படம் | Groundviews

புள்ளி விபரம் தந்தாரம்மா
புதிய பாதை கண்டாரம்மா
விதியிதுவோ சதியிதுவோ
நெஞ்சடைத்து போனதுன்பம்
 
அவன் என்றார்
இவன் என்றார்
சிறுபான்மையென்றார்
படகு மக்களென்றார்
நாய்யென்றார் புலியென்றார்
அகதியென்றார்
புலம்பெயர்யென்றார்
அரசியற் கைதியென்றார்
புனர்வாழ்வென்றார்
பிடி என்றார்… அடி என்றார்…
 
பேய் பூதம் முனியெல்லாம்
பயமில்லை எம்மவர்க்கு
சிவிலுடை வெள்ளைவான்
தலையாட்டி என்றுரைத்தால்
துணிவில்லை எதிர்ப்பதற்கு…
 
காவல்துறை இருக்க
கரும்பச்சை சட்டைகாரன்
கைவிலங்கிலாமல் கடத்திய
கதையை…
காணவில்லை
தொலைந்துபோனோர்
என்றன்றோ கதை கூறி
காலம்தாழ்த்தி
விபரமெடுத்து…
 
மொத்தவிபரப் புத்தகமடித்து
ஏசி ரூமில் ஈசிச்
செயாரிலிருந்து
படித்துப்பார்த்து
ஏப்பம் விட்டாய்…
 
நல்லிணக்க ஆணைக்குழு
ஐ.நா. சபை நிபுணர்குழு
கண்டறியும் விசாரணை குழு
குழுக் குழுவாய் வந்திங்கு
கும்பிட்டழுதவர்
குறைகேட்டு
 
தங்கியூ சொல்லி
டாட்டா பாய் காட்டி
போனவர் எத்தனையய்யா?..
 
பரிந்துரைகளும்
பரிசீலனைகளும்
எம்மினத் துன் நிலை
அறிந்தும்
முடிவிலா முடிவிலியாய்
மூடிவைத்த கோப்புக்களை
 
தட்டியெடுத்து அந்தோ
வருகிறது
இன்னொரு குழு
 
கண்டுபுடி கண்டுபுடி
காணாமல் போனோர்
கால்தடம் கண்டுபுடி
 
ஐஞ்சு வயசுப் பிஞ்சும்
கணக்கெடுப்பில் வந்தபோது
ச்சீ… என்று தோணுதய்யா…
 
தொலைந்தவர் நாம்
எடுத்த கள்வன் நீ நீ நீ…
 
ரிஷி