பட மூலம், avax.news

எம்முடைய தேசிய கீதம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள கருத்துகள், ஆலோசனைகள் அதனோடு உருவாகியுள்ள விவாதங்களை நான் நல்ல விதமாகவே பார்க்கிறேன். கலாசாரம், பண்பாடு, வரலாறு, கலை போன்றன குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அல்லது பெற்றுக் கொள்ளாத, அரச கல்வி முறை ஊடாக தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் தலைமுறையினருக்கு இந்தக் கலந்துரையாடல்களின் மூலம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

நாம் என்ன நோக்கத்திற்காக தேசிய கீதத்தைப் பாடுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே எந்த மொழியில் தேசிய கீதத்தைப் பாடவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும். அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. நமது தேசிய கீதத்திலேயே உள்ளடங்கியிருக்கிறது.

யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே

එක මවකගෙ දරු කැල බැවිනා
යමු යමු වී නොපමා
ප්‍රේම වඩා සැම හේද දුරැර දා
නමෝ නමෝ මාතා

இன, மத,பேதமில்லாமல் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒவ்வொருவரும் அன்புடன் வாழும் நாடு என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. இதில் இருப்பது போல் நடந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். தேசிய கீதத்தில் உள்ளடங்கியிருப்பவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஒருபோதும் எம்மால் தேசிய கீதத்தைப் பாடமுடியாது. ஆகவே, நாட்டில் வசிக்கும் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதி அவர்களுடைய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் விருப்பத்திற்கமைய பாட அனுமதிப்பதே தேசிய கீதத்தில் உள்ளடங்கியிருப்பவற்றுக்கு மரியாதை செலுத்தும் முறையாகும். ஏனோ தானோவென்று கடமைக்காக பாடுவதை விடுத்து, அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உணர்வோடு பாடுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் வழங்கவேண்டும்.

பெரும்பான்மை சிங்கள மக்களான நாம் திறமையான, ஸ்மார்ட்டான மனிதர்கள் என்றால், நாம் செய்யவேண்டியது, இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் நாட்டின் மீது அன்பை ஏற்படுத்தக் கூடிய சமூக அரசியல் சூழல் ஒன்றை உருவாக்குவதேயாகும். அப்படி இல்லாமல், ஏனைய இன மக்கள் தேசிய கீதத்தைப் பாடும்போது பல்லைக் கடித்துக்கொண்டு, “அவர்களுடைய மொழியில் பாட எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்…” என்று சிந்திக்கும் நிலைமையை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. அவர்களுக்கு நெருக்கமான மொழியில் நாட்டைப் பற்றி பாடும்போது, ஏற்படும் உணர்வு நம் நாட்டுக்கு முக்கியமாகும்.

என்னுடைய தனிப்பட்ட யோசனை என்னவென்றால், அனைத்து நாட்டு மக்களுக்கும் பொதுவான விழாக்களில் தேசிய கீதத்தை மூன்று பகுதிகளாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து பாடுவதே சிறப்பானது. எல்லோரும் மற்றைய இன மக்களின் மொழியில் பாடும்போது தேசிய கீதத்தில் உள்ளதன் படி பன்மைத்துவத்துடன் கூடிய ஒரு குடும்பத்தின் சகோதரத்துவம், ஒற்றுமையை உணரக்கூடியதாக இருக்கும். எங்களால் போர் புரிய முடியாது, ஆனால், ஒன்றாக இணைந்து கீதம் பாட முடியும் என்பதையும், தேசிய கீதத்தைப் பாடுவதன் மூலம் ஒவ்வொருவருக்கும் இடையில் உணர்வினை பரிமாற்றிக்கொள்வதற்கான கீதமாக இதனை மாற்ற முடியும் என்பதையும் எம்மால் செய்துகாட்ட முடியும்.

உலக நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளின் தேசிய கீதங்கள், கொடிகள் எடிட் செய்யப்படுகின்றன. வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. கலை வடிவங்களாக மாற்றப்படுகின்றன. தங்களது மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும், அவ்வாறு இடம்பெறுகிறது. பெரும்பாலும் இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், உத்தியோகபூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து யோசனை முன்வைக்க முடியும்.

கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான மஹகம்சேகர, எம்மிடையே பிரிவினைகள் இருப்பதால் இன்னும் எம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறுவது போல, நாம் எமது நாட்டு மக்களை பிறப்பின் அடிப்படையிலேயே சாதி, மதம், இனம் என்று அடையாளப்படுத்துகிறோம். அதனூடாக நாம் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். குறைந்தபட்சம் தேசிய கீதம் பற்றிய பிரச்சினையைப் பேசித்தீர்த்துக்கொள்ள முடியாத முட்டாள் கூட்டமாக நாம் இருக்கிறோம்.

எதிர்காலத்தில், இன்னும் 50 வருடத்திலாவது சிறந்ததொரு தலைவரை நாங்கள் சந்திக்கக்கூடும். எமக்கு அறிவை வழங்கக்கூடிய, புதிதாத சிந்திக்கக்கூடிய வகையில் புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகம் செய்யும், சாதி, மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றாமல் அவற்றை இல்லாமல் செய்யும் வகையிலான சமூக சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரும், சட்டத்தின் ஆட்சியை அனைவருக்கும் சமமானதாக்கும், முதுகெலும்புள்ள தலைவராக அவர் இருக்கவேண்டும். அப்போது அவர் இன ஒற்றுமை கருதி தேசிய கீதத்தை முற்போக்கான விதத்தில் மறுசீரமைக்கும்போது எதிர்கால சந்ததியினர் முன்னிலையில் இன அடிப்படையில் முடிவுகளை எடுத்து இரத்தத்தைத் சிந்திய முட்டாள்தனமான மனிதக் கூட்டம் என்ற அவமானத்தைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டாவது இந்த தேசிய கீதத்தின் மீது இனவாத சாயம் பூசாமல் பார்த்துக்கொள்வோம்.

எதிர்காலம் உங்களுக்குத் தெரியாவிட்டாலும் எதிர்காலத்துக்கு உங்களைத் தெரியும்.

தனஞ்சய கருணாரத்ன