பட மூலம், Stocksy

ஷக்திக சத்குமார ஓர் எழுத்தாளராவார், சிறுகதையாளராவார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘அர்த’ (அரைவாசி) என்ற பெயரில் சிறுகதையொன்றினை எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். துறவு வாழ்க்கை, லௌகிக வாழ்க்கை மற்றும் ஓரினச் சேர்க்கை பற்றியதே இந்த சிறுகதையின் உள்ளடக்கமாகும். இதுவொரு விசேடமான சிறுகதையல்ல. சில வேளைகளில் முதிர்ச்சியடைந்தோர் எனக் கருதப்படுகின்ற சிறுகதையாளர்களினால் எழுதப்படுகின்ற சாதாரண சிறுகதையைப் போன்றது. எவ்வாறாயினும், ஓரினச் சேர்க்கை பாலியலை சமநிலையாகவும் அடையாளமாக சித்தரிக்க வைப்பதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார். ஆசிரியரிடம் ஒருவிதமான ஒழுக்கப் பண்புகள் உள்ளதென்பது அதன் மூலமாக தெளிவாகின்றது. கதையின் ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்தன் மற்றும் யசோதராவின் பாலியல் தொடர்புகளின் தன்மையினையும் ராஹுல பற்றி மகாயானத்தில் கூறப்படுகின்ற பொருள்கோடலையும் உப கதையம்சமாக உள்ளடக்கியுள்ளார்.

இந்த சிறுகதையின் பிரதான பாத்திரமாக சித்தரிக்கப்படுபவர் பௌத்த துறவியாக “சதஹம் சேனாவ” (சதஹம் படை) உடன் தொடர்பு கொண்டிருந்து பிறகு துறவறத்தை கைவிட்ட ஒரு நபராவார். கதையானது துறவறத்தை கைவிட்ட நாளிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது. இந்தக் கதையின் ஓரிடத்தில் ஞானசார தேரரைப் பற்றியும் கூறப்படுகிறது. “நீங்ளெல்லாம் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்று, முன்னைய புலிகள் அமைப்பினரின் தலைவர்களுடைய குடும்பத்தாருக்கு வீடுகள் அமைக்கிறீர்களாமே, உண்மையா?” என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்புகிறார்.

“புத்தபகவானின் ஊர்சுற்றித்திரிதல்” பற்றியும் கூறப்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுகின்ற லொய்ட் அண்ணா என்ற ஒருவரும் உள்ளார். இந்த அனைத்து சம்பவங்களும், அதாவது, ‘சதஹம் சேனாவ’, ஞானசார தேரர், ‘புத்தபகவானின் ஊர்சுற்றித்திரிதல்’ மற்றும் ‘அரச சார்பற்ற நிறுவனம்’ என்பவை எமது நிகழ்கால விவாத மேடையில் சர்ச்சைக்குரிய விடயங்களாகும். இவ்வாறு கூறுவதற்கான காரணம் தற்போது இந்த ஆசிரியருக்கெதிராக எழுந்து நிற்கின்ற தரப்பினர் குழப்பம் அடைந்திருப்பது, மதத்தினை இழிவுபடுத்தும் எந்தவொரு சம்பவத்திற்காகவுமல்ல. மேலே குறிப்பிட்ட ஒட்டுமொத்த தரப்பினரால் பின்பற்றப்படுகின்ற சமூக மனப்பாங்குகள் தொடர்பில் எழுந்துள்ள பிரபல்யமான குரோதத்தினால் ஏற்பட்டதென்பதனை தெரிவிப்பதற்காகவாகும்.

இந்த இளைஞர் தேரராக இருந்த காலப்பகுதியில் தலைமைத் தேரரின் பாலியல் ஆசாபாசங்களுக்கு அடிமையாக இருந்த நிலைமையினை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றார். அடுத்ததாக, துறவறத்தை கைவிட்ட பிறகு மேலே குறிப்பிட்ட லொய்ட் அண்ணனாலும் அதே சம்பவம் இடம்பெற்றதென்பதனையும் மறைமுகமாக கூறுகிறார். வேறொரு விதமாக கூறுவதாயின், துறவு வாழ்க்கையிலும், லௌகீக வாழ்க்கையிலும் இந்த இளைஞனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை என்பதாகும். அந்த இலக்கானது, இதனையும் விட சிறப்பான சிறுகதையொன்றினை எழுதுவதற்காக பயன்படுத்தி இருக்கக் கூடியதொரு அபூர்வமான ‘கருப்பொருள்’ என்பதே எனது எண்ணமாகும்.

தற்போது இந்த எழுத்தாளர் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றின் மூலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் (9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது) . அது, ‘புத்த மதத்தினை பாதுகாக்கும் இளைஞர் முன்னணி’ என்ற பௌத்த துறவிகள் குழுவொன்று பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலாகும். ‘பௌத்த மதத்தினை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறான ஆக்கங்களை வெளியிட்டமையே அவருக்கெதிரான குற்றச்சாட்டாகும்.

இந்த முறைப்பாட்டின் மூலமாக ஷக்திக சத்குமாரவின் நூல்கள் ‘ஆக்கங்களாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். அவ்வாறு கூறுவதற்கான காரணம் வேறொன்றுமில்லை, எமது விமர்சன பணி இதன் காரணமாக இலகுபடுத்தப்படுகின்றமையே ஆகும். நாம் இங்கு கலந்துரையாடுகின்ற விடயமானது, ஒரு மத்திற்கோ, ஒரு இனத்திற்கோ அல்லது விசேடமானதொரு குழுவிற்கோ எதிராக குரோதத்தினை விதைக்கின்ற அல்லது இரத்தும் சிந்தவைக்கின்றதொரு சம்பவம் அல்ல. நாமிங்கு கலந்துரையாடுவது, நூலொன்றைப் பற்றியும் கதையாசிரியர் ஒருவரைப் பற்றியுமே. ஓர் ஆக்கத்தினைப் பற்றியே, படைப்பாளி ஒருவரது சுதந்திரத்தைப் பற்றியாகும்.

எனவே, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்    அதாவது கலைஞர்  ஒருவரது கருத்து வெளிப்பாட்டு எல்லைக்குள் வைத்து எம்மால் கலந்துரையாட முடியும்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமானது முன்னேற்றம் அடைந்த நாடுகளிலும் சில சந்தர்ப்பங்களில் வரையறை செய்யப்படுகின்ற நிலை ஏற்படுகிறது. யுத்தம் இடம்பெறுகின்ற சந்தர்ப்பம் அதிலொன்றாகும். மற்றைய சந்தர்ப்பமாவது, இனரீதியான மற்றும் சமய ரீதியான குரோத்தினை உரைக்கின்ற போது. இவற்றைத் தவிர தனிநபர் இழிவுபடுத்தல்கள் அல்லது சமய ரீதியான, இன ரீதியான நிந்தித்தல்கள் தொடர்பாக பொதுவான சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றன. எனவே, கருத்து வெளிப்பாட்டுச்  சுதந்திரம் என்பது எந்தவொன்றையும் கூறுவதற்கு ஒருவருக்குள்ள உரிமையாக கொள்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என எவரும் அறிவர். ஆயினும் மறுபுறம், அதே கூற்று, அதாவது சுதந்திரம் என்பது ‘எந்தவொன்றையும் தெரிவிப்பதற்கான உரிமையன்று’ என்பது மிகவும் ஆபத்தான வகையில் கலைஞரது படைப்பிற்கான வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் சிந்தனை உரிமையினை பறித்துக் கொள்வதற்கும் அதிகாரம் படைத்த ஒருவரால் மிக இலகுவாக பயன்படுத்தக் கூடிய ஒன்றென்பதனையும் யாரும் அறிந்து கொள்வது அவசியமே.

இவ்விரண்டையும் வேறுபடுத்தி அடையாளம் காணக்கூடிய இரண்டு சந்தர்ப்பங்களை இங்கு குறிப்பிடுகிறேன். 1939-1945 இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதியில் ஜேர்மனியில், போலந்தில் மற்றும் இன்னும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு அறைகளில் இடப்பட்டு அறுபது இலட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு சம்பவம் உள்ளது. இச்சம்பவமானது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும், கடந்த காலத் தரவுகள், தகவல்களாகவும் இன்றும் உயிரோட்டத்துடன் காணப்படுகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களது உயிரோட்ட சாட்சியாகவும் உலகம் முழுவதும் காணக்கூடியதாகவுள்ள ஓர் உண்மைச் சம்பவமாகும். ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு மானிட வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் அழிவாக கருதப்படுவது இந்தச் சம்பவமேயாகும். அந்தச் சம்பவத்தினை ஒரு கற்பனையென்றோ அல்லது பொய்யென்றோ இன்று பகிரங்கமாகக் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் சிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும். இது முன்னேற்றமடைந்த நாடுகளில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தினை வரையறை செய்துள்ள ஒரு சந்தர்ப்பமாகும். அதன்படி, பல நாடுகளில் வலதுசாரி இனவாத அரசியல்வாதிகள் சிலர் கடந்த காலங்களில் அந்த நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறுபுறம், ‘கடவுள் இறந்துவிட்டார்’ என பகிரங்கமாக கூறுவது எந்தவகையிலும் தவறாகாது என இன்று முன்னேற்றம் கண்ட உலகம் கருதுவதற்கில்லை. அதாவது, 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் அவ்வாறான கூற்று அல்லது அதற்கு குறைவான கருத்தையுடைய கூற்றாக இருப்பினும் ‘மதத்தினை இழிவுபடுத்தல்’ என்ற கருத்தின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான மக்களும் பெண்களும் தீயில் இட்டு கொழுத்திய ஓர் இனத்தின் முன்னேற்றமானது இன்று, முன்பு காணப்படாத இணக்கமான நிலைக்கு தேவாலயங்களும் கிறிஸ்தவ மதமும் இன்று மாற்றமடைந்துள்ளது.

அடுத்ததாக கடந்த ஒரு தசாப்த காலமாக மேற்கத்தேய தேவாலயம் எனப்படும் கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஆயர்களும் காதினல்களும் சிறைக்கு சென்ற சந்தர்ப்பங்களை எம்மால் கேட்க கிடைத்தது. யாராயினும் மதகுரு ஒருவர் தொடர்பில் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே அந்த சம்பவமானது நீதிமன்றிற்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குறிப்பிட்ட நபருக்கெதிரான தடைகள் அறிவிக்கப்பட்டது தேவாலயங்களில் ஆகும். அவர்கள் அவ்வாறு செயற்படுவதற்கான காரணம், தேவாலயம் எனப்படும் சமயத்தைப் பாதுகாப்பதற்கு விசேடமாக நவீன யுகத்தில் அவ்வாறான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனாலும், எமது விகாரைகள் தொடர்பில் நிலைமை அவ்வாறில்லை. விகாரைகள் அவ்வாறான விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்வதில்லை. மதிப்புரைக்கும் விமர்சனத்திற்கும் தமது தர்மம் மிகவும் வெளிப்படையானது என தெரிவித்த ஒரே மகான் புத்தபகவான் ஆவார். எனவே, வரலாற்று ரீதியாக பார்க்கின்ற போது பொறுமை என்பது தேவாலயங்களை விடவும் விகாரைகளிலேயே இருக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் புத்தபகவானுடைய சீடர்கள் என கூறிக்கொள்கின்ற புத்த துறவிகள் தற்போது அதற்கு புறம்பான வகையில் புத்தரின் போதனைகளுக்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஷக்திக சத்குமாரவிற்கெதிராக குற்றஞ்சாட்டுகின்ற இந்தத் தேரர்கள் அந்த பிரிவிற்குரியவர்களாவர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ் ஷக்திக சத்குமாரவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை அந்த சாசனத்தில் ஒரு பங்குதாரர் என்ற காரணத்தினால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அதிகாரிகளுக்கு உண்டு. ஆயினும், இந்த எழுத்தாளருக்கு தண்டனை வழங்குவதே அதிகாரிகளின் தேவைப்பாடாக இருந்திருந்தால், இந்த சர்வதேச சாசனத்தினை கையாளாமல், அதனை எமது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 291 (ஆ) பிரிவின் கீழ் வழங்கியிருக்கலாம். அந்த பிரிவு பின்வருமாறு உள்ளது:

“…சமய உணர்வினை இழிவிற்குட்படுத்துவதற்காக ஒருமுகப்பட்டதும் துவேசமானதுமான எண்ணத்துடன், பேச்சு வழக்கிலோ அல்லது எழுத்து மூலமான சொற்பதங்களால் அல்லது காணக்கூடிய சைகைகளின் மூலமாக குறிப்பிட்டதொரு வகுப்பின் சமயத்திற்கோ அல்லது சமய நம்பிக்கைகளுக்கோ இழிவினை ஏற்படுத்தும் அல்லது இழிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் நபரொருவருக்கு இரண்டு வருட காலப்பகுதிக்கென, இருவகையிலும் ஒருவகையில் சிறைத்தண்டனை வழங்கல் அல்லது தண்டப்பணம் அறவிடல் அல்லது இரண்டு வகையான தண்டனைகளும் வழங்கப்படுதல் வேண்டும்”.

ஆயினும், பொல்கஹவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவரது அதிகார எல்லையையும் மீறிச் சென்று, இதனை மேற்படி சர்வதேச சமவாயத்தின் அடிப்படையில் வழக்கினை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இது சாதாரண பொலிஸ் அதிகாரி ஒருவருடைய பொறுப்பற்ற செயற்பாடெனில், அதற்கு மாற்றீடாக நிர்வாக ரீதியான தீர்வொன்றினைப் பற்றி ஆராய முடியும். ஆயினும், எமது நம்பிக்கைக்குரிய விடயமாக இருப்பது மேற்படி தீர்மானமானது உயர்மட்ட அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்தே வந்ததென்பதாகும். இவ் அதிகார வர்க்கமானது ஒரு வகையான இனரீதியான மற்றும் சமய ரீதியான சித்தாந்தப் பார்வையின் உள்ளடக்கமாகும்.

மேற்படி சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் பிணை பெறக்கூடியது உச்ச நீதிமன்றத்திலிருந்து மாத்திரமே. ஆயினும், சந்தேகநபர் முன்நிறுத்தப்பட்டதோ நீதவான் நீதிமன்றத்திலாகும். நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை. நீதவான் நீதிமன்றில் அடுத்த வழக்குத் திகதியாக 9ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திகதியின் போது உச்ச நீதிமன்றமானது இரண்டு வார விடுமுறையில் சென்றிருக்கும். அதன் உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில் இன்னும் இரண்டு மாதங்களாயினும் பிணை பெறுவதற்காக எழுத்தாளர் காத்திருக்க வேண்டும் என்பதாகும்.

விடயம் இவ்வாறிருக்க, மேற்படி சர்வதேச பிரகடனத்தின் நோக்கமாக அமைவது நபர்களது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதே தவிர அரசியல் ரீதியான அல்லது சமய அதிகாரிகளுக்கு அந்த உரிமைகளைப் பறிப்பதற்கான அனுமதிப் பத்திரமாக அமையக் கூடாது. அந்த சர்வதேச பிரகடனத்தின் 19ஆவது உறுப்புரை பின்வருமாறு உள்ளது.

“தடையின்றி தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து நபர்களுக்கும் உரிமை உள்ளது.”

அதில் மேலும் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“அனைத்து நபர்களுக்கும் கருத்து வெளிப்பாட்டு உரிமை உள்ளது. அதில் உள்ளடக்கப்படுவது தகவல்கள் மற்றும் அனைத்து வகையிலுமான கருத்துக்களை, கலைப் படைப்பாக புத்தக வாயிலாகவோ அல்லது தாம் விரும்பும் வேறு வகையிலான எந்தவொரு ஊடக வாயிலாகவோ ஆராய்வதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் பகிர்ந்தளிப்பதற்கும் உள்ள உரிமையாகும்”. 

இப்போது எமது உள்ளத்தில் எழும் கேள்வியாவது, சர்வதேச பிரகடனத்தில் கூறப்பட்ட விடயங்கள் அவ்வாறு இருக்கின்ற போது இந்தப் பிரகடனத்தின் கீழ் ஷக்திக சத்குமார எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பதாகும். அதனை அவ்வாறு செய்ய முடியும் என பொலிஸ் தரப்பினர் கூறுவதற்கு அந்த பிரகடனத்தின் 20ஆவது உறுப்புரையில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதன் மூலமாக இருக்கலாம்.

“அநீதியாக, எதிரானதாக அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசியம், இனரீதியான அல்லது மதரீதியான குரோதத்தினை பரப்புரை செய்தலை தடுத்தலாகும்”.

தற்போது நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டியது, அநீதிக்கோ அல்லது எதிராகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் இந்த சிறுகதையில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பதனையே ஆகும். ராஹுலவின் தந்தை சித்தார்த்தன் அல்ல என்று கூறுவது ஏதேனும் தூண்டுதலுக்கு ஏதுவாக அமையும் காரணியாக யாராயினும் கருத முடியுமா? அவ்வாறெனில், ‘கடவுள் இறந்து விட்டார்’ என்று கூறுவது அதையும் விட அதிகமான தூண்டுதலாக அமையாதா? இந்த தவறு இடம்பெறுவதற்கு அவ்வாறான தூண்டுதலாக இருக்கக் கூடிய, ‘தேசியம், இனரீதியான அல்லது மதரீதியான குரோதத்தினை பரப்புதலும்’ அதனோடு இணைந்ததாக இடம்பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சட்டம் அப்படியானதொரு நிலைமையில் மாத்திரமே உரித்துடையதாக அமையும். காரணம், இவ்விடத்தில் அடிப்படையாக தடைசெய்யப்படுவது தேசியம், ‘இனரீதியான அல்லது மதரீதியான குரோதத்தினை பரப்புதல்’ என்ற காரணமே ஆகும். மேற்படி உறுப்புரையில் கூறப்படும் உள்ளடக்கம் அதுவே. எனவே, ஷக்திக சத்குமாரவின் சிறுகதையில் ‘தேசியம், இனரீதியான அல்லது மதரீதியான குரோதத்தினை பரப்புதல்’ இடம்பெறுவது எந்த சொல்லில் அல்லது வசனத்தில் அல்லது எந்த பந்தியின் மூலமாக?

கலை படைப்புகள் தொடர்பாகவோ, கலையினுள் காணப்படுகின்ற பரிமாற்றத்துக்குரியதான விசேட பண்புகள் தொடர்பாகவும் அறிந்திருக்க வேண்டுமென்பதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாத விடயமாகும் (கலை ரசிகர்கள், கலையுணர்வு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பதும் உண்மையான விடயமே). ஆயினும் ‘சமயம்’ என்ற சொல் இருந்த மாத்திரத்திலோ, ‘தூண்டிவிடல்’ என்ற சொல் இருந்த மாத்திரத்திலோ மேற்படி உறுப்புரையானது ஷக்திக சத்குமாரவினது சிறுகதையுடன் தொடர்பற்றதென்ற தன்மையினை இந்த பொலிஸ் அலுவலர் புரிந்து கொண்டிருந்திருக்கலாம். ஆயினும், ஏற்கனவே நாம் தெரிவித்த அரசியல்வாதியினால் அதற்குரிய வாய்ப்பை வழங்காதிருந்திருக்க வாய்ப்புண்டு.

எவ்வாறெனினும், இந்த சிறுகதையானது மேலே கூறப்பட்ட கருத்தையுடைய, அதாவது சமய குரோதமல்லாத, சமய அன்பை முன்னிலைப்படுத்தி எழுதியதொன்றாக, அவசியமெனில் இதைனை விட மிக இலகுவான விதத்தில் யாருக்காவது தர்க்கரீதியாக தெரிவித்திருக்கலாம். பிரம்மச்சர்ய ஒழுக்கம் என்பது பிக்குகளுக்கு அவசியமானதொன்றாகும். இந்த சிறுகதையினுள் தலைமைத் தேரர் இங்கு கூறப்படுகின்ற இளம் பிக்குவை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதனை பிரம்மச்சர்ய ஒழுக்க மீறலாக சமூக கருத்தியலை ஏற்படுத்துவதனூடாக, அத்தீய நபரிடமிருந்து விகாரையை தூய்மையாக்கிக் கொள்ள முடியுமென்பது செய்யக்கூடியதாகவிருந்த ஒரு வழியாகும். அது சமயம் தொடர்பில் காணப்படுகின்ற அன்பே தவிர அன்பற்றதொரு விடயமாக அமைவது எவ்வாறு?

எப்படியோ சாசன (சமய) திருத்தம் என்ற விடயம் இங்கு எமக்கு அவசியமில்லை. எமக்கு அவசியமான விடயமாக அமைவது, ஒரு எழுத்தாளருக்கு, ஒரு கலைஞருக்கு, ஒரு ஊடகவியலாளருக்கு, ஒரு சிந்தனையாளருக்கு போலவே வேறெந்த நபருக்கும், சுதந்திரமாக சிந்திப்பதற்கும், சொல்வதற்கும், எழுதுவதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் உள்ள உரிமையானது நவீன மானிட நாகரீகத்தினுள் அசையாத உரிமையொன்றாக இருப்பது அவசியமே. எனவே, ஷக்திக சத்குமாரவினது உரிமை மற்றும் சுதந்திரத்தின் பொருட்டு நாம் யாவரும் அணிதிரள்வது அவசியமாகின்றது.

‘සිවිල් සහ දේශපාලනික අයිතීන් සඳහා වන ජාත්‍යන්තර ප‍්‍රඥප්තිය’ යටතේම කලාකරුවෙකුගේ ප‍්‍රකාශනයේ නිදහස පැහැර ගැනීම என்ற தலைப்பில் காமினி வியங்கொட எழுதி ‘விகல்ப’ தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.