பட மூலம், TheNational

கடந்த வாரத்தில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகின. அவற்றில் ஒன்று ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதுடன் தொடர்பான செயலணி. மற்றையது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதுடன் தொடர்பான செயலணி. முதலாவது செயலணியிலே முழுமையாக இராணுவ மற்றும் பொலிஸ் துறையினைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகளே இடம்பெற்றிருக்கின்றனர். இரண்டாவது செயலணியிலும் இராணுவத்தினைச் சேர்ந்தோர் இடம்பிடித்துள்ளனர். இரண்டாவது செயலணி தொல்பொருளியலுடன் தொடர்புடையதாக இருப்பினும், பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்னவே அதற்குத் தலைமை வகிக்கிறார். இராணுவத் தரப்புக்களினைச் செறிவாகக் கொண்ட‌ இந்தச் செயலணிகளின் தோற்றம் நாட்டிலே தீவிரமடைந்து வரும் இராணுவமயமாக்கத்தின் மற்றொரு வெளிப்பாடாக அமைகின்றது.

இராணுவமயமாகும் நிர்வாகக் கட்டமைப்புக்கள்

சிவில் நிர்வாகத்துடன் தொடர்புபட்ட, துறைசார் ரீதியில் விசேட தகைமைகள் உடையோரின் பங்களிப்புடன் கையாளப்பட வேண்டிய பல்வேறு துறைகளிலும் இராணுவத் தரப்புக்களின் தலையீட்டுக்கு வழி செய்யும் ஒரு அரசாங்கமாக கோட்டபாய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் மிகவும் வேகமாக மாறி வருகின்றது. சுகாதாரம், மகாவலி போன்ற அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் முன்னாள் இராணுவ அதிகாரிகளே அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்‌ஷவும், அவருக்கு ஆதரவாகச் செயற்படுவோரும் ஓர் இராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதனாலேயே அவர்கள் ஆபத்தான ஒரு இராணுவவாதக் கருத்தியலினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என நாம் இங்கு சொல்லவில்லை. இராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட ஜனநாயக ரீதியில் செயற்படக் கூடியவர்களாக இருக்க முடியும். ஆனால், கோட்டபாய ராஜபக்‌ஷவின் தேர்தல் வெற்றிக்காக உழைத்த வியத்மக போன்ற அமைப்புக்களிலே செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கும் நபர்கள் கடந்த காலங்களிலே செயற்பட்ட முறையானது, இராணுவ ரீதியிலான கட்டமைப்புக்களின் ஊடாகவும், மக்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமான முறையிலே கண்காணிப்பதன் மூலமும், கட்டுப்படுத்துவதன் மூலமும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற அவர்களின் பார்வையினையே வெளிப்படுத்தியது. இந்த அமைப்புக்களிலே முன்னின்று செயற்பட்டவர்களே இன்று அரசாங்கத்திலே தீர்மானம் மிக்க‌ சக்திகளாக மாறியுள்ளனர்.

வேறுபட்ட சமூகங்களுக்கு இடையிலே, அண்மைக் காலங்களிலே மிகவும் பிரச்சினைகளைத் தூண்டக்கூடிய விடயமாக மாறி வரும் தொல்பொருளியலை, கடந்த காலம் தொடர்பான உண்மைகளை நிகழ்கால அரசியல் காரணங்களுக்காக மறைக்காது, மாற்றாது, அதேநேரம் சகவாழ்வினையும், பன்மைத்துவத்தினையும் வலியுறுத்தும் வகையிலே கையாளுவதற்கு, அந்தத் துறையிலே பயிற்சி பெற்றோரும், வரலாற்றுத் துறை சார்ந்தோருமே பொருத்தமானவர்கள். ஆனால், கிழக்கு மாகாணத்திலே தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பாதுகாப்பது தொடர்பான செயலணியிலே இராணுவத் தரப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, அவர்களினால் தொல்பொருளியல் போன்ற விடயங்களையும் கையாள முடியும் என்ற அபிப்பிராயம் கட்டியெழுப்பப்படுகின்றது. இங்கு துறைசார் நிபுணர்களும், சிறுபான்மையினத்தவரும் புறக்கணிக்கப்பட்டு இராணுவத்துக்கும், பௌத்தத் தேசியவாதத்தினை முன்னெடுப்போருக்குமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி போன்ற முற்றிலும் இராணுவ மயமாக்கப்பட்ட செயலணிகள், நாட்டில் இருக்கும் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளை ஒழுக்கச் சீர்கேடுகளாக குறுக்கி விளங்கப்படுத்தக் கூடிய அபாயத்தினை உருவாக்கக் கூடியன. மக்கள் மத்தியில் இருக்கும் பன்மைத்தன்மை மிக்க விருப்பங்கள், தெரிவுகள், பழக்கவழக்கங்களினை இராணுவக் கண்ணோட்டத்துடன், பயத்தினையும், வன்முறையினையும் பயன்படுத்தி பலவந்தமாக ஒருமைப்படுத்தும் செயன்முறைகளையும் இவ்வாறான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தக் கூடும். மாற்றுக் கருத்துக்கள் நாட்டிலே இல்லாது போவதற்கு இவை வழி செய்வதுடன், நாட்டிலே ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்குக்கான சிவில் கட்டமைப்புக்களினை இவை பிரயோசனமற்றவையாகவும் மாற்றுகின்றன.

கொவிட் நெருக்கடியும் இராணுவமயமாக்கலும்

கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், கொவிட்-19 நெருக்கடியினைப் பயன்படுத்தி, அந்தச் சூழலிலே மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த வேளையில், நாட்டின் உயர்நீதிமன்றினால் குற்றம் இழைத்தவர் எனத் தண்டனை வழங்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவருக்குப் பொது மன்னிப்பு வழங்கினார். இந்தத் தீர்மானம் இராணுவத்தினர் புரியும் குற்றங்களினை நாட்டின் நீதித்துறையினையும் தாண்டி அரசு மன்னிக்கும் என்ற உணர்வினை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் ஒரு முனைப்பாகவும் இருந்தது. சிறுபான்மை மக்களின் மத்தியிலும், இராணுவக் கட்டமைப்புக்களினாலே கடந்த காலங்களிலே பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மத்தியிலும் இந்த நடவடிக்கை இராணுவமயமாக்கத்துக்கும் தற்போதைய ஆட்சிக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து அச்ச உணர்வுகளைத் தோற்றுவித்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடி இராணுவ மயமாக்கத்தினைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை அரசாங்கத்துக்கு வழங்கியது. நோய்த்தொற்றின் பரம்பலினைக் கண்காணிப்பதற்கு இராணுவத்தின் உதவியுடனான கண்காணிப்புப் பொறிமுறைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன. தனிமைப்படுத்தல் முகாம்கள் கூட மருத்துவ அதிகாரிகளின் குறைந்த அதிகாரத்துக்கும், இராணுவத்தினரின் கூடிய அதிகாரத்துக்கும் உட்பட்ட நிலையங்களாகவே முகாமை செய்யப்பட்டன. கொவிட் நெருக்கடியினைக் கையாளுவதற்கான செயலணிக்கு நாட்டின் இராணுவத் தளபதியே தலைமை வகிக்கிறார்.

தனிமைப்படுத்தல் முகாம்களினை நிர்வகிப்பதிலே மருத்துவ நிபுணர்களின் பங்கு உரிய அளவில் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முயற்சிகளைச் செய்யவில்லை என ஒரு வைத்திய நிபுணர் பொதுவெளியிலே விமர்சன ரீதியிலான ஒரு கருத்தினை வெளியிட்ட போது, அவர் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கண்டனம் வெளியிட்டார். இராணுவமயமாக்கத்துடன் நாட்டிலே மாற்றுக் கருத்துக்களையும், எதிர்ப்புக் குரல்களையும் வெளியிடுவோருக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அவதூறுப் பிரசாரங்களும் அதிகரித்துள்ளன.

கொவிட் நெருக்கடியின் போது இராணுவத்தினரின் விசேட நிபுணத்துவம் நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த சில வழிகளிலே அவசியமாக இருந்தது என்பதனை இந்த புதிய நோய்த் தொற்றின் ஆரம்பத்திலே, மிகவும் நெருக்கடியான சூழலினை நாம் எதிர்கொண்ட வேளையிலே, பலர் ஏற்றுக்கொண்டிருந்தோம். எனினும் அந்த வாதத்தினையும் கேள்விக்குட்படுத்துவது பொருத்தமானது. எமது நாட்டின் வைத்தியத் துறையும், நிர்வாகத் துறையும் நெருக்கடிகளைக் கையாளக்கூடிய வகையில் விருத்தி செய்யப்படாமையும், இராணுவத்தின் தலையீட்டுக்கான ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியது என்பதனை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய இராணுவக் கட்டமைப்புக்களுக்கும், தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த இராணுவக் கட்டமைப்புக்களுக்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் அல்லது அவற்றின் நெருக்கடிக்குப் பிந்திய பணி என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இராணுவக் கருத்தியலினையும், இராணுவமே வினைத்திறனான ஓர் அமைப்பு என்ற விம்பத்தினையும் கட்டியமைக்கும் தற்போதைய அரசாங்கம் இந்தக் கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் பேணக் கூடும். இவற்றின் உதவியுடன் நாட்டின் நிருவாகக் கட்டமைப்புக்கள் எதிர்காலத்திலே சாதாரண சூழநிலைகளிலும் கூட இராணுவமயமாக்கப்படலாம்.

நாட்டின் வடக்குப் பகுதியிலே கொரொணாத் தொற்றின் தாக்கம் ஒப்பீட்டளவிலே குறைவாக இருப்பினும், இங்குதான் கூடிய அளவிலான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வட பகுதி மக்கள் மத்தியிலே, குறிப்பாக மாகாணம் விட்டு மாகாணம் பயணிப்போரின் மத்தியிலே, ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வோர் தம்மைத் திரும்பத் திரும்ப பதிவு செய்யுமாறு வட மாகாணத்தினுள் வைத்து அலைக்கழிக்கப்படுவதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வடக்குக்கு வெளியே இந்த மாதிரியான கெடுபிடிகள் ஒப்பீட்டளவிலே குறைவாகவே அவதானிக்கப்படுகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன‌. ஏற்கனவே போரினால் கடுமையாகப் பாதிக்கபட்ட, சிறுபான்மை இனத்தவரினைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணத்தின் அரசியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான், நோய்த் தொற்றினை ஒரு சாட்டாக வைத்து, இந்தச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எழும்புகிறது.

இராணுவமயமாக்கத்தின் கீழ் ஜனநாயகம், சிறுபான்மை மக்கள் மற்றும் சமூகநீதி

சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையிலும், பொதுத் தேர்தல்கள் பிறபோடப்பட்டிருந்த‌ நிலையிலும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினைக் கூட்டும்படி பல அரசியல் மற்றும் சிவில் சமூகக் குரல்கள் கடந்த மாதங்களிலே கடுமையாக வலியுறுத்தி வந்தன. ஆனால், ஜனாதிபதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை மீளவும் கூட்ட மாட்டேன் எனத் தனது நிலைப்பாட்டிலே விடாப்பிடியாகவே இருந்தார். இராணுவக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டு வரும் ஒரு சூழலிலே, மக்கள் ஜனநாயகத்தின் குரலாக இருக்கும் நாடாளுமனறம் நீண்டகாலத்துக்குச் செயலற்றுப் போயிருக்கின்றமை இராணுவ மயமாக்கத்தின் தாக்கத்தினை மக்களின் மீது மேலும் அதிகரிக்கும்.

இலங்கையில் இராணுவமயமாக்கம் என்பது ஒரு புதிய விடயம் அல்ல. சிவில் யுத்தத்தின் போது நாட்டின் இராணுவக் கட்டமைப்புக்கள் பெருமளவுக்கு அதிகரித்தன. போர் நடைபெற்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே சிவில் நிர்வாகப் பணிகளிலே இராணுவத்தின் தலையீட்டுக்கும், பங்களிப்புக்கும் முன்னைய அரசாங்கங்கள் அனுமதியினையும், ஊக்குவிப்பினையும் வழங்கின. சிவில் யுத்தக் காலத்திலே அதிகரித்த இந்தச் செயன்முறை தற்போது நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலே வெவ்வேறு வடிவங்களிலே முன்னெடுக்கப்பட்டு, இன்று ஒரு தேசிய ரீதியிலான அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கின்றது.

நாட்டின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களிலே அவதானிக்கப்படும் ஊழல்கள், பாரபட்சங்கள், சாதி வேறுபாடுகள், செயற்றிறன் குறைவு போன்றன இராணுவத்தினால் மக்களுக்குச் சேவைகள் வழங்கப்படும் போது இல்லாது போகும் அல்லது குறைந்து போகும் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையும் இராணுவமயமாக்கம் குறித்து சமூகத்திலே போதுமான விழிப்புணர்வு இல்லாதிருப்பதற்குக் காரணம்.

அத்துடன், நாட்டின் சிறுபான்மை மக்களினால் நாட்டுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் எதிர்காலத்திலே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற புனைவின் மூலமாகவும் நாட்டில் இராணுவமயமாக்கத்துக்கு நியாயம் கற்பிப்பதிலே சிங்கள பௌத்தத் தேசியவாத அரசியலினைச் சேர்ந்த தரப்புக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் இராணுவமயமாக்கலுக்கு எதிராகப் போராடுவோர் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினை வளர்த்தெடுக்க முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். அத்துடன், நாட்டின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பனவாகவும், ஜனநாயகத் தன்மை மிக்கனவாக மாற்றுவதும், இராணுவமயமாக்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கும் காரணிகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும்.

இராணுவத்துறைக்கும், தேசிய பாதுகாப்புத் துறைக்கும் நாட்டின் வரவு செலவுத் திட்டத்திலே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நாட்டிலே ஒப்பீட்டளவிலே அமைதி நிலவும் காலப் பகுதியில் இவ்வளவு பாரிய தொகையினைப் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்குவது சமூக நீதிக்கு எதிரான ஒரு செயன்முறையே. ஏற்கனவே பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான சம்பளத்துக்கு இந்த நிதியிலே பெரும்பகுதி செலவிடப்படுவதனை நாம் விளங்கிக்கொள்ளும் அதேவேளை, புதிய இராணுவக் கட்டமைப்புக்களுக்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதனை நாம் கேள்விக்குட்படுத்துவது அவசியம். மேலும் இராணுவத்துறைக்குத் தேவைக்கு அதிகமாக ஒதுக்கப்படும் பணத்தினைப் பயன்படுத்தி நாட்டின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொடர்பாடல் போன்ற அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான துறைகளினை விருத்தி செய்யலாம். ஆனால், அண்மைக் காலங்களிலே இலங்கையினை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் சமூக நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான முறையில் இராணுவமயமாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றமை குறித்து நாம் அக்கறை கொண்டவர்களாகவும், இது தொடர்பிலே அரசினைத் தொடர்ந்தும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துபவர்களாகவும் இருப்பது அவசியம்.

(சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான மூன்று சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.)