படம் | CHANNEL4

போர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில், வெளிப்பார்வையாளர்கள் அதாவது, வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் ஏதோ ஒருவித பாதுகாப்பு உணர்வை அனுபவித்திருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்கள் தங்கள் மத்தியில் இருக்கும்போது தங்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவிற்காவது பாதுகாப்புக் கிடைத்ததாக தமிழ் மக்கள் நம்புகிறார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் அகற்றப்பட்டதும் ஏற்பட்ட பேரழிவுக்கு ஒரு காரணம் என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய ஓர் அனுபவப் பின்னணியில் வெளித் தரப்புக்கள் பங்குபற்றும் ஒரு விசாரணைப் பொறிமுறை என்று ஒன்று வந்தால் தமிழ் மக்கள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த நம்பிக்கைகளோடு சாட்சியமளிக்கப்போவார்கள்.

அவ்வாறான விசாரணைகளின்போது ஒப்பீட்டளவில் உண்மை வெளிப்படையாகப் பேசப்படும் ஒரு சூழல் முன்னெப்பொழுதையும் விட அதிகம் உறுதிப்படுத்தப்படும். அப்படி உண்மையானது அச்சமின்றி வெளிப்படையாகச் சொல்லப்படுமாயிருந்தால் அது இலங்கைத் தீவின் படைத் துறைக் கட்டமைப்பில் வெவ்வேறு பதவி நிலைகளில் இருப்பவர்களைக் குற்றஞ்சாட்டுவதாகவே அமையும். அந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று நீதி நிலைநாட்டப்படுமாயிருந்தால் அது தென்னிலங்கையில் இப்பொழுது வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரைக் குற்றவாளிகளாக்கிவிடும்.

தனது வெற்றி நாயகர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையோ அல்லது தண்டிப்படுவதையோ சிங்கள அரசுக் கட்டமைப்பானது ஏற்றுக்கொள்ளுமா? அந்த அரசுக் கட்டமைப்பின் கருவியாக இருப்பவரும் இறுதிக் கட்டப் போரின்போது சிறிய கால கட்டத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமாகிய இப்போதைய அரசுத் தலைவர் அக்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுவாரா? அல்லது ஜனவரி 8இற்கு முன்பு வரை வெற்றி வாதத்தின் பங்காளிகளாக இருந்துவிட்டு இப்பொழுது மாற்றத்தின் பங்காளிகளாக மாறியிருக்கும் அரசியல்வாதிகளில் பலரும் அக்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பேற்பார்களா?

நிச்சயமாக இல்லை. இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படுமாயிருந்தால் அது சிங்கள அரசுக் கட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரையும் குற்றவாளிகளாக்கிவிடும். அதாவது, தமிழ் மக்களுக்குரிய நீதி எனப்படுவது சிங்கள அரசுக் கட்டமைப்பின் முக்கியஸ்தர்களைத் தண்டிப்பதாகவே அமைய முடியும். எனவே, அப்படியொரு விசாரணையை நடாத்தி தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள இலங்கைத் தீவின் எந்தவொரு அரசும் தயாராக இருக்காது. அதாவது, போர்க்குற்ற விசாரணைகளில் தமிழ் மக்கள் உண்மையைப் பயமின்றிச் சொல்வார்களாக இருந்தால் அது சிங்கள அரசுக் கட்டமைப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அது மஹிந்த சகோதரர்களின் அரசாட்சிக்கு மட்டும்தான் எதிராக இருக்கும் என்பதல்ல. மைத்திரியின் ஆட்சிக்கும் எதிராகத்தான் இருக்கும். எனவே, உண்மை அச்சமின்றி வெளிப்படையாகச் சொல்லப்படும் ஒரு விசாரணைச் சூழலை உறுதிப்படுத்தும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையையும் இலங்கைத் தீவின் எந்தவொரு அரசும் ஏற்றுக்கொள்ளாது. இலங்கைத் தீவின் அரசுகள் மட்டுமல்ல, அமெரிக்க – இந்திய பங்காளிகளும் அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மைத்திரி – ரணில் அரசின் ஸ்திரத் தன்மையைக் குலைக்கக் கூடிய எந்தவொரு விசாரணைப் பொறிமுறையையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் தயாரில்லை.

இத்தகையதொரு பின்னணியில் மாற்றத்தின் பங்காளியாகக் காணப்படும் கூட்டமைப்பானது ஜெனிவாவிற்குப் போய் என்ன செய்யப்போகிறது? மாற்றத்தையும் அனைத்துலக விசாரணையையும் ஒரே நேரத்தில் ஆதரிக்க முடியாது. தவிர ஐ.நா. மனித உரிமை ஆணையகம் கடந்த ஆண்டு சாட்சியங்களைத் தொகுத்தபோது அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கூட்டமைப்பானது உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கவில்லை. ஆங்காங்கே உதிரிகளாக ஒரு தொகுதி சாட்சியங்கள் தொகுக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதேசமயம், மக்கள் முன்னணியே அதை ஒரு அரசியல் செயற்பாடாக முன்னெடுத்தது. தூர இடத்தில் இருந்து வந்த சாட்சிகளுக்கு தனது அலுவலகத்தில் வைத்து உணவும் கொடுத்து சாட்சியங்களையும் தொகுத்தது. அதை அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாகச் செய்தது. அதுபோலவே, அக்கட்சியானது கடந்த சில வாரங்களாக அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு கோரி கையெழுத்து போராட்டத்தையும் முன்னெடுத்தது. ஆனால், கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கட்சியை குரூரமாகத் தோற்கடித்தார்கள். தமது ஆணையை அவர்கள் கூட்டமைப்புக்கே வழங்கினார்கள்.

கூட்டமைப்பும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்துலக விசாரணையைக் கோரியிருந்தது. அதன் முக்கியஸ்தர்கள் ஊடகங்களுக்குத் தகவல் தருகையில், அனைத்துலக விசாரணையை ஆதரித்தே கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், மாற்றத்தின் பங்காளியாக இருக்கும் ஒரு கட்சியானது அந்த மாற்றத்தை ஸ்திரமிழக்கச் செய்யக்கூடிய அனைத்துலக விசாரணையை எப்படிக் கோர முடியும்? மாற்றத்தின் பிதாக்களாகக் காணப்படும் மேற்கத்தைய, இந்தியப் பங்காளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு லொபியை அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு முன்னெடுக்க முடியும்? இது ஒரு பராதூரமான அகமுரண்பாடு ஆகும். சிலர் இதை இரட்டை நிலைப்பாடு என்றும் வர்ணிக்கக்கூடும்.

ஆனால், தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையும் அவர்களுடைய நீதிக்கான கோரிக்கையும் ஒரே கோட்டில் இல்லை என்பது ஒரு கொடுமையான அரசியல் போக்குத்தான். சிங்களக் கட்சிகளும் சக்தி மிக்க வெளிநாடுகளும் மட்டும்தான் தூய அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிராகக் காணப்படுகின்றன என்பது அல்ல. தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையைப் பெற்ற கட்சியும் கூட இது விடயத்தில் ஒரு துலக்கமான வழிகாட்டுதலை, ஒரு கூர்மையான லொபியை செய்ய முடியாதிருக்கிறது என்பது ஒரு பின்னடைவே. அமெரிக்கத் தலைமையிலான மேற்கு நாடுகள், இந்தியா, இலங்கை அரசும் உள்ளிட்ட பெரும்பாலான சிங்களக் கட்சிகள் இவற்றுடன் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு ஆகிய எல்லாத் தரப்புக்களும் தூய அனைத்துலக விசாரணைக்கு ஆதரவற்ற நிலைப்பாடோடு காணப்படுகின்றன.

இது தூய அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை முன்வைக்கும் தரப்புக்களை சிறுபான்மையினராக்கித் தனிமைப்படுத்தியிருப்பதுடன் அவர்களுடைய பயணத்தையும் கடினமாக்கியிருக்கின்றது. ஜெனிவாவில் மேற்கத்தைய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்படி தரப்புக்களை தீவிரவாதிகள் என்றோ அல்லது குழப்பிகள் (spoilers) என்றோ முத்திரை குத்தும் ஓர் உலகச் சூழல் காணப்படுகிறது.

இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழர்கள் இதில் சலிப்படையவோ அல்லது விரத்தியுறவோ பின்வாங்கவோ எதுவுமில்லை. ஆட்சி மாற்றத்தின் பின் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே, எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அரசுகளின் நீதி இப்படித்தான் இருக்கும். தமது நிலையான நலன்களின் அடிப்படையில் அரசுகளோடு பங்காளிகளாகக் காணப்படும் கட்சிகளும் இப்படித்தான் செயற்படும். ஆனால், இந்த உலகம் அரசுகளின் உலகம் மட்டுமல்ல. அது அரசற்ற தரப்புகளின் உலகமும்தான்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு குறிப்பாக, சமூக வளைத்தளங்ளின பெருக்கத்தோடு அரசற்ற தரப்புக்களுக்கான ஒப்பீட்டளவில் வினைத்திறன் மிக்க உலகளாவிய அரங்கு உருவாகி வருகின்றது. அது இப்பொழுது மெய்நிகர் யதார்த்த அரங்குதான் என்றாலும் தகவல் புரட்சிக்கு முந்தைய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இது ஒரு பலம்தான்.

எனவே, அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் அரசியல்வாதிகளின் கைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. தமக்குரிய நீதியை வெள்ளைக்காரர்கள் தங்கத் தட்டில் வைத்து கொண்டு வந்து தருவார்கள் என்று காத்திருக்கவும் தேவையில்லை. அரசுகளின் நீதி எது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழர்கள் நீதிக்கான தமது பயணத்திற்குரிய செயற்பாட்டு வெளிகளை மேலும் புதிதாகத் திறக்க வேண்டும். ஏற்கனவே, திறக்கப்பட்டிருப்பவற்றை மேலும் படைப்புத் திறன் மிக்கவையாக மாற்றவேண்டும். இது செயற்பாட்டியக்கங்களின் காலம். தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது செயற்பாட்டு இயக்கங்களின் மீது கட்டியெழுப்பப்படும் போதுதான் தமிழர்களுடைய நீதிக்கான பயணம் மேலும் வினைத்திறன் மிக்கதாக மாறும். இப்பொழுது வந்திருக்கும் ஐ.நா. அறிக்கை கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் தாயகத்திலுமுள்ள செயற்பாட்டாளர்களின் உழைப்பின் திரண்ட விளைவும்தான்.

மேலும், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களின் உப அரங்குகளில் செயற்பாட்டியக்கங்களின் கை மேலொங்கி காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அரசியல்வாதிகளை விடவும் செயற்பாட்டாளர்களே அங்கு உற்றுச் செவிமடுக்கப்படுகிறார்களாம். குறிப்பாக, தமிழ்ப் பகுதிகளில் இருந்து செல்லும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களை உற்றுக் கேட்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த செயற்பாட்டு வெளிகளைத் திறந்து விட்டுள்ளது. அவ் அறிக்கையை வெளியிட்ட பின் மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நாவின் பேச்சாளர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. இனப்படுகொலை நிகழ்ந்திருக்கின்றது என்பதை இப்பொழுது கூற முடியாதிருக்கிறதே தவிர எதிர்காலத்தில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப விஞ்ஞான பூர்வமாக தொகுக்குமிடத்து தமிழர்களுக்குரிய நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் அவர்களுடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

எனவே, பெரும் தமிழ் பரப்பிலுள்ள சட்டச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரு பொதுத் தளத்தில் ஒன்று திரள வேண்டும். அல்லது ஆகக்கூடிய பட்ச ஒருங்கிணைப்பையாவது தங்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மே 18இற்குப் பின் அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு பெறுமதி மிக்க நண்பர்கள் பலர் கிடைத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் மிகப் பலமான மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மதிப்பிற்குரிய ஓய்வு பெற்ற நீதியரசர்களும் பலர் உண்டு. தமிழ் டயஸ்போறாவின் முதலாம் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறையினர் மத்தியில் மிகப் பலமான சட்ட ஆளுமைகள் உண்டு. இந்த வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது யார்?

வட மாகாண சபையும் தமிழக அரசும் பிரகடனங்களை நிறைவேற்றிவிட்டு சிவனே என்று இருந்துவிட முடியாது. செயலுக்குப் போகாத பிரகடனங்கள் அனைத்துலக சமூகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் அசைக்கப்போவதில்லை. எனவே, இப்போதிருக்கும் நிலைமைகளை அதாவது, ஐ.நா. அறிக்கை வெளிவந்த பின்னரான பெரும் தமிழ் பரப்பிலுள்ள நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்களுக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது – தாயகத்தில் அதிகரித்து வரும் சிவில் வெளி

இரண்டாவது – ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் உலகப் பரப்பில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக துலங்கிக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளுமைகள்.

மூன்றாவது – இலங்கை அரசின் மீது பராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முதலாவது உத்தியோகபூர்வமான அனைத்துலக ஆவணமாகிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை.

தாயகத்தில் அதிகரித்து வரும் சிவில் வெளியை ஐ.என்.ஜி.ஓ.க்களை வைத்து இட்டு நிரப்புவதையே அரசுடைய தரப்புக்கள் விரும்பும். சிவில் செயற்பாட்டு வெளிகளை செயற்பாட்டியக்கங்கள் கைப்பற்றுவதற்கு முன்பாக ஐ.என்.ஜி.ஓக்கள் மற்றும் சக்தி மிக்க நாடுகளின் அனுசரணையோடு இயங்கும் சிவில் அமைப்புக்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள், சிந்தனைக் குழாம்கள் போன்றன கைப்பற்ற முயற்சிப்பார்கள். பதிலாக தமிழ் மக்கள் மத்தியில் கீழிருந்து மேலெழும் செயற்பாட்டியக்கங்கள் மேற்படி அதிகரித்து வரும் சிவில் வெளியைக் கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் வெளிச் சக்திகள் வந்து தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம் பற்றியும் தண்டனைக்குப் பதிலாக மன்னிப்பைப் பற்றியும் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

தாயகத்தில் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பைப் பேணும் சட்டச் செயற்பாட்டாளர்களால் சாட்சிகளை விஞ்ஞானபூர்வமானவைகளாகவும், அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப வினைத்திறன் மிக்கவைகளாகவும் நிறுவன மயப்படுத்த முடியும். வரப்போகும் ஏதோ ஒரு விசாரணைக் கட்டமைப்பை ‘‘பங்கெடுத்து அம்பலப்படுத்துவதற்கு” இது மிக அவசியம்.

அடுத்ததாக, அனைத்துலக அளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மேலெழுந்து வரும் பிரபலஸ்தர்களையும் செயற்பாட்டாளுமைகளையும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும்.

அது போலவே, சாட்சியங்களை ஒரு பொதுத் தமிழ் தகவல் மையத்தில் சேமிக்கவேண்டும். ஐ.நா. சேமிக்கிறதோ இல்லையோ சக்தி மிக்க நாடுகள் சேமிக்கின்றனவோ இல்லையோ தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்களுக்கென்று ஒரு பொதுத் தமிழ் தகவல் மையத்தை, சேமிப்பகத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதை அதிகபட்சம் தமிழ் டயஸ்பொறவே செய்ய வேண்டியிருக்கும்.

அரசுகள் சேர்ந்து ஏதோ ஒரு பொறிமுறையை தமிழ் மக்களின் தலையில் வைக்கும்பொழுது உலகப் பொது நீரோட்டத்தோடு ஓடுவது போல ஓடி இடையில் சுழித்துக் கொண்டோடி தமது கனவுகளை வென்றெடுப்பதற்குரிய ஒரு கூட்டுப் பொறிமுறையை தமிழ் மக்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். காற்று எதிர்த்திசையில் வீசும்பொழுது ஒரு திறமையான மாலுமி பாய்மரக் கப்பலை காற்றுக்கு எதிராக நேரே கொண்டு போகாமல் ஒரு வண்டி வைத்து ஓடி எதிர்காற்றையே வழக்காற்றாகப் பயன்படுத்தி சற்றுப் பிந்தியேனும் தனது இறுதி இலக்கை அடைவது போல ஈழத் தமிழர்களும் தமது கனவுகளை நோக்கி யதார்த்ததை வளைத்தெடுக்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.