பட மூலம், Getty Images, AXIOS

“புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். “பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது புர்கா/ நிகாபை பாதுகாப்புக் கவசமாக கருதி அணிகின்ற பெண்களும் இருக்கிறார்கள் என்று. பெண்கள் என்றாலே அவர்கள் வெளியுலகம் மறுக்கப்பட்டவர்கள் என ஆண்களின் புத்தியில் வேரோடிப்போயிருக்கும் ஆதிக்க சிந்தனையிலிருந்தே இதுபோன்ற அறிவித்தல்கள் வர முடியும்.

இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்போது முஸ்லிமல்லாத  தோழியொருத்தி கேட்டாள் “புர்கா/ நிகாப் இல்லாமல் வரவே மாட்டேன் என்கிற பெண்கள் நிஜமாகவே இருக்கிறார்களா?” என்று. “ஆமாம் இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம், சீத்தை உடுத்திப் பழகிய ஆச்சியிடம்,  சீத்தையைத் தடை செய்தாயிற்று. இனி நீ கழிசன்தான் உடுத்த வேண்டும் என்று சொன்னால் ஆச்சி ஏற்பாரா?” எனக்கேட்டேன்.

“அது எப்படி முடியும், சீத்தை அவருக்குச் சௌகரியமான உடை. பழக்கமான உடை. பழக்கமற்ற, அசௌகரியமானதா இல்லையா என்றே தெரியாத ஒன்றைச் சீத்தைக்குப் பதிலாக அவர் எப்படி ஏற்பார்” என்றாள் பதிலுக்கு.

“இங்கேயும் அப்படித்தான், சௌகரியமான பழக்கமானதென்று இத்தனை காலமும் உடுத்திப் பழகிய புர்கா/ நிகாபை ஒரே நாளில் தடை செய்தால் எப்படி அவர்களால் இயல்பு நிலைக்கு வரமுடியும்? சாதாரணமாக ஏற்கமுடியும்?”

நமக்கெல்லாம் புர்கா/ நிகாப் ஒரு கறுத்த அல்லது அடர்ந்த நிறத்திலான அங்கி. கனமான ஓர் உடை. அதனுள் பெண்கள் அவிந்து புழுங்குகிறார்கள் என்ற அனுதாபம் வேறு. ஆனால், அணிகிறவர்களுக்கோ பல நியாயங்கள். அது கலாசாரம், அடையாளம், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கௌரவம். இந்த நியாயங்களின் அடிப்படையில்தான் இந்த உடையை அவள் இத்தனை காலம் தோளில் சுமந்தாள். தற்துணிவுடன் வீதிகளில் இறங்கி நடந்தாள். இதையெல்லாம் எப்படி ஒரே நாளில் விட்டுத்தந்துவிட்டுச் ‘சரிதான்’ என்று கடப்பாள்?

புர்கா/ நிகாப் தடை செய்வதற்கு முன்பு இதுபற்றிய கலந்துரையாடல் பெண்கள் மட்டங்களில் நடந்திருக்கவேண்டும். தடைக்கான காரணம் பாதுகாப்பு என்று குறிப்பிடப்பட்டபடியால் (அது நியாயமற்ற பொய்யான காரணம்) அது முறையான வழியில் பரீட்சாத்திக்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு முகத்திரையை விலக்கி அடையாளத்தை உறுதி செய்ய பெண்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். இவை எவையும் நிகழ்த்தப்படவில்லை. இந்தப் படிமுறை ஒழுங்கில் நடவடிக்கைகள் நடந்திருந்தால் முகத்திரை அணியும் பெண்கள் இயல்பாக்கம் அடைய வழி உண்டாகியிருக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்திரையை விலக்குவதற்கு பெண்கள் மறுத்திருந்தாலோ அல்லது பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் விதத்தில் செயற்பட்டிருந்தாலோ முகத்திரையைத் தடை செய்வதற்கு நியாயங்கள் இருந்திருக்கும். இங்கு அப்படியெந்த நியாயமும் சொல்வதற்கில்லை. இப்போது, எவர் வேண்டுமென்றாலும் பெண்களின் பர்தாவைக் கழற்றி எறியலாம் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. வீதியிலோ பொது இடங்களிலோ அவர்களை அவமானப்படுத்தலாம் என்ற வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. புர்கா/ நிகாப் என்பதன் அர்த்தப்பாடு புரியாமலும், வர்த்தமானி அறிவித்தலைப் பொருட்படுத்தாமலும் பல அரச ஸ்தாபனங்களில் ‘ஹிஜா’பிற்கு எதிரான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள், பாடசாலைகள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள், கச்சேரிகள் என்று எல்லா இடங்களிலும் இந்த அத்துமீறல் நடக்கிறது. இராணுவச் சிப்பாய் துப்பாக்கியினால் நிகாபை இழுத்துக் கழைந்த சம்பவம் புத்தளத்தில் பதிவாகியது. அதே பிரதேசத்தில் பிறப்புப் பதிவைப் பெறுவதற்குச் சென்ற பெண் ஹிஜாப் முதற் கொண்டு உடுத்தியிருந்த அபாயா வரை கழற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறாள். பல பாடசாலைகளில் ஆசிரியைகள் மீதும் இவ்வாறான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் பாய்ந்துள்ளன. பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக பல எழுதப்படாத விதிகளை தங்கள் சௌகரியம்போல உருவாக்கி வருகின்றன.

அரச மருத்துவமனைகளுக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களின் வருகை கணிசமானதாக குறைந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளில் இருந்து அறியமுடிகின்றது. அரச மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்ற பெண்கள் வசதிபடைத்தவர்களோ, ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களின் மனைவியரோ அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளோ அல்ல. உழைக்கும் வர்க்க எளிய மக்கள்தான் அரச மருத்துவமனைகளுக்குச் செல்கின்றார்கள். புர்கா தடை என்பது வெறுமனே அரசியல் கலாசார பிரச்சினை மட்டுமல்ல. இதுவொரு வர்க்க விவகாரமும் கூட. புர்கா அணிகின்ற பெண்களில் 75% நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உடைக்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன. புர்கா தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்கள் சிகிச்சைக்கு என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பின்பு புர்காவுடனேயே பெண்களை உள்ளே அனுமதிக்கிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் பணம் செலுத்தியே அங்கு செல்கின்றார்கள். ஆக பணமிருந்தால் புர்கா தடையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், ஏழை எளிய மக்கள் எங்கு போவார்கள்? இவர்களேதான் அரச பேருந்துகளில் பயணிப்பவர்களும். நம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைப் போல பஜரோக்களில் பறப்பவர்கள் அல்ல இந்தப் பெண்கள்.

மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதற்குத் தயங்குகின்றனர். ஏன் வெளியேறுவதற்கே தயங்குகின்றனர். குற்றவாளிகளாக நடத்தப்படும் இந்த நிலையை சாதாரண ஒன்றாக எந்தப் பெண்ணாலுமே ஏற்க முடியாது.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். “Put yourself in their shoes”. அதாவது, மற்றொருவரின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள அந்தச் சூழ்நிலையில் தன்னைத்தானே பிரதியீடு செய்ய, அவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தங்கள் கால்களை அடுத்தவரின் சப்பாத்துக்களில் வைத்துப் பாருங்கள் என்கிற அர்த்தம். புர்கா/ நிகாப் பிரச்சினையை இந்தப் பார்வையில்தான் அணுகவேண்டும்.

இந்நாட்களில் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, “நீங்கள் புர்கா/ நிகாப் போன்ற உடைகளில் விருப்பமற்றவர். அப்படியிருந்தும் இப்போது இந்த உடைக்கு ஆதரவாகப் பேசுவது ஏன்?”

உண்மையில் இப்போதும் புர்கா/ நிகாப் என்கின்ற இந்த ஆடைக்காகப் பேசவில்லை. பெண்களுக்காகத்தான் பேசுகிறேன். இந்த ஆடையில் நான் விருப்பமற்றவளாக இருப்பதும், அணியாதிருப்பதும் அணிகின்ற பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்வதிலிருந்தும் என்னைத் தடுக்கவோ பின்வாங்கச் செய்யவோ இல்லை. அவர்களின் காலணிகளுக்குள் எனது பாதங்களை விட்டுப் பார்க்க முடிகின்றது. முன்பு பேசியதும் பெண்களுக்காகத்தான். அப்போதும் இந்த உடை பெண்களின் தெரிவாக இருக்கவில்லை. இப்போதும் இது பெண்களின் தெரிவாக இல்லை. ஆண்களின் இசைக்கு ஆடும் இலத்திரனியல் பொம்மைகளாகப் பெண்கள் இருக்கக்கூடாது என்பதே ளஅன்று பேசியதற்கும் இன்று பேசுவதற்குமான பொதுவான காரணம்.

கல்வி VS புர்கா என்று வரும்போது பெண்கள் புர்காவைத் தெரிவு செய்யும் நிலையில் இருக்கின்றனர். தொழில் VS புர்கா வருமிடத்திலும் பெண்கள் புர்காவையே தெரிவு செய்கின்ற நிலையில் உள்ளனர். முஸ்லிம் சமூகம் பெண்கள் வலுவடைய (Empower) இடமளிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? புர்கா என்பது ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்கமுடியாது. அவள்தான் அவளது அடையாளம். புர்கா ஒரு பெண்ணின் ஆளுமையை (Personality)  தீர்மானிக்க முடியாது. ஆளுமை என்பது அவள் அணிகின்ற உடையில் மட்டுமே இருக்கக்கூடியதில்லை. அவள்தான் ஆளுமை! இந்த எளிய சமன்பாட்டைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனம் பெண்களுக்கு இல்லாது போய்விட்டது இன்னொரு துயரம். ஆண்களின் திணிப்பையும், தன் மீதான அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கு அறிவும் தெளிவும் இல்லாமல் ஒரு உடையைப் பிடித்துத் தொங்குகிற நிலைக்கு பெண்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம்.

“நீ சொல்கிறபோது அணியவும், நீ சொல்கிறபோது கழற்றவும் செய்யும் இந்த உடையைப் பிடி”  என்று களைந்து ஆண்களின் முகத்தில் வீசியெறிந்துவிட்டு நடக்கும் மனத்துணிவு இத்தனைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்குக்கூட வரவில்லை.

ஆண்கள் வன்முறைகளின் உற்பத்தியாளர்கள். போர்களைத் துவக்குகிறவர்கள். இவர்களின் இந்த அனைத்துச் செயல்களும் நெறிப்பது பெண்களின் கழுத்துக்களைத்தான். “கழுத்து இருகி மூச்சே போனாலும் பரவாயில்லை இன்னும் இறுக்கிப் பிடியுங்கள்” என்று கெஞ்சக்கூடிய சுயமிழந்த பெண்களைக் கொண்ட ஒரே நூற்றாண்டு இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் மீது இருந்துவந்த நீண்டகாலப் புகை கொளுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. சிங்களப் பேரினவாதம் கனவு காண்பதுபோல இந்தத் தீ முஸ்லிம் சமூகத்தை மட்டுமே எரித்து சாம்பராக்கி அணைந்துவிடுமா என்பதே இங்குள்ள மிகப்பெரிய கேள்வி.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பால் இன்னும் இன்னும் இழுபட்டுச் செல்வதற்கு ஏதுவாகவே இந்தச் செயற்பாடுகளை அதிகார சக்திகள் ஏவிவிட்டுள்ளதா என்பதுகூட சாத்தியமான சந்தேகமே. தனது சகோதரியோ, தாயோ மனைவியோ கொல்லப்பட்டால்கூட ஒரு ஆண் பொருத்துக்கொள்வான். ஆனால், அவள் அவமானப்படுத்தப்படுவதை அவளது ஆடை களையப்படுவதை அவனால் நீண்ட காலத்திற்குப் பொருத்துக் கொண்டிருக்க முடியாது. இது ஆசிய நாட்டு ஆண்களின் மிக எளிய உளவியல் சமன்பாடு. இந்த உளவியலோடு விளையாடுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முஸ்லிம் சமூகத்தை முழுவதும் ஓரம்கட்டி ISIS தீவிரவாதத்தை இலங்கையிலிருந்து ஒழிக்கலாம் என்பது சிங்களப் பேரினவாதத்தின் பகல் கனவு. கண்ணுக்குத் தெரியாத எதிரியைத் தாக்குமுடியாத இயலாமையை கண்ணுக்கு எதிரில் இருக்கும் அப்பாவி மக்களின் மீது திணிப்பதுபோன்ற கோழைத்தனமான ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதைவிடவும் தரம்குறைந்த நிலை வேறொன்றுமேயில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிற்பாடு இடம்பெற்ற கைதுகள் பலவும் முஸ்லிம் சமூகத்தவர்களின் ஒத்துழைப்புடன் நடந்தவை. ஆயுதங்களையெல்லாம் கைப்பற்றிச் சுத்திகரிப்புச் செய்தாயிற்று என்ற துணிவில் பேரினவாதிகள் ஆடும் ஆட்டம் இது. பேரினவாதத்திற்கு இது பேரிழப்பாக முடிவது மட்டுமல்ல இந்த நாட்டின் அமைதியைக் குழைத்து மக்கள் ஒற்றுமையாக பாதுகாப்பாக வாழமுடியாத சுடுகாட்டில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கே இட்டுச் செல்லும்.

ஸர்மிளா ஸெய்யித்

 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.