பட மூலம், HRW

புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான (CTA) சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக முறைப்பாட்டு மனு அளிக்கப்படாவிட்டாலோ இந்தச் சட்டமூலம் நிரந்தரமாக சட்டமாக்கப்பட்டுவிடும். தேடுதல், கைது, விசாரணை, கடுங் கண்காணிப்பு ஆகிய அதிகாரங்களை பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் வழங்குவது உட்பட ஜனநாயக வெளிகளை ஒடுக்குகின்ற தன்மையுடைய இத்தகைய சட்டமூலம் மீதான மனித உரிமை அமைப்புக்களின் கள்ள மௌனம் அவற்றின் அறத்தினை கேள்விக்குள்ளாக்குகின்றது.

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் வடிவிலேயே இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படுமாயின் இது முன்னைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமானது என பண்டிதர்கள் பாராட்டுகின்றனர். Counter Terrorism Act (CTA) எனப்படும் இந்தப் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை மேலோட்டமாக வாசிக்கும் போது பயங்கரவாத தடைச்சட்டத்திலிருக்கும் ‘குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை’, ‘தடுத்துவைப்பதற்கு எதிரான மேன்முறையீடு மீதான கட்டுப்பாடு’ போன்ற சாதாரண சட்டத்துக்கு முரணான சட்ட ஏற்பாடுகள் மனித உரிமைகள் மொழியைப் பயன்படுத்தி மென்மைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது மாற்றியமைப்பட்டதாகவோதான் தோன்றும். இருந்தபோதிலும் நீதிவானுக்கு அன்றி வேறு எந்த அதிகாரிகளுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என்பது, கைதிகளை பார்வையிட மனித உரிமை ஆணையகத்திற்கு அனுமதி இருப்பது, தடுத்துவைப்பிற்கான நீதிவானின் இடைக்கால உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான உரிமை என்ற சட்ட ஏற்பாடுகளை தவிர இந்தச் சட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்த்தப்படும் அரச வன்முறைக்கு எதிராக வேற எந்தப் பாதுகாப்பும் போடப்படவில்லை என்பதே உண்மை. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் அரசாங்க அதிகாரிகளினால் வழங்கப்படும் கட்டளைகளை பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் எமது நாட்டில் இலவச நீதிச்சேவைகள் குறைந்த அளவிலேயே காணும் பட்சத்தில் எத்தனை சாதாரண பணவலிமை குறைந்த மக்களுக்கு அரச கட்டளைகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு முறையீடு செய்யலாம் என்பது கேள்விக்குறியானதே. இவ்வாறு பார்க்கையில் இந்தச் சட்டமானது குறிப்பாக பொருளாதார சமூக அரசியல் பலம் குன்றிய சாதாரண மக்களையே அதிகமாக பாதிக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை.

புதிய பயங்கரவாதச் சட்டத்திற்கு அமைய குற்றங்களாகும் விடயங்கள்

புதிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்டிருக்கும் குற்றச்செயல்கள் பரந்த தெளிவற்ற வரையறுக்கப்படாத தன்மையைக் கொண்டவையாகும். உதாரணத்திற்கு, “அத்தியாவசிய சேவைகள் அல்லது வழங்கல்களுக்குப் பாரதூரமான முட்டுக்கட்டையிடுதல் அல்லது சேதம் விளைவித்தல்”, “ஏதேனும் அத்தியாவசியச் சேவையுடன் அல்லது வழங்கலுடன் இணைந்துள்ள ஏதேனும் கூர்ந்த உட்கட்டமைப்புக்கு அல்லது தகவுப்பொருத்தச் செயலிடத்துக்கு முட்டுக்கட்டையிடுதல் அல்லது சேதம் விளைவித்தல் அல்லது அவற்றுடன் தலையிடுதல்” ஆகிய செயற்பாடுகள் மூலம் “ஏதேனும் செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாது விடுவதற்கு இலங்கை அரசாங்கத்தை பிழையான முறையில் அல்லது சட்டமுறையற்ற வகையில் வலுக்கட்டாயப்படுத்துகின்ற” நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நடைமுறையில் இந்தச் சட்ட ஏற்பாட்டின் பொருள் என்ன? எந்தப் பொதுச் சேவையையும் அத்தியாவசிய சேவையாக வரையறுக்கின்ற முழுமையான அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கின்றது. உதாரணத்திற்கு ஜனாதிபதி எந்தவொரு பொதுப் போக்குவரத்துச் சேவையையும் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவித்து நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் அத்தியாவசிய சேவையொன்றிற்கு ‘தடங்கல்’ ஏற்படுத்துவதாகவோ ‘கூர்ந்த உட்கட்டமைப்பொன்றிற்கு’ தலையீடு செய்வதாகவோ கருதப்பட்டு புதிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவர்.

தொடர்ந்து “ஓர் அடிப்படை உரிமையைச் சட்டமுறையாகப் பிரயோகிப்பதில் …. அவரினால் எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை இச்சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைதலாகாது” என இச்சட்டம் கூறுகின்றது. ஆனாலும் தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொது ஒழுங்கு மற்றும் பொதுசன பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கான உரிமையை அரசியலமைப்பு அரசிற்கு வழங்குகின்றது. பொதுப் பாதுகாப்பு தொடர்பில் கொண்டுவரப்படும் ஒழுங்கு விதிகளாலும் சட்டங்களாலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலையை அரசியலமைப்பு இயலுமாக்குகிறது. அதனால் அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை இச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு நடைமுறையில் மிகக்குறைந்தளவிலான பாதுகாப்பையே வழங்குகின்றது. பயங்கரவாதம் தொடர்பான எந்தச் சட்டங்களிலும் இடம்பெறும் மனித உரிமை மொழியமைப்பு அரச ஒடுக்குமுறையை அங்கீகரிக்கின்ற கடுமையான ஏற்பாடுகளை திரையிட்டு மறைக்கின்ற வேலையையே செய்கின்றது. அந்தவகையில் புதிய பயங்கரவாத சட்டமும் ஒரு விதிவிலக்கு அல்ல.

புதிய பயங்கரவாதச் சட்டத்திற்கு கீழான விசாரணைகள்

பழைய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அமைச்சரின் சந்தேகத்தின் பெயரில் எவரையும் தடுத்து வைக்க முடியும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது. புதிய சட்டத்தின் கீழ் இச்சட்ட ஏற்பாடு மருவி எந்த பொலிஸ் அதிகாரியும் எந்த இராணுவ அதிகாரியும் எந்த எல்லையோர பாதுகாப்பு அதிகாரியும் சந்தேகத்தின் பெயரில் எவரையும் கைது செய்யலாம் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது. கைதுசெய்ததன் பின்னர் கைதி அவர் குறித்த குற்றத்தோடு தொடர்புபட்டுள்ளார் என ஏதேனும் ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் திருப்தியடைவாரானால் அவரினால் இந்தப் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கமுடியும். மேற்கூறப்பட்ட அதிகாரிகளுக்கு, எவரையும் கைதுசெய்வதற்கு இந்தச் சட்டத்தின் கீழ் பிடியாணை தேவை இல்லை. எந்த இடத்திற்குள்ளும் சந்தேகத்தின் பெயரில் உள்நுழைந்து தேடுதல் நடாத்த இந்த அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது. எந்த ஒருவரினது உடைமையையும் சந்தேகத்தின் பெயரில் கையகப்படுத்துவதற்கும் மேற்கூறப்பட்ட அதிகாரிகளுக்கு இச்சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தச் சட்டத்தினால் ஏற்படப்போகும் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தக்கூடிய சட்ட ஏற்பாடுகள் அரச அதிகாரிகளின் விருப்புத்தேர்வுக்கு விடப்பட்டுள்ளது. ஆகையால் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்ற ஒருவருக்கு கைதுசெய்வதற்கான காரணத்தை தெரிவிக்காது இருப்பதோ அல்லது கைதுசெய்யப்படுகின்றவருக்கு புரிகின்ற மொழியில் விளங்கப்படுத்தாமல் இருப்பதோ இச்சட்டத்தின் கீழ் சட்டத்திற்குப் புறம்பானதாக கருதப்படவில்லை. மேலும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பெண் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்படுவதோ விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோ சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்படவில்லை.

இந்தச் சட்டமானது அடிமட்ட உண்மை நிலையை கவனத்தில்கொள்ளாத ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில், கைதுசெய்யப்பட்ட ஒருவர் ஏதாவது காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறாரா என பரீட்சித்து சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கும் அதிகாரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடைமுறையில் சித்திரவதையை யார் செய்கின்றார்களோ அவர்களுக்கே சித்திரவதைக்கான காயங்கள் கைதியின் உடலில் இருக்கிறதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

மேலும் பிரதி பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்படும் தடுப்புக் கட்டளையை கேள்விக்குள்ளாக்குவதற்கு நீதவானுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளையை நீதித்துறையால் நியாயப்படுத்தும் ஒரு கருவியாக நீதிவான் ஒடுக்கப்படுகிறார். எனவே, கைதுசெய்வதற்கான காரணங்கள் அற்பமாக, சட்டத்துக்கு முரணாக இருந்தாலும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்று முழுதாக கைதியை விடுதலை செய்வதற்கு நீதவானுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பிணையில் கூட ஒருவரை விடுதலை செய்வதற்கு பொலிஸ் அதிகாரியின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு நீதிவான் தள்ளப்படுகிறார். இதற்குமேல் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை நீதிவான் கண்டுபிடித்தாலுமே கூட, அந்நபரை விடுவிக்கும் அதிகாரம் நீதிவானுக்கு இல்லை. அந்நபரை சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறைக்கு அனுப்பவேண்டியிருக்கும்.

சித்திரவதையினைச் செய்த அதிகாரி, தடுத்துவைக்கப்பட்டவரை நேரடியாக அணுகுவதைத் தடுப்பதற்கான அதிகாரத்தை இச்சட்டம் நீதிவானுக்கு வழங்குகிறது. ஆயினும், யதார்த்தத்தில் சித்திரவதை என்பது பரந்த அளவில் நடைபெற்றுவரும் ஒரு குற்றச்செயல். விசாரணைகளின்போது கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே நடைமுறை உண்மை. சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரியை கைதியிடம் அணுகுவதில் இருந்து தடுத்தாலும் விசாரணை செய்யும் அடுத்த அதிகாரியும் மீண்டும் இதையே செய்வார் என்பதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடம் இல்லை. எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் நீதவானுக்கு கொடுக்கப்படவிருக்கும் இந்த அதிகாரம் கைதியை ஒருபோதும் சித்திரவதையில் இருந்து பாதுகாக்காது என்பதே உண்மை.

அரசியல் கைதிகளை பொருத்தமட்டில் அவர்களின் வழக்குகள் பழைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே தொடர்ச்சியாக எடுக்கப்பட CTA ஏற்பாடுகள் செய்துள்ளன. எனவே, அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டில் புதிய சட்டமானது எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

பயங்கரவாத சட்டமூலத்தின் கருத்தியல்

மிக முக்கியமாக, இந்தப் புதிய சட்டமானது அரசு தனது மக்கள் மீது அவிழ்த்துவிடக்கூடிய அடக்குமுறை அதிகாரத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கிடையே காணப்படும் சமூக புரிந்துணர்வு மற்றும் இணக்கத்தை சின்னாபின்னமாக்கி ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் யதார்த்தத்தை ஏற்படுத்த இச்சட்டம் முனைகிறது. ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அடைக்கலமளிப்பதையும் அவரோடு தொடர்புவைத்துக்கொள்வதையும் CTA குற்றமாக்குகிறது. ஒரு நபர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டால் (இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை ஒரு பொலிஸ் அதிகாரியின் மனவிருப்பின்படி இவ்வாறு சந்தேகம் தெரிவிக்கப்படமுடியும்), ‘பயங்கரவாத’ சந்தேகநபருடன் தொடர்புவைத்திருக்கும் அனைவரையும் அவரது சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு அறிவிக்கும்படியும் CTA சட்டம் வலியுறுத்துகிறது. குடிமக்கள் எவராவது அவ்வாறு செய்யத்தவறுமிடத்து, அதற்குரிய தண்டனையும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் ஊரடங்கினை அறிவிக்கவும், பொது வாழ்வமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளை அழைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இச்சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஆயுதப்படைகளுக்கு கொடுக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர், எந்தவொரு இடத்தையும் ‘தடுக்கப்பட்ட’ இடமாக அறிவித்து அங்கே மக்கள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். இதற்கு காரணமொன்றைச் சொல்லவேண்டிய எந்தத் தேவையும் இல்ல. ‘தடுக்கப்பட்ட’ இடங்களாக எதையும் அமைச்சர் பிரகடனம் செய்யலாம். உதாரணத்திற்கு மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள், மக்கள் பயன்படுத்தும் பொதுக்கட்டடங்கள் போன்ற இடங்கள் கூட ‘தடுக்கப்பட்ட’ இடங்களாக பிரகடனம் செய்யவதற்கு இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கிறது. ஜனாதிபதி, அமைச்சர் என்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேல் பொலிஸாருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டம், ஒன்றுகூடல், சட்டத்தில் வரையறுக்கப்படாத மக்கள் செயற்பாடுகள் உட்பட அனைத்து மக்கள் செயற்பாடுகள் அல்லது நடவடிக்கைகளையும் வழிகாட்டல்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது.
இவ்வழிகாட்டல்கள் மீறப்படுமிடத்து, மீறுபவரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலடைத்தும் தண்டப்பணம் அறவிட்டும் தண்டிக்க முடியும்.

CTA ஆனது, “பயங்கரவாதத்தை முறியடித்தல்” எனும் போர்வையில் தனது குடிமக்கள் மீது அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு, நிறைவேற்று அதிகாரத்தினுடைய கைகளைப் பலப்படுத்துகிறது. அந்நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியாகவோ பொலிஸாராகவோ ஆயுதப்படைகளாகவோ இருக்கலாம். இச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால், ஏற்கனவே பரவலாக நடைபெறும் சித்திரவதைகள் தொடர்வதும் வரைமுறையற்ற கைதுகளும் கண்காணிப்பும் ஜனநாயகம் இயங்குவதற்கு அவசியமான குடிமக்களுக்கான வெளி மேலும் மேலும் குறுகுவதும் அதன் தவிர்க்க முடியாத தொடர்விளைவாக இருக்கும்.

தமக்குப் பதிலாக பயன்படுத்துவதற்காக மக்களால் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயங்கரவாதச் சட்டமூலத்தினை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதும் அதனை சட்டமாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் மக்களால் வழங்கப்பட்ட அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகிக்கும் செயலாகும். எந்தவொரு பயங்கரவாதச் சட்டவாக்கமும் மக்களுக்கு எதிரானதே. அதனை ‘முற்போக்கானது’ என்று வாதிட முடியாது. பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்தை இலங்கையின் வரலாறு எமக்கு காட்டி நிற்கின்றது.

விடுதலை இயக்கமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கும்படி வலியுறுத்துவதுடன், புதிய பயங்கரவாதச் சட்டமொன்றினை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை மீளப்பெற்று, அதற்குப் பதிலாக அதேபோன்ற கொடிய பயங்கரவாதச் சட்டத்தினை கொண்டுவரும் அரசின் முயற்சியினை விடுதலை இயக்கம் கண்டிக்கிறது. CTA இன் கீழ், பொலிஸ் அதிகாரி ஒருவரினதோ படைவீரர் ஒருவரினதோ தீர்மானத்தின்படி எந்தவொரு பிரசையும் ‘பயங்கரவாதி’ என அடையாளம் காணப்படலாம். மேலும், CTA இன் கீழ், அமைச்சர் ஒருவரின் மனவிருப்பத்தின்பேரில் எந்தவொரு அமைப்பும் ‘பயங்கரவாத’ அமைப்பாக முத்திரைகுத்தப்பட்டு தடைசெய்யப்படலாம். எழுதுவதும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவதும் பொது இடங்களை அணுகுவதும் நட்புக்கொள்வதும் சக மனிதர்களை நம்புவதும் கூட “பயங்கரவாதச் செயலாக” அடையாளம் காணப்படலாம்.

இந்தச் சட்டத்தின் சொற்களை மனித உரிமை மொழியினால் அலங்கரிப்பதால் மட்டும், இங்கே ஒரு நிரந்தரமான பயங்கரவாதச் சட்டம் தேவை இல்லை எனும் உண்மையை மறைத்துவிட முடியாது. அவசரகால நிலைக்குரிய நடைமுறைகள் எமது அரசியல் யாப்பில் இருக்கிறது. அவ்வாறான நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பெரும் அதிகாரங்களை அது ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ஆயினும், ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அது பாராளுமன்றத்துக்கு வழங்குகிறது. அறிவிக்கப்பட்ட எந்தவொரு அவசரகாலநிலையும் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்டு புதுப்பிக்கப்படல் வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தின் மீதான இந்தக் கட்டுப்பாட்டினை நீக்கி எம்மை அரச ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதையே இந்த CTA இலக்காகக்கொண்டுள்ளது.

இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம், CTA வடிவில் எம்மீது திணிக்கப்படும் நிரந்தரமான பயங்கரவாத நிலையின் கீழ் வாழ்வதை மறுத்து நிற்கின்றோம். அதிகாரிகளின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் அடிப்படையில் நாங்கள் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவதை இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் மறுத்து நிற்கின்றோம்.

இந்தச் சட்டவாக்கத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமது இறைமையையும் சுதந்திர குடிமக்களாக வாழ்வதற்கான உரிமையையும் பறிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறுகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நிபந்தனை இன்றி நீக்கப்படுவதோடு புதிதாக கொண்டுவரப்படும் ‘பயங்கரவாத எதிப்புச் சட்டமூலம்’ ஒழுங்குப் பத்திரத்திலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும் என விடுதலை இயக்கம் வற்புறுத்துகின்றது.

விடுதலை இயக்கத்தின் சார்பாக இணை ஏற்பாட்டாளர்களான லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் சுவஸ்திகா அருளிங்கம்