிர்களுக்கு தொடர்ச்சியாக இடரை ஏற்படுத்தின. இந்தக் கட்டடங்கள் இயற்கை அனர்த்த நிலைமைகளிற்கு நின்று பிடிக்கும் தாங்குதிறன் அற்றவையாக இருந்ததுடன், ஏதேனும் அவசர நிலைமைகளைக் கையாள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ முறைமைகள் எதுவும் அங்கு நடைமுறையில் இல்லாதிருந்தது. ஓர் இயற்கை அனர்த்த சந்தர்ப்பத்தில், வயது முதிர்ந்த மற்றும் விசேட தேவைக் கொண்ட கைதிகள் தங்களைப் தற்காத்துக் கொள்வதற்கு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க முடியாதவர்களாக இருப்பதினால் அவர்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்கும் குழுக்களாக உள்ளனர்.
அளவிற்கு மீறிய சன நெருக்கடி காரணமாக, சுகாதார வசதிகள் மற்றும் நீர் வழங்கல்கள் என்பன கைதிகளின் தேவைகளைத் திருப்தி செய்வதற்குப் போதுமானவையல்ல. இரவு வேளையில், கைதிகள் அவர்களது அறைகளிற்குள் வைத்து பூட்டப்படுவதினால், அறைக்கு வெளியேயுள்ள கழிவறைக்கு செல்வதற்கு அவர்கள் வழியற்றவர்களாக உள்ளனர். இதன் விளைவாக, கைதிகள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பிளாஸ்டிக் பைகள் அல்லது வாளியை உபயோகிக்க வேண்டுமென்பதுடன் பல கைதிகள் ஒரே அறையில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதே பிளாஸ்டிக் பை/ வாளியை உபயோகிப்பதற்கு வேண்டி உள்ளது. வெலிக்கடை சிறையிலுள்ள ஒரு கைதி தெரிவிக்கையில், “இரவில் எங்களுக்கு மலம் கழிக்க வேண்டி வந்தால், நாங்கள் அதனை ஒரு ஷொப்பிங் பையில் இருந்து அதனைக் கட்டி வைத்து விடுவோம். காலையில், அதனை கழிவறையில் வீசி விடுவோம். இரவு முழுவதும் துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப நாட்களில் எனது அறையில் பதினொரு பேர்கள் இருந்தனர்” என்றார்.
மோசமான ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலைமை காரணமாக, எலிகள், ஈக்கள் மற்றும் நுளம்புகள் போன்ற பெருமளவிலான பீடைகள் சிறைச்சாலைகளில் காணப்படக் கூடியதாக இருந்தது. சிறைச்சாலையில் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு உண்பதற்கு முடியாத சுவையற்றதாகவும் சில சமயங்களில் பழுதடைந்தவையாகவும் இருந்தமை அவதானிக்கப்பட்டது. ‘உதவாதது’, ‘தண்ணீர் தன்மை”, ‘உப்பு அல்லது உறைப்பு இல்லாதது” மற்றும் “துர்நாற்றம் பிடித்தது’ என்பன சிறைச்சாலையில் அளிக்கப்படும் உணவை விவரிப்பதற்கு உபயோகிக்கப்படும் வார்த்தைகளாகும். சிறைச்சாலைச் சமையலறைகளின் தரைகள் எப்பொழுதும் ஈரமானவையாகவும், சேறு படிந்தவையாகவும் மற்றும் ஈக்கள் நிறைந்தவையாகவும், அவ்வாறே எலிகள், பூனைகள் ஏராளம் நடமாடுகின்றவையாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டது. பொதுவாக சமையலறைகளில், சமைத்த உணவுகள் மூடி வைக்கப்படாமல், திறந்து வைத்திருக்கக் காணப்பட்டதுடன், அவை ஈக்களால் மொய்க்கப்படவும், எலிகள் அணுகவும் மற்றும் தூசு, அழுக்குகள் போன்றவை உணவிற்குள் விழும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கக் காணப்பட்டன.
சுகாதார வசதிகளை சுத்தமாக வைத்திருக்கவும் அல்லது சவர்க்காரம் மற்றும் சுகாதாரத் துவாய்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களை வழங்குவதற்குமான ஒரு நிதி ஒதுக்கீட்டை சிறைச்சாலை கொண்டிருப்பதில்லை. இதனால், கைதிகள் தங்களுக்கான தனிப்பட்ட பொருட்களோடு அவற்றை வழங்குவதற்கும் தங்களின் குடும்பங்களின் மீதே தங்கியுள்ளனர். சிறைச்சாலையிலிருந்து தொலை தூரங்களிலுள்ள கைதிகளின் குடும்பங்களிலிருந்து அவர்களைப் பார்ப்பதற்கு அரிதாகவே எவரும் வருவதினாலும், அல்லது நெருக்கமான குடும்ப உறவுகள் இல்லாத கைதிகள், இவ்வாறான அடிப்படை பொருட்களுக்கு வழியற்றவர்களாக உள்ளனர். சிறையிலுள்ள வெளிநாட்டவர்கள், உள்ளூர் சிறைக் கைதிகளுக்கு துணி துவைத்துக் கொடுத்தல், அவர்களது உணவுப் பாத்திரங்களை கழுவி வைத்தல் போன்ற பணிகளைச் செய்து கொடுத்து, பதிலுக்கு இந்தப் பொருட்களுக்கான ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையைத் தவிர ஏனைய சிறைச்சாலைகளில் தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தினால், கைதிகள் தங்களது குடும்பங்கள் மற்றும் சட்டப் பிரதிநிதிகளுடன் தொடர்பைப் பேணுவதற்கு முடியாதுள்ளது. வெளியுலகுடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம் கடிதங்கள் அல்லது நேரடியான தனிப்பட்ட விஜயங்கள் மட்டுமே. கைதி ஒருவர் தெரிவிக்கையில், “நாளின் எஞ்சிய நேரம் முழுவதும் நாங்கள் இங்கே இருந்து கொண்டு கவலைப்படுவோம். நான் எனது குடும்பத்தைப் பற்றியும், பிள்ளைகளுடன் பேசமுடியாமல் இருப்பது பற்றியும் கவலைப்படுவேன்” என தங்கள் குடும்பங்களிலிருந்து நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமான ஆதங்க உணர்வைக் குறிப்பிட்டார். மேலும், சிறையில் உள்ளவர்களுக்காக தினமும் அதிக எண்ணிக்கையில், குடும்ப விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதினால், ஒவ்வொரு விஜயமும் ஒரு சில நிமிடங்களிற்கு மேல் நீடிக்காது என்பதுடன் சன சந்தடியுடனான சந்திப்புக்கான அறை, குடும்ப அன்பைப் பரிமாறவும் மற்றும் உரையாடல்களை நடத்துவதற்கும் உகந்த இடமாக இருப்பதில்லை. சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்படும் சமயத்தில், வெளியுலகுடன் தொடர்பின்றியும் மற்றும் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கு வழியின்றியும் உள்ள கைதிகள், அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், சமுதாயத்துடன் மீண்டும் ஒருங்கிணைந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வர்.
சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள், தேவையான தரத்தை விட மிகவும் கீழ்மட்டத்திலுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலைகள் விசேடமான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள் என்பன கிடைக்கப் பெறாதவையாக உள்ளதுடன், அவ்வாறான மருத்துவத் தேவை கொண்ட கைதிகள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக வெளியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட வேண்டியுள்ளது. கைதிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதை விட, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்வது முன்னுரிமை உடைய விடயமாதலால், கைதிகளை வைத்தியசாலைகளுக்கு கூட்டி வருவதில் போக்குவரத்துப் பற்றாக்குறையும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், கைதிகள் தங்களது சிகிச்சை தினங்களையும் தவறவிட வேண்டி ஏற்படுகிறது. வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகள் தெரிவிக்கையில், தங்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பஸ்ஸுக்காக கூட்டிச் சென்று, நாள் முழுவதும் பஸ் வண்டிக்காக காத்திருந்து, பின்னர் பஸ்ஸில்லாது நாள் முடிவில் சிறை வார்டுகளுக்கு தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி இருந்த சந்தர்ப்பங்கள் பற்றியும் குறிப்பிட்டனர்.
சிறைச்சாலை வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்கள், கைதிகள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் மீது பாரபட்சம் காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றதுடன், அது கைதிகள் மருத்துவ சிகிச்சைக்கு நாடுவதை பின்னிற்கச் செய்கிறது. தற்கொலை எண்ணங்களுடன் எங்களை நாங்களே காயப்படுத்திக் கொள்ளும் மனப்போக்குகளுடன் இருப்பதை கைதிகள் ஒப்புக் கொண்டமை, சிறைக் கம்பிகளின் பின்னால் அவர்களுக்கு உள்ள மிகுந்த மனவழுத்தத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஆய்வில், தங்களின் நாளாந்த பணிகள் மற்றும் தினசரி செயற்பாடுகளில் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் துயரம் என்பவற்றை தாம் அனுபவித்ததாக 60% ஆன ஆண் கைதிகளும் 55% ஆன பெண் கைதிகளும் குறிப்பிட்டனர்.
சிறைச்சாலையில் புனர்வாழ்வு
தவறு செய்தவர்களின் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்ட போதிலும் கூட, சிறைச்சாலைகளில் தற்போதைய முறையிலான புனர்வாழ்வு குறித்த குறிக்கோளை அரிதாகவே பூர்த்தி செய்கிறது. உதாரணத்திற்கு, கைதிகள், அவர்களின் தண்டனைக் காலம் முழுவதிலும் கடினமான உடலுழைப்பை வேண்டுகின்ற பணிகளிலேயே அநேகம் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதுடன், இடைநின்ற தங்களது பொதுக் கல்வியைத் தொடர்வதற்கு அல்லது தொழில் திறன்களைக் கற்பதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதில்லை. குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலையில் வேலை செய்வதற்காக நாளொன்றுக்கான கொடுப்பனவாக ரூ. 1 மாத்திரமே அளிக்கப்படுகிறது. இக்கொடுப்பனவு வீதங்கள் பல தசாப்தங்களாக மறுசீரமைப்புச் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, ஒரு வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கான வழி வகையின்றி, கைதிகள் சமுதாயத்தில் மீள விடுவிக்கப்படும் போது, அவர்கள் சிறைக்கைதி என்ற அவப்பெயரினால் துன்புறுவதுடன் சமுதாயத்தில் மீளவொருங்கிணைவதற்கு முடியாதுள்ளனர். இது பயனுறுதியான ஒரு மீளவொருங்கிணைதலைத் தடுப்பதுடன் மீளவும் தவறிழைப்பதற்குப் பொருத்தமான நிலைமைகளை உருவாக்குகிறது. சிறையிலுள்ள ஒருவர் குறிப்பிடுகையில், “தவறிழைப்பவர்கள் நன் மக்களாக மாறுவதற்காகவே சிறையடைக் கப்படுகின்றனர். ஆனால் சிறைச்சாலைகளில் அது போன்ற எதுவும் நடப்பதில்லை. தவறொன்று புரிந்தமைக்காக சிறையடைக்கப்படும் நபர்கள், தவறான மேலும் பத்து செயல்களை அல்லது விடயங்களைக் கற்றுக் கொண்டு வெளியே செல்கின்றனர்” என்றார்.
முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒரு முறைமை செயலற்ற நிலையிலுள்ளதுடன், கைதிகளின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்வதற்கு ஒரு நியம முறையிலான தரம் இல்லாமை இதற்கான ஓரளவுக் காரணமாக அமைய, முன்கூட்டிய விடுதலை தொடர்பான அனுமதியின் வாக்குறுதி, கைதிகள் தங்களை சீர்திருத்திக் கொள்வதற்கு ஊக்குவிப்பதில்லை. மரண, ஆயுள் மற்றும் நீண்டகால சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக் காலங்களின் குறைத்தலும் கூட தனிப்பட்டமைந்ததாகவும் வெளிப்படையான தன்மையற்றும் உள்ளமை, கைதிகளின் விடுதலை தண்டனைக் குறைப்பு என்பவற்றில் ஜனாதிபதியினால் தன்னிச்சையான முடிவுகள் மேற்கொள்ளப்படும் துரதிர்ஷ்ட நிலைகளுக்கும் இட்டுச் சென்றன. புனர்வாழ்வுக்கான ஒரு ஊக்குவிப்பாக முன்கூட்டிய விடுதலைக்கான வாய்ப்பு அற்ற, நீண்டகால சிறைவாசம், ஏற்கனவே அளவுக்கு மீறிய செலவீனங்களுடன் உள்ள சிறைச்சாலை முறைமை மற்றும் வரி செலுத்துவோர்களுக்கு மேலும் சுமையாக அமைவது மட்டுமேயன்றி, சமுதாயத்தில் குற்றங்களைத் தடுப்பதற்கு எந்த நன்மையையும் அளிக்கவில்லை.
கைதிகளில் பாதிப்புறு நிலையிலுள்ள வகையினர்
தங்களின் தண்டனைக் காலத்திற்கு ஒரு முடிவுத் திகதியின்றி, வரையறையற்ற காலத்திற்கும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிப்பதினால், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், கூடுதல் பாதிப்புறும் நிலையிலுள்ளவர்களாக இருப்பதை ஆய்வு கண்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடங்கள் மட்டுமே அவர்களது அறை/ வார்டுகளுக்கு வெளியே கழிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அர்த்தமுள்ள வகையிலான நாளாந்த நடவடிக்கையின்றியும் மற்றும் தமது குடும்பங்களிலிருந்து தொலைவிலிருப்பதும் இணைந்த காரணங்கள் மூலமான தாக்கங்கள், அவர்களது மனம் மற்றும் உடலாரோக்கியங்களை மோசமாகப் பாதிக்கின்றன. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், தாங்கள் ‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை’ என உணர்கின்றனர். அதாவது அவர்கள் ஏற்கனவே முடிவில்லா சிறைவாசம் அனுபவிக்கின்றனர் என்பதுடன் இதற்கு மேலும் தண்டித்து விட முடியாது என்பதால் சிறையில் நல்ல முறையில் நடந்தகொள்வது என்பது அவர்களை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக அமைவதில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இவ்வாறான நிலைமைகளின் கீழ் நீண்ட காலம் சிறைவாழ்வது கொடூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவாக நடத்துதல் மற்றும் தண்டித்தல் என்பவற்றைக் கட்டமைப்பதால் இலங்கையில் மரண தண்டனை ஒழிக்கப்படல் வேண்டுமென்பதற்கான ஒரு வலுவான நிலைப்பாட்டை சிறைச்சாலைகள் தொடர்பான இந்த ஆய்வு உருவாக்குகிறது. மேலும், இவ்வறிக்கை மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விபரித்த சட்ட நடவடிக்கைகளின் அனுபவங்கள் மற்றும் குற்றவியல் நீதி முறைமையிலுள்ள எண்ணற்ற குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது. இது, உலகிலுள்ள எந்த நீதி முறைமையும் அப்பழுக்கற்றவை எனக் கூறமுடியாதென்பதால் மாற்றமுடியாத சட்டத் தீர்ப்புகள் ஆட்களுக்கு அளிக்கப்படுதல் கூடாதென்ற எண்ணப்பாட்டை வலுவுள்ளதாக்குகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மிக நீண்ட ஒரு காலத்தை விளக்கமறியலில் கழித்துள்ளனர் . பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 கைதிகள் 10 இலிருந்து 15 வரையான வருடங்கள் விளக்க மறியலில் கழித்துள்ள வேளையில், இச்சட்டத்தின் கீழ் 29 கைதிகள் 5 இலிருந்து 10 வருடங்கள் வரையான காலத்தை விளக்க மறியலில் கழித்துள்ளனர். அரசியல் சூழ்நிலை மாற்றங்களைப் பொறுத்து ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மோசமான நடத்துதல் மற்றும் பாரபட்சங்கள் என்பவற்றுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்குபவர்களாக உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள கைதிகள், தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், தாங்கள் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாகவும் மற்றும் அவர்களுக்கு எதிரான பிரதான சான்றாக உள்ள, ஒப்புதல் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சிறுவர்களாக வகைப்படுத்தப்படக்கூடிய பதினைந்து வயதிற்கும் பதினேழு வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களான இளம் கைதிகள், இருபது – இருபத்திரண்டு வயதுடைய ஆட்கள் வைத்திருக்கப்படும் வார்டுகளில், வயது வந்தோர்கள் தங்கும் சிறை வார்டுகளில் அநேகம் தங்க வைத்திருக்கக் காணப்பட்டனர். ஓர் இளம் வயதில் சிறைவாசம் அனுபவிக்கும் அவப்பெயர் மற்றும் அவர்களது கல்வி முயற்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலான இடையூறு என்பன அவர்களின் வாழ்க்கையில் வாய்ப்புகளை சிதைப்பதற்கு அவ்விளம் நபர்களை இட்டுச் செல்லாம். காவலிலற்ற முறைமைகளின் தெரிவிற்குப் பதிலாக, இவ்வாறாக, இளம் நபர்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்வதன் மூலம், அவப்பெயர், சிறைவாசம் மற்றும் குற்றம் என்கின்ற ஒரு சுழற்சி வட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
வெளிநாட்டுக் கைதிகளுக்கு உள்ளூர் மொழி தெரியாததினாலும் அவர்களது குடும்பங்களிலிருந்து முற்றிலுமாக தொடர்பற்று இருப்பதினாலும் அவர்களும் கூட பாதிப்பிற்கான வாய்ப்பு உள்ளவர்களாக உள்ளனர். வெளிநாட்டுக் கைதிகளை அவர்களது நாட்டுக்கு மீள அனுப்பி வைப்பது இயல்பாகவே ஆட்சி நிர்வாகமுறை சார்ந்ததுடன் அவர்களின் தூதரகப் பிரதிநிதிகளுடனான தொடர்பும் கூட முறையான தொடர்பாடல் முறைமைகள் இல்லாமையால் மட்டுப்பாடு கொண்டுள்ளது. சிறைச்சாலை முறைமையும் கூட, தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, சுகாதாரத் துவாய்களை வழங்குதல் போன்ற குறிப்பான தேவைகளுக்கு இடமளிப்பதில்லை என்பதுடன் அவர்களின் புனர்வாழ்வுக்கு, தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் உருவாக்குவதல் போன்ற ஒரே மாதிரியான திட்டங்களுக்கு அப்பால் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளையே வழங்குகின்றன.
வன்முறையின் உபயோகம்
ஆய்வுக் குழு, விஜயம் செய்த எல்லா சிறைச்சாலைகளிலும் ஒழுக்கம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வன்முறை உபயோகிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. கைதிகள், தாங்கள் மட்டைகள் மற்றும் குண்டாந்தடிகள் உபயோகிக்கப்பட்டுத் தாக்கப்பட்டதோடு வார்த்தை மூலமான துஷ்பிரயோகங்களுக்கும் ஆளானதாகத் தெரிவித்தனர். ஒரு கைதி குறிப்பிடுகையில்,
“அவர்கள் எங்களை நாய்கள் மாதிரி நடத்தினர்” என்றார்.
மற்றொரு கைதி தங்கள் மேல் இழைக்கப்படும் வன்முறைகளுக்கான ஓர் உதாரணத்தைக் கூறுகையில்,
“சிறை உத்தியோகத்தர்கள் வரிசையில் நிற்பதற்கு காலையில் கூப்பிடும் போது, யாரேனும் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்து பின் விழித்தெழுந்து அவசரமாக தனது மேற்சட்டையை வழியில் அணிந்து கொண்டு வந்தால், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை தனியே ஒரு பக்கத்திற்கு இழுத்துச் சென்று தடியால் அடித்து, அவரின் முதுகில் அடையாளம் ஏற்படுத்துவர்” எனத் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை, கைதிகள் மீதான வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மோசமானதொரு இடம் எனத் தெரிவிக்கப்படுகிறதுடன் “கொலைக்களம்” மற்றும் “தண்டனைச் சிறை” ஆகிய சொற்கள் அச்சிறைச்சாலை பற்றி விபரிப்பதற்கு பாவிக்கப்படுகின்றன.
வன்முறைகளுக்குப் பொறுப்பான சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றதுடன், இது வன்முறை மற்றும் குற்றவிலக்களிப்புக் கலாச்சாரம் என்பவற்றுக்கு இடமளிக்கின்றது. சிறைச்சாலைகள் மீது பயனுறுதியான மற்றும் சுயாதீனமான மேற்பார்வை இல்லாமையினால், பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினால் கைதிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்வதைத் தடுக்கின்றன. மது மற்றும் போதை மருந்து பாவனையால் துன்புற்ற நிலையிலுள்ள கைதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போதும் இரவு வேளையில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக கைதிகளை மாற்றுவதிலான தாமதங்களின் போதும் சிறையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களாக நோக்கப்படுகிறது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களது பணி நிலைமைகள்
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடனான நேர்காணல்கள், அவர்கள் பணி செய்யும் உயர் இடரைக் கொண்ட பணிச் சூழல், அவர்களுக்கு கொடுப்பனவு செய்யப்படும் குறைந்த சம்பளங்கள் மற்றும் அதிக அளவுகளிலான வேலைப்பளு மற்றும் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான உளச்சமூக ரீதியான அழுத்தம் என்பவை, அவர்களின் உடல் ரீதியான வன்முறை மற்றும் வார்த்தை துஷ்பிரயோகப் பாவனையை மோசமாக்குவதை வெளிப்படுத்தின. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுபவிக்கப்படும் மன அழுத்த மட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, 31.1% ஆன உத்தியோகத்தர்கள் உடல் உழைப்பினாலும், 28.6% ஆன உத்தியோகத்தர்கள் மன ரீதியான களைப்பு, மற்றும் 37.8% ஆன உத்தியோகத்தர்கள் அவர்களது சொந்த வாழ்க்கையில் குறைவான அடைதல் மட்டங்களால் பாதிப்படைந்திருந்ததை வெளிப்படுத்தியது.
ஒவ்வொரு சிறைச்சாலையிலும், நிர்வாகம் கடுமையான ஊழியர் பற்றாக்குறையைக் கொண்டிருந்ததுடன் அதனால் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கும், அநேகமான சந்தர்ப்பங்களில் மேலதிக ஊதியமின்றி மேலதிக நேர வேலை செய்ய வேண்டியவர்களாக இருந்தனர். சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கூறுகையில், “உத்தியோகத்தர்கள் விடுமுறையில் செல்வதற்கு முடியாது. உத்தியோகத்தர்கள் இன்று இரவுக் கடமை செய்து முடித்துவிட்டு அடுத்த நாள் காலையில் கைதிகளுக்குப் பாதுகாப்பாக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். நாங்கள் கடுமையான அழுத்தங்களின் கீழ் வேலை செய்கிறோம். மனித ரீதியாக இதனைச் செய்வது முற்றிலும் சாத்தியமற்றது, கோபம் வராது மற்றும் அழுத்தங்களுக்கு உட்படாது வேலை செய்வதற்கு – நாங்கள் ஒரு புனிதராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதனால், சிறைச்சாலை உத்தியோகத்தர்களது சம்பளக் கட்டமைப்பு அவர்களது உயர் இடர்நிலை கொண்ட பணியைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படல் வேண்டும் என்பதுடன் சிறைச்சாலை முறைமையை மீள்கட்டமைக்கும் ஏதேனும் முயற்சிகள் புனர்வாழ்வின் குறிப்பிட்ட குறிக்கோளுக்காக ஊழியர்களின் பற்றுறுதியை உறுதிப்படுத்துவதையும் உள்ளடக்குதல் வேண்டும்.
குற்றவியல் நீதிச் செயல்முறை
குற்றவியல் நீதிச் செயல்முறைக்கு முக்கியமான சீர்திருத்தங்களின்றி தண்டனை முறைமை மீள் கற்பனை செய்யப்படுவதற்கு முடியாது. பொலிஸ் காவலில் உள்ளபோது கைதின் பின்னர் ஒப்புதல் வாக்குமூலங்கள்/ சான்றுகளைத் திரட்டுவதற்கு வன்முறை உபயோகிக்கப்படுவதாக கைதிகள் தெரிவித்தனர். நீண்ட தாமதமான சட்டச் செயல்முறைக்கான காரணங்களிலொன்று பொலிஸ் புலன்விசாரணைகளிலான தாமதம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களம் தரப்பிலானவையாகும். குறிப்பாக, சிறிய அளவில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள், தண்டனையாக விதிக்கப்படும் சிறிய அபாரதத் தொகை கொண்ட அக்குற்றங்களுக்காக பல மாதங்களை விளக்கு மறியலில் கழிக்கின்றனர். இது சட்ட உதவியின்மையால் மேலும் மோசமாக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் சனநெருக்கடி ஏற்படுவதற்கு நேரடியாகப் பங்களிக்கின்றது.
சிறிய குற்றங்கள் புரிந்தவர்கள் மற்றும் இளம் நபர்களுக்கு சிறைச்சாலை முறைமையிலிருந்து வேறுபட்டதான, சமூக அடிப்படைச் சீர்திருத்தம் போன்று, தண்டனைக்காக கட்டுக் காவலில்லாத மாற்றீடுகளின் உபயோகம் சிறைச்சாலைகளில் சன நெருக்கடியை குறைக்க உதவக் கூடிய மற்றொரு காரணியாகும். இது, சிறைச்சாலை முறைமையின் சுமையைக் குறைக்கின்றதுடன், குடும்பத்திலிருந்து தொலைவில் உள்ளதினால் குடும்பத்திற்கு ஏற்படும் வருமானமிழப்பு மற்றும் சிறைப்படுத்தப்பட்டதினால் ஏற்பட்ட அவப்பெயர் உட்பட, தடுத்து வைத்திருப்பர்களின் சிறை வாசத்தின் எதிர்மறையான செலவுகளையும் கூட குறைக்கிறது. சிறிய குற்றங்களைப் புரிந்த, ஐந்து வயதிற்கும் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சிறைவாசம் அனுபவிப்பதிலிருந்தும் மற்றும் குற்றமேதும் அறியாத அவர்களது பிள்ளைகளும் தாய்மார்களுடன் சிறை வைக்கப்படுவதும், கட்டுக்காவலற்ற முறைகளை உபயோகிப்பதன் மூலமாகத் தவிர்க்க முடியும்.
நீதித்துறை முறைமையால் வசதிவாய்ப்பற்ற பின்னணிகளிலிருந்தான ஆட்கள் மேலும் ஓரங் கட்டப்படுகின்றனர். குற்றங்களைத் தடுப்பதற்குப் பதில், சிறைச்சாலை முறைமை நபர்களை வறுமை மற்றும் விளிம்புநிலைப்படுத்தப்படல் எனும் ஒரு வட்டத்திற்குள் தள்ளிவிடுகிறது. இவ்வறிக்கையின் கண்டறிதல்கள் பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறைச்சாலை முறைமை மீள்கட்டமைக்கப்பட வேண்டிய தேவைகளை உறுதியாக முன்வைக்கிறது. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவாறு, குற்றவியல் நீதித்துறையின் ஏதேனும் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் சரி செய்யும் செயல்முறை ஆகியவை, குற்றமிழைத்தவர்களின் நடத்தை மற்றும் புரியப்பட்ட குற்றம் என்பவை எவ்வாறிருப்பினும், அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதற்கு உரித்தானவர்கள் என்பதை மனதில் கொண்டு, அவை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
ஆசிரியர் குறிப்பு: சிறைச்சாலைகள் பற்றிய தேசிய ரீதியிலான ஆய்வறிக்கை தொடர்பாக அம்பிகா சற்குணநாதனால் வழங்கப்பட்ட சாரம்சமே இங்கு தரப்பட்டிருக்கிறது.