பட மூலம், AP Photo/Eranga Jayawardena, Mintpressnews

அர்த’’ என்பது அரைவாசி என பொருள்படும் சமஸ்கிருத சொல். பின்நவீனத்து சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக சத்குமார அர்த என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதற்காக தற்போது சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச சட்டத்தின் (International Covenant on Civil and Political Rights) கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் ஒருவர் ஒரு விடயத்தை பார்ப்பதற்கும் உணர்வதற்கும் நுகர்வதற்கும் தனது மனதை நம்பியுள்ளார். எழுத்தாளர்களும் கலைஞர்களும் படைப்பாளிகளும் உலகின் அழகையும் அழகின்மையையும் இவ்வாறே உருவாக்குகின்றனர். மத்திய காலங்களில் அழகு, உண்மை போன்றவற்றை படைத்தவர்கள்  துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

போலி நீதியின் புதிய யுகத்தில் சட்டங்கள் மற்றும் பிரகடனங்கள் மூலம் நாங்கள் பழைய வேர்களிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.

எமது சுதந்திர – அச்சு ஊடகங்களும் – இலத்திரனியல் ஊடகங்களும் இந்தச் சம்பவம் குறித்து செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எவ்.பி. ஷக்திக சத்குமாரவின் அவலத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி வெளியான செய்தியின் சுருக்கம் –

பௌத்த மதகுருமார் மத்தியில் ஓரினச்சேர்க்கை குறித்து எழுதியதற்காக இலங்கையின் நாவலாசிரியர் ஒருவர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது எழுத்து குறித்து பௌத்த மதகுருவொருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து ஷக்திக சத்குமார பொல்காவலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு ஒன்பது நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பௌத்த மதகுருமார்  மத்தியில் ஓரினச்சேர்க்கை குறித்து எழுதப்பட்டிருப்பது பௌத்த மதத்தை அவமதிக்கின்றது என பௌத்த மதகுருமார்கள் முறைப்பாடு செய்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை செய்த பௌத்த மகுருமார் இந்த விவகாரத்திற்கு நீதிமன்றில் தீர்வு காண்பதற்கு மறுத்ததுடன்  எழுத்தாளரை தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தினர். எழுத்தாளரை உள்ளூர் நீதவான் முன்னிலையில் நிறுத்தினோம், அவர் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உடன்படிக்கையில் அடிப்படையில் அவர் இன வெறுப்பை பரப்பினார் என குற்றம்சாட்டினார் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொல்காவல  பொலிஸார் ICCPR சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் பிணை வழங்க முடியாது. இதனடிப்படையில் பொலிஸார் அரசியல் மற்றும் மனித உரிமைகள்  குறித்த உலகலாவிய  உடன்படிக்கையை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுகதையொன்றை எழுதியுள்ளார். சில பௌத்தமதகுருமார் குறிப்பிட்ட கதை பௌத்த மதத்தினை அவமதிக்கின்றது என கருதியுள்ளனர். அவர்களுக்குத் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமையுள்ளது. ஆனால், பிரச்சினை இங்கேதான் உள்ளது. அவர்கள் அந்த நபரை சிறையில் அடைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் திருப்திப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரமும் அதற்கான வழிமுறைகளும் சிவில் அரசியல் உரிமைகள் என்பவற்றிற்குள் அடங்குகின்றன. இதுவே மிகவும் அடிப்படையான உரிமையை உறுதிசெய்யும் அதிகாரமாகும். இது அரசியல் பொதுவாழ்க்கையில் பங்கெடுத்தல் உட்பட ஏனைய அனைத்து மனித உரிமைகளும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவுகின்றது.

எழுத்தாளர் அல்லது கவிஞரின் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான திறன் என்பது மனித முன்னேற்றத்திற்கான அடிப்படையான அவசியமான விடயமாக விளங்குகின்றது.

‘அர்த’ என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் சக்திக சத்குமார புரிந்துள்ள பாரிய குற்றம் என்ன?

நான் இது இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பாக கருதவில்லை. நான் இதற்கு நான்கு புள்ளிகள் மாத்திரம் வழங்குவேன். அதேவேளை இது பின்நவீனத்துவ படைப்பாக்க பரிசோதனை முயற்சிகளில் பாராட்டத்தக்கதாகும். இலங்கையில் பின்நவீனத்துவ எழுத்துக்கள் தடைசெய்யப்படவில்லை. எனினும், இலங்கை தேரவாத திரிபிடகவை தேசிய சொத்தாக பிரகடனம் செய்துள்ளது. நாங்கள் தற்போது அதனை மனித குலத்தினதும் கிரகத்தினதும் பரம்பரை சொத்தாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பல வருடங்களாக எங்கள் ஒலிம்பிக் வீரராக விளங்கிய பாதுகாப்பு செயலாளர் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் இது. மூன்று பீடகங்களில் முக்கியமானது வினய பீடக – இது மனிதர்களின் பாலியல் விவகாரங்கள் பற்றி  ஆராய்கின்றது. விசேடமாக துறவிகளின் பாலியல் விடயங்கள் குறித்து பேசுகின்றது.

பின்நவீனத்துவ படைப்பு எழுத்து என்பது என்ன? இது பாராம்பரிய இலக்கிய சம்பிரதாயங்களை நிராகரிக்கின்றது. சுருக்கமாக அதன் இருப்பு என்பது நிரந்தர முரண்பாட்டிற்கான தேடலாகும்.

பின்நவீனத்துவ கதைகள் எப்போதும்  ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட உரைமூலங்களை கொண்டுள்ளன. பல உரைமூலங்கள் இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் இவ்வாறான கதைகள்  காணப்படுகின்றன.

பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்னர் தனது காவியுடையைத் துறந்துவிட்டு நண்பர் ஒருவரிடம் தற்காலிகமாக சரணடையும் இளம் துறவியின் கதையே ‘அர்த’.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டு ஹல்வெலே ஹசப்ப பிக்கு கசன் பலிகவதன ஆகவில்லை. பௌத்தமடலாய வாழ்க்கையில் அவரிற்கு விருப்பமிருக்கவில்லை.

கசன் பலிகவதன மற்றொரு பௌத்த மதகுருவை சந்திக்கின்றார் – அவரும் பல்கலைகழக மாணவர். கசன் இறுதியில் உண்மையாக விடுதலையாகின்றார். “நீங்கள் இந்த விடுதியிலேயே தங்கியிருக்க விரும்புவீர்கள் என நான் நினைக்கின்றேன். நீங்கள் இனிமேல் வீட்டுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாலைவரை காத்திருக்கவேண்டியதில்லை.”

கசன் மதகுருவான மற்றொரு நண்பரான லொயிட்டின் விடுதிக்கு செல்கின்றார். லொயிட் தான் எழுத எண்ணியுள்ள சிறுகதை குறித்து தெரிவிக்கின்றார். இந்த சிறுகதை சித்தார்த்தர் உலக சிற்றின்பங்களையும் துயரங்களையும் துறந்தமைக்கு முற்றிலும் புதிய திருப்பத்தை கொடுக்கின்றதாக காணப்படுகின்றது.

எங்களது பழமைவாத தேரவாத பௌத்த சமூகம் இதனை ஏற்றுக்கொள்ளாது என கசன் லொயிட்டிற்கு தெரிவிக்கின்றார்.

இந்த இரு துணைக்கதைகளுக்கு அப்பால் முக்கிய கதாநாயகன் கசன் பிரச்சினைகளுக்கு உரிய நபராக காணப்படுகின்றார். அவர் அடிக்கடி அச்சமூட்டும் அதிருப்தி கனவை காண்கின்றார். ப்ருடியன் கனவிலிருந்து எழும்பும் அவர் கழிவறைக்கு சென்றுவிட்டு நுளம்புவலைக்குள் மீண்டும் நுழைந்து உறங்குகின்றார். லொயிட் மெதுவாக அந்த அறைக்குள் நுழைகின்றார், அவரின் முனுமுனுப்புகள்  அரை உறக்கத்தில் உள்ள கசனின் காதுகளில் விழுகின்றன.

லொயிட்டின் உடலில் இருந்து வெளியாகும் வாடை கசனிற்கு பெரிய பிக்குவின் உடலில் இருந்து வெளியாகும் வாடையை நினைவுபடுத்துகின்றது.

வினய பீடக ஒருபால் உறவு அல்லது பாலியல் உறவு குறித்து  எதனை தெரிவிக்கின்றது?

வினய பீடக பாலியல் உறவு, ஒருபால் உறவு, திருநங்கையர்களுடன் உறவு என பல  இடங்களில் குறிப்பிட்டுள்ளது. புத்தரின் அழகினால் ஈர்க்கப்பட்டு மதகுருவான வக்காலியின் கதையை அது குறிப்பிடுவது முக்கியமானது. புதிய துறவியொருவர் வயது முதிர்ந்த துறவியொருவடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் சம்பவமும் அதில் காணப்படுகின்றது. பௌத்த மதகுருவொருவர் குரங்குடன் உறவுவைத்துகொள்வதன் காரணமாக புத்தர் விலங்குகளுடன் உறவுவைத்துக்கொள்வது குறித்தும் கருத்து தெரிவிக்கின்றார்.

பௌத்த மதகுருவின் பாலியல் நடத்தைகளிற்கான விதிமுறைகள் குறித்து குறிப்பிடும்போது வினய குறிப்பிடத்தக்க பாலியல் முறைகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

பௌத்த மதகுருமார் தங்கள் பாலியல் உறுப்புகளை உடல்துவாரங்கள் எவற்றிலும் நுழைப்பதை வினய தடை செய்கின்றது. யோனி வாய் மற்றும் வாய்வழி இன்பம் அனுபவிப்பதை அது தடை செய்கின்றது.

புராதன இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினர் – திரித்யா பிரக்தி என இனம் காணப்பட்டனர். ஷக்திகவின் கதையில் அது பிழையானதா இல்லையா என்பது பிரச்சினையில்லை.அதில் பொதித்துள்ள உண்மை மற்றும் யதார்த்தமே புனித குளவிக்கூட்டிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Whole Truth Of A Half Truth தலைப்பில் சரத் டி அல்விஸ் எழுதி கொழும்பு ரெலிகிராப்பில் வௌியாகிய கட்டுரையின் தமிழாக்கம்.


தொடர்புபட்ட கட்டுரை: “ஷக்திக சத்குமாரவின் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக அணிதிரள்வது அவசியம்”