படம் | Reuters Photo, VOANEWS
ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயத்தில் தீர்மானம் எடுத்த பெரியவர்கள் யார்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், பெரியவர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. அப்படியானால் போர்க்குற்றங்களை விசாரணை செய்வது தொடர்பான விடயத்தில் ஜெனீவாவில் முடிவுகளை எடுத்த பெரியவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. எந்த அடிப்படையில், அவர்கள் பெரியவர்கள் வயதில் பெரியவர்களா? அல்லது அறிவில் பெரியவர்களா? அனுபவத்தில் பெரியவர்களா? யார் அந்தப் பெரியவர்கள்?
இலங்கை இணங்கியது
மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். பின்னர் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தது. பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஆணையாளர் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பை நம்ப முடியாது என்று கூறினார். இப்படி இலங்கை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன. ஆனால், இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு யாரால் முன்வைக்கப்பட்டது? அமெரிக்கா என்ற பெரியவர் எடுத்த முடிவா? ஆணையாளர் என்ற பெரியவரின் தீர்மானமா? அல்லது அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய பெரியவர்கள் சேர்ந்து எடுத்த முடிவா?
யாருடைய முடிவாக இருந்தாலும் இலங்கை அரசை ஏதோ ஒரு வழியில் சர்வதேச பொறிமுறைக்குள் வர வைத்துவிட்டோம் அல்லது விழுத்தி விட்டோம் என்று அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளை ஆதரிக்கும் சிலர் கூறுகின்றனர். இல்லை இந்த முடிவு இலங்கை அரசுக்கு சாதகமானது என்று வேறு சிலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இறுதிக்கட்ட போர் தொடர்பாக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் அதற்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டுள்ளது என்ற தகவலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளுர் சட்டங்கள்
ஆனால், உள்ளுர் சட்டங்களைப் பயன்படுத்தியே விசாரணைகள் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார். அது மாத்திரமல்ல விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்கள் எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெனீவாவில் தீர்மானம் எடுத்த பெரியவர்கள் 2017ஆம் ஆண்டு மார் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் ராஜித குறைந்தது ஒன்றரை வருடங்கள் செல்லுமென கூறியதன் அர்த்தம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் முழுமையான உள்ளடக்கம் இலங்கை அரசிற்கு கையளிக்கப்பட்டதாக ஆணையாளர் கூறியிருந்தார். அந்த உள்ளடக்கத்தின் முழுமையான பிரதிகள் ஊடகங்களுக்கும் கையளிக்கப்பட்டன. ஆனாலும், இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியது போன்று அமைந்திருக்கலாம் என்றும், ஊடகங்களுக்கு கையளிக்கப்பட்ட பிரதிகள் வேறாக இருக்கலாம் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டார்.
வெளிநாட்டு நீதிபதிகள்
போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் விரைவில் இலங்கைக்கு வருவார்கள் என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளிநாட்டு நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகளின் வருகை தொடர்பாக எதுவும் கூறவில்லை. அத்துடன், உள்ளூர் நீதிபதிகள் சட்டத்தரணிகள் தொடர்பாகவே கூறியுள்ளார். அப்படியானால் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் தீர்மானத்தில் கூறப்படவில்லையா அல்லது அது தொடர்பான முடிவுகள் கூட இலங்கை அரசிடமே கையளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளூர் சட்டங்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனீவா தீர்மானத்தில் கூறப்படவில்லை என்றும், ஆனால், அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுவதை நோக்கும்போது மனித உரிமை பேரவை மறைமுகமாக இலங்கை அரசின் அவ்வாறான ஏற்பாடுகளுக்கு இடமளித்துள்ளது போல் தெரிவதாகவும் சந்தேகம் வெளியிட்டார். அத்துடன், தீர்மானம் எடுத்த பெரியவர்கள் இலங்கை அரசின் கடந்தகால அனுபவங்களை கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அதேவேளை, இலங்கை அரசை ஏதோ ஒருவழியில் சர்வதேச பொறிமுறையில் விழுத்தி விட்டதாக கூறும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் முடிவுகளை ஆதரரிக்கும் நபர்கள் தற்போது அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறிய விடயங்கள் தொடர்பாக எவ்வாறான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்களைத் தவிர ஏனைய உறுப்பினர்களும், வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் எல்லோலோருமே தீர்மானத்தை ஏற்கவில்லை. கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் கூட சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், ஆரம்பித்திலேயே சந்தேகங்கள் வெளியிடுவதை தவிர்த்து முதலில் இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தின் படி எவ்வாறு செயற்படவுள்ளது என்பதை அவதானிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஜ.நா. உயர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு கூறியுள்ளர். இதேவேளை, சர்வதேச விசாரணைதான் வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஜெனீவாவுக்கு மகஜர்கள், கடிதங்கள் அனுப்பிவைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆக, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இரண்டு நிலைப்பாடுகள் இலங்கையில் உள்ளன.
இரு நிலைப்பாடுகள்
ஒன்று – எந்த வகையிலான விசாரணையும் தேவையில்லை என பெரும்பான்மையான சிங்கள மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக மைத்திரிபால சிறிசேன அரசும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பு உட்பட அனைத்து சிங்கள கட்சிகளும் போர்க்குற்ற விசாரணையை விரும்பவில்லை. அப்படி விசாரணை நடைபெற்றாலும் உள்ளூர் சட்டங்களின்படிதான் எதுவும் நடைபெற வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இரண்டாவது – சர்வதேச விசாரணைதான் தேவையென தமிழ் மக்கள் அனைவருமே கூறுகின்றனர். சம்பந்தன், சுமந்திரன் கூட சர்வதேச விசாரணைதான் தேவையென ஆரம்பத்தில் கூறியிருந்தனர். ஆகவே, இவ்வாறான இரண்டு நிலைப்பாடுகளுக்கு மத்தியில் ஜெனீவாவில் தீர்மானம் எடுத்த பெரியவர்கள் இலங்கை அரசுக்கு கொடுத்த உண்மையான செய்தி என்ன? அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுவது போன்று உள்ளூர் சட்டங்கள் மற்றும் விசாரணையை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் செல்லும் என்றால் இந்த விசாரணை யாரை பாதுகாக்க? அல்லது இது தமிழர்களுக்கு சர்வதேச ரீதியாக கிடைக்கப்பெற்ற ஆரம்பபுள்ளி என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?