படம் | விகல்ப

இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள் பேரவையிலே பிரசன்னமாகியிருந்தேன். இலங்கைக்கு எதிராக வலிமையான ஒரு பிரேரணைக்கு இலங்கையை இணங்கச்செய்ய அழுத்தம் கொடுக்கும்படி நாடுகளிடையே பரப்புரை செய்யும்படியாக பிரசன்னமாகியிருந்த பாதிக்கப்பட்டோர்களிடையே பெருகிய உணர்வலைகள் வெற்றியையும் ஆறுதலையும் விளைவாக்கியது; சுவாசத்தையும் வழங்கியது. இறுதியாக அவர்களது ஆறாத்துன்ப துயரங்கள் அங்கீகரிக்கப்பெற்றதுடன், அதற்கான தீர்வும் கண்தொலைதூரத்துள் வந்துவிட்டது. மிகவும் முக்கியமாக உயர் ஸ்தானிகரின் அறிக்கையானது இலங்கையின் உள்ளகப் பொறிமுறையானது நம்பக்கூடியதல்ல என்பதையும் நீதியை உறுதிப்படுத்தும் தகைமை அதற்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதனாலேதான் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத்தொடுப்போர் உள்ளடங்கியதான ஒரு கலப்பு நீதிமன்றத்தை உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார். வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீர பேரவையிலே ஆற்றிய உரையும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. அவர் கடந்த காலத்துத் தவறுகளைப் பற்றியும், தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கு ஒரு அரசியற்தீர்வின் அவசியத்தைப் பற்றியும் பேசியிருந்தார். இதுவரைக்கும் அரசு இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரிக்கவில்லை. இப்படியான விருத்தியாக்கங்கள் யாவும் முன்னேற்றங்கலாகவே கருதப்படவேண்டும்.

விரைவிலே ஏற்றுக்கொள்ளப்படவுள்ள பிரேரணை பற்றி அரசு எடுத்துள்ள தீவிர நிலைப்பாட்டினால் இந்த முன்னேற்றங்கள் சவாலிடப்பட்டுள்ளது. இப்படியான ஒரு நிலைப்பாடானது வெளியுறவு அமைச்சரின் உரைக்கு அமைவற்றதாக இருப்பதாகவே தென்படுகிறது. ஆயினும், இந்த நிலைப்பாடானது அரசின் உத்தியோகபூர்வ கொள்கையைப் பிரதிபலிக்காமல், அதன் பேரம் பேசும் ஒரு யுக்தியாக இருந்திருக்கக்கூடும். எது எவ்வாறிருப்பினும், ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர்களுக்கு, இறுதியிலே ஏற்றுக்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத் தொடுப்போர்கள் பற்றிய குறிப்புக்களை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்பது தெளிவு. இது நிறைவேற்றப்படுமேயாயின், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கான நீதியெனும் முக்கியமான மைல்கல்லாக, இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம் எய்தப்பட்டிராததான ஒரு மைல்கல்லாக அது இருக்கும். இந்தத் தீர்மானத்திலே ஏனைய பகுதிகள் ஒருவேளை பலவீனப்படுத்தப்பட்டாலுங்கூட, மிகவும் முக்கியமான பகுதி, சர்வசேத நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்கேற்பாகும். வெற்றி கைக்கெட்டிய தொலைவிலேயே உள்ளது. அது எய்தப்படுவதை உறதிப்படுத்தும்படியாக நாம் கடினமாக உழைக்கவேண்டும்.

இந்த அறிக்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்திகள் என்ன? முதலாவது, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஆனாலும் கொள்கைப்படியான செயற்பாடானது நடைமுறைச்சாத்தியமற்ற காரியங்களைக் கோருவதைவிட மேலானது. ஒரு சிலர் அதாவது ஆள்மனதிலே ஊறுபடுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு நெருக்கமான சில செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கைகளை விடுக்கும்போது தமது எதிர்பார்ப்பு மட்டங்களையும் உயர்த்திக் கொள்வதுண்டு. உதாரணமாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை அனுப்பும்படியான கோரிக்கைய முன்வைத்து அதற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துச் சேகரிக்கும் பிரச்சாரமானது, நீதியை எய்துவதிலே ஒரு துளி பங்களிப்புத்தன்னும் செய்யவில்லை. ஆனால், அது பாதிக்கப்பட்ட பாமரர்களிடையே எதிர்பார்ப்பை உயர்த்தி, அவர்களை எப்போதுமே மனமடியச்செய்வதையே சாத்தித்தது. பாதிக்கப்பட்டவர்களை நிரந்தரமாக மனமடிவுற்ற நிலைமையிலே வைத்திருப்பது ஒருசில அரசியல்வாதிகளுக்கு நன்மை பயப்பதாக இருக்கக்கூடும். ஆயினும், பல்வேறு கட்டுரைவாயிலாக நான் சுட்டிக்காட்டிதைப்போன்று, பாதிகப்பட்டவர்கள் மற்றும் பாதிப்புற்றோர் சமூகங்கள் தமது நம்பிக்கைகளைத் தளரவிடாமல், நீதிக்கான செயலாற்றங்களிலே ஈடுபடும் அவர்களது இயல்பாற்றல்தான் இறுதியிலே நீதியை எய்திட உதவிசெய்யுயம். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கான நீதி ஈற்றிலே எய்தப்பெற்ற பல நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் அதுதான். நீண்டகால விளையாட்டிலே (ஆங்கிலத்திலே “long game”) விளையாடும் ஆற்றலானது தவறான எதிர்பார்ப்புக்களைத் தொடர்ச்சியாக உருவாக்குவதால் குழிபறிக்கப்படுவதுடன், ஏமாற்றத்தை விளைவிப்பதாயும் இருக்கும். நீதியை எய்தும்படிக்கு எமது சமூகம் இந்தப் போக்குக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளவேண்டும். கலப்புநீதிமன்றம் எய்தப்படக்கூடிய ஒன்று என்பதை நான் எப்போதுமே நிலைநாட்டி வந்திருக்கிறேன். அது இலகுவாயிராது என்றும், நாம் கடினமாக உழைத்தால் அதனை எய்தலாம் என்றும் நான் கூறிவந்திருக்கிறேன். பலமாத காலமாக இடம்பெற்றுவந்த பரப்புரைகளும், கடின உழைப்புக்களும் இன்று பலனளித்துள்ளது. இன்றும் சில நாட்களுக்குள், சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களைக் கொண்டிருப்பதற்கு இலங்கை இறுதியாக இணங்குமா இல்லையா என்பதை நாம் அறியவருவோம். அவர்கள் இணங்கினார்களேயானால், பாதிக்கப்பட்ட பொதுமக்களை தவறாக வழிநடாத்த மறுத்து, நீதியையும் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளையும் நோக்காகக் கொண்டு ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் பதிலீடுகளுக்கான ஒரு நற்சான்றாக அமையும். முன்னர் கலப்பு நீதிமன்றம் பற்றிய எமது நிலைப்பாட்டைக் கண்டித்து விமர்சித்தவர்களுங்கூட இன்று உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்றது மட்டுமன்றி, அந்தக் கலப்புநீதிமன்றம் எப்படி இயங்கவேண்டும் என்பதைப்பற்றிப் பேசிவருகின்றனர். இது ஒரு முன்னேற்றகரமான விடயமாக இருப்பதால் அதனை நாம் வரவேற்றிடவேண்டும்.

அறிக்கையிலே ஆர்வத்தையூட்டும் இன்னும் ஒரு விடயந்தான் இன அழிப்புப் பற்றியதாகும். இன அழிப்புப் பற்றிய எந்த ஒரு கண்டுபிடிப்பையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை. ஆயினும், உயர்ஸ்தானிகர் நடாத்திய ஊடக மாநாட்டின்போது அவரிடம் இன அழித்தொழிப்புப் பற்றிய குறிப்பான கேள்வி கேட்கப்பட்டது. சுமார் 3000 கூற்றுக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், ‘சட்டலைட்’ படங்கள் போன்றவை உள்ளிட்டதாக உயர் ஸ்தானிகரிடம் ஏற்கெனவே உள்ள சான்றுகளின் அடிப்படையிலே அவர் ஒரு இன அழிப்பு இடம்பெற்றுள்ளது எனும் முடிவுக்குத் தன்னால் முடிவுசெய்ய இயலாதிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், எதிர்காலத்திலே போதிய சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், இன அழிப்பு இடம்பெற்றிருப்பதை நீரூபித்திட கூடும் என்றும் கூறியுள்ளார். பொறுப்புவாய்ந்த தமிழ் பரிந்துரைப்பாளர்களும், அரசியல்வாதிகளும் கூறிவந்துள்ள நிலைப்பாடாகவும் இது உள்ளது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது இன அழிப்பு நிகழ்ந்தா? இல்லையா? எனும் விசாரணையை நிகழ்த்தாமலும் இருந்துள்ளமை அதிர்ஷ்டவசமானதே. ஒருவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் மற்றும் ஒருசிலரின் ஆலோசனையைக் கருந்திற் கொண்டு, உள்ள சான்றுகளின் அடிப்படையிலே இன அழிப்பு நிகழ்ந்தா இல்லையா எனும் விசாரணையை ஐ.நா. மேற்கொண்டிருந்தால் இன அழிப்பு நிகழ்ந்திருக்கவில்லை எனும் பதிலை உயர்ஸ்தானிகர் கூறியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அப்படியான ஒரு தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். சகல சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக, இலங்கையிலே மோசமான குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டும் தற்போதைய செய்திகளுக்குப் பதிலாக, “இலங்கையிலே இன அழிப்பு நிகழவில்லை” என்பது வெளிவந்திருக்கும்.

ஞாபகத்திலே கொள்ளவேண்டிய மூன்றாவது முக்கியமான குறிப்பு. எதுவெனில், அறிக்கையானது விடுதலை புலிகளினால் இழைக்கப்பட்ட, வலயன்மடம் கோயிலில் தஞ்சம் கோரிவந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகளைக் கடத்தியது உள்ளிட்டதான, மோசமான குற்றச்செயல்கள் பற்றியும் கூறியுள்ளது. எழிலனும் இளம்பரிதியும் அவ்வகையிலே மோசமான கண்டனத்துக்குரியவர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளைச் சமூகமாக நாம் நேர்மையாக அணுகவேண்டும். எமது பெயரின் கீழ் குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன; அவை எமது மக்கள் மீது இழைக்கப்பட்டதாலும் அவை நடந்தது என்பதை நாம் அறிந்துள்ளதாலும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அறிக்கை சுட்டிக்காட்டுவதுபோல, குற்றச்செயல்களை இயக்கம் இழைத்துள்ளது என நிரூபித்துள்ளமையானது அரசை மன்னிப்பதாக அர்த்தம் பெறாது. எமக்கு இந்தப் பயம் இருக்கவேண்டியதில்லை. எம்மவர்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போதுதான், நாம் இராணுவத்துக்கும் அரசுக்கும் எதிராக குற்றம் சுமத்தும்போது அது மதிப்பைப் பெறும். நேர்மையிலே வெற்றி உண்டு.

நீதிக்கான எமது தாகத்திலே நீண்ட ஒரு பயணத்தின் ஒரு கட்டத்தின் இறுதிப்படியை நாம் அணுகி, புதிய ஒரு கட்டத்துக்குள் நாம் செல்லும்போது, நாம் கடந்தகாலத்துப் பாடங்களை நினைவுக்குக் கொண்டுவருவோமாக. கருத்துள்ள, பொறுப்புள்ள, நேர்மையான செயற்பாடுகள்தான் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல அவசியமானவைகளாகும். அந்தப் பாதையிலேயே நாம் தொடர்ந்து தடம்பதிப்போமாக.

நிறான் அங்கிற்றல்