பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர்
மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.
வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன் இந்த குடிலில்தான் வாழ்ந்துவருகிறார்.
மின்சாரம் இல்லாத இந்த கிராமத்தை இரவு முழுவதும் கடும் இருள் சூழ்ந்திருக்கும். இவர்கள் தூங்கும் வரை சிறிய மண்ணெண்னை விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னர் விசப்பாம்பொன்றும் குடிலுக்குல் வந்ததாகக் சுகந்தி கூறுகிறார்.
“எங்கள் இருவருக்கும் ஶ்ரீலங்கா பிரீமியர் லீக்கின் முதல் போட்டியைப் பார்ப்பதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. நாங்கள் சந்தோசமாக போனோம். 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் நான் முதல் இடத்தைப் பெற்றதற்காகவே இந்த அழைப்பு வந்தது. நாமல் ராஜபக்ஷ வந்து என்னை அணைத்துக்கொண்டார். அப்போது நான் புனர்வாழ்வு முகாமில் இருந்தேன். இராணுவத்தில் இருக்கும் மேஜர் ஒருவர்தான் இந்தப் போட்டிக்கு போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். நூறு புள்ளிகளில் 96 புள்ளிகளை நான் பெற்றேன். ஆனாலும், நாங்கள் இப்போது இருக்கும் நிலைமையைப் பாருங்கள்” என்று கூறுகிறார் பிரேமகுமார்.
“அதனோடு ஆரம்பமான பரா ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் வந்தவர்களே அனுப்பப்பட்டார்கள். 96 புள்ளியென்பது போட்டியொன்றை வெல்வதற்கான புள்ளியாகும். யாரும் நூற்றுக்கு 90 புள்ளிகளைக் கூடப் பெறுவதில்லை. அன்று என்னை அனுப்பியிருந்தார்கள் என்றால் இன்று எங்களுடைய வாழ்வில் மாறுதல் ஏற்பட்டிருக்கும். நான் வெற்றி பெறுவதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
முகம் காயமடைந்த நிலையில் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருந்த சுகந்தியை நான் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் பரஸ்பரம் எங்களுக்கு உதவிகள் செய்துகொள்ளவேண்டும்.”
சுகந்திக்கு இப்போது 39 வயது. 19 வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்.
“எங்களுடைய மக்களுக்காக போராடுவதற்கு ஆசையாக இருந்தது. ஒரு இனமாகப் போராடிக் கொண்டிருக்கும்போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய தோழிகள் நிறையப் பேர் அந்தக் காலப்பகுதியில் இயக்கத்தில் சேர்ந்துகொண்டார்கள். அப்போது நாங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். அம்மாவும் குண்டுத்தாக்குதல் ஒன்றில் சிக்கி உயிரிழந்திருந்தார்.
புதுக்குடியிருப்பு பயிற்சி முகாமில் இருந்தபோது ஷெல்லொன்று வந்து விழுந்தது. 18 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். பொதுமக்களும் உயிரிழந்தார்கள். எனது கீழ் தாடைப் பகுதியைக் கிழித்துக்கொண்டு குண்டுச் சிதறலொன்று சென்றது. நீண்டகாலம் இயக்கத்தின் வைத்தியசாலையில்தான் இருந்தேன். பிறகு இயக்கத்தின் வைத்திய பிரிவில் சேர்ந்துகொண்டேன்.
நாங்கள் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். குளமொன்றில் இருந்த குண்டொன்று வெடித்ததில் இவருக்கு கையும் காலும் பறிபோனது. இவரும் இயக்கத்தில் இருந்ததால் 2009 இருவருமாக இராணுவத்திடம் சரணடைந்தோம். ஒன்றரை வருடத்தில் புனர்வாழ்வு முகாமிலிருந்து என்னை அனுப்பினார்கள். இவருக்கு கொஞ்ச காலம் இருக்கவேண்டி ஏற்பட்டது.
தையல் இயந்திரமொன்றும் சைக்கிளொன்றும் அரசாங்கம் தந்தது. நண்பரொருவர் ஆடொன்றைத் தந்தார். பாலெடுக்கவேண்டும் என்றால் அதுக்கும் நல்ல சாப்பாடு தேவைதானே. இல்லையென்றால் தண்ணீர் மாதிரிதான் பால் வரும். நல்ல சாப்பாடு வாங்கவேண்டும் என்றால் காசு தேவை. காசும் இல்லை, பாலும் இல்லை.
நாங்கள் தெரிந்த ஒருவருடைய ஒரு ஏக்கர் தென்னங்காணியொன்றை பராமரித்துவருகிறோம். 150 கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவேண்டும். ஒரு வாரத்துக்கு 1000 ரூபா தருவார்கள். 4000 ரூபாதான் எங்களுடைய ஒரு மாத வருமானம்.
எங்களுக்கும் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. வேலியொன்று இல்லாததால் பயிர்செய்ய முடியாது. கொழும்பு அரசாங்கம் இலவசமாக தண்ணீர் தருகிறது. மாகாண சபை பற்றி மட்டும் கேட்கவேண்டாம். இதுவரை எங்களுக்கு செய்தது ஒன்றுமில்லை.
திரும்பவும் போரொன்று ஆரம்பமாவதற்கு நான் ஒருபோதும் விருப்பமில்லை. ஆனால், பிரபாகரன் மீது மரியாதை இருக்கிறது. அவர் ஒரு நேர்மையான போராளித் தலைவர். அரசியல் பற்றி பிரேம்குமாரிடம் கேளுங்கள். எனக்கென்றால் வெறுத்துப்போயுள்ளது.”
“நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத்தான் வாக்களித்தேன். இனி வாக்களிக்க மாட்டேன்” என்கிறார் பிரேம்குமார். “இனி கோட்டாபயவிற்குத்தான் கொடுப்பேன். தாக்குதல் நடத்தியவர்களுக்காவது எங்கள் மீது ஒரு எண்ணம் இருக்கும்தானே” என்று அவர் மேலும் கூறுகிறார். அருகில் உட்கார்ந்திருக்கும் சுகந்தி, “கோபத்தால் பேசுற பேச்சு இது” என்று கூறுகிறார்.
பிரேம்குமார் ஒரு கையில் மண்வெட்டியைப் பிடித்துக்கொண்டு மண்ணை கொத்துகிறார். இந்திய உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டிற்குத் தேவையான சீமேந்துக் கல்லை இருவரும் இணைந்தே செய்கிறார்கள். வீட்டிற்கான அடித்தள வேலை நிறைவடைந்துள்ளது.
நிலம் காய்ந்து காணப்படுகிறது. காற்று சூடாக இருக்கிறது. மழையைக் கண்ட நாளே நினைவில்லை. ஆனாலும் சுகந்தியினதும் பிரேம்குமாரினதும் முகங்களில் எதிர்பார்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
“விட்டுத்தள்ள முடியாது, எப்படியாவது வாழத்தானே வேண்டும்” வரண்டு வெடித்துப்போயிருக்கும் மண்யைப் பார்த்துக் கொண்டு சுகந்தி கூறுகிறார். பிரேம்குமார் 5 கவிதைப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒரு புத்தகம் மட்டும் வெளியாகியிருக்கிறது.
“நாங்களும் வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம்” பிரேம்குமாரின் குரலில் விரக்தி தெரிகிறது. “ஏன் போனவர்களினால் முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் கிடைக்கவில்லையா? என்று நான் கேட்டேன்.
“ஜெனீவாவில் பேரணி செல்லும் புலம்பெயர் மக்களுக்கும் இங்கு வாக்கு கேட்டுவரும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. இரண்டு தரப்பும் ஏமாற்று வேலைதான் செய்கிறது” என்கிறார் பிரேம்குமார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக தங்களுடைய இளமையை தியாகம் செய்த சுகந்தியும் பிரேம்குமாரும் ஏழ்மையின் அடிமட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்குமாறு சமூக சேவை அமைப்பொன்று வழங்கிய 5000 ரூபாவில் கோழி வளர்ப்பதற்கு இருவரும் தீர்மானித்திருக்கிறார்கள். அடுத்த 5000 ரூபா கோழி வளர்ப்பில் வெற்றியடைந்தால் மட்டுமே கிடைக்கும்.
இவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, இங்கிருக்கும் பல தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் நிலைமையும் இதுதான். ஒரு அம்மா, ஒரு நாளைக்கு தான் 6,7 முட்டைகள் விற்று பெறும் வருமானம் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்.
பக்கத்து கிராமத்தில் உள்ள மக்களின் காணிகளில் ‘கருவா’ அரபி மொழியில் ஆடு என்று அர்த்தம்) என்றழைக்கப்படும் செடிகள் கூட்டம் கூட்டமாக வளர்ந்திருக்கிறது. இதனுடைய உண்மையான பெயர் தெரிந்தவர்கள் யாரும் அங்கிருக்கவில்லை. 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு வந்த இந்திய இராணுவத்தினர் உணவுக்காக நூற்றுக்கணக்கில் ஆடுகளையும் கொண்டுவந்திருந்தனர். இந்த ஆடுகளுக்குத் தீனியாக கருவா செடிகளை இந்திய இராணுவத்தினர் வளர்த்திருக்கிறார்கள். இந்தச் செடியில் விளையும் சிறிய காய் ஆடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்றும் கூட மன்னாரின் பெரும்பகுதியில் இந்தச் செடிகளைக் காணலாம். போரின்போது இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பியபோது இவர்களுடைய நிலத்தை கருவா செடிகளே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.
இலங்கை அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ இந்தக் கருவா காட்டை சுத்தம் செய்து கொடுக்கவில்லை. இறுதியில் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து 62 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்து கொடுத்துள்ளன. இப்போது மக்கள் பயிர்ச்செய்கை செய்து வருகிறார்கள்.
மிக சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வேலைகளைக் கூட செய்யாத நல்லாட்சியிடம் அல்லது எந்நாளும் அரசியல் பேச்சுக்களை மாத்திரம் பேசும் மாகாண சபையிடம் இந்த மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை.
இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் இங்கு வந்து குடியேறியிருக்கும் சில குடும்பங்களும் இருக்கிறார்கள். அவ்வாறான ஒரு குடும்பத்தில் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைய வயதுடைய பெண்ணொருவரைச் சந்தித்தேன். வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருடைய குடும்பமும் கோழிகளை நம்பியே இருக்கிறது. தன்னுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கூட அவரால் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. அவருடைய அந்த அப்பாவித்தனமான சிரிப்பை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
சுகந்தியும் பிரேம்குமாரும் சொல்வது போன்று அவர்களுக்கு அவர்கள் மட்டுமே துணை. இதுவரைக்கும் அப்படித்தான். “எப்படியிருந்தாலும் நாங்கள் முகம்கொடுத்த சம்பவங்களை எங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது. மாற்றமொன்று தேவைப்படுகிறது” என்கிறார்கள் சுகந்தி, பிரேம்குமார் தம்பதியினர்.
කාෂ්ටක පොළවට යටවෙන සටන්කාමී ජීවිත! என்ற தலைப்பில் சுனந்த தேசப்பிரிய எழுதி ‘ராவய’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
குறிப்பு: பார்த்தீனியம் செடியையே கருவா என்று கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.