பட மூலம், Sangam

ஜூலை 1983இல் சிங்களக் கும்பல்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட ‘போக்ரம்’ கறுப்பு ஜூலை என்று குறிப்பிடப்படும். இங்கு போக்ரம் என்பது ரஷ்ய சொல். ‘அடாவடித்தனம் செய்து, வெறித்தனமாக அழித்தொழித்தல்’ என்று அர்த்தப்படும். அதாவது, இது ஒரு குழுவை இலக்கு வைத்து திட்டமிட்டு, அரச அனுசரணையுடன் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை என்று அர்த்தமுடையதாக மருவிய சொல் எனலாம்.

மங்கலான நினைவுகள்

1983 கலவரங்கள் பற்றிய எனது நினைவுகள் புகைப்படங்கள் அல்லது சிறிய காணொளித் துணுக்குகள் போன்று மேலேழுகின்றன. அவை துண்டு துண்டாக, ஒன்றுடனொன்று தொடர்பில்லாமல் இருக்கின்றன. அன்றைய தினம் என்னை பாடசாலைக்கு அனுப்பவில்லை என்பது நினைவிருக்கிறது. புகை மண்டலங்கள் தெரிகின்றன என்று சொல்வது கேட்டது. பெரியவர்களின் குரலில் தொனிக்கும் பதற்றத்தை உணர முடிந்தது. என்ன நடக்கிறது என்பதை எமக்கு சொல்லாததால், எனக்கும், எனது சகோதரிக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால், அச்சத்தை உணர்ந்தோம். ஒருவித பதற்றம் எம்மைப் பீடித்தது. அதனை நாம் வெளியே காட்டிக் கொள்ளவோ, கேள்வி கேட்கவோ இல்லை. நான் அடர்த்தியான கரும்புகையைக் கண்டேன். புகை மண்டலம் எம்மை நெருங்கி வருவதை காணக்கூடியதாக இருந்தது. ‘அது’ எங்கள் வீட்டை அண்டாது என பெரியவர்கள் சொன்னது ஞாபகமிருக்கிறது. ‘அது’ என்னவென்பது உண்மையில் எமக்குத் தெரியாது. ஆனால், ‘அது’ என்றால் பயப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தோம். பின்னர், மதிலுக்கு மேலாக எம்மை அயலில் உள்ள முஸ்லிம் வீட்டுக்கு தூக்கிய/ கொடுத்த விதமும், களஞ்சிய அறையில் பத்துப் பேர் வரை அடைந்திருந்த விதமும் ஞாபகம் வருகிறது. சில நிமிடங்களுக்குப் பின்னர், கண்ணாடிகள் உடைவதைப் போன்ற பெரும் சத்தம் கேட்டதும், அது முடிவில்லாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு நினைவில் வருகிறது. அந்த நெருக்கடியான அறையில் மாலை வரை பல மணித்தியாலங்கள் அமர்ந்திருந்தோம். என்ன நடந்தது, ஏன் நடந்தது என அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிலர் அறையில் இருந்து வெளியே சென்றது ஞாபகம் இருக்கிறது. பின்னர், நானும், சகோதரியும், அம்மாவும், பாட்டியும், மாமாவும் அந்த ஒழுங்கை வழியே சற்று அப்பாலுள்ள மாமாவின் வீட்டிற்குச் சென்றோம். ஒழுங்கையில் ஆள்நடமாட்டம் இல்லாமல், மயான அமைதி நிலவியது. வீட்டு உரிமையாளர் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர்களை அறிந்திருந்தார். அந்த இளைஞர்கள் வீட்டை பாதுகாத்ததால், அது தாக்கப்பட்டிருக்கவில்லை. அன்றைய இரவு பக்கத்து வீடு எரிக்கப்படுவதைக் கண்டோம். செந்நிற தீச்சுவாலைகள் பெருந்தீயாக வளர்வதையும் கண்டோம். நாங்கள் இருந்த வீட்டுக்கும் தீ பரவலாம் என்று மீண்டும் பயந்தோம். எமது மாமாவின் வீட்டை நோக்கி எம்மைப் பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டிய எமது அப்பாவும், ஏனைய குடும்பத்தவர்களும் அந்த வீட்டின் சமையலறையில் சிக்கியிருந்ததை அறிந்தோம். ஏனெனில், கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். கும்பல்களிடம் சிக்கி விடாமல் இருப்பதற்காக, அவர்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகளிலும், சிதைவுகளிலும் இரவு முழுவதும் அமர்ந்திருந்தார்கள்.

அடுத்து நினைவிற்கு வருவது, நாம் சில வாரங்கள் தங்கியிருந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிதான். அது ஒரு வாரமா, இரண்டு வாரங்களா, மூன்று வாரங்களா என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. நீண்ட வகுப்பறையும், ஆட்கள் வரிசையாக நின்றதும்தான் நினைவில் இருக்கிறது. கப்பல் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கு எப்போது எமது சந்தர்ப்பம் வரும் என்று பல தடவைகள் எனது பெற்றோரைக் கேட்டது ஞாபகம் இருக்கிறது. சனநெரிசல் மிக்கதொரு கப்பலில் சரக்குகள் வைக்கப்படும் குடைவான பகுதிக்குள் இருந்ததும் பின்னர் குமட்டல் ஏற்பட்டதால் மேற்பரப்பிற்குச் சென்றதும் நினைவில் உள்ளது. கடல் நீர் தெளித்ததும், கரை தென்பட்டதும் ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னர், ஒரு பாடசாலையில் மதிய உணவு உண்டோம். அது மிகவும் சுவையாக இருந்ததென ஞாபகம். 83 பற்றி எனக்கு நினைவில் இருப்பது அவ்வளவு தான்.

83 இற்குப் பின்னரான காலம்: வன்முறை பற்றிய அச்சம் ஆதிக்கம் செலுத்திய யுகம்

83 இற்குப் பின்னர், எனது குடும்பத்தவர்களதும், எம்மைப் போன்ற பலரதும் வாழ்க்கையில் நிகழக்கூடிய வன்முறைகள் பற்றிய அச்சம் மேலோங்கியிருந்தது. வன்முறை பற்றிய அச்சம் காரணமாக, வீட்டை விட்டு வெளியேற நேரும் பட்சத்தில், முக்கியமான ஆவணங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை இலகுவாக எடுக்கக்கூடிய வகையில், நாம் ஓரிடத்தில் வைப்போம். வடக்கிலோ கிழக்கிலோ குண்டுவெடிப்போ சண்டையோ நடந்தால், எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தால் படைவீரர்கள் கொல்லப்பட்டால், நாம் சில பொருட்களை ஒதுக்கி வைப்போம் அல்லது ‘கொழும்பில் ஏதேனும் நடந்தால்’ எடுத்துச் செல்லத் தயாராக ஒரு பையை தயார்படுத்துவோம். ஒரு நாள் இரவு, அன்று என்ன நடந்ததென நினைவில் இல்லை. நாம் தப்பியோட நேர்ந்தால், அதற்கு வசதியாக அயலவரின் மதிலுக்கு அருகில் உயரமான நாற்காலியை வைப்பது பற்றியும் பேசினோம். 83 இற்குப் பின்னர் பல வருடங்கள் கழிந்தும் புகைமண்டலத்தைப் பார்த்தால் எனது தங்கை அழத் தொடங்குவாள்.

83 என்பது எமது அரசியல் வரலாற்றில் தீர்க்கமான தருணம் என்பதை பின்னரே நான் அறிந்து கொண்டேன். நான் வளர்ந்தபோது, 83இல் நிகழ்ந்த சம்பவங்களின் மூலம் எனது தாயகமாக நான் கருதும் நாட்டில், நான் சமமாகக் கருதப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த நாட்டில் ஒரு பிரஜையாக கருதப்படவில்லை என்று உணர்ந்து கொண்டேன். எனது அடையாளமானது, மற்றவர்கள் கவலைப்பட தேவையிராத, வன்முறைகளால் நான் பாதிக்கப்படக் கூடியவளாக என்னை மாற்றுகிறது என்பதை கற்றுக் கொண்டேன். எனது தமிழ் அடையாளத்தின் காரணமாக மற்றவர்கள் நம்முடன் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

சிறுபிள்ளையாக இருக்கையில், கொழும்பிலும்கூட யுத்தத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கண்டிருக்கிறேன். எமது குடும்பத்திற்கு பரிச்சயமான இளம் ஆண்கள், சுற்றி வளைத்துத் தேடும் நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலை பெற எனது பெற்றோர் உதவி செய்தார்கள். வடக்கில் இருந்து வந்த உறவினர்கள், இலங்கையில் இருந்து வெளியேற கடவுச் சீட்டுக்களையும், விசா அனுமதிப் பத்திரங்களையும் பெறும் வரையில், மாதக் கணக்கில் எம்முடன் தங்கியிருந்தார்கள். அரச உத்தியோத்தர்களாகக் கடமையாற்றிய எனது பெற்றோர், வேலைத் தளங்களில் பாரபட்சத்தை எதிர்கொண்டனர். ஒருவர் தமிழராக இருந்தால், அவரை எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துடன் சமப்படுத்தி பேசும் பின்புலத்தில், பெற்றோரும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டனர். அரச சேவையில் இருந்து விலகி தனியார்த் துறை வேலையில் இணைந்து கொண்ட எனது தந்தையார், பொலிஸ் நிலையத்திற்கு பல தடவைகள் அழைக்கப்பட்டு, இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டார். ஒரு ஸ்தாபனத்தில் அவர் வேலைக்காக அமர்த்திய நூற்றுக்கணக்கான ஊழியர்களில் இரண்டு பேர் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்ற சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

பல்கலைக்கழகத்தில் இருந்து நான் இலங்கை திரும்பிய பின்னர் இரவு நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம், சோதனைச் சாவடியில் படைவீரர்கள் எம்மை ஆக்ரோஷமாகவும் மரியாதைக் குறைவாகவும் நடத்திய விதம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எம்மைத் தமிழர்களாகக் குறிப்பிடும் தேசிய அடையாள அட்டையை சோதித்த பின்னர், எமது பயணப் பெட்டிகளைப் பார்க்க வேண்டுமெனக் கூறி, அவற்றைத் திறக்குமாறு என்னிடம் கேட்டார்கள். இதைப் போன்று மற்றைய வாகனங்கள் சோதனையிடப்படவில்லை. கொழும்பில் வாகனத்தை செலுத்திய பல சந்தர்ப்பங்களில் நான் எப்போதும் நெற்றிப் பொட்டினை அகற்றி, சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் மீண்டும் இட்டுக் கொள்வேன். நெற்றிப் பொட்டை வைத்திருப்பது, என்னை தேசத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவளாக காட்டியது. அதுவே, நான் இம்சைகளால் அல்லது வன்முறைகளால் கூட கூடுதலாகப் பாதிக்கப்படக் கூடியவளாக என்னை மாற்றியது. வன்முறை பற்றிய அச்சமும் பீதியும் தொடர்ச்சியாக சக்கரமாக சுழன்று சுழன்று வந்தன. எந்தவொரு தருணத்திலும் நெற்றிப் பொட்டின் அளவானது, தமிழர்கள் எந்தளவுக்கு பாதுகாப்பு உள்ளவர்களாக உணர்ந்தார்கள் என்பதை கணக்கிடும் அளவுகோலாக இருந்தது என்று எனது நண்பர் அடிக்கடி சொல்வார். பொட்டு எந்தளவு சிறியதாக இருக்கிறதோ, அந்தளவுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தமிழ் மக்கள் எண்ணுவதையே பிரதிபலிப்பாக அவர் கூறுவார். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான் கடமையாற்றிய நேரத்தில், பொட்டு வைத்திருந்தேன். அது எனது அடையாளத்தை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதுடன் மாத்திரமன்றி, எனது அடையாளம் என்பது இயல்பாகவே என்னை பாரபட்சம் உள்ளவளாக அல்லது தப்பெண்ணம் கொண்டவளாக மாற்ற மாட்டாது என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காக விளைவுகளை நன்கறிந்து மேற்கொண்ட தீர்மானமாகும்.

83இன் கறுப்பு ஜூலை கலவரத்திற்குப் பின்னர், எனது நினைவிற்கு வருவது 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சம்பவம். நான் எனக்கான பெறுமானங்களை உருவாக்கிக் கொண்டு, அதன் அர்த்தத்தை உணரவும், நான் வாழ்க்கையில் செய்ய விரும்பியவற்றை நிறைவேற்றவும் எனக்கு உதவிய மிகவும் அமைதியான, பண்பான, கருணையுள்ள, தயாள குணம் கொண்ட எனது ஆசான் கலாநிதி நீலன் திருச்செல்வம் 1999ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். கறுப்பு ஜூலையின் வன்முறைகளும், இழப்புக்களும், வலிகளும் தொடர்ந்தன.

83இல் அனுபவித்த வன்முறைகள் மீண்டும் நிகழக்கூடிய சாத்தியம் பற்றி அடுத்த தடவை நான் அச்சம் அடைந்தது, 2009ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதநெருக்கடி முற்றுப் பெற்ற சமயத்திலாகும். போரின் முடிவுக்குப் பின்னரான நாட்களில், இனவாதச் சம்பவங்கள் பற்றியும், ‘மேலே வடக்கில்’ வாழும் தமிழர்களுக்கு நேர்ந்த கதியை கொழும்பில் உள்ளவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று தனிநபர்களிடம் கூறிய கருத்துக்கள் பற்றியும் கேட்கக் கிடைத்தது. ஒருநாள் இரவு பத்து மணியளவில், சிலர் சத்தமாக கோஷமிடுவதைக் கேட்டேன். வெளியே பார்த்தபோது, ஒரு ட்ரக் வண்டியில் ஆண்கள் கோஷமெழுப்பிச் செல்வதைக் கண்டேன். அவர்களது கோஷங்களில் ஜனாதிபதியை அரசராக வர்ணித்து, பெரும்பான்மை சிங்களவர்கள் மேலாண்மை உள்ளவர்கள் என வர்ணிக்கும் வாசகங்கள் ஒலித்தன. மீண்டுமொரு தடவை, எனது அடையாளம் என்னை வன்முறைகளால் பாதிக்கப்படக் கூடியவளாக உணரச் செய்து, இலங்கையில் எனக்குரிய இடம் உள்ளதா என்ற கேள்விக்குறியை முன்னிறுத்தியது.

மாதிரி சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரின் சுமையும்

83 பற்றியோ, இலங்கையில் தமிழராக இருப்பதன் அனுபவங்கள் பற்றியோ நான் எப்போதும் பேசியதோ, எழுதியதோ கிடையாது. ஏனெனில், எனது எழுத்திலோ, மனித உரிமைகள் மற்றும் சட்ட விவகாரங்கள் தொடர்பான பரிந்துரைத்தல்களிலோ, செயற்பாடுகளிலோ என்னை மையப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. அவ்வாறு செய்தால், அந்த விடயங்களின் முக்கியத்துவத்தில் இருந்து கவனம் திசை திருப்பப்படும் என நான் கருதுகிறேன். 1980களில் யாழ்ப்பாணம் பூரணி மகளிர் நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான ரெஜினியின் கருத்துக்களை நான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். ‘எனது சமூகத்தின் கதையை வரைவதற்கு எனது வலியை பயன்படுத்தப் போவதில்லை’ என்று அவர் கூறியிருந்தார். ஆட்களுக்கு இடையிலும், இனக்குழுமங்களுக்கு இடையிலும் நாம் நிகழ்த்தும் தொடர்பாடல்களில் பாரபரட்சம், வன்முறை, இழப்பு, வலிகள், சலுகைகள் பற்றிய விடயங்களை பகிரங்கமாக பேசுவது சவாலாக இருப்பதால், நான் இப்போது அவ்வாறு செய்கிறேன். அவற்றைப் பற்றி நாம் வரலாற்று ரீதியான, தொழில்நுட்ப ரீதியான, சட்ட ரீதியான வார்த்தைகளில் பேசுகிறோம். மனிதநேய அல்லது சமூக வார்த்தைகளில் பேசுவதில்லை. அவை நம்மை அன்றி மற்றவர்களையே பாதிக்கும் என்பதாகக் கருதி, ஒருவரையும் குறிப்பாக எடுத்துக் காட்டாதவையாக, தூரமானவையாக மாற்றி, அவற்றை ஒதுக்கி வைக்கிறோம்.

இதன் காரணமாக, நாம் பேசும் விடயங்கள் சமூகத்தில் மற்றவர்களின் உணர்வுகளை பாதித்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், எமது மௌனங்களைக் கலைப்பதற்கு தயங்குகிறோம். அத்துடன், தைரியம் இல்லாமலும் இருக்கிறோம். எமது சலுகைகள், அச்சங்கள், தப்பெண்ணங்கள் போன்றவை எவ்விதத்தில் எமது நாளாந்த இடைத்தொடர்பாடல்களில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியிருப்பதால் தான் நாம் இனத்துவம், அடையாளம், பாரபட்சம் போன்றவை பற்றிய நேர்மையான கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமலும் இருப்பதாக இருக்கக்கூடும். நாம் சமத்துவம், பாரபட்சம் இன்மை பற்றி பேசுகையில், நாம் அனுபவிக்கக்கூடிய இன, மத, வர்க்க, சாதி அனுகூலங்கள் எமது கண்களைக் கட்டி, எது பாரபட்சம் என்பதையோ, எது மற்றவர்களின் உரிமை மீறல் என்பதையோ மறைத்து, அத்தகைய குருட்டுத்தன்மை எமது செயலை எவ்வாறு இயல்பானதாக மாற்ற வழிவகுக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? மொழியை பொதுவான உதாரணமாக காண்பிக்கலாம். ஒரு ஆவணம் சிங்களத்தில் மாத்திரம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். எனது அனுபவத்தின் பிரகாரம், முற்போக்கானவர்களாக தம்மைக் கருதிக் கொள்வோர் கூட, அது மற்றவர்களின் மொழி உரிமையை மீறுகிறது என்பதை உணர்ந்து, அது பற்றி கரிசனை கொள்வதில்லை. பொருட்டாகக் கருதுவதும் கிடையாது. ஓரங்கட்டப்பட்ட சமூகமொன்றிற்கு உள்ளேயும், வர்க்கம், செல்வம், சாதி முதலானவற்றின் அடிப்படையிலான மாறுபட்ட சலுகைகள் உள்ளதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா?

இந்த விவகாரங்களை பகிரங்கமாக பேசுவதற்குரிய தயக்கமானது, தமது சமூக அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் தொடர்புடையதாகும். ஏனெனில், ஒருவர் ‘கடும்போக்கானவர்’ என்று முத்திரை குத்தப்பட்டு விட்டால், அவர் ‘தீவிரமானவராக’ ஓரம் கட்டப்பட்டு விடுவார். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இல்லாத ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அவர் மாதிரி/ நல்ல சிறுபான்மையினராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும். சகல வடிவங்களிலும் மிதமானவராக இருப்பது ‘மாதிரி சிறுபன்மையாக’ இருப்பதற்கு முக்கியமானதாகும். இங்கு ஒரு நபரின் மிதவாதம் என்பது அவரது அரசியல்-சமூக அந்தஸ்த்தின் அடிப்படையில் சமூகத்தில் நிர்ணயிக்கப்படும். அது தொடர்ச்சியாக மாறும். உதாரணமாக, இன முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வுக்காக பாடுபட்டதுடன், சட்டரீதியாக பொறுப்புக் கூறாமல் இருத்தல், வன்முறை, நீதி முதலான விடயங்கள் பற்றிப் பேசியதால், கலாநிதி நீலன் திருச்செல்வம் ஒரு கட்டத்தில் சிங்கள சமூகத்தால் துரோகியாக பார்க்கப்பட்டார். இன்று தவறான முறையில் பிரிவினையுடன் சமப்படுத்தப்படும் சமஷ்டித் தீர்வு பற்றி பரிந்து பேசியதால், அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட பெரும்பாலும் கடுஞ்சொல் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பார். அதே சமயத்தில், இன முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண்பதற்காக அரசுடன் வேலை செய்ததால், அவர் எல்.ரீ.ஈ.ஈ. இயக்கத்தால் துரோகியாகவும் நோக்கப்பட்டிருந்தார். நீங்கள் எந்தளவுக்கு தமிழராக இருக்கிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தீர்களா என்ற கேள்விகள் சார்ந்த பொய்மைகளின் அடித்தளத்தில் நானும் கடுஞ்சொல் தாக்குதல்களை அனுபவிக்க நேர்ந்தது. எனவே, ‘மிதவாத சிறுபான்மையினரின்’ தலைவிதி என்பது நிச்சயமற்றதாகவும், நிலையில்லாததாகவும் காணப்படுகிறது.

தமிழர்களும், சமீப காலமாக முஸ்லிம்களும் தேச விரோதிகளாக, பயங்கரவாதிகளாக, எல்.ரீ.ரீ.ஈயாக, முஸ்லிம் கடும்போக்குவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வந்துள்ளனர். அவ்வாறு முத்திரை குத்துவதில் பல நோக்கங்கள் இருக்கின்றன. முத்திரை குத்துதல் என்பது ஒருவரை வில்லத்தனமாக சித்திரித்து, அவர் பழிகூறலுக்கு, இம்சைப்படுத்தலுக்கு, அச்சமூட்டுதலுக்கு, வன்முறைக்கு இலக்காகக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. சம்பந்தப்பட்ட நபரை பாரபட்சமானவராகவும், தப்பெண்ணம் உள்ளவராகவும் சித்தரித்து, அவரது குரலுக்கு சமூகத்தில் இருக்கக்கூடிய மதிப்பையும், அங்கீகாரத்தையும் இல்லாமல் செய்வது அதன் நோக்கம். ஒருவரை எல்.ரீ.ரீ.ஈ. என்றோ, டயஸ்போரா என்றோ முத்திரை குத்துவதில் உள்நோக்கம் உண்டு. அவ்வாறு செய்வதால், தம்மீது குத்தப்பட்ட முத்திரை உண்மையாகி விடுமோ என்று அஞ்சி, அவர் அரசாங்கத்தின் சில செயல்பாடுகளுக்கு எதிராக சவால் விடுக்கத் தயங்குவார். உதாரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் தயங்கக்கூடும். சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எல்.ரீ.ரீ.ஈ. அல்லது டயஸ்போரா என்று முத்திரை குத்தினால் அதன் காரணமாக அந்நபர் அவரின் நண்பர்கள் மற்றும் சகாக்களின் நல் அபிப்பிராயத்தை இழக்க நேரிடும். தனிப்பட்ட ரீதியில், குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வேலை செய்த காலத்தில், எல்.ரீ.ரீ.ஈ. என்றும், டயஸ்போரா என்றும் முத்திரை குத்தப்பட்ட கணிசமான அனுபவம் எனக்கு உண்டு. முத்திரை குத்துதலின் நோக்கம் அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் மௌனிக்கச் செய்வதே ஆகும் என்பதை அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்டுள்ளேன். ஒருவர் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவார், கடுஞ்சொல் வசைகளுக்கு உள்ளாவார், கைது செய்யப்படுவார், தடுத்து வைக்கப்படுவார், வன்முறைக்கு உள்ளாவார் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அநீதிகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதையும், சவால் விடுப்பதையும் தடுத்து நிறுத்துவதே நோக்கமாகும்.

ஒரு முறை சிங்கள சகா சொன்னார், நீங்கள் சிங்கள பௌத்தராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் இயல்பாகவே இனவாதி என்று எண்ணப்படுவதால், பெரும்பான்மை இனத்தவராக இருப்பதன் பளுவை உணர வேண்டும் என்றார். தமக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றி அவர் புரிந்துணர்வு கொண்டிருக்கவில்லை என்ற விடயம் அந்த சகாவின் கருத்தில் பிரதிபலிப்பதாக நான் உணர்கிறேன் என எனது நண்பரிடம் தெரிவித்தேன். அனேக சந்தர்ப்பங்களில் நான் எல்.ரீ.ரீ.ஈயாக முத்திரை குத்தப்பட்டாலும் கூட, எனது இனக்குழுமம் காரணமாக நான் பாதிக்கப்பட்ட தரப்பில் இருப்பதாகக் கூற முடியும் என்பதால், நான் சலுகைகளைப் பெறக்கூடிய நிலையில் இருக்கிறேன் என்று எனது சகா கருதலாம் என்பதை எனது நண்பர் சுட்டிக்காட்டினார். பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தவர் என்ற ரீதியில், தாம் பாதிக்கப்பட்ட தரப்பில் இருப்பதாக எனது சகாவால் கூற முடியாது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களை அவதானித்தால், இலங்கையில் பாரபட்சம் மற்றும் சலுகைகள் பற்றி கலந்துரையாடுவது மென்மேலும் முரண்பாடுகளுக்கு வித்திடக்கூடிய மிகவும் சிக்கலான, சச்சரவை உண்டாக்கக்கூடிய விடயம் என்பது புலப்படும்.

இத்தகைய பின்புலத்தில், தமிழர்களும், முஸ்லிம்களும் தமக்கு நிகழக்கூடிய பயமுறுத்தல்களில், அச்சுறுத்தல்களில், இம்சைப்படுத்தலில், வன்முறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக சுயதணிக்கையில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, தத்தமது சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றி குரல் எழுப்புவதில் தர்மசங்கடமான நிலையை எதிர்கொள்வதாக பல தமிழ் முஸ்லிம் நண்பர்களும் சகாக்களும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில், தத்தமது சொந்த சமூகங்களுக்கு ஆதரவாக பக்கச்சார்புடன் செயற்படுபவராக அல்லது சிங்கள சமூகத்தை குற்றம் சாட்டுபவராக பார்க்கப்படுவோம் என்ற ஐயப்பாடு அவர்களுக்கு இருக்கிறது. வன்முறை மற்றும் பழிதூற்றும் பசப்புரைக்கு இலக்காவோம் என்ற பயமானது குறைந்தபட்சத்தை விடவும் குறைவானதுடன் திருப்திப்படக்கூடிய நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லும். இது இழப்பையும், வலியையும், அநீதி பற்றிய உணர்வுகளையும் மனதில் புதைத்துக் கொண்டு மௌனமாக இருக்கும் நிலையை நோக்கி வழிநடத்தும். சிலவேளைகளில், இது ஒருவர் தமது  சொந்த அடையாளத்தை கூட நிராகரிக்கச் செய்யலாம்;. உதாரணமாக கூறுவதாயின், 83 இக்கு பின் சில தமிழர்கள் தமது பிள்ளைகளை சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் சேர்த்ததுடன், எதிர்காலத்தில் நிகழக்கூடிய வன்முறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தத்தமது பெயர்களையும் நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக தமது இன அடையாளத்தை மாற்றி, இன்னொரு இனத்தின் அடையாளத்தை வரித்துக் கொண்டார்கள்.

நாம் இனத்துவ அடிப்படையில் பாரபட்சம் அற்ற இலங்கையில் வாழவில்லை. இன, மத பன்முகத்தன்மை பற்றி அச்சப்படும் இலங்கையில் வாழ்கிறோம். இங்கு பன்முகத்தன்மை கொண்டாடப்படுவதோ வலுவானதாக நோக்கப்படுவதோ கிடையாது. மாறாக, ஒரே இனத்திற்கும் ஒரே மதத்திற்கும் சொந்தமான நாட்டைக் கட்டியெழுப்பதற்குரிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் அடையாளம் என்பது முழுமையாக சிங்கள பௌத்த அடையாளத்தின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டது என்ற போலித்தனத்தின் கீழ், பன்முக அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கோ, மற்றதொன்றில் உள்ளீர்த்துக் கொள்வதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இலங்கையிலேயே நாம் வாழ்கிறோம். இலங்கையின் அடையாளம் என்பது பன்முக அடையாளங்களின் கூட்டு என்பது மறுத்துரைக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, சில பௌத்த மதகுருமார் தெரிவிக்கும் “தமிழர்கள் அதிகாரப் பகிர்வைக் கோரினால், வடக்கு கிழக்கில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்”[i] போன்ற கருத்துக்கள் பற்றிய செய்திகள், எதிர்காலத்தில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சத்துடன் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றன.

நீதி மற்றும் சமாதானத்திற்கான எந்தவொரு போராட்டத்திலும் எம்மோடு கூட்டணியாக வேலை செய்பவர்கள் மிகவும் அவசியமானவர்கள். எனினும், கூட்டணியாக இருப்பவர்களும், கூட்டணியாக வேலை செய்ய விரும்புபவர்களும், கூட்டணியாக வேலை செய்கிறோம் எனக் கூறிக் கொள்பவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஒருவர், தாம் பாதிக்கப்பட்டவராக மட்டும பார்க்கப்படுவதை விரும்ப மாட்டார். அவர்களுக்கும் ஆளுமை உள்ளது. அந்த ஆளுமையை பிரயோகிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு தாம் சொல்வது கேட்கப்பட வேண்டும். தமது சார்பாக எப்போதுமே மற்றவர்கள் பேசும்போது, தாம் மௌனமாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தமக்காக தாமே பேசுவதற்குரிய இடைவெளியைப் பெறுவதற்கு உதவி கிடைப்பதை விரும்புவார்கள். கூட்டணியாக செயற்படுதல் என்பது வெறுமனே மற்றவர்களுக்குத் தெரிவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதோ, பாதிக்கப்பட்டவர்களின் குரலை தம் குரலாக ஒலிக்கச் செய்வதோ அல்ல. மாறாக, அவர்களுடன் நின்று, அவர்களது குரல்கள் கேட்கப்படுவதற்கும், வலுவாக ஒலிப்பதற்கும் உதவி செய்வதாகும். இதன் அர்த்தம், அதிர்ச்சியூட்டும் மீறல்களோ, சம்பவங்களோ இடம்பெற்ற சமயத்தில் மாத்திரம் செயற்படுவது அல்ல. மாறாக, தனது சலுகைகள் பற்றியும், அது நுண்மையான, நாளாந்த மட்டத்தில் எவ்விதத்தில் பாரபட்சத்தை ஏற்படுத்த பங்களிப்பு வழங்குகிறது அல்லது பாரபட்சத்தை வலுப்படுத்துகிறது என்பது பற்றிய பிரக்ஞையுடன், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு செயற்படுவதாகும்.

அம்பிகா சற்குணநாதன்

Black July: The Unspoken and the Unspeakable என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

[i] காலைக்கதிர், 20 ஜூலை 2020