பட மூலம், South China Morning Post

கௌரவ ரணில் விக்கிரமசிங்க,

இலங்கை குடியரசின் பிரதமர்,

அலரி மாரிகை,

கொழும்பு 03

 

பிரதமர் அவர்களே,

நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட எனது தந்தையும், உங்கள் நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்க குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். ஜனாதிபதி என்ற முறையில் தான் நாட்டில் அனைவரும் அச்சமில்லாமல் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போவதாக கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியிருந்ததற்குப் பதிலளிக்கும் விதத்தில் எனது தந்தையின் படுகொலைக்கும், ஏனைய பல கொடூரமான குற்றச் செயல்களுக்கும் ராஜபக்‌ஷ மன்னிப்புக் கேட்பாரா என நீங்கள் அவரிடம் கேட்டிருந்தீர்கள்.

நான் உங்களுக்கு மன ஆறுதலைத் தருகிறேன். இல்லை. கோட்டாபய ராஜபக்‌ஷ ஒருபோதும் என்னுடைய தந்தையின் படுகொலைக்கு மன்னிப்புக் கேட்கமாட்டார். கடந்த 10 வருட காலத்தின் போது பல தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்குபற்றிய போது அந்த விடயம் குறித்து தாம் பெருமிதமடைவதாக அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதற்கு மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்பதில் அவர் திடமாக இருந்து வந்துள்ளார். ஆனால், பிரதமர் அவர்களே! இன்று நீங்கள் ஒரு பெரும் கொலைகாரராக சித்தரிக்கும் அந்த நபருக்கு கடந்த 4½ வருட காலம் பாதுகாப்பு வழங்கியமைக்கும், அவரை அரவணைத்தமைக்கும் நீங்கள் மன்னிப்புக் கேட்பீர்களா?

என்னுடைய தந்தை மரணித்த நாள் தொடக்கம் வாக்குகளை சேகரிப்பதற்காக நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி வந்துள்ளீர்கள். 2015 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது என்னுடைய தந்தையின் கொலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனூடாக நீங்கள் நாட்டின் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஜனாதிபதி சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை உங்கள் கைக்குள் எடுத்து வந்தீர்கள். என்னுடைய தந்தையின் கொலைக்கு நீதி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கிய நிலையிலேயே இவை அனைத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள்.

நீங்கள் பதவிக்கு வந்தவுடனேயே உங்களுடைய முன்னுரிமைகள் மாற்றமடைந்தன. என்னுடைய தந்தையின் கொலைகாரர்கள் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உங்களுடைய ஆதரவை பெற்றுக்கொள்வதற்கென நான் 2015 பெப்ரவரி மாதம் உங்களை அலரி மாளிகையில் சந்தித்தேன். அச்சந்தர்ப்பத்தில் ஏனைய ‘முன்னுரிமைகள்’ இருந்து வருவதாகவும், நீதி “லசந்த தொடர்பாக மட்டும் இருந்து வரவில்லை” என்றும் நீங்கள் கூறினீர்கள்.

அதன் பின்னர் இந்த முன்னுரிமைகள் எவை என்பதனை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் அலுவலக ஆளணி பிரதானியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் எடுத்துவரப்பட்ட பொலிஸ், கோட்டாபய ராஜபக்‌ஷவை சட்டத்தின் முன்னால் கொண்டு வரவில்லை. எனது தந்தை ஏன் கொல்லப்பட்டார் என்பதனை நிரூபிக்கும் விடயத்தில் மிக் விமான கொள்வனவு பேரம் ஒரு நிர்ணயகரமான ஒரு பாகமாக இருந்து வருகின்றது என்ற விடயம் நிரூபணமாகியுள்ளது. ஆனால், FCIDக்குப் பொறுப்பாக இருந்த ஊழல் மிக்க அதிகாரி ஒருவர் உங்கள் கண்காணிப்பின் கீழ் மிக் விமான பேர புலன் விசாரணைகளை குழப்பியடித்ததுடன், கோட்டாபயவின் பெயரை அதிலிருந்து அகற்றினார்.

இது தேர்தல் காலமாக இருந்து வரும் காரணத்தினால் இப்பொழுது நீங்கள் அவரை பகிரங்கமாக கொலைகாரர் எனக் கூறி தாக்கி வருகின்றீர்கள். ஆனால், அவ்வாறு செய்யும் பொழுது கூட உங்கள் அலுவலக ஆளணி பிரதானி சாகல ரத்னாநாயக்கவும், ஏனைய அமைச்சர்களும் அவரை போய் பார்த்து, அவரின் வீட்டில் பல மணித்தியாலங்களை செலவிடுகின்றார்கள். உங்களுடைய அரசாங்கம் அவருக்கு முறையற்ற விதத்தில் அடையாள அட்டைகள், கடவுசீட்டுக்கள் என்பவற்றை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. உங்களுடைய சிரேஷ்ட உதவியாளரும், மருமகளுமான பெண்மணி சமூக வலைத்தளத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரச்சாரத்தை பகிரங்கமாக ஊக்குவித்து வருகின்றார்.

நீங்கள் கொலைகாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களை நீங்களும், உங்களுடைய ஊழியர்களும் இந்த விதத்திலேயே நடத்தி வருகின்றீர்கள். எவ்வாறிருப்பினும், என்னுடைய தந்தையின் வழக்கு தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவினரின் உதவி தேவைப்பட்ட பொழுது, உங்களை எந்த இடத்திலும் கண்டுபிடிக்க முடியாதிருந்தது.

பிரதமர் அவர்களே! இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் விசாரணையில் ஒத்துழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்த பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்? கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தகவல்களை தரும் மிக முக்கியமான நபர் ஒருவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்ற விடயம் உங்களிடம் தெரிவிக்கப்பட்ட பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்? மேலும், என்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பான முதன்மை விசாரணையாளர் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா ஜனாதிபதியினால் குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து தூக்கி எறியப்பட்ட பொழுது, நீங்கள் அதை எதிர்த்து ஒரு விரலையாவது அசைக்காதிருந்தது ஏன்?

இப்பொழுது பல மாதகாலமாக சட்டமா அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் திரிப்போலி கொலைக்கும்பல் சம்பந்தப்பட்ட விசாரணைகளின் குரல்வளையை பலவந்தமாக நெரித்துக் கொண்டிருக்கின்றார். இந்தக் குற்றச் செயல்களில் அவர்களுடைய பங்கினை மூடி மறைத்து, சாதாரண சிப்பாய்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். எக்னெலிகொடவின் கொலை தொடர்பாக கோட்டாபய ராஜபக்‌ஷ தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டிருந்தார் என இரு அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையிலும் கூட, எக்னெலிகொட வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த சத்தியப் பிரமாணத்துடன் கூடிய வாக்குமூலங்கள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் உபாலி தென்னக்கோணை தாக்கியிருந்த போதிலும், இப்பொழுது இரண்டு கனிஷ்ட தர சிப்பாய்கள் மட்டுமே அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். ராஜபக்‌ஷவும், திரிபோலிக் கும்பலும் சுதந்திரமாக விடப்பட்டுள்ளார்கள். இவை தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய ஆட்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு நீங்கள் எவையேனும் பயனுள்ள காரியங்களை செய்வீர்களா?

இல்லை. அதற்குப் பதிலாக உங்கள் குடும்பத்தினரும், சிரேஷ்ட ஊழியர்களும் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அதேவேளையில், நீங்கள் பகிரங்கமாக அவர் ஒரு கொலைகாரர் என உல்லாசக் கூச்சலிடுகின்றார்கள். நீங்கள் ஜனாதிபதியாக வந்தால் அல்லது பிரதமராக தொடர்ந்து நீடித்தால் உங்கள் கண்காணிப்பின் கீழ் கோட்டாபய ராஜபக்‌ஷ மிகவும் மர்மமான முறையில் அனுபவித்து வந்த முற்றுமுழுதான தண்டனை விலக்குரிமை தொடர்ந்தும் அதே விதத்தில் இருந்து வரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

என்னுடைய தந்தையின் மரணம் குறித்து பெருமிதமடைந்த நபர் இப்பொழுது முறையாக ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கிறார். அவருக்கு எதிராக களத்தில் இறங்கப்போகும் நபர் நீதி, சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்பு மற்றும் பொறுப்பு மிக்க ஆட்சி என்பவற்றை எடுத்துவரக் கூடிய நேர்மையான, துணிச்சலான ஓர் அரசியல்வாதியாக இருந்து வர வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். ராஜபக்‌ஷவுக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளர் பின்னறைகளில் இரகசியப் பேரங்களை மேற்கொள்ளும் ஒரு ஆளாகவோ, தன்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய கட்சி மற்றும் தேசம் என்பவற்றை காட்டிக் கொடுக்கும் விதத்தில் தன்னுடைய கொள்கைகளை காற்றில் பறக்கவிடும் ஒரு ஆளாகவோ இருந்துவரக்கூடாது என்றும் நான் பிரார்த்திக்கின்றேன்.

எனக்கு ஒரேயோரு இறுதி நம்பிக்கை உள்ளது. அதாவது, வெள்ளை வேன் யுகத்தின் கொடூரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களுமே அந்த நம்பிக்கையாகும். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நீதியை நிலைநாட்டுவதற்கென அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஒரு போட்டி வேட்பாளரினால் கோட்டாபய ராஜபக்‌ஷ சவால்களை எதிர்கொண்டு, தோற்கடிக்கப்படுதல் வேண்டும். தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்காக பாதிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஆளாகவும், அதன் பின்னர் தான் கொலைகாரர்கள் என அழைக்கும் நபர்களை தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வரவேற்கக் கூடிய ஒரு நபராகவும் அவர் இருந்து வரக்கூடாது.

சாதாண வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், இந்தத் தேசம் உங்கள் தயவிலும்,  உங்களுடைய நண்பர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் தயவிலும் இருந்து வந்தால், உங்களுடைய பழைய நண்பரான எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவுக்கு நீதி கிடைக்கும் என்பதில் ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை.

மிகுந்த நல்லெண்ணத்துடன்,

அஹிம்சா விக்கிரமதுங்க,

 

பிரதி: ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

பிரதி : ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர்கள்