பட மூலம், Selvaraja Rajasegar
இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும் செயல் முடக்கம், மறுப்பு மற்றும் மௌனிக்கச் செய்தல் என்பன குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளும் ஒரு கலாசாரத்திற்கு பங்களிப்புச் செய்திருப்பதுடன், அதனை மேலும் வேரூன்றச் செய்துள்ளது. அக்கலாசாரம் குற்றமிழைத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருப்பதுடன், ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மேலும் உயர் மதிப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்திருக்கும் தவறுகளை கவனத்தில் எடுத்து, அவற்றுக்கான தீர்வுகளைத் தேடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும், மிக முக்கியமாக தண்டனைக்கு அச்சமின்றி (ஆட்கள்) குற்றம் புரியும் நிலைக்கு எதிராக போராடுவதற்கும் அனைத்துமடங்கிய இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் ஓர் உத்தியை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த பொழுது கடந்த கால நிலைப்பாடுகளிலிருந்து ஒரு மாற்றத்தை நோக்கிய நகர்வுக்கான சமிக்ஞையை எடுத்துக்காட்டியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30ஆவது அமர்வின் போது 30/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டதனை அடுத்து, சீர்திருத்தங்களை எடுத்துவர வேண்டியிருக்கும் முதன்மையான துறைகளை முறையான விதத்தில் இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தது. பொறுப்புக்கூறும் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களையும் இது உள்ளடக்கியிருந்தது. இந்தப் பிரேரணை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய தேவையை கவனத்தில் எடுப்பதுடன், பின்வரும் கட்டமைப்பின் உருவாக்கத்துடன் இணைந்த விதத்தில் நீதித் துறையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையையும் குறிப்பிடுகின்றது: “மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டம் என்பவற்றின் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களை பொருத்தமான விதத்தில், புலன் விசாரணை செய்வதற்கென விசேட சட்ட வல்லுனர்களுடன் கூடிய விதத்திலான ஒரு நீதித் துறை பொறிமுறை; நம்பகமான ஒரு நீதித்துறை செயன்முறை, தமது நாணயம் மற்றும் பக்கச்சார்பற்ற நிலை என்பன தொடர்பாக நன்கு அறியப்பட்டிருக்கும் தனிநபர்களினால் முன்னெடுக்கப்படும் சுயாதீனமான நீதி மற்றும் வழக்குத் தொடுத்தல் நிறுவனங்களையும் உள்ளடக்குதல் வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துகின்றது. மேலும், இது தொடர்பாக இலங்கையின் நீதித் துறை பொறிமுறை ஒன்றில் விசேட வழக்குத் தொடுநர் அலுவலகத்தையும் உள்ளடக்கிய விதத்தில் பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் என்பவற்றைச் சேர்ந்த வெளிநாட்டு நீதிபதிகள், வாதி தரப்பு சட்டத்தரணிகள், அதிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடுநர்கள் மற்றும் புலன் விசாரணையாளர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது”.
2015ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டிருந்த கடப்பாட்டுகளை முழுமையாக அமுல் செய்வதற்கென இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்ட பொழுது, 2017 மார்ச் மாதத்தில் 34/1 தீர்மானத்தின் மூலம் இக்கடப்பாடு மேலும் வலியுறுத்தப்பட்டது. காலம் கடந்து சென்றிருந்த போதிலும், தாமதங்கள் மற்றும் பின்னடைவுகள் என்பன தெளிவாக அவதானிக்கப்பட்டிருந்த நிலையிலும் கடந்த வாரம் முடிவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட பிரேரணை 40/1 இன் மூலம் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
மார்ச் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிகழ்வுக்கு முன்னதாக இலங்கையின் முதன்மையான செயற்பாட்டாளர்களினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் இல்லாதிருப்பின், இந்த விடயம் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அதிகளவிலான அக்கறையை உருவாக்கியிருக்கமாட்டாது. மிகவும் வியப்பூட்டும் விதத்தில் இலங்கையின் தூதுக்குழு ஒன்று திரட்டப்பட்டிருந்தது. அதன் தலைவரான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சமர்ப்பித்த எழுத்து மூலமான ஓர் அறிக்கையில், மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அனைத்து விடயங்களையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். சந்தர்ப்பவசமாக அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தினால் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளை உள்ளடக்கியிருந்தது. இந்த அறிக்கையின் மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் 2015ஆம் ஆண்டின் பிரேரணை 30/1 இல் குறிப்பிடப்பட்டிருந்த வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனையோர் ஆகிய தரப்பினரின் பங்கேற்பினை தடுப்பதற்கென ஒரு சிலரினால் முன்வைக்கப்பட்டிருந்த தோல்வியை தழுவிய வாதத்தை மீண்டும் எடுத்து வருவதாகவே இருந்து வந்தது.
இந்தக் கட்டுரை இலங்கையின் நீதித்துறை பொறிமுறை ஒன்றில் வெளிநாட்டு நீதிபதிகள் அமர்வதைத் தடுக்கும் விதத்தில் அரசியல் யாப்பு ரீதியான ஒரு தடை இருந்து வருகின்றது என்ற விதத்தில் முன்வைக்கப்பட்டு வரும் பொய்மையை குறிப்பாக கவனத்தில் எடுக்கின்றது. மேலும், அது புலன் விசாரணைகளில் சர்வதேச பங்கேற்பு இடம்பெற்ற கடந்தகால உதாரணங்களை முன்வைப்பதுடன், எதிர்கால நீதித்துறை பொறிமுறை ஒன்றில் வெளிநாட்டவர்கள் ஏன் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் நியாயப்படுத்துகின்றது. அதாவது, வெறுமனே ‘ஆலோசனை’ மற்றும் ‘கண்காணிப்பு’ என்பவற்றுடன் கூடிய கடந்த கால செயற்பாடுகளுக்கு அப்பால் அது முன்னகர்ந்து செல்ல வேண்டுமானால் அத்தகையவர்களை உள்ளடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இறுதியாக இந்தக் கட்டுரை உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான தேவை குறித்து இலங்கையில் நாடெங்கிலும் பெருந்தொகையான மக்களினால் முன்வைக்கப்பட்டிருந்த வேண்டுகோள்களை வலியுறுத்துவதுடன், அரசாங்கமும் ஏனைய அக்கறைதாரர்களும் இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் கலாசாரத்தை கையாள்வதில் உண்மையான விதத்தில் ஆர்வம் கொண்டிருந்தால் அந்த வேண்டுகோள்களுக்கு செவிமடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
அரசியல் யாப்பு சட்டகம்
பிரேரணை 30/1 நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும், அது நிறைவேற்றப்பட்டதனை அடுத்தும் உள்நாட்டு நீதிப் பொறிமுறை ஒன்றில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை உள்ளடக்குவது குறித்து பெருமளவுக்கு ஆரவாரம் நிலவி வந்தது. இக்கட்டுரை ஆசிரியர்கள் இந்த விடயத்தை 2016ஆம் ஆண்டில் இங்கு விபரமாக எடுத்து விளக்கியிருந்தார்கள். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரினால் பரப்பப்பட்டு வரும் பொய்மைகளை கருத்தில் கொண்டு அந்தப் பிரச்சினைகளை மேலும் ஒரு முறை திரும்பக் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையின் அரசியல் யாப்பு இலங்கையில் நீதித் துறை பொறிமுறை ஒன்றுக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவதற்கான எத்தகைய வெளிப்படையான தடைகளையும் கொண்டிருக்கவில்லை என்ற விடயத்தை தொடக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். இங்கு அதிக கவனத்தை கவரும் விடயம், இலங்கையின் நீதித்துறைக்குள் உருவாக்கப்படும் பொறிமுறை ஒன்றின் ஒரு பாகமாக சர்வதேச நபர்களுக்கு இடமளிக்க முடியாது என்ற எளிமையான பசப்புரையாகும். நீதிபதிகளின் பங்கேற்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தேசிய இறைமை தொடர்பான குறுகிய புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டு, சட்டத்துறை வாதங்களை அரசியல் துறை வாதங்களுடன் ஒன்றாக இணைத்து முன்வைத்து வருவது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதாகும். இலங்கையின் உயர் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விதத்தில் – சிரேஷ்ட சட்டத்தரணிகள் வெளிநாட்டு நீதித்துறை பொறிமுறைகளில் நீதிபதிகளாக செயற்பட்டு வந்துள்ளார்கள் மற்றும் அவ்விதம் செயற்பட்டு வருகின்றார்கள் என்ற விடயத்தை கவனத்தில் எடுக்கும் பொழுது இந்த வாதங்கள் அனைத்தையும் உண்மையிலேயே நம்ப முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய திட்டவட்டமான நீதிமன்றங்கள் என்பன ‘மக்களின்’ உரிமைகளைப் பாதுகாத்து, மெய்ப்பித்து, வலியுறுத்தும் நோக்கத்திற்கென நீதியை செயற்படுத்தும் நிறுவனங்களாக இருந்து வருகின்றன என்ற விடயத்தை அரசியல் யாப்பின் உறுப்புரை 105 அங்கீகரிக்கின்றது. மேலும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய திட்டவட்டமான எவையேனும் மேலதிக நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்கள் தேவை எனக் கருதினால், “அவற்றுக்கென சட்டங்களை இயற்றி ஸ்தாபிப்பதற்கு” இந்த உறுப்புரிமை நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குகின்றது.
மேலும், அரசியல் யாப்பு உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றின் நியாயாதிக்கம், தத்துவங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் என்பவற்றை வரையறுத்துக் கூறுவதுடன், நாடாளுமன்றம் மேல் நீதிமன்றம் தொடர்பாக அதே விதத்தில் செயற்படுவதற்கு இடமளிக்கின்றது (உறுப்புரை 154 P இன் கீழ் 13 ஆவது திருத்தத்திற்கு ஊடாக மேல் நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அரசியல் யாப்பு திட்டவட்டமாக குறிப்பிடுகின்றது). மேல் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அத்தகைய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டை மட்டுமே அரசியல் யாப்பு கொண்டுள்ளது. இது தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருடன் கலந்தாலோனை செய்வது அவசியமாகும்.
மேலும், அரசியல் யாப்பு உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றின் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறையையும் குறிப்பிடுகின்றது. இது நீதிபதிகளின் எண்ணிக்கை, ஓய்வு பெறும் வயதுகள் மற்றும் அத்தகைய நீதிபதிகளின் பதவிக்கால பாதுகாப்பு என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. எவ்வாறிருப்பினும், நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதற்கான தகைமையின் ஓர் அளவுகோலாக இலங்கை பிரஜை உரிமையை அவசியப்படுத்தும் ஏற்பாடு ஒன்றை அரசியல் யாப்பு கொண்டிருக்கவில்லை.
ஏனைய நீதிபதிகள் மற்றும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய திட்டவட்டமான நீதிமன்றங்களுக்கான நீதித்துறை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நியமனம் தொடர்பாக அரசியல் யாப்பில் நேரடியாக ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், ஒரு நீதிபதி, தலைமை தாங்கும் உத்தியோகத்தர் அல்லது வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய திட்டவட்டமான ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நீதி நிர்வாகத்திற்கென ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நியாயாதிக்க சபை அல்லது நிறுவனம் என்பவற்றின் உறுப்பினர்களை நியமனம் செய்தல், பதவி உயர்த்துதல், இடமாற்றம் செய்தல் அவர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளல் என்பவற்றுக்கான அதிகாரத்தை அரசியல் யாப்பு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு வழங்குகின்றது. நீதிச் சேவைகள் ஆணைக்குழு நீதிச் சேவை உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித் திட்டங்கள், நியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் என்பன தொடர்பான விதிமுறைகளை உருவாக்க முடியும்.
எவ்வாறிருப்பினும், அரசியல் யாப்பு தான் பொருத்தமானது எனக் கருதும் விதத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவேண்டிய திட்டவட்டமான நீதிமன்றகள் தொடர்பான சட்டங்களை இயற்றி, அவற்றை ஸ்தாபிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குகின்றது. அத்தகைய நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் மற்றும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நியமனங்கள் தொடர்பான அளவுகோல்களை முன்வைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு எத்தகைய தடைகளும் இருந்து வரவில்லை என்பது தெரிகின்றது. உண்மையிலேயே நாடாளுமன்றம் கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் சட்டவாக்கத்திற்கு ஊடாக அத்தகைய அளவுகோல்களை வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் எவரேனும் நீதிபதி ஒருவர் அல்லது வழக்குகள் தாக்கல் செய்யப்படவேண்டிய திட்டவட்டமான வேறு ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நடுத்தீர்ப்பு மன்றம் என்பவற்றின் எவரேனும் நீதிபதி, தலைமை தாங்கும் உத்தியோகத்தர் அல்லது உறுப்பினர் தமது பதவியின் கடமைகள் மற்றும் கருமங்கள் என்பவற்றை இலங்கை அரசியல் யாப்பு மற்றும் சட்டங்கள் என்பவற்றின் பிரகாரம் நம்பிக்கையுடன் நிறைவேற்றுவதாகவும், இலங்கை குடியரசுக்கு விசுவாசமாக இருந்து வருவதாகவும், அரசியல் யாப்பை பேணிப் பாதுகாப்பதாகவும் ஒரு சத்தியப் பிரமாணத்தை செய்ய வேண்டும் என்பதனை அரசியல் யாப்பு கட்டாயப்படுத்துகின்றது என்ற விடயத்தை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
எனவே, இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்வதில் வெளிப்படையான தடைகள் எதுவும் இருந்து வரவில்லை அல்லது அந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்பவர்கள் வேறு ஏதேனும் ஒரு நாட்டின் மீது அல்லது இறைமை அமைப்பின் மீது கொண்டிருக்கும் விசுவாசத்தை அல்லது பற்றுறுதியை துறக்க வேண்டும் என்ற தேவையும் இருந்து வரவில்லை. இந்த அரசியல் யாப்பு ஏற்பாடுகளின் பின்னணியில், ஒரு சட்ட ரீதியான தடை இருந்து வருகின்றது என்ற விடயத்தை வலியுறுத்துபவர்கள் தமது நியாயத்திற்கான சட்ட அடிப்படையை முன்வைக்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றார்கள்.
பொறுக்கூறும் விடயத்தை நிறைவேற்றுவதில் ஒன்றின் பின்னாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கும் நிலை
இங்கு எழும் மிகவும் முக்கியமான பிரச்சினை, தற்போதைய கட்டமைப்பு ரீதியான சட்டகம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனித நேயச் சட்டம் என்பன மிகவும் பாரதூரமான அத்துமீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளதா என்பதாகும். பெருந்தொகையான வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், குற்றச் செயல்களை நிகழ்த்தியிருப்பவர்கள் எனக் கூறப்படும் நபர்களை பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான முன்னேற்றம் மட்டும் ஏற்பட்டுள்ளது. வழக்குத்தாக்கல் செய்து அவர்களுக்கு குற்றத் தீர்ப்பு வழங்க முடியாதிருக்கும் இந்த நிலைமைக்கு, செயன்முறைகள் மற்றும் நிறுவனங்கள் என்பன அரசியல்மயமாக்கப்பட்டிருக்கும் நிலை, புலன் விசாரணைகளின் மீது இடம்பெறும் தலையீடுகள், சான்றுகளின் நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கிய விதத்தில் பரந்த வீச்சிலான காரணங்களை முன்வைக்க முடியும்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் (CPA) அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு புலன் விசாரணைகள் மற்றும் வழக்குத்தாக்கல் செயற்பாடுகள் என்பவற்றில் இடம்பெற்று வரும் தாமதங்களுக்கு பல்வேறு காரணங்களை எடுத்துக்காட்டியிருந்தது. இந்தத் தாமதங்கள் தண்டனை விலக்குரிமை நிலைமை வேரூன்டுவதற்கு பங்களிப்புச் செய்துள்ளது. முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், ‘2009ஆம் ஆண்டு, போர் வீரர்கள் எவரையும் கொன்று, எவ்வாறு அதனை மூடி மறைத்திருக்க முடியும்’ என்ற விடயத்தை உச்ச நீதிமன்றத்தில் பூடகமாக குறிப்பிட்ட பொழுது தெளிவாக முன்னைய இராணுவ அதிகாரிகள் தொடர்பாக குறிப்பிடப்படும் இந்த தண்டனை விலக்குரிமை மட்டங்கள் தெரியவந்தன.
வழக்குத்தாக்கல் செய்யும் செயற்பாடுகள் மற்றும் குற்றத்தீர்ப்புக்கள் என்பவற்றில் உண்மையான முன்னேற்றம் இடம்பெறாத நிலை, தற்போதைய உள்நாட்டுக் கட்டமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் நீதி வழங்கப்பட முடியாது என்ற விடயத்தை எடுத்துக் காட்டுகின்றது. முக்கியமான வழக்குகள் தொடர்பாக கைதுகளை தடுப்பதற்கென அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இலங்கையின் நீதி அமைப்பை ஒரு சிலர் எவ்வாறு தமக்கு அனுகூலமான விதத்தில் கையாள முடியும் என்பதனை சுட்டிக்காட்டுவதாக இருந்து வருகின்றது. நீதித்துறை சுயாதீனமானதாக இருந்து வருகின்றன என்ற கேள்வியையும் அது எழுப்புகின்றது.
நீதித்துறை பொறிமுறையின் வடிவத் தோற்றம் மற்றும் அத்தகைய ஒரு கட்டமைப்பில் தேசிய மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களின் உள்ளடக்கம் என்பவற்றை பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையை இக்கட்டுரை ஆசிரியர்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தார்கள். சர்வதேச நபர்கள் செயன்முறைகள் தொடர்பாக ‘ஆலோசனை வழங்கி’ அவற்றை ‘கண்காணிப்புச் செய்த’ முன்னைய பல சம்பவங்களை இலங்கை கொண்டுள்ளது. லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கெப்பேகடுவ கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்வதற்காக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் நியமனம், 2005ஆம் ஆண்டில் சர்வதேச முதன்மை நபர்களின் சுயாதீனக்குழு (nternational Independent Group of Eminent Persons) மற்றும் 2014ஆம் ஆண்டின் ஆலோசனைச் சபை நியமனம் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. சந்தர்ப்பவசமாக, முதன்மை நபர்களின் சர்வதேச சுயாதீனக்குழு மற்றும் ஆலோசனை சபை என்பன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் செய்யப்பட்டவையாகும். நீதித்துறை பொறிமுறையில் வெளிநாட்டவர்களின் பங்கேற்பை தற்பொழுது மிகவும் கடுமையாக எதிர்த்து வருபவர்களில் ஒருவராக அவர் இருந்து வருகின்றார்.
மேலும், உத்தேச நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கென 2016ஆம் ஆண்டில் கலந்தாலோசனை செயலணியினால் (CTF) நடத்தப்பட்ட ஒரு தேசிய கலந்தாலோசனையின் போது இலங்கை நெடுகிலும் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களுடன் உரையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தில் தற்போதைய பொறிமுறைகள் தொடர்பாக பொது மக்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பன குறைவாக இருந்து வரும் நிலையை கண்டறிய முடிந்தது. அவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்தாராய்வுகளின் போது கிடைத்த மிக முக்கியமான ஒரு முடிவு மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயம் எதிர்கால நீதித்துறை பொறிமுறை ஒன்றில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புக்கான தேவை தொடர்பான விடயமாகும்.
வெளிநாட்டு பங்கேற்புக்கான தேவையை வலியுறுத்திய கலந்தாலோசனைச் செயலணி மற்றும் ஏனைய தரப்புக்கள், தர்க்க ரீதியான சட்டவாதங்களின் அடிப்படையில் அன்றி, பெருமளவுக்கு தேசியவாத கருத்துக்களின் அடிப்படையில் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதேவேளையில், பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரையில் உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் நீதி கிடைக்கும் நிலை இருந்துவரவில்லை என்பதனை மறுப்பதற்கில்லை. பல்வேறு அரசாங்கங்களினால் ஆணைக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் வரலாறு இருந்து வந்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விடயத்தை பொறுத்தவரையில் பதில்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள். தகவல்கள் தெரிந்திருக்கும் ஏனைய சந்தர்ப்பங்களில், நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றம் அறவே காணப்படவில்லை அல்லது வரையறுக்கப்பட்ட அளவிலேயே அது இருந்து வருகின்றது. இது தற்போதைய அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு பங்களிப்புச் செய்திருப்பதுடன், சர்வதேச தலையீட்டுடன் கூடிய விதத்தில் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தூண்டியும் வருகின்றது.
இலங்கையில் உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான தேவை
2015ஆம் ஆண்டில் இலங்கை ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளுக்கு முரணான விதத்தில் அரசாங்கத்தின் ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்கள் அண்மையில் ஒரு சில கூற்றுக்களை முன்வைத்துள்ளனர். அந்தப் பின்னணியில் நோக்கும் பொழுது இலங்கையில் உண்மையான மற்றும் நம்பகமான ஒரு நீதிப் பொறிமுறையை எடுத்து வரும் விடயத்தில் பன்முகப்பட்ட மற்றும் வன்மையான எதிர்ப்பு நிலவி வருகின்றது என்பதை காண முடிகின்றது. இந்த எதிர்ப்புக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொது மக்களின் உணர்வுகளை தூண்டும் வாதங்களின் போர்வையில் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும், இக்கருத்துக்களுக்கு மாறான விதத்தில், பொறுப்புக்கூறும் நிலை தொடர்பாக கணிசமான அளவில் பொதுமக்களின் ஆதரவு காணப்படுகின்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சோஷல் இன்டிகேட்டர் என்ற பிரிவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்கள் 49.3% ஆனவர்கள் கடந்த காலத்தில் உள்நாட்டு கலவரங்களின் போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டிய தேவையை உடனடியாக நிறைவேற்றி வைக்கவேண்டிய அவசியம் இருந்து வருகின்றது என கூறியிருந்தார்கள். அதேவேளையில், 22.5% ஆனவர்கள் குற்றச் செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளை நடத்தி, அவற்றை நிகழ்த்தியிருக்கும் நபர்களை பொறுப்புக்கூற வைக்க வேண்டிய தேவை இருந்து வருகின்றது என நம்புகின்றனர். ஆய்வுக்கு பதிலளித்த அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கான ஆகக்கூடிய ஆதரவு முஸ்லிம் சமூகத்திலிருந்தும் (89.4%), அதனை அடுத்து மலையகத் தமிழர்கள் (87.4%), தமிழ் சமூகம் (86.2%) மற்றும் சிங்கள சமூகம் (67%) என்ற விதத்தில் காணப்பட்டது.
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த போரின் போது இரண்டு தரப்புக்களினாலும் மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பான உண்மையை தெரிந்து கொள்வது முக்கியமானதாக இருந்து வருகின்றது என 72.4% இலங்கையர்கள் நம்புவதாக இதே ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதல் என்பவற்றுக்கான மக்களின் ஆதரவு, இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஆனால் அவை தொடர்பான முன்னேற்றம் வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்து வரும் பின்னணியில் காணப்படுகின்றது. கலந்தாலோசனை செயலணி மற்றும் ஏனைய ஆணைக்குழுக்கள் என்பவற்றின் முடிவுகளுடன் இணைந்த விதத்தில் இந்த ஆய்வு முடிவுகளை கவனத்தில் எடுக்கும் பொழுது, இலங்கையில் உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் ஆதரவளித்து வருகின்றார்கள் என்பதனை தெரிந்து கொள்ள முடிகின்றது.
இவ்விதம் மக்களுடைய ஆதரவு காணப்படும் நிலையிலும் கூட, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்கள் “கடந்த காலத்தை திரும்பிப் பார்க்காமல் எதிர்காலத்தை நோக்குதல்” மற்றும் “பழைய புண்களை மீண்டும் கீறி கிளறாதிருத்தல்” அல்லது “பழிவாங்கும் நீதிக்குப் பதிலாக, முன்னைய நிலைமையை மீண்டும் எடுத்து வரும் நீதி” போன்ற சுலோகங்களைத் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். எவ்வாறிருப்பினும், அவர்களுடைய இந்த உரத்த பசப்புரைகள் பொருள் பொதிந்தவையாக இருந்து வரவில்லை. மேலும், உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான பிரஜைகளின் கோரிக்கைகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவையாகவும் அவை இருந்து வரவில்லை. மேலும், இந்த பசப்புரைகள், எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய வன்முறைச் சூழல்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும் என்பது குறித்து அல்லது போருக்கு வழிகோலிய காரணிகள் மற்றும் அது முடிவடைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பன தொடர்பாக ஒன்றொடன் ஒன்று மாறுபட்ட, வித்தியாசமான விதத்திலான கதைகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு பின்னணியில் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க மறுக்கின்றன.
இந்தப் பின்புலத்தில், பொறுப்புக்கூறும் நிலை தொடர்பான விடயத்தில் உண்மையான முன்னேற்றம் இல்லாதிருக்கும் நிலை, அரச நிறுவனங்கள் மற்றும் அரச செயற்பாட்டாளர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் நிலவிவரும் அவநம்பிக்கையை மேலும் வேரூன்றச் செய்துள்ளது. எனினும், நீதிக்கான தேவையை எவரும் புறமொதுக்கிவிட முடியாது. இந்தப் பின்புலத்திலேயே இலங்கையில் நிலைமாறு கால நீதிச் செயன்முறைக்கு புதுத் தெம்பினை ஊட்ட வேண்டிய தேவை தோன்றுகின்றது. எதிர்கால வன்முறைச் சூழல்களை தடுத்து நிறுத்துதல், நாட்டில் நீண்டகால சமாதானம் மற்றும் ஸ்திரநிலை என்பவற்றுக்கான பொறுப்பினை இலங்கை அரசு கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணைகளின் பின்னணியில், 2015ஆம் ஆண்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கும் விடயங்களை முழுமையாக அமுல் செய்வதற்கு கால அட்டவணை ஒன்றை துவக்கிவைக்க வேண்டிய தேவை இருந்து வருகின்றது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் இப்பெழுது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பொறுப்புக்கூறும் நிலையை தட்டிக்கழிப்பதற்கு பல்வேறு பொய்யான சாக்குப்போக்குகளை முன்வைத்து, அரசாங்கம் இந்த வாய்ப்பை தவறவிட முடியாது. அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கும் விடயங்களை அது நிறைவேற்றி வைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்க வேண்டும். இலங்கை பிரஜைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இதற்கு குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
The case for Foreign Judges in a Judicial Mechanism in Sri Lanka: Countering Falsehoods என்ற தலைப்பில் பவானி பொன்சேகா மற்றும் லுவி ஞானதாசன் எழுதி Groundviews தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.