படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம்

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்குகொண்டிருக்கவில்லை. அதேவேளை, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் கூட சம்பந்தனின் நிகழ்வுகளில் பங்குகொண்டிருக்கவில்லை. இது பற்றி இப்பத்தியாளர் வடக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவரிடம் வினவியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார். நாங்கள் வேண்டுமென்று எதனையும் செய்யவில்லை. ஆனால், அவரின் யாழ். விஜயம் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. இதனை உற்றுநோக்கும் ஒரு தமிழ் வாக்காளர் இங்கு என்னதான் நடக்கிறதென்று கேள்வியை எழுப்பினால், அதற்கு என்ன பதிலை சொல்லலாம் என்பதுதான் இப்பத்தியாளரின் கரிசனையாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இல்லாத சம்பந்தனின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அது முன்னைய நிகழ்வொன்றை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. அதாவது, சில மாதங்களிற்கு முன்னர் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோதும் விக்னேஸ்வரன் அதனை புறக்கணித்திருந்தார். ரணிலும் அவரை உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கவில்லை. இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னர் இத்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் விக்னேஸ்வரன் ஒரு பொய்யர் எனவும், அவருடன் தான் எந்தவிதமான தொடர்புகளையும் பேணிக்கொள்ளப் போவதில்லையென்றும் ரணில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரணிலுக்கும் – விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஒரு விரிசல் உருவாகியது. ஆனால் ரணில், கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு முதலமைச்சர் ஒருவருடன் முரண்பட்டபோது, அது தொடர்பில் சம்பந்தன் எந்தவிதமான அபிப்பிராயங்களையும் தெரிவிக்கவில்லை. மேலும், அந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவாக இன்றுவரை விக்கி – ரணில் முரண்பாடு அப்படியே தொடர்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ரணிலுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடு தொடர்கின்ற போது, மறுபுறத்தில் ரணிலுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் அன்னியோன்யமான உறவு காணப்படுகிறது. அரசியல் ரீதியில் இது யாரை பலப்படுத்தும் யாரை பலவீனப்படுத்தும்? இப்படியொரு நிலைமை தொடர்வதற்கான பொறுப்பை யார்மீது சுமத்தலாம். விக்னேஸ்வரன் மீதா? அல்லது சம்பந்தன் மீதா?

விக்னேஸ்வரன் மற்றவர்களைப் போன்று வரிசையில் நின்றுகொண்டு, எனக்கு ஆசனம் தாருங்கள் என்று கேட்டு, அரசியலுக்கு வந்த ஒருவரல்லர். சம்பந்தன் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் அனைவரதும் வேண்டுகோளுக்கும் இணங்கியே அவர் கட்சி அரசியலுக்குள் பிரவேசித்தார். இது வாசகர்களுக்கு நன்கு தெரிந்த விடயமும் கூட. ஆரம்பத்தில் விக்னேஸ்வரனுக்குப் பதிலாக மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக கொண்டுவரலாம் என்னும் யோசனை சிலர் மத்தியில் இருந்தது. ஆனால், அதனை கடுமையாக எதிர்த்து, விக்னேஸ்வரனுக்காக வாதாடியவரும் சம்பந்தன்தான். இந்த வாதப்பிரதிவாதங்களின் போது சம்பந்தன் தன்னுடைய முடிவை நியாயப்படுத்துவதற்கு கூறிய காரணங்கள் அன்று பலராலும் உற்றுநோக்கப்பட்டது. இன்றைய சூழலில் விக்னேஸ்வரன் போன்ற ஒருவர்தான் எங்களுக்குத் தேவை. அவரைப் போன்ற ஒருவர் முதலமைச்சராக இருக்கின்ற போதுதான் அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, மேலும் பல சர்வதேச நாடுகளுடன் நாங்கள் பேசமுடியும். அன்று தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய அனைவருக்கும், சம்பந்தன் மேற்கண்டவாறுதான் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்படியான பதிலை கேட்ட அனுபவம் இப்பத்தியாளருக்கும் உண்டு. அப்படிப்பட்ட விக்னேஸ்வரன் ஏன் இப்போது சம்பந்தனுக்கு வேப்பங்காயாகிவிட்டார்?

விக்னேஸ்வரனது அரசியல் பார்வைகள் அபிப்பிரயாங்கள் ஆரம்பத்தில் சற்று முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவே பலராலும் நோக்கப்பட்டது. இப்பத்தியாளரும் விக்னேஸ்வரனின் சில கருத்துக்கள் தொடர்பில் விமர்சிக்க பின்நிற்கவில்லை. ஆனால், காலப்போக்கில் அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் தெரிந்தது. இந்த மாற்றம் சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஒரு இடைவெளியை அடையாளம் காட்டியது. அதுவே இன்று மெதுவாக விரிவுபெற்று வளர்ந்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது என்று கேட்டால் இப்பத்தி சம்பந்தன் மீதே விரல் சுட்டும். ஒரு உச்சநீதிமன்ற நீதியரசரை அரசியலுக்குள் கொண்டுவந்துவிட்டு, அவரை ஒரு ஓரமாக இருக்கச் சொல்லிவிட்டு, தான் நினைப்பதையெல்லாம் செய்யலாம் என்று சம்பந்தன் எண்ணியதன் விளைவுதான் இந்த முரண்பாட்டின் அடிப்படையாகும். தலைவர் என்பவர் மற்றவர்களை வைத்து வேலைவாங்குபவர் அல்ல. மாறாக மற்றவர்களுடன் இணைந்து வேலைசெய்பவர். கூட்டமைப்பின் தலைவர் என்னும் வகையில் சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய தலைவர்கள் அனைவருடனும் இணைந்து வேலை செய்வதைவிடுத்து, தனக்கு பின்னால் மற்றவர்கள் அனைவரும் இழுபட வேண்டுமென்று எண்ணினார். இதன் விளைவாகவே விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலில் தனித்துத் தெரியும் சூழல் உருப்பெற்றது. அண்மையில் யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய விக்னேஸ்வரன், அங்கு குறிப்பிட்ட விடயங்கள் நான், இங்கு சுட்டிக்காட்டும் விடயங்களோடு அச்சொட்டாகப் பொருந்திப் போவதை காணலாம். “சில கட்சிகளில் ஒரு சிலர் எடுக்கும் முடிவிற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் ‘எதிர்ப்பு அரசியல்’ வாதிகள் என்கின்றனர்” எனக் குறிப்பிட்டார். விக்கியின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி செய்திவெளியிட்டிருந்த ‘நியுஇந்தியன் எக்ஸ்பிறஸ்’ பத்திரிகை, விக்கி நேரடியாக குறிப்பிடாது விட்டாலும் தொப்பி யாருக்கு அளவாக இருக்கிறது என்பது மிகவும் தெளிவாக இருந்தாகவும், அண்மைக்காலமாக விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் மூவர் குழுவான சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் இடம்பெற்றுவருவதன் விளைவே மேற்படி விக்கியின் கருத்து என்றவாறு செய்தியிட்டிருந்தது.

உண்மையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் சம்பந்தன் தமிழ்த் தேசிய அரசியலில் அவருடைய வகிபங்கு என்ன? தன்னுடைய வகிபங்கு என்ன? எந்ததெந்த இடங்களில் நாங்கள் தனித்தும் சேர்ந்தும் செயற்படப் போகின்றோம்? என்பது பற்றியெல்லாம் அமர்ந்து பேசி, பரஸ்பர புரிதலுடன் செயற்பட்டிருந்தால் இன்று இவ்வாறானதொரு விரிசல் உருவாகியிருக்காது. இன்று ஒரு பிணக்கு தோன்றியிருக்கின்ற சூழலிலும் கூட அதனை சரிசெய்ய சம்பந்தன் முயற்சிக்கவில்லை என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஆனால் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதற்கு அவர் யதார்த்தமாக பேசுவதும் ஒரு காரணம். அதேவேளை, இலங்கையின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசுகின்ற போதும் விக்னேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றார். ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நிதியரசர் என்னும் வகையில் அவர் இலங்கையின் நீதித்துறைக்குள் ஒரு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்துகின்ற போது, அதன் அரசியல் பெறுமதி மிகவும் கனதியானது. விக்னேஸ்வரன் எதனை குறிப்பிட்டாரோ, அதனைத்தான் இன்று ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹுசேனும் வலியுறுத்தியிருக்கின்றார். அண்மையில் இலங்கைக்கு வியஜம் செய்திருந்த அமெரிக்கக் குழுவிடமும் கூட விக்னேஸ்வரன் இதனை ஆணித்தரமாக வலியுறுத்தும் வகையில் இலங்கையின் நீதித்துறை தொடர்பில் எழுதப்பட்ட நூல் ஒன்றையும் கொடுத்திருக்கின்றார். இந்த விடயங்கள்தான் சம்பந்தனும், விக்கிக்கும் இடையில் விரிசல் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. சம்பந்தனைப் பொறுத்தவரையில் தன்னுடைய போக்கிற்கு பின்னால் விக்னேஸ்வரன் வரவேண்டுமென்று விரும்புகிறார். ஆனால், விக்னேஸ்வரனோ சம்பந்தனுக்கு பின்னால் போகக் கூடியளவிற்கு அவர் செயற்படவில்லை என்று யோசித்திருக்க வேண்டும். இதுவே விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான பனிப்போரின் உண்மை முகம்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய அரசியல் சூழலில் சம்பந்தன் எதனை நோக்கி பயணிக்கின்றார் என்பதில் ஒரு தெளிவற்ற நிலைமையே காணப்பட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து 2016இற்குள் அரசியல் தீர்வு என்னும் சுலோகத்தை முன்வைத்தார். ஆனால், இவ்வாறு அவர் திருகோணமலையில் பேசுகின்றபோது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ, சமஸ்டித் தீர்வு ஒன்றே கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக முன்னிறுத்தப்பட்டது. அவ்வாறாயின் 2016இற்குள் வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டித் தீர்வொன்று தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இது சாத்தியமான ஒன்றுதானா? இப்படியொரு சூழலில்தான் அமெரிக்காவின் நான்காவது பிரேரணை எதிர்பார்த்தது போன்று இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பிரேரணை வெற்றிகரமானதென்று தமிழரசு கட்சியின் ஒரு சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், தெற்கில் ரணில் விக்ரமசிங்கவோ நாங்கள் மஹிந்த ராஜபக்‌ஷவை காப்பாற்றிவிட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ரணில் இவ்வாறென்றால் மைத்திரிபால சிறிசேனவோ அதற்கு ஒரு படி மேல்சென்று, கலப்பு நீதிமன்றத்திற்கும் மின்சார நாற்காலிக்கும் நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று கூறகின்றார். தமிழரசு கட்சிக்கு வாக்களித்த மக்களோ யாரை நோவது என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கின்றனர்.

இதற்கிடையில் இவ்வாரம் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தாங்கள் கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேசத் தொடங்கிவிட்டதாக தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்றால் அது எப்போது தொடங்கியது? கூட்டமைப்பின் சார்பில் பங்குபற்றியவர்கள் யார்? என்ன பேசப்பட்டது? பேசப்பட்ட விடயங்கள் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டதா? இப்படியான கேள்விகளுக்கு யாரிடம் பதிலை கோரலாம்? மேலும் ரணில் தனது உரையில் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் பேசுகின்ற போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இதனைத்தான் வலியுறுத்தியிருந்தார். ஆனால், சம்பந்தனோ நாடாளுமன்ற நடைமுறைகளின் படிதான் தான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றதாக குறிப்பிடுகின்றார். இப்பத்தியாளரும் அதனை சரியென்று கருதியே முன்னைய பத்திகளில் அது ஒரு சிக்கலான விடயமல்ல என்று பதிவிட்டிருந்தார். ஆனால், ரணில் இந்த விடயத்தை அரசின் நல்லெண்ண முயற்சியாகவே காண்பிக்க முயல்வது சிக்கலான ஒன்றாகும். அதாவது, தமிழர் கண்ணோட்டத்தில். அதைவிடவும் சிக்கலானது ரணில் குறிப்பிடும் அனைத்தையும் சம்பந்தன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகும். இன்று ரணில் குறிப்பிடும் எந்தவொரு விடயத்தையும் மறுத்துப் பேச முடியாமல் சம்பந்தனை தடுக்கும் காரணி எது? அதன் அரசியல் பின்னணி என்ன? இப்படியான கேள்விகளுக்கு விடையில்லாத போது விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளில் எவரும் குற்றம் காண முடியாது. ஆனால், விடயங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் விரித்த வலைக்குள் சிக்குண்டுவிட்டாரோ! என்னும் சந்தேகமே வலுக்கிறது.

1979இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்த போது, அதனை தமிழர் விடுதலைக் கூட்டணி, அதாவது இப்போதைய தமிழரசு கட்சி ஆதரித்திருந்தது. மிகவும் நுட்பமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப் போகும் ஒரு சட்டத்தை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடனேயே ஜே.ஆரால் வெற்றிகரமாக கொண்டுவர முடிந்தது. ஜே.ஆரின் இராஜதந்திர வலைக்குள் பெரும் சட்ட விற்பன்னர்கள் என்றெல்லாம் விதந்துரைக்கப்பட்ட அமிர்தலிங்கமும் அவரைத் பின்தொடர்ந்துகொண்டிருந்த ஏனையோரும் குப்புற விழுந்தனர். இப்பொழுது ஜே.ஆரின் மருமகனான ரணில், கொழும்பின் இராஜதந்திரத்திற்கு தலைமைதாங்கிக் கொண்டிருக்கிறார்.