பட மூலம், CT

மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை படுகொலை செய்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விடுதலை செய்தமை தொடர்பாக உள்நாட்டில் விமர்சனங்கள், எதிர்ப்புகள் தெரிவிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியில் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை வெளியிட்டிருந்தன. சுனில் ரத்னாயக்க மீதான கொலைக் குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னரும், “8 தமிழர்களைக் கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்ட” என்றே இன்றும் சிங்கள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் பத்திரிகைகள், “மிருசுவில் படுகொலை” என்று கொலைக் குற்றத்தை குறிப்பிட சிங்கள பத்திரிகைகள் ஒரு ‘சம்பவம்’ என்றே எழுதியிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலைக்குற்றவாளி சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்தமையினால் ஏற்கனவே இலங்கையின் நீதிக்கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த அநீதியான முடிவு குறித்து மாற்றம் பலரிடம் கருத்து கேட்டிருந்தது. எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸுக்கு தனிப்பட்ட நபர்கள் வழங்கிய கருத்துகளையும் மொழிபெயர்த்து இங்கு தந்திருக்கிறோம்.

தமிழ் மக்கள் மீது வன்முறையினைப் பிரயோகித்த‌ இலங்கை இராணுவத்தினை சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பாக முன்னிறுத்துவதே சிங்கள பௌத்த அரசியலின் நோக்கம் என்று யாழ். பல்கலையின் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் கூறுகிறார்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இராணுவம் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்தது என்பது வெவ்வேறு உள்ளூர் மற்றும் சர்வேதேச மனித உரிமை சார் அமைப்புக்களின் அறிக்கைகளின் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் போர்க் குற்றங்கள், படுகொலைகள் பற்றி நாட்டில் இருக்கும் நீதிக் கட்டமைப்பின் ஊடாகத் தமிழ் மக்கள் நீதியினைப் பெற்றமை விரல் விட்டு எண்ணக் கூடிய தடவைகளே. நான் அறிந்த வரைக்கும் மிருசுவில் படுகொலை வழக்கிலும், கிருஷாந்தி குமாரசாமி வழக்கிலும் மாத்திரமே தமிழர்களுக்கு எதிராகக் கடுமையான‌ குற்றம் இழைத்த படைவீரர்களுக்கு இலங்கையின் நீதிக் கட்டமைப்பினால் தண்டனை வழங்கப்பட்டது. இன்று நாட்டின் ஜனாதிபதி, சுனில் ரத்னாயக்கவிற்கு வழங்கிய தண்டனையினை சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பு ஒன்றின் மூலமாக நீக்கியமை ஏற்கனவே நாட்டில் இருக்கும் நீதித்துறையின் மீதும் நிருவாகத் துறையின் மீதும் நம்பிக்கை இழந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் நம்பிக்கையீனத்தினை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.

உலகத்திலே ஒரு நாடுகடந்த தொற்று நோய் பரவி வரும் சூழலிலே, உலகின் பெரும்பாலான பகுதிகள் நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கும் ஒரு சூழலிலே, நள்ளிரவிலே ஊர் உறங்கிய பின் இடம்பெறும் ஒரு திருட்டுச் சம்பவம் போல, இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் மோசமான ஜனநாயக விரோதச் செயல். எனவே, நான் கருதுகிறேன். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறைகளை நோக்கி மேலும் மேலும் செல்வதனையே தூண்டும். நாட்டின் ஜனாதிபதியின் இந்த முடிவினை, இலங்கை அரசும், ஜனாதிபதியின் அரசியற் கட்சியும், ஜனாதிபதியும் முன்னிறுத்தும் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் ஒரு வெளிப்பாடாகவும் நான் பார்க்கிறேன். இராணுவத்தினை சிங்கள பௌத்த தேசத்தின் பாதுகாவலர்களாகக் காண்பிக்கும் அரசியலின் ஒரு பகுதியே இந்த மன்னிப்பு. இதன் மூலம் சிங்கள பௌத்த மக்களின் மத்தியில் தனக்கு இருக்கும் பிரசித்தியினை மேலும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி இந்த மன்னிப்பினை வழங்கியிருக்கிறார் என்றே கருத வேண்டி இருக்கிறது.

சிங்கள பௌத்த அரசியலின் ஒரு பகுதி, தமிழ் மக்கள் மீது வன்முறையினைப் பிரயோகித்த‌ இலங்கை இராணுவத்தினைச் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட அல்லது மேற்பட்ட ஓர் அமைப்பாக முன்னிறுத்துவதே. நாளை சிங்கள மக்களில் வறியவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகள் தொடர்பிலே அவர்கள் ஏதாவது போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் மேற்கொள்ளும் போது தமிழ் மக்களைப் படுகொலை செய்த அதே இராணுவத்தினை இலங்கை அரசு போராடும் சிங்கள மக்களின் மீதும் கூட ஏவலாம். 1989 கிளர்ச்சிக் காலத்திலும், ரத்துபஸ்வலப் போராட்டங்களிலேயும் அரசின் வன்முறை சிங்கள மக்களின் நலிவுற்ற பிரிவினரின் மீது இராணுவத்தின் உதவியுடன் ஏவப்பட்டது. எனவே, இந்த மன்னிப்புக் குறித்து சிங்கள மக்கள் மௌனம் காப்பதுவோ அல்லது அதனைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவதோ கூட, இராணுவ மயமாக்கத்தினையும், அரச வன்முறையினையும் சாதாரணப்படுத்தும் செயல்முறைகளாக‌ மாறி ஒரு நாள் அவர்களுக்கே கூட அது ஆபத்தாக அமையலாம். இந்த மன்னிப்புக் குறித்து நீதியினை வலியுறுத்தும் நாட்டின் எல்லா மக்களும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.

அசங்க வெலிகல, சிரேஷ்ட ஆய்வாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், அரசமைப்பு சட்டத்திற்கான எடின்பேர்க் நிலையத்தின் இயக்குநர், இந்த தீர்மானத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றார்.

இந்த வழக்கில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக இரு கேள்விகள் எழுகின்றது. இந்த வழக்கு குறி​த்த கொடூரமான விடயங்களையும், முழுமையான மேல்முறையீட்டு நடைமுறைகளின் பின்னரான தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் உலகளாவிய நோய்தொற்று நேரத்தில் இந்த பொதுமன்னிப்பை வழங்குவது ஏன் முன்னுரிமைக்குரிய விடயம் என்பது முதலாவது கேள்வி ? இந்த வழக்கில் நீதி பிழைத்தது என்பதற்கான சிறிய தோற்றப்பாடும் இல்லை.

இரண்டாவதாக, கொலை குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது குறித்து விசேட நடைமுறைகளை அரசமைப்பு முன்வைத்துள்ளது.

இதற்கு விசாரணை நீதிபதியின் அறிக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனை, நீதிபதியின் பரிந்துரை ஆகியன அவசியம். அதன் பின்னரே ஜனாதிபதி பொதுமன்னிப்பிற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

நீதிதுறையைச் சேர்ந்த தீர்மானங்களை எடுப்பவர்கள், உத்தியோகபூர்வமான சட்டத்துறை, அரசியல் நிறைவேற்று துறை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நடைமுறைகள், ஜனாதிபதி தனது அதிகாரத்தினை  மிகவும் உச்ச கவனத்துடனும் தெளிவாக ஆராய்ந்த பின்னரே பயன்படுத்தவேண்டும் என்பதற்காக காணப்படுகின்றன. குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையைப் பாதுகாப்பதற்கும் பொதுமன்னிப்பை வழங்குவது என்ற அடிப்படையில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் இந்த நடைமுறைகள் காணப்படுகின்றன.

முன்னைய வழக்குகளில் (மிகச் சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் ஞானசார தேரர்) இந்த நடைமுறைகள் அரசமைப்பின் உணர்வின் அடிப்படையிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையிலும் பின்பற்றப்பட்டன என்பதற்கான மிகச்சிறிய ஆதாரங்களும் இல்லை.

இந்த பொதுமன்னிப்பு சர்ச்சைக்குரியது என்பதற்கான இரு காரணங்களும் இவையே.

 மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ, மக்களுக்கும் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் இடையில் நம்பிக்கையின்மையும் தொடர்பின்மையும் காணப்படும் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார்.

இலங்கையில் இராணுவத்தினர் புரிந்த குற்றங்கள் பல. இராணுவச் சீருடை என்பது பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்கும், பொதுமக்களை கொலை செய்வதற்கும், கடத்துவதற்குமான அனுமதிப்பத்திரம் போன்ற நிலை காணப்படுகின்றது.

இராணுவத்தினரின் குற்றங்களுக்காக பொறுப்புக்கூறல் என்பது எப்போதாவது இடம்பெறும் விடயமாகும். 1971இல் கதிர்காமத்தில் பிரேமவதி மனம்பேரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை, 1980-90களில் எம்பிலிப்பிட்டியவில் மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை, 2000ஆம் ஆண்டு மிருசுவில் (யாழ். மாவட்டம்) படுகொலைகள் ஆகியவை தொடர்பிலேயே நீண்ட கால விசாரணைகளின் பின்னர் படையினர் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டனர்.

மிருசுவில் படுகொலையில் தண்டனை வழங்கப்பட்ட படைவீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை சாட்சிகளின், விசாரணையை மேற்கொண்டவர்களின், வழக்கு தொடுநர்களின், நீதிபதிகளின், பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் ஓங்கி விழுந்த அறையாகும்.

தற்போது இராணுவ வீரர்களுக்கும் கடற்படையினருக்கும் எதிராக விசாரணைகளும் ஆட்கொணர்வு மனுக்களும் காணப்படுகின்றன.

இந்த பொதுமன்னிப்பு என்பது பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் குடும்பத்தவர்களுக்கும், உயிர்தப்பிய நிலையில் இராணுவத்தினர் கடற்படையினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளவர்களுக்கும், சாட்சிகள், விசாரணையை மேற்கொண்டவர்கள், வழக்கு தொடுநர்கள், நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட எதிர்மறையான சமிக்ஞையாகும்.

முழு நாடும் மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸினை எதிர்கொண்டுள்ள வேளையில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். தற்போது  இலங்கையில் நாங்கள் ஈவிரக்கமற்ற ஆபத்தான கொலைகாரர்கள் வீதியில் சுதந்திரமாக நடமாடுவதையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

 அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்வதன் மூலம் கொரோனாவின் பின்னரான இலங்கையில் போர்க்குற்றங்களை மறைக்கின்ற, போர்க்குற்றவாளிகளை மன்னிக்கின்ற ஓர் அரசியற்சூழல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்.

உலகம் முழுவதும் சமூக இடைவெளி பற்றியும் தனிமைப்படுத்தல் பற்றியும் அச்சப்பட்டுக்  கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைத்  தனிமைப்படுத்தும் விதத்திலும் இன இடைவெளியை அதிகப்படுத்தும் விதத்திலும் சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்திருக்கிறது.

படைக்கட்டமைப்புக்கும் ராஜபக்‌ஷக்களுக்கும் இடையிலான உறவு சீமெந்தினால் கட்டப்பட்ட ஒன்று. படைத் தரப்பைத் தண்டிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ முடிவாக அக்குற்றங்களைச் செய்யுமாறு உத்தரவிடும் அரசியல் தீர்மானத்தை எடுத்த ராஜபக்‌ஷக்களை தண்டிப்பதுதான். ஏனவே, ராஜபக்‌ஷக்கள் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்ததிலிருந்து படைத் தரப்பைத் தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாகக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள். சிவில் சேவைகளை படைமயப்படுத்துவது, ஓய்வு பெற்ற படைப் பிரதானிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவது, ஐ.நா. தீர்மானத்தை எதிர்ப்பது போன்ற எல்லா நடவடிக்கைகளும் படைத்தரப்பைத் தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாகக் கட்டியெழுப்பும் நோக்கிலானவைதான்.

இது விடயத்தில் கொரோனா அவர்களுக்கு விழுந்த ஒரு லொத்தர். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் படையினரிடம் கையளித்ததன் மூலம் இறுதியிலும் இறுதியாக நாடு கொரோனாவை  வெற்றி கொள்ளும் பொழுது அந்த புகழ் அனைத்தும் படைத் தரப்புக்கே சேரும். இதன் மூலம் படைத்தரப்புக்குப் புனித நீர் தெளிக்கலாம். வெள்ளை அடிக்கலாம்.

இவ்விதமாக படைத்தரப்பைப் பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு படை வீரருக்கு கொரோனாக்  காலத்தில் அரசாங்கம் மன்னிப்பு வழங்கி இருக்கிறது. தமிழ் மக்களின் கவனமும் உலகத்தின் கவனமும் ஒரு வைரஸின்  மீது குவிந்து இருக்க அந்த வைரஸை வெற்றிகொள்ளும் நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கும் படைத்தரப்பை  மகிழ்விக்கும் விதத்தில் சுனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இதன் மூலம் ஓர் உலகப் பேரிடரின் போதும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் எதையும் கற்றுக் கொள்ளாது என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இலங்கைத்தீவு இரண்டு உலகப் பொதுப் பேரிடர்களை சந்தித்திருக்கிறது. முதலாவது சுனாமி இப்பொழுது கொரோனா.

சுனாமியிலிருந்து இந்தோனேசிய அரசும் அதற்கெதிராக போராடிய அச்சே மக்களும் பெற்றுக்கொண்ட படிப்பினைகளின் விளைவே அங்கு ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை ஆகும். ஆனால், இலங்கைத் தீவு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில்  தோல்வியுற்றது.

இப்பொழுதும் கொரோனாத் தாக்கத்திலிருந்தும் அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளத் தயாரில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், கொரோனாவுக்குப் பின்னரான இலங்கைத்தீவில் பெரும்பாலும் படைத்தரப்பைக்  கொண்டாடும் ஓர் அரசியலே கோலோச்சும். அதாவது, போர்க்குற்றங்களை மறைக்கின்ற போர்க்குற்றவாளிகளை மன்னிக்கின்ற ஓர் அரசியற்சூழல். அதாவது, தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற  ஓர் அரசியல் சூழல். சுனில் ரத்னாயக்கவிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பு  கொரோனாவுக்குப் பின்னரான அந்த அரசியலை முன்னுணர்த்துகின்றது.

பவானி பொன்சேகா, சிரேஷ்ட ஆய்வாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கொவிட் 19 இன் காரணமாக சமீபத்தில் சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுத்த பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகின்றார்.

யாழ்ப்பாணத்தில் அப்பாவி பொதுமக்களை  கொடூரமாகக் கொலை செய்த சுனில் ரத்னாயக்கவிற்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியமை குறித்து கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 2019 இல் உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது, இதன் மூலம் ஆரம்பக் கட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்ற தெளிவான சமிக்ஞையை அது வழங்கியது.மேலும், இலங்கையின் மிகவும் உயர்ந்த நீதிமன்றம் இந்தச் சம்பவத்தில் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.

பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்துள்ள அமைப்பு முறையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்ட வழமைக்கு மாறான தருணம் இது.

ஜனாதிபதி தனது நடவடிக்கைகள் மூலம், பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது கண்ணிற்கு எட்டாத விடயமாகவேயிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை மேலும் ஆழமானதாக்கியுள்ளார்.

சிவில் சமூகம் சிறைச்சாலை சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கொவிட் 19 சூழமைவில் இந்த வேண்டுகோள் அதிக முக்கியத்தவத்தை பெற்றுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட காலம், உரிய நடைமுறை ஒன்று உள்ளபோதிலும், சிறைச்சாலை தொடர்பான யதார்த்தபூர்வமான பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்கான ஆர்வம் உள்ளபோதிலும், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பை வழங்கும் நடைமுறையை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய காலம் என்பது தற்செயலானது இல்லை, நன்கு திட்டமிடப்பட்டது என்கின்றார் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன.

கரிசனையுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முனைகின்ற வேளையில், பிணைகளை செலுத்த முடியாதவர்கள், சிறிய குற்றங்களுக்காக தண்டனையை அனுபவிப்பவர்கள், உயிராபத்தான நோயை எதிர்கொண்டுள்ளவர்கள் போன்றவர்களை  விடுதலை செய்வதன் மூலம் சிறைகளில் சனநெருக்கடியை குறைத்து கொவிட் 19 பரவலைத் தடுக்கலாம் என்ற யோசனைகளை முன்வைத்து வருகின்றவேளை, 8 தமிழர்களைப் படுகொலை செய்தமைக்காக தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர் சிறையிலிருந்து வெளியேறுவதும், ஏனையவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலேயே தொடர்ந்தும் இருப்பதும் முரணானதாக உள்ளது.

இந்த நெருக்கடியான தருணத்தில் சார்ஜன்ட் ரத்னாயக்கவை அரசாங்கம் விடுதலை செய்ய தீர்மானித்தமை தற்செயலானதல்ல. ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் இதுவுமொன்றாகக் காணப்பட்டதால் அவர் பதவியேற்ற நாள் முதல் இந்த பொதுமன்னிப்பு குறித்து பல மாதங்களுக்கு முன்னரே வதந்திகள் வெளியாகியிருந்தன,

கொவிட்-19 சூழ்நிலையில் இராணுவம் குறித்து எழுந்துள்ள நன்மதிப்பைப் பயன்படுத்தி தண்டனை வழங்கப்பட்ட படை வீரர் ஒருவரை விடுதலை செய்வது என்பது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். ஊடகங்களின் முன்கூட்டிய செய்திகளுக்குப் பின்னர் இந்த விடுதலை இடம்பெறாததும் வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பொதுமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை செய்ய முடியாது, ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் நீதிமன்றங்களை நாடமுடியாது. இதனால் இது நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும்.

அரச ஊடகங்கள் உட்பட விடயத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றி சித்திரிக்கும் சக்திகள் இந்த நீதிமன்ற நடவடிக்கை என்பது முன்னைய அரசாங்கம் யுத்த வீரர்களுக்கு எதிராக முன்னெடுத்த பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஒன்று என்று சித்தரித்து வருகின்றனர்.

பிரகீத் எக்னலிகொடவின் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் விவகாரத்தில் இந்த தந்திரோபாயம் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் பார்த்துள்ளோம்.

ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் மேலும் ஐவருமாக எட்டுப் பேர் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், அதற்கு நீதி வழங்கப்படவில்லை என்பதே உண்மை. இவ்வாறான ஈவிரக்கமற்ற குற்றங்களுக்கு உள்நாட்டில் நம்பகத்தன்மை மிக்க – இல்லையென்றால், இலங்கையின் மிகவும் உயர்ந்த நீதிமன்றம் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனது அதிகாரங்களை தன்னிச்சையாகப் பயன்படுத்துகின்றார் என்றால், சர்வதேச நீதிக்கான பிரச்சாரங்கள் இடம்பெறுவது குறித்து நாங்கள் ஆச்சரியமடையப்போகின்றோமா?​

கொவிட்-19 சிறைச்சாலையினுள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், பிணைத் தொகை வழங்கமுடியாமல் தண்டனை அனுபவிப்பவர்கள், குழந்தைகளோடு சிறையிருக்கும் தாய்மார்கள், 2 வருடங்களுக்கும் குறைவான தண்டனையினைப் பெற்றுள்ளவர்களை குற்றச்செயல்களின் தீவிரம் மற்றும் தன்மை குறித்து கருத்திற்கொண்டு விடுதலை செய்யும் சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வழங்கியிருந்தனர். இந்த மகஜரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கும் தீர்மானத்தினைச் சட்டமா அதிபர் துரிதப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

சுனில் ரத்னாயக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக பலர் ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், ‘ஊறுகாய்’ பேஸ்புக் தளம், “சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்யலாம் என்றால் ஏன் சுதாகரனை விடுதலை முடியாது” என்று கேள்வி எழுப்பியிருந்தது.