பட மூலம், Foreignpolicy
தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்?
“தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம்” என்பதைச் சமூகம் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றது? கட்டாய எதிர்ப்பால் ஈர்ப்பு, இயற்கையானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது. நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவற்றை தனி மனிதன் மீது சுமத்துவதான வாழ்வியலை சமூகம் கட்டமைத்திருக்கிறது. பால்புதுமையினரும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை.
பெரும்பாலான பாலினப்புதுமையினர் சமூகத்தை எதிர்கொள்ள முடியாது தற்கொலை செய்துகொள்கின்றனர். மதிப்புமிக்க ஒரு உயிரின் தற்கொலைக்கு தூண்டுகோலாக இச்சமூகம் இருக்கும் எனின் சமூகம் தனிமனித சுதந்திரம் பற்றிச் சிந்திக்கவேண்டியது அவசியம். பால்புதுமையினர் பற்றிய சமூகத்தின் பார்வை பெரும்பாலும் ஊடகக் கற்பிதங்களாகவே உள்ளது. பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் பால்புதுமையினரை காட்சிப்பொருளாகவே சித்திரிக்கின்றன. தன்பாலீர்ப்பினர், ‘கே’ ஆண்கள் கேலிச்சித்திர கதாபாத்திரங்களாகவும் ஆண்மையற்றவர்களாகவும், லெஸ்பியன்கள் ஆண்களை வெறுப்பவர்களாகவும் கவர்ச்சியற்றவர்களாகவும் ஊடகங்களில் சித்திரிக்கிறார்கள். இதற்கு உதாரணமாகச் சாருக்கானின் ஹெப்பி நியூ இயர், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.
“தன்பாலீர்பினரை சமூகத்தில் உருவாகுவதற்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்கள் உண்டு” எனச் சொல்லப்படுகிறது. “ஆனால், என்னைப் பொறுத்தவரை இளம்பராயத்தில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழலும் அனுபவங்களுமே இவர்களது பாலினத்தன்மைக்கு காரணம்” என்பது விரிவுரையாளர் (ஆண்) ஒருவரின் கருத்தாக இருக்கிறது. “பல்கிப்பெருகி பூமியை நிரப்புங்கள்” என்று பைபிளில் கூறப்படுகிறது. கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகத்தான் படைத்தார். பால் புதுமையினரால் உருவாக்கப்படும் திருமணங்கள் எதிர்கால சந்ததியை உருவாக்காது. திருமணத்தின் நோக்கம் சந்ததி விருத்தியே. இவ்வாறான திருமணங்களால் திருமணத்தின் நோக்கம் கேள்விக்குறியாக்கப்படும். இதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அதனை ஆதரிக்க முடியாது. எனவே, இவ் விடயம் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக்கூடாது” எனவும் குறிப்பிடுகிறார்.
இவ் விடயம் மத ரீதியாக அல்லாமல் அறிவியல் ரீதியாகவும் மானிட ரீதியாகவும் அணுகப்படவேண்டியது அவசியம். நமக்குத் தெரிந்த விடயங்களைத் தவிர இந்த உலகத்தில் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கங்களை உடையவர்கள் தவறு என்பது அல்ல. அவர்களை எதிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை.
அதேவேளை “ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது தன்பாலீர்பினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் விரிவுரையாளரான ரா.ஆர்த்திகா. தன்பாலீர்பினருக்கும் சமஉரிமை வழங்கப்படல் வேண்டும். இவர்களுக்கான உரிமைகள் சட்டபூர்வமாக்கப்படவேண்டும் என்கிறார்.
“இது சமுதாயத்தில் ஒழிக்கப்படவேண்டிய பிரச்சினை. இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்கள் குர்ஆன் மற்றும் அல்கதீசைப் பின்பற்றுகின்றவர்கள். இஸ்லாத்தில் தன்பாலீர்ப்பு தவிர்க்கப்படவேண்டும் எனவும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதை நாங்கள் பாலியல் தொழிலாகத்தான் பார்க்கிறோம்” என்கிறார் அபுஅமர்.
“தன்பாலீர்பினராக இருப்பது என்பது அவர்களுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், அது எங்களுடைய கலாசாரம் இல்லை. அது வெளிநாட்டுக் கலாசாரம். இப்ப அது ஒரு ரென்டாகப் போய்விட்டது. இது கலாசார சீரழிவு” என்கிறார் மற்ரொரு பெண் விரிவுரையாளர். அவர்களைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கிற உறவு தான் காதல். இது காமம் என்கிறார்.
“இது ஒரு சாதாரண விடயம் தான். இதுவும் இயற்கையான, மாற்றமுடியாத விடயம். காதலிக்கும் உரிமை அனைவருக்கும் சமமானது. அது மட்டும் அல்லாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். ஆனால், தென்னாசிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் நாங்கள் எமது கலாசாரத்தை பின்பற்றுபவர்களாகவும், எமது கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றோம். எனவே, கலாசாரத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்;” என்கிறார் உதவி விரிவுரையாளரான திலினி ராஜகுரு.
“தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. உணர்வின் அடிப்படையானது. மாற்றப்படக்கூடியது. சுதந்திரமாக வாழ்வதற்கும் பொறுப்புக்களைப் புறந்தள்ளுவதற்கும் தன்பாலீர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இது மனிதகுலத்தையே பாதிக்கும். இதனைச் சட்டரீதியாக்கும்போது மற்றவர்களும் தன்பாலீர்ப்பினராவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.” என்கிறார் உதவி விரவுரையாளரான செபராஜ்.
“எனது மதம் தன்பாலீர்ப்பை எதிர்க்கிறது, அதனால் நானும் அதற்கு எதிரானவன்” என்கின்றனர். மனிதநேயம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்பவை மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு அப்பாற்பட்டவை.
தன்பாலீர்ப்பினர் கேலிக்கும் அவதூறுக்கும் உள்ளாக்கப்படுபவர்களாகவே உள்ளனர். சமூகத்தின் மதிப்புமிக்க உயர்கல்வி நிறுவனத்துக்குள் பால்புதுமையினர் பற்றிய பார்வை மற்றும் புரிதல் வேறுபட்டிருகின்றது. பல்கலைக்கழகத்தில் சில பாடத்திட்டங்களுக்குள் இது தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தும் தன்பாலீர்பினர் பற்றிய சமூகத்தின் பார்வை இந்த இளம் தலைமுறையினர் மத்தியிலும் கூட ஆரோக்கியமானதாக இல்லை. அவர்களுடைய கல்வி சமூக மாற்றத்திற்கானதாக இல்லை. தன்பாலீர்ப்பு என்பது அவர்களது அடிப்படை உரிமை சார்ந்தது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.
“காதல் இனம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது எனின் பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே. தனிநபருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்கிறார் பல்கலைகழக மாணவி ஒருவர். மேலும் உலகில் சில நாடுகள் இவர்களுக்கான உரிமைகளை சட்டபூர்வமாக்கியுள்ளன. எமது நாட்டிலும் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
இது இயற்கைக்கு மாறானது. இது ஒரு நோய். ஹோர்மோன் பிரச்சினையால் வருவதல்ல. உணர்வு சம்மந்தப்பட்டது தானே. அவர்களது உணர்வுகளை கட்டுப்படுத்தலாம். எங்களுடைய நாட்டிற்கும் கலாசாரக் கட்டமைப்புக்கும் தன்பாலீர்ப்பு பொருத்தமற்ற ஒரு விடயம். எமது மதங்கள் இதனை வெகுவாக எதிர்க்கின்றன. எனவே, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது பெரும்பாலான பல்கலைகழக மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.
தன்பாலீர்ப்பு ஒரு நோயல்ல. சிகிச்சைக்கு அப்பாற்பட்டது. இந்த உணர்வை மாற்றமுடியாது. இது ஒரு இயல்பு என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புரிந்துணர்வில்லாத சமூகக் கட்டமைப்பில் தன்பாலீர்ப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருபாலின் உறவுக்குள் தள்ளப்படும் போது இன்னொருவரும் பாதிப்பிற்குள்ளாக நேரிடுகின்றது.
பல்கலைக்கழக சமூகத்தில் உள்ள 40 மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் 5 பேர் மாத்திரமே தன்பாலீர்ப்பினர் பற்றிய புரிதலுடனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோர் தன்பாலீர்பினருக்காக குரல்கொடுக்கிறவர்களை, அவர்களும் தன்பாலீர்பாளர்கள் என்பதனால் தான் இவ்விடயம் தொடர்பில் பேசுகிறார்கள் என விமர்சிக்கிறார்கள். சமூகநீதி மற்றும் தனிமனித சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் மற்றும் மதிப்பவர்கள் பால்புதுமையினரின் உரிமைகளுக்காகப் பேசலாம்.
தன்பாலீர்பினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றைத் தடுப்பதற்கும் சமூகத்தில் சமத்துவத்தையும் தனிமனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தில் பால்புதுமையினர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். மேலும் தன்பாலீர்பினர் பற்றிய சரியான விம்பத்தை வெகுஜன மற்றும் புதிய ஊடகங்கள் சித்தரிக்கின்றமையை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும். உலகில் கனடா, சுவிடன், டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், தென்னாபிரிக்கா, போர்த்துக்கல், நோர்வே, நியூசிலாந்து, பிரான்ஸ், பின்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, உருகுவே, பிரேசில், லக்ஸம்பேர்க், அமெரிக்கா, மால்டா, ஐஸ்லாந்து, கொலம்பியா, உருகுவே மற்றும் ஜேர்மனி போன்ற 25 நாடுகள் தன்பாலீர்ப்பினைச் சட்டபூர்வமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகள் அவர்களுடைய கிறிஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தையே பின்பற்றுகின்றன. அதில் இலங்கையும் இந்தியாவும் விதிவிலக்கல்ல. அவை பிரித்தானியர்களின் சட்டத்தையே பின்பற்றுகின்றன. இலங்கையில் 365, 365 அ ஆகிய சட்டப்பிரிவுகள் பால்புதுமையினருக்கு எதிரானவையாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான மேலைநாடுகள் அவர்களுடைய மத ரீதியான சட்டத்தை மாற்றி தன்பாலீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. தென்னாசியாவில் இந்தியா முதன் முதலில் கடந்த 6 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு சட்டக்கோலையின் 377ஆவது சரத்தை நீக்கியதன் மூலம் தன்பாலீர்ப்பினை தண்டனைக்குரிய குற்றம் இல்லை அறிவித்திருக்கிறது. “வாழ்க்கையை அர்த்தமாக்குவது காதல். காதலிக்கும் உரிமையே நம்மை மனிதனாக்குகிறது. காதலை வெளிப்படுத்துவது குற்றம் என்றால் அது மனிதாபிமானத்திற்கு எதிரானது மற்றும் கொடூரமானது” எனவும் “இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது” எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுதர்ஷி லிங்கநாதன்
திருகோணமலை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகாக பணியாற்றி வருகிறார். 2018 செப்டெம்பர் 29ஆம் திகதி பக்கமூனோ தளத்தில் வெளியான கட்டுரை.