பட மூலம், Selvaraja Rajasegar Photo
மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்நாட்டில் சட்டம் செல்லுபடியாகாத நிலையையும், அராஜகத்தையும் எடுத்து வந்தது. இந்தக் காலகட்டத்திலேயே தலிபான் (தாலித் என்ற சொல்லின் பொருள் மாணவர் என்பதாகும்; தலிபான் என்பது மாணவர்கள் என்ற பன்மைச் சொல்லை குறிக்கின்றது) களத்தில் இறங்கியது. அதற்கு முன்னர் ஒரு போதும் இந்த இயக்கம் அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை. நாட்டில் தலைவிரித்தாடிய அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், உறுதிப்பாட்டை எடுத்து வருவதற்குமென அது இவ்விதம் களத்தில் இறங்கியது.
தலிபான் இயக்கம் சரியானதா, தவறானதா என்பது மற்றொரு கலந்துரையாடலுக்குரிய ஒரு விடயமாகும். எனினும், அரசியல் மற்றும் ஆட்சி என்பவற்றுக்குள் தலிபான்களின் பிரவேசம் சோவியத் ஆக்கிரமிப்பு, ஆப்கன் விடுதலை போராட்டம் மற்றும் மேலைத்தேய நாடுகளின் நிதியுதவியினால் அங்கு செயற்பட்டு வந்த கூலிப்படையினர் செயற்பாடுகள் என்பவற்றின் பின்புலத்தில் நோக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று ரீதியிலான காரணமாகும். மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த கலந்துரையாடல்கள் நிவ்யோர்க் உலக வர்த்தக நிலையத்தின் மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை அடுத்து அரங்குக்கு வந்தன. இது, ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டதனை அடுத்து வலியுறுத்தப்பட்டது.
மத்ரஸாக்கள் மற்றும் தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு குறித்த கலந்துரையாடல் பொருத்தமானதாக இருந்து வருவதுடன், அது பொதுவாக ஆப்கானிஸ்தான் தொடர்பாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈராக் தொடர்பாக அவ்விதம் கூறப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் (பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை கொண்ட) மத்ரஸா மாணவர்களாகவே இருந்து வந்தார்கள். இதற்கு மாறான விதத்தில் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஈராக்கின் நிரந்தரமான இராணுவமாகவே இருந்து வந்தனர். எனவே, ஈராக் கலந்துரையாடல்களில் ‘மத்ரஸா’ என்ற பதம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானை தவிர, உலகின் வேறு எந்த ஒரு நாட்டிலும் பாரம்பரிய மத்ரஸா மாணவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதனை காண முடியவில்லை. அதற்குப் பதிலாக கல்லூரிகளில் படித்தவர்கள், மதச் சார்பற்ற பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ஆகியோரே வெளிப்படையாக தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். சுவாரஸ்யமாக 9/11 தாக்குதலை நடத்தியவர்களில் எவரும் மத்ரஸாக்களில் படித்தவர்கள் அல்ல. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் மத்ரஸாக்களில் படித்தவர்கள் அல்ல.
9/11 மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு என்பவற்றை அடுத்து உலகெங்கிலும் மத்ரஸாக்கள் மேலைய உலகின் இலக்குகளாகக் கொள்ளப்பட்டன. அவற்றை சூழ இஸ்லாம் குறித்த அதீத பீதி (இஸ்லாமோபோபியா) கட்டியெழுப்பப்பட்டது – இஸ்லாம் குறித்த அதீத பீதியை கிளப்பிய மேலைத்தேய ஊடகங்கள் சமூகத்தில் மத்ரஸாக்களின் வகிபங்குகள் குறித்து சாதாரண பொது மக்களுக்கு மத்தியில் அச்சத்தை கிளப்பி வந்தன. ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில் அல்லது வேறு ஏதேனுமொரு நாட்டை பொறுத்த வரையில் வெளிநாட்டு படையெடுப்புகளை எதிர்த்து நிற்பது ஆயுதப் பாதுகாப்புப் படையின் பொறுப்பு மட்டுமன்றி, ஆட்கள்வாய்ந்த ஏனைய பிரஜைகளதும் ஒரு கடப்பாடாக இருந்து வருகின்றது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றின் போது ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் தேசாபிமான மற்றும் தேசியவாத மாணவர் பிரிவினரின் வகிபங்கு என்னவாக இருந்து வரும்? வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமது நாடு சார்பில் போராடுவதற்கென அவர்கள் பிரதான நீரோட்ட சமூகத்துடன் இணைந்து கொள்ளமாட்டார்களா? ஒரு தேசத்தின் உயிர் நாடியாக இருந்து வரும் மாணவர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றுக்கு எதிராக தேசாபிமான போரொன்றில் பங்கேற்றும் பொழுது அவர்களை நாம் எவ்வாறு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என அழைக்க முடியும். இஸ்லாம் குறித்த அதீத பீதி உணர்வு மற்றும் மத்ரஸாக்களை தீவிரவாதத்துடன் பிணைத்து செய்தி வெளியிடும் மேலைத்தேய ஊடகங்களின் தந்திரங்கள் மேலைத்தேய பூகோள அரசியல் குரல்வளை நெறிப்புக்களுக்கு எதிராக ஒரு தேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்வருபவர்களின் நற்பெயரை கலங்கப்படுத்துவதுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த உத்தியாகவே இருந்தது. இது அவர்களை தனிமைப்படுத்தி காட்டியது.
இஸ்லாம் குறித்த அதீத பீதி உணர்வு மற்றும் மத்ரஸாக்கள்
9/11 அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் குறிப்பாக இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்தமை என்பவற்றை அடுத்து, இலங்கையில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் எழுச்சியடைந்தன. இந்த எழுச்சியுடன் இணைந்த விதத்தில் மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் ஒரு தொடர்பு இருந்து வருகின்றது என்ற விடயம் முன்வைக்கப்பட்டதுடன், உள்ளூர் கலந்துரையாடல்களில் ஒரு முக்கியமான தலைப்பாக இருந்து வந்தது. அன்று தொடக்கம் இந்த எதிர்மறையான சித்திரம் இதனை நிரூபித்துக் காட்டுவதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லாத விதத்தில், மக்களின் உள்ளங்களில் திணிக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து இந்த அச்சம் ஒரு கடும் பீதியாக நிலைமாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக, உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர் யார் என்ற விடயத்தை புத்திசாலித்தனமான விதத்தில் துருவி ஆராயும் செயற்பாட்டிலிருந்து நாட்டின் கவனம் அதனுடன் சம்பந்தப்படாத செயற்பாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலைமையாக இருந்து வருவதுடன், இந்த மனப்பதிவு தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான எத்தகைய சான்றுகளும் இல்லாத விதத்தில் இருந்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சம்பந்தப்பட்ட முரண்பாட்டின் முழுமையான பின்புலம் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு புரிந்துணர்வு அவசியமாகும். இதற்கு மாறான விதத்தில், இஸ்லாம் குறித்த அதி தீவிரமான பீதியை பரப்புவர்கள் மற்றும் பூகோள அரசியல் உத்திகளை வகுப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் வேண்டுமென்றே மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார்கள். இவர்கள் அநேகமாக, இலங்கையயை பூகோள அரசியல் ரீதியில் முடக்குவதற்கென செயற்பட்டு வரும் ஒட்டுமொத்தமான தாக்குதல் திட்டத்தின் உள்ளார்ந்த ஒரு பாகமாக இருந்து வர முடியும். அதன் மூலம் அவர்கள் மத்ரஸாக்கள் மீது பழியை சுமத்தி இலங்கையில் வாழும் இனத்துவ சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது அச்சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து ஒருவர் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது.
ஒரு மத்ரஸா என்றால் என்ன?
மத்ரஸா என்பது ஒரு அரபிப் பதமாகும், ‘பாடசாலை’ என்பதனையே அது குறிக்கின்றது. பிரித்தானிய காலனித்துவம் எமது சமூகத்தை ஆங்கிலமயமாக்கி இருந்தாலும் கூட, இலங்கையைப் போன்ற பாரம்பரிய முஸ்லிம் சமூகங்களில் குறிப்பாக முஸ்லிம் சமய பாடசாலைகள், ‘மத்ரஸாக்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த மத்ரஸாக்களின் வகை இஸ்லாம் மதம் மற்றும் அரபு மொழி வாசிப்புத்திறன் போன்ற ஆரம்ப அறிவை 15 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு வழங்கும். குர்ஆனை ஓதுவதற்கான ஆற்றலை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் மத்ரஸாக்கள் வரையில் பரந்த வீச்சில் இருந்து வருகின்றன. மத்ரஸாக்கள் அல்லது அரபுக் கல்லூரிகள் என்பன மௌலவிகளை உருவாக்குவதற்கு அல்லது முஸ்லிம் சமய அறிஞர்கள் மற்றும் இமாம்கள் ஆகியோர்களை உருவாக்குவதற்கென இஸ்லாமிய விஞ்ஞானங்கள் குறித்த அறிவை அவர்களுக்கு போதிக்கின்றது. பௌத்த பிக்குகளுக்கான பிரிவெனாக் கல்வியை ஒத்ததாகவே இது இருந்து வருகின்றது. மத்ரஸாக்களை பின்வரும் விதத்தில் வகைப்படுத்த முடியும்:
- குர்ஆன் மத்ரஸா: இது 15 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கான மத்ரஸாவாக இருந்து வருவதுடன், இந்த மத்ரஸாக்களில் இஸ்லாத்தின் ஆரம்ப அம்சங்கள் போதிக்கப்படுவதுடன், சடங்குகளை செய்வது எப்படி, திருக்குர்ஆனை எப்படி ஓதுவது போன்ற விடயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இது ‘தஹம் பாசல’ என்ற பௌத்த அறநெறிப் பாடசாலைக்கு இணையானதாகும். இந்த மத்ரஸாக்களில் படிக்கும் பிள்ளைகள் பாடசாலை மாணவர்களாக இருந்து வருவதுடன், மாலை நேரங்களிலேயே பிள்ளைகள் மத்ரஸாக்களுக்கு சமூகமளிக்கின்றார்கள்.
- ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா: இது திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கான ஒரு பள்ளியாக இருந்து வருகின்றது. இங்கு அடிப்படை அறபு மொழிக் கூறுகள், மனனம் செய்வது தொடர்பான விதிமுறைகள் மற்றும் குர்ஆன் ஓதுதல் தொடர்பான முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய மத்ரஸாக்களில் பொதுவாக 20 வயதுக்கும் குறைந்த இளைஞர், யுவதிகள் பங்கேற்பதுடன், அவர்கள் தமது வசதிக்கேற்ற பகுதி நேர பாடநெறிகளாக இவற்றை கற்று வருகின்றார்கள்.
- மௌலவி மத்ரஸா அல்லது அரபுக் கல்லூரிகள்: இவை பிரிவெனாக்களுக்கு இணையான இஸ்லாமிய உயர் கல்விக் கல்லூரிகளாக இருந்து வருகின்றன. இந்த மத்ரஸாக்கள் சமூகத்துக்கு பணியாற்றுவதற்கும், பள்ளிவாசல்களில் சமயக் கிரியைகளை முன்னின்று நடத்துவதற்குமென மௌலவிகளையும், இமாம்களையும் உருவாக்கி வருகின்றன. பொதுவாக இவை 4-6 வருட முழு நேர வதிவிடப் பாடநெறிகளாக இருந்து வருவதுடன், 15-21 வயதுப் பிரிவு இளைஞர் யுவதிகளுக்கென பாடங்களை நடத்தி வருகின்றன. தரம் 08 அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையை பூர்த்திசெய்த பின்னர் இதில் முழுநேர கல்வியில் இணைந்து கொள்ளும் ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலைகள் இருந்து வருகின்றன. ஒரு சில மத்ரஸாக்கள் அனாதை இல்லங்களாகவும் செயற்பட்டு வருகின்றன. அவை 6 வயதிலிருந்து பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதுடன், அவர்களுக்கு க.பொ.த சாதாரண தரம் வரையில் முறையான பொதுக் கல்வி வழங்கப்படுகின்றது. அதனுடன் இணைந்த விதத்தில் அவர்களுக்கு இஸ்லாமிய கல்வியும் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகைகளையும் சேர்ந்த மத்ரஸாக்களில் குர்ஆன் மத்ரஸாக்கள் பொதுவாக ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் ஆகியோருக்கென பொதுவாக பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பொது வசதிகள் இல்லாத ஒரு சில இடங்களில் அவை இந்த வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களின் வீடுகளில் நடாத்தப்படுகின்றன. அதே போல, ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸாக்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு வகை மத்ரஸாக்களையும் தவிர, மௌலவி மத்ரஸாக்கள் அல்லது அரபிக் கல்லூரிகள் என்பன பாரிய நிலையங்களாக இருந்து வருவதுடன், சாதாரணமாக அத்தகைய மத்ரஸாவொன்றில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் 50 – 500 மாணவர்கள் வரையில் கற்று வருகின்றனர். பெரும்பாலான கற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் வதிவிட நிகழ்ச்சித்திட்டங்களாக இருந்து வருவதுடன், இந்த மத்ரஸாக்களில் பெருமளவுக்கு குடும்ப ஆதரவு எதுவுமற்ற, வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும், அநாதைகளும் சேர்ந்து படித்து வருகின்றனர். ஒரு சில மத்ரஸாக்கள் சிறிய கட்டணங்களை அறவிட்டு வருகின்றன் ஆனால், பெருமளவுக்கு இவை சமூகத்தினால் வழங்கப்படும் நன்கொடைகளின் மூலம் மானியப் படுத்தப்பட்டு வருகின்றன.
மௌலவி மத்ரஸாக்களில் வழங்கப்படும் கல்வி அந்த நிறுவனத்தை முகாமைத்துவம் செய்து வரும் அமைப்பின் நிதிப் பலம் மற்றும் பொருளாதாரப் பலம் என்பவற்றை பொறுத்தே அமைகின்றது. மிக வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட மத்ரஸாக்கள் மாணவர்களுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய விஞ்ஞானம் என்பவற்றிலான அறிவை வழங்கும் அதே வேளையில், அந்த மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர் தர வகுப்பு வரையில் பொதுக்கல்வியை பூர்த்தி செய்வதற்கும் ஆற்றலை பெற்றுக் கொடுக்கின்றன. வறிய மத்ரஸாக்கள் தரமான முகாமைத்துவம் தொடர்பான முதன்மைச் செயலாற்றுகை குறிகாட்டிகளை சாதித்துக் கொள்ளத் தவறிவிடுகின்றன. ஒரு சில மத்ரஸாக்களில் கல்வி கற்ற மாணவர்கள் முதுமாணிப் பட்டம் மற்றும் கலாநிதி பட்டம் போன்ற உயர்கல்வி தகைமைகளைக் கொண்டிருப்பதுடன், மேலும் ஒரு சிலர் தொழில்சார் தகைமைகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் என்பன ஆன்மீக மேம்பாடு, கல்வி என்பவற்றுக்கான நிலையங்களாக இருந்து வருகின்றன. வரலாற்று ரீதியாக மத்ரஸாக்கள், சமூகத்தினர் தமது நாளாந்த பிரார்த்தனைகளுக்கான ஐவேளை தொழுகையை நடத்தும் பொருட்டு ஒன்றுகூடும் பள்ளிவாசல்களின் உள்ளார்ந்த ஒரு பாகமாக இருந்து வந்துள்ளன. எனவே, விசேட வைபவங்களின் போது மட்டும் பெருந்திரளான மக்கள் கூடும் பௌத்த அல்லது இந்து கோவில்களை போல அவை இருந்து வரவில்லை. பள்ளிவாசல்களுக்கு நாளாந்நம் மக்கள் ஐவேளை தொழுகைக்கென ஒன்று கூடுகிறார்கள். அதேபோல, ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களின் போது தியானத்தில் ஈடுபடுவற்கும், மரணங்கள் நிகழும் பொழுது ஜனாசா தொழுகைகளில் கலந்து கொள்வதற்கும், வெள்ளக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகையில் பங்குபற்றுவதற்கும், ரமழான் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் பள்ளிவால்களுக்கு வருகின்றார்கள். அது தவிர, திருமணச் சடங்குகளும் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் பெருந்திரளான மக்கள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களுக்கு வருவதுடன், அவர்கள் அவ்விதம் ஒன்று கூடுவதற்கு பாரிய இடவசதிகள் தேவைப்படுகின்றன. எனவே, முஸ்லிம் மக்கள் எங்கெல்லாம் வசித்து வருகின்றார்களோ, அந்த இடங்களிலெல்லாம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் என்பன அவர்களுடைய சமூக வாழ்க்கைக்குத் தேவையான மையமான நிலையங்களாக இருந்து வருகின்றன.
மத்ரஸாக்கள் மற்றும் தரக் குறைவான சர்வதேச பாடசாலைகள் என்பவற்றின் அண்மைக்கால வளர்ச்சி
மத்ரஸாக்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கவனத்தில் எடுக்கும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவி வரும் பொதுவான எண்ணம், இலங்கை முஸ்லிம் சமூகம் அராபிய மயமாக்கலுக்கு அல்லது இஸ்லாமிய மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது என்ற விதத்திலான ஓர் அச்சத்தை சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், யதார்த்தம் அதற்கு மாறானதாகும். கணிசமான அளவிலான முஸ்லிம் பிள்ளைகள், குறிப்பாக நகரப் பிரதேசங்களின் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் (வாடகை வீடுகளில் வசித்து வருவதன் காரணமாக) பாடசாலை அனுமதி தொடர்பாக நிலவி வரும் உயர் போட்டியின் விளைவாக அரசாங்கப் பாடசாலைகளுக்கு அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகின்றார்கள். ஆய்வுகளின் பிரகாரம் கொழும்பில் மட்டும் சுமார் 5000 மாணவர்கள் அரசாங்க பாடசாலைகளில் அனுமதியை பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். அதன் விளைவாக, கணிசமான அளவிலான முஸ்லிம் பிள்ளைகள் தரக்குறைவான சர்வதேச பாடசாலைகளுக்கு செல்வதற்கு அல்லது இறுதித் தெரிவாக மத்ரஸாக்களுக்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்; அல்லது, முறையான கல்வியை பெறாதவர்களாக இருந்து வருகின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இப்பிள்ளைகளில் அதிகமானவர்கள் சர்வதேச பாடசாலைகளுக்கு சமூகமளிக்கின்றார்கள் அல்லது கல்விக்கட்டணங்களைச் செலுத்த முடியாத காரணத்தினால் பாடசாலையிலிருந்து இடைவிலகுபவர்களாக இருந்து வருகின்றனர். மத்ரஸாக்களுக்கு செல்பவர்களும் கூட, கல்வியை பெற்றுக் கொள்ளும் வசதி மற்றும் கல்வியின் மோசமான தரம் என்பவற்றின் காரணமாக இடையில் கல்வியை விட்டுவிடுகின்றனர். நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தவறியிருக்கின்றன. மேலும், நமது நாடு பிரஜைகளுக்குப் பொருத்தமான விதத்தில் கல்வியை வழங்குவதிலும் தோல்வி கண்டுள்ளது.
கல்வியை அணுகும் வசதி மற்றும் கல்வியின் தரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலவசக் கல்வி முறை தோல்வியடைந்திருப்பதுடன், அது சமூகத்தின் ஒரு பிரிவினர் கல்வியை பெற்றுக் கொள்வதிலிருந்தும் அவர்களை தடுத்துள்ளது. இது அந்தச் சமூகப் பிரிவினரின் குற்றமாக இருந்து வரவில்லை. இதன் பின்விளைவாக, இவ்விதம் நாட்டின் சமூக ஒத்திசைவை நிர்மூலமாக்கி இருப்பதற்கான பொறுப்பினை அரசாங்கமும், அரசியல் தலைமைகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்ரஸாக்கள் மற்றும் தரம் குன்றிய சர்வதேச பாடசாலைகள் என்பவற்றின் இந்தப் பாரிய வளர்ச்சி தனிமைப்படுத்தப்பட்ட பிரஜைகளை உருவாக்கி வருகின்றது. அதற்கு நாங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு குறை சொல்ல முடியாது அல்லது அதனை இஸ்லாமிய மயமாக்கலாக தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் அரசியல் தலைமைத்துவம் என்பன குடிமக்களுக்கும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் வழங்க வேண்டிய பங்களிப்பை வழங்கத் தவறியமையாலேயே இந்நிலைமை தோன்றியுள்ளது. அவர்களுடைய இந்தத் தோல்வி நமது சமூகத்தின் ஒரு பிரிவினரை விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளதுடன், அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி என்பவற்றை சீர்குலைத்துள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி
தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் துரித வேகத்திலான நகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி என்பன வரவேற்கத்தக்க அபிவிருத்திச் செயற்பாடுகளாக இருந்து வருகின்றன. ஆனால், இது விளிம்பு நிலை சமூகங்கள் மீது எடுத்து வரக்கூடிய சமூக மற்றும் பொருளாதார தாக்கம் இங்கு கவனத்தில் எடுக்கப்படவில்லை. நகரமயமாக்கல் மற்றும் பெருநகர அபிவிருத்தி என்பன சமூகங்களை பிளவுபடுத்தி, பிரித்து வைப்பதன் மூலம் இலங்கை சமூகத்தின் குடிசனவியல் பண்புகளை மீள வடிவமைத்து வருகின்றன. இந்தப் பின்னணியில், செல்வமும், வசதிவாய்ப்புக்களும் மிக்க மக்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் செறிந்து வாழ்ந்து வருவதுடன், வறிய மக்கள் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தோற்றப்பாடு கல்வி வசதியை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் பெருமளவுக்கு ஒரு தாக்கத்தை எடுத்து வருவதுடன், ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தையும் நாட்டில் உருவாக்கி வருகின்றது. அதி உயர் செலவுகள் காரணமாக குறை வருமானப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களினால் செல்வந்தர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களை அணுக முடியாத நிலை காணப்படுகிறது. நகரத்தின் வசதிகள் மீதும் இது ஒரு தாக்கத்தை எடுத்து வருகிறது. இது மறுபுறத்தில், சமூகங்களை வெவ்வேறு துருவங்களாகப் பிரித்து, வறிய மக்கள் கல்வி மற்றும் ஏனைய வாய்ப்புக்கள் என்பவற்றை சமமான முறையில் பெற்றுக் கொள்வதனைத் தடுக்க முடியும். கொழும்பு நகரின் வசதிவாய்ப்புக்கள் நிறைந்த பிரதேசங்களில் கூட்டு வதிவிடக்குடியிருப்பு கட்டடங்கள் உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஜனரஞ்சகமான பாடசாலைகள், அனுமதியை கோரி முன்வைக்கப்படும் அபரிமிதமான விண்ணப்பங்களினால் திணறி வருகின்றன. பூகோள ரீதியில் அவர்கள் மாணவர்களை உள்வாங்க வேண்டிய பிரதேசம் அல்லது சேவைகளை வழங்க வேண்டிய பிரதேசம் இதன் காரணமாக அளவில் சிறுத்து வருகின்றது. இது நகர குடிமக்களில் பெருந்தொகையானவர்கள் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் அவர்களை தடுத்து வருகின்றது. அதேபோல, கொழும்பின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குறை வருமானப் பிரிவினருக்கான வீடமைப்புத் திட்டங்களின் அபிவிருத்தி காரணமாக குடித்தொகை அதிகரித்து வருவதுடன், பாடசாலைகளின் சேவைகளை வழங்கும் ஆற்றல் குறைந்து வருகின்றது. இது வறிய சமூகங்களைச் சேர்ந்த பெருந்தொகையான பிள்ளைகளுக்கு கல்வியை அணுகும் வசதியை இல்லாமல் செய்கிறது. வசதிவாய்ப்புக்கள் குறைந்தவர்களும், குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மிக வறிய பிரிவினர்களில் பெரும்பாலானவர்களும் பாடசாலை அனுமதிக்குத் தேவையான ஆதாரத்துடன் கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களாக இருந்து வருகின்றார்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு கல்வி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படும் அதே வேளையில், அவர்கள் தமது பிள்ளைகளை மத்ரஸாக்களுக்கு அனுப்புகின்றனர். அதன் மூலம் சமூகத்தின் இஸ்லாமியமயமாக்கலுக்கு பங்களிப்புச் செய்து வருகின்றார்கள் என்ற பழியும் அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.
எனவே, மத்ரஸாக்களுக்கும், தீவிரவாதத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வந்தால், இதனை நிரூபித்துக் காட்டுவதற்கான முக்கியமான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும். கொள்கை வகுப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை விளிம்பு நிலைக்கு தள்ளவோ, வெறுமனே ஆதாரம் எவையும் அற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி வாய்ப்புக்களுக்கான அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவோ முடியாது. இலங்கையைப் பொறுத்த வரையில் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கக் கூடிய, ஒருவருக்கொருவர் கண்ணியமளித்து, நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லக்கூடிய ஒரு பாரிய, வலுவான தேசத்தை கட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் இப்பொழுது எமக்குத் தேவையாக இருந்து வருகின்றது. இனம், மதம் மற்றும் பொருளாதார அந்தஸ்த்துக்கள் ஆகிய அனைத்துக்கும் இடமளிக்கும், அவைரையும் அரவணைக்கும் ஒரு சமுதாயம் இப்பொழுது எமக்கு எமக்குத் தேவைப்படுகிறது. எமது தேசத்தை நிர்மூலமாக்குவதற்கென சமூகங்களுக்கிடையிலான பிரிவினையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன் வந்திருக்கும் வெளி பூகோள அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்த்து நிற்கும் பொருட்டு நாங்கள் ஒரு வலுவான இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
Madrasahs, Extremism and National Security என்ற தலைப்பில் ரிஸா யெஹியா எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.