1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான். அதிகமான குடும்பங்கள் 500 ரூபா பணத்துடன் சில உடுதுணிகளை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. சில குடும்பங்கள் வெறுங்கையுடன் வெளியேறியிருந்தன. தென் மாகாணத்தின் எல்லையினை நெருங்கும் வரை போக்குவரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் பல நாட்கள் நடந்தே ஊரைக் கடந்திருந்தனர். இற்றைவரை எம் சமுதாய மக்களின் துன்பங்களும் துயரங்களும் அடையாளம் காணப்படவுமில்லை, ஆற்றப்படவுமில்லை. மூன்று தசாப்த காலமாக உள்ளூர்க் குடியிருப்பாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் சர்வதேசக் கொடையாளர்களும் தெற்கு முஸ்லிம்களும் காட்டிய புறக்கணிப்பும் புரிதலின்மையும் நம்புவதற்கு யாருமில்லையே எனும் உணர்வினை இந்த வடபுல மக்களின் உள்ளங்களில் விதைத்துவிட்டன.
அடுக்கடுக்காய்த் தவறுகள்
இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்டதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தபோதும், 2002 முதல் 2005 வரை நடந்து முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடயம் தொடர்பில் எதுவும் கூறாது காத்த மௌனம் கயமையின் உச்சம் என்பது சொல்லித்தெரியவேண்டிய ஒன்றல்ல. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நோர்வே நாட்டுத் தரகர்கள் உள்ளிட்ட எந்தப் புண்ணியவானும் வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழிடங்களுக்குக் கூட்டாகத் திரும்பிச் செல்வதற்கான உரிமை பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனை என்பதைக் கருத்திற்கொள்ளவே இல்லை. 2002ஆம் ஆண்டு சமாதானச் செயன்முறையின் போது தம் சொந்த மண்ணில் குடியேறச் சென்ற உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் திரும்பிச் சென்றமை மிகக் குறைவாகக் காணப்பட்டமைக்கான பிரதான காரணம் இதுவேயாகும்.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமிக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாக்குறுதியளித்தார். 2009 இல் யுத்தம் முடிவடைந்தமையினை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “வடபுல முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களின் வாழிடங்களை விட்டுப் பலவந்தமாகப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோது அவர்களின் இடப்பெயர்வினைத் தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை. இப்போது எனது அரசாங்கம் பயங்கரவாதத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள காரணத்தினால், 2010 மே மாதமளவில் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.” அவரின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்திற்குப் பின்னரான தேசத்தினைக் கட்டியெழுப்பும் துரித செயன்முறையில் வடபுல முஸ்லிம்களின் உரிமைகளை முன்னுரிமைப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறிவிட்டார்.
களத்திலே, யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வடக்கு முஸ்லிம்கள் தம் சொந்த வாழிடங்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்ததும் பதற்ற நிலை உருவாக ஆரம்பித்தது. வன்னியினுள் பல்வேறு இடப்பெயர்வுகளை அனுபவித்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களைப் போலல்லாது பலவந்தப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் யுத்தப் பிரதேசங்களிலுள்ள தங்களின் இடங்களில் இருந்து விலகி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் தமிழர்கள் அனுபவித்த பயங்கரமான இழப்புக்களையும் அனுபவிக்காதவர்களாக இருந்தனர். இதனால் முன்னர் ஒன்றிணைந்து வாழ்ந்த சமுதாயங்கள் வளங்களுக்காகப் போட்டிபோடத் தொடங்கி அவநம்பிக்கையுடன் வாழும் நிலை உருவானது.
2015 முதல் 2019 வரையான நிலைமாறுகால நீதிக் காலப்பகுதியின் போது சூழ்நிலை தொடர்ந்தும் மாறாமலேயே இருந்தது. முன்மொழியப்பட்ட பொறிமுறைகள் மூலம் வடக்கு முஸ்லிம்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கான ஆரம்பகால முயற்சிகள் கைவிடப்பட்ட ஜ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட OISL விசாரணை, 2002 பெப்ரவரி யுத்தநிறுத்தம் முதல் 2011 வரையான காலப்பகுதியினை மட்டுமே ஆராய்ந்தது. ஆனால், 1990 இல் நடத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் வெளியேற்ற நிகழ்வு போன்ற முன்னைய குற்றச் செயல்களை ஆராயாமல் விட்டுவிட்டது. மனித உரிமை கவுன்சில் பிரகடனமான 30/1 இன் மூலமாக நிலைமாறுகால நீதிக்கு இலங்கை அரசாங்கம் கடப்பாடு கொண்டபோதும் இவ்வாறான முன்னைய நிகழ்வுகளைத் தீர்த்துவைக்கக் கடப்பாடு கொள்ளவில்லை. நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசிப்புச் செயலணியினால் நடத்தப்பட்ட பொது விசாரணையில் முனைப்பான வகிபாத்திரத்தினை வகிக்கும் பொறுப்பினை வடக்கு முஸ்லிம்கள் தம் கடமையாய் வரித்துக்கொண்டனர். ஆனால், கிடைத்த பயன் எதுவுமில்லை. இதன் காரணமாகத் தற்போதைய இழப்பீடு வழங்கும் கொள்கை வடக்கு முஸ்லிம்களின் இழப்பினை எந்த வடிவிலும் தனித்துவமாக அங்கீகரிக்கவில்லை.
இன்றைய சூழ்நிலை
30 வருடங்களாக ஏற்கனவே துயர வாழ்வு வாழ்ந்து வரும் வடக்கு முஸ்லிம்கள் தங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படும் நிகழ்விற்குத் தற்போது முகங்கொடுத்து வருகின்றனர். 2019 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்காகப் புத்தளத்தில் இருந்து மன்னாரிற்குச் சென்றவர்கள் மீது அன்றைய தினம் காலையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இவர்கள் திரும்பிச்சென்ற பஸ்ஸினைப் பொலிஸார் செட்டிகுளத்தில் அன்று பின்மதியம் பல மணி நேரம் தடுத்துவைத்தனர். அவர்களைப் பொலிஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கு உடன் அனுப்பிவைக்குமாறு தேர்தல் ஆணையாளர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பெலிஸார் புறக்கணித்தனர். இறுதியாக பஸ்கள் விடுவிக்கப்பட்டபோது மதவாச்சியில் வைத்து சிங்களக் காடையர்கள் பஸ் மீது தாக்குதல் நடத்தினர். பழிவாங்கப்படலாம் என்ற காரணத்தினால் காயமடைந்த பெண்களும் சிறார்களும் சிகிச்சையினை நாடவில்லை. இத்தாக்குதல் தொடர்பில் அரசினால் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை. தேர்தல் ஆணைக்குழுவினால் எவ்வித விசாரணை அறிக்கையும் வெளியிடப்படவுமில்லை. கடந்த கால அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு அண்மைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு புத்தளத்தில் கொத்தணி வாக்களிப்பு மையங்களை அமைத்தது. 6000 இற்கும் மேற்பட்ட மன்னார் வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களித்தனர். இவ்வாறான சாதகமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் மன்னாரில் நிரந்தரமாக வசிக்கும் வாக்காளர்களை மட்டுமே பதிவுசெய்யுமாறு மாவட்ட கிராம சேவையாளர்களை மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருந்தார். நிலையான இடமற்ற வாக்காளர்கள் என எவரும் இருக்க முடியாது என்றும் புத்தளத்தில் வாழ்பவர்கள் அங்கேயே பதிவுசெய்து அங்கேயே வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்துடன் தம்மை நன்கு ஒருங்கிணைத்துவிட்டனர் என்றும் தற்போது அவர்கள் திரும்ப விரும்புவதற்கான ஒரே காரணம் வியாபார வாய்ப்புக்களைத் தேடுவதற்காகவோ அல்லது தங்களின் சொத்துக்களை விற்பதற்காகவோ அன்றி வேறில்லை என்றும் அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து வாதிட்டுவருகின்றனர். வடக்கு முஸ்லிம்கள் எவ்விதமான குறிப்பிடத்தக்க வழிகளிலும் திரும்பி வரவில்லை என்றும் வெகு சிலர் மாத்திரமே வியாபாரத்திற்காகத் திரும்பி வந்துள்ளனர் என்றும் கூறும் அதிகாரிகள் வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் ஒரு காலும் வடக்கில் ஒரு காலும் வைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர் என வாதிட்டு வருகின்றனர். இக்கருத்தினைப் பிரதிபலிக்கும் சர்வதேசக் கொடையாளர்களும் திரும்பிச் செல்லலுக்கு முன்னுரிமையளிக்காது இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் புத்தளத்தில் குடியேறி அங்கு நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்று வாதிட்டு வருகின்றனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கிலுள்ள தங்களின் வாழிடங்களுக்குத் திரும்பிச் செல்வதை விட புத்தளத்தில் தொடர்ந்தும் வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர் எனக் கூறும் சர்ச்சைக்குரிய 2004ஆம் ஆண்டின் UNHCR அறிக்கையினை இக்கொடையாளர்கள் நம்பி வருகின்றனர். 2004ஆம் ஆண்டில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கிலுள்ள தங்கள் வாழிடங்கள் இருந்தபோது திரும்பிவரும் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய ஆபத்தின் காரணமாகவே இவ்வாறான அறிக்கை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
திரும்பிச் செல்பவர்கள் புத்தளத்தில் ஒரு பிடிமானத்தினை வைத்துள்ளனர் என்பது உண்மையாகும். ஆனால், இம்மக்களின் பூரண மீள்திரும்பலைப் பாதிக்கும் தடைகளை இந்த யதார்த்தம் பிரதிபலிக்கின்றது என்றால் அது மிகையாகாது. இம்மக்களின் காணிகள் காடுகளாக மாறி அவற்றில் குடியேறி வாழ்வதே சாத்தியமற்றதாக இருக்கும் நிலையில் இம்மக்களுக்கு மீள்குடியேற்ற உதவிகள் வழங்கப்படுவதற்கான எச்சாத்தியமும் தென்படாத சூழ்நிலையே நிலவுகின்றது. இவ்வாறான சூழமைவில் இந்த மக்கள் 30 வருடங்களாக வாழ்ந்த இடங்களை விட்டுச் சடுதியாகத் திரும்பிச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திரும்பிச் செல்லும் இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது ஒரு புறமிருக்க இவ்வாறு திரும்பிச் செல்லும் மக்களை அரசாங்க அதிகாரிகளும் வரவேற்கத் தயாராக இல்லை என்பதுடன் இம்மக்களின் முன்னாள் அயலவர்கள் கூட இவர்களை வரவேற்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கின்றது. 30 வருடப் பிரிவின் பின்னர் இந்த அயலவர்களில் பெரும்பான்மையானோரால் இம்மக்களை அடையாளம் காண முடியவில்லை என்பது இங்கே சோகத்துடன் பதியப்படவேண்டிய ஒன்றாகும். இச்சவால்களையெல்லாம் தாண்டிப் பூரணமாகத் திரும்பிவந்தவர்களுக்கு (பெரும்பாலும் மன்னாருக்கு) வழங்கப்பட்ட தாராளமான மீள்குடியேற்ற உதவிகளும் வெளியேற்றப்பட்டமை தொடர்பான பிரச்சினைகளை நீண்ட காலமாக முன்னுரிமைப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஒருவரின் அரசியல் ஆதரவும் திரும்பலுக்கான ஊக்கிகளாக அமைந்தன. திரும்பி வந்த அதிகமானவர்களைப் பொறுத்த அளவில் தங்களின் காணிகளுக்குச் செல்வதும் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த பாடசாலைக் கல்வியினை வழங்குவதும் பாரிய சவால்களாகக் காணப்படுகின்றன. இவற்றின் மத்தியில் வாழ்வாதார உதவிகளையும் தொழில்களையும் பெற்றுக்கொள்ள இம்மக்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
கள மட்டத்தில் பார்க்கையில், தமிழ்ச் சமுதாயத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையிலான அரசியல் போட்டியும் பொருளாதாரப் போட்டியும் இன்னும் தொடர்கின்றது. முஸ்லிமல்லாத சமயத் தலைவர்கள் முஸ்லிம்கள் பூரணமாகத் திரும்பி வந்தால் அது வடக்கின் இனத்துவச் சமனிலையினைக் குழப்பி யுத்தத்தினால் தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு இன்னும் சுமையினை ஏற்படுத்திவிடும் என்ற இனவாத அச்சங்களை மூட்டிவருகின்றனர். அதேவேளை திரும்பிவரும் முஸ்லிம்களோ அரசாங்க அதிகாரிகள் தங்களைக் கவனிப்பதில்லை என்றும் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களையே விருப்புடன் கவனிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் திரும்பி வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையினைக் குறைத்துக் கூறுகின்றனர் என்றும், திரும்பி வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வளங்களை இதனால் குறைக்கின்றனர் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். திரும்பி வரும் மக்கள் தங்களின் கிராமங்களின் எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். இதனால் காணிக்கான சமுதாய உரிமை இழக்கப்படுகின்றது. இந்தக் கிராமங்களில் அரசாங்க அதிகாரிகள் புதிய குடியேற்றங்களுக்கு வசதி செய்வதற்காகப் பொதுக் காணிகளை மீள விநியோகித்து அவற்றினைப் பாடசாலைகள் கட்டுவதற்கும் மயானங்களை அமைப்பதற்கும் வணக்கத்தலங்களை அமைப்பதற்கும் மேய்ச்சல் நிலங்களுக்கும் கூட ஒதுக்கியுள்ளனர். ஆனால், பல தசாப்தங்களாக ஊரை விட்டும் தம் நிலங்களை விட்டும் வெகு தொலைவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்ந்த இந்த முஸ்லிம் மக்கள் தாம் வாழையடி வாழையாக வாழ்ந்த கிராமங்களில் இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகையில் அவற்றிற்கு எவ்வித பங்களிப்பும் வழங்க முடியாதவர்களாக இருந்த காரணத்தினால் இப்போது மேலதிக இழப்புக்களுக்கு முகங்கொடுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
தெற்கிலும் நிலைமைகள் சொல்லுந்தரத்தில் இல்லை. விடுதலைப் புலிகளை அல்லது தமிழ் ஈழம் பற்றிக் விமர்சிக்கையில் அரசாங்க அதிகாரிகளும் சிங்களத் தேசியவாத விமர்சகர்களும் வடக்கு முஸ்லிம்களின் தலைவிதி பற்றிப் பேசுகின்றனர். ஆனால், ஆண்டாண்டு காலமாகத் தாம் வாழ்ந்த சொந்த வாழிடங்களில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட இந்த முஸ்லிம்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றியும் அவர்களின் வாழ்விற்கு இனியாவது ஓர் அர்த்தம் கொடுக்க என்ன செய்யப்படவேண்டும் என்பது பற்றியும் இதயசுத்தியுடன் பேச வெகு சிலரே உள்ளனர் என்பதே உண்மையாகும். அண்மைக் காலமாகச் பரந்த முஸ்லிம் சமுதாயம் முகங்கொடுத்துவரும் அதே வெறுப்பலைகளையே வடக்கு முஸ்லிம்களும் கால காலமாகச் சந்தித்து வருகின்றனர். சோகங்களுடனும் விரக்தியுடனும் ஏமாற்றங்களுடனும் கழுத்தறுப்புக்களுடனும் காட்டிக்கொடுப்புக்களுடனும் 30 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில், வடபுல முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமே இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக வழக்காடி வர ஏனைய அனைவரும் இம்மக்களின் துயரத்தினைப் பேசாப் பொருளாகவும் சொல்லக்கூடாத கதையாகவும் புறக்கணித்துவரும் வன்ம வெளிப்பாட்டினை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
தென்புல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய இவர்களின் சொல்லாடல்களில் முஸ்லிம் தேசியவாதம் பற்றி கேள்வி எழுப்பி வருவதுடன் சிங்களப் பெரும்பான்மையினருடன் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிப் பிணையவேண்டும் எனவும் வேண்டிவருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றுவரும் இனத்துவக் குழும அரசியலை இவர்கள் விமர்சித்து வருகின்றனர். வடக்கு முஸ்லிம்கள் மார்க்க பக்தியின்றித் தமிழ் மக்களைப் போல் வாழ்ந்தமைக்குத் தண்டனைதான் அவர்கள் வெளியேற்றப்பட்டது என நாக்கூசாமல் தென்புல முஸ்லிம்கள் கூறிய ஏராளமான கதைகளை நான் 90களில் கேட்டிருக்கிறேன். இதே கதைகளே வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களிலும் மீண்டும் மீண்டும் ஒலித்தன. வடக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அல்லாஹுத்தஆலா தண்டிக்கின்றான் என்ற தங்களின் கண்டுபிடிப்பினை இமாம்கள் பறைசாற்றி வந்தனர். விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியமைக்கான ஒரே காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக இருந்தமையேயன்றி வேறொன்றுமில்லை என்ற உண்மையினைத் தென் புல முஸ்லிம்கள் புரிந்துகொள்ளத் தவறியமை ஒரு துன்பியல் நிகழ்வாகும். இஸ்லாத்தினைப் பின்பற்றுவதற்கான உரிமையினை மாத்திரம் வடக்கு முஸ்லிம்கள் கொண்டிராது தலைமுறை தலைமுறையாக வட புலத் தமிழர்களுடன் எம்மைப் பிணைத்த அந்தச் செழுமையான பாரம்பரியத்தினை மீளக் கோருவதற்கான உரிமையினையும் கொண்டுள்ளனர். தெரிவினை மேற்கொள்வதற்கு அவர்களை நிர்ப்பந்திக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
என்ன செய்யப்படலாம்?
தீர்க்கப்படாத இப்பிரச்சினை தொடர்பாக வெகு சொற்பமானவர்கள் அனுதாப உணர்வு கொண்டிருந்தாலும்கூட, ஒட்டுமொத்தத் தமிழ் அரசியல் சமூகமும் முஸ்லிம்கள் 1990 இல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நீண்டகாலமாக மௌனம் காத்துவருகின்றமை இங்கு பதிவுசெய்யத்தக்க உண்மையாகும். 2009 செப்டெம்பரில் அந்நாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பின்போது இப்பிரச்சினையினை முதற்தடவையாகப் பகிரங்கமாக எழுப்பியது. 2013 இல் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் அதற்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தினை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியது. இவ்வாறான அணுகுமுறைகளை வடக்கு முஸ்லிம்கள் வரவேற்றனர். அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குப் பகிரங்க ஆதரவினை வழங்கியிருந்தனர். மெச்சத்தக்க இந்த அரசியல் நகர்வினைத் தாண்டி, பெரும்பான்மையான தமிழ்த் தலைவர்களும் புத்திஜீவிகளும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடன் தமது கூட்டொருமையினை இன்னும் வெளிக்காட்டவில்லை என்பது கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.
நிலைமை இவ்வாறிருக்க, யாரிடமிருந்தும் எதையும் பெரிதும் எதிர்பார்க்காது தமது வாழ்வினை மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து தமிழ் உறவுகளுடன் சகவாழ்வு வாழலாம் என்ற ஆர்வத்துடன் முஸ்லிம்கள் வடக்கிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சமமாக நடத்தப்படுவதற்கான வாய்ப்பு, தமது காணிகளை அணுகுவதற்கான சந்தர்ப்பம், அடிப்படை வாழ்வாதார உதவிகள், மேலும் காடு மண்டிக் கிடக்கும் தமது காணிகளைத் துப்பரவுசெய்தல் போன்ற சாதாரண கோரிக்கைகளுக்கு அப்பால் இம்மக்கள் விடுத்திருக்கும் முக்கியமான வேண்டுகோள்கள் சொற்பமானவைதான். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த இடங்களில் தங்களின் சொத்துக்களை மீளக் கோருவதற்கும் வாழ்வாதார உதவிகளைப் பெறுவதற்கும் உரிமையினைக் கொண்டுள்ளனர் என்பதையும் தற்காலிகமாக இவர்களின் குடும்பங்கள் வேறு இடங்களில் வாழும் தெரிவினை மேற்கொண்டிருந்தாலும் இந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும். நம்பிக்கை வேர் பிடிக்கும்போது, திரும்பி வருவது பாதுகாப்பானது என அதிகமான வடக்கு முஸ்லிம்கள் உணர்ந்து தங்களின் பூர்வீகக் காணிகளையும் கலாசாரப் பாரம்பரியங்களையும் மீண்டும் கோருவார்கள். எவ்வாறாயினும் இம்மக்களின் திரும்பலுக்குத் தற்போது கூட்டு எதிர்ப்பு இருப்பதாகவே தென்படுகின்றது. இந்த நிலைமை வடக்கு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மேலதிக இனப் பிளவினை உருவாக்கி, பேரினவாதத்திற்கு நலன்சேர்த்து, தமிழர்களின் நீண்டகால நலன்களையும் அவர்களின் இன்னும் பூர்த்தி செய்யப்படாத அரசியல் அபிலாஷைகளையும் கீழறுக்கும். சர்வதேச சமுதாயத்தின் உதவியுடனும் அனுதாபமிக்க சிங்கள மக்களின் உதவியுடனும் இரண்டு சமுதாயங்களினதும் நன்மைக்காக இம்மக்களின் வெவ்வேறான, ஆனால் ஆழமாகப் பின்னிப் பிணைந்த துன்பங்களையும் துயரங்களையும் தீர்ப்பதற்காக உறுதியான ஒத்துழைப்பும் நீடித்த முயற்சிகளும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.
சிறீன் அப்துல் சரூர்