படம் | DBSjeyaraj

தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பற்றிய இரண்டு பதிவுகள் சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளன. ஒன்று, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2010ஆம் ஆண்டு நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை. இரண்டாவது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் அறிக்கை. இந்த இரண்டு அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ள படைகள் மீதான போர்க்குற்றங்கள் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தாகவும் தலைக்குணிவாகவும் பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த இரு அறிக்கைகளும் வெளிவருவதற்கு காரணம் மூத்த தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அல்ல.

யார் காரணம்?

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வடக்கில் இருந்து வெளிப்படுத்திய சிவில் அமைப்புகள், கத்தோலிக்க திருச்சபையின் வடக்கு கிழக்கில் உள்ள ஆயர்கள், புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் செயற்பாடுகள்தான் இதற்கு காரணம். கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல தடவை ஜெனீவா சென்று இது குறித்த ஆவணங்களை கையளித்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சில உறுப்பினர்களும் வட மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலரும் தனிப்பட்ட முறையில் ஜெனீவா சென்று போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை கையளித்திருந்தனர்.

வட மாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கூட மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கடுமையான அறிக்கைக்கு காரணம் என்றும் கூறலாம். இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லையென அறிக்கையில் கூறியிருந்தாலும் எதிர்காலத்தில் மேலும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படுமானால் மனித உரிமைப் பேரவையில் அது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

ஐக்கிய தேசி கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்தான் நாட்டில் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இரண்டு காரணங்கள்

ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள அழுத்தங்கள், யோசனைகளை தட்டிக்கழிப்பது.

இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று கூறி தமிழ் மக்களையும் அவர்கள் சார்ந்து நிற்கின்ற அரசியல் கட்சிகளையும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டிற்குள் கொண்டுவருவது பிரதான நோக்கமாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் இந்த நோக்கத்தை இரு பிரதான அரசியல் கட்சிகளும் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டு நிறைவேற்ற முற்படுகின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்ற அரச அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.

1920இல் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்து நீடித்து வருகின்ற இனமோதல் அல்லது இனமுரண்பாடு பின்னர் அரசியல் யாப்பு ரீதியாகவும் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களை ஓரம்கட்டியது எனலாம். எனவே, இலங்கைத் தேசியம் என்ற வரையறைகளுக்குள் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி இரு கட்சிகளும் செயற்படுகின்றனர் என்பதற்கு இன்றுவரை உதாரணங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் கூறுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுவதற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை.

அரச அதிபர்கள் நியமனம்

தமிழ் – முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்தது ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசும்தான். அத்துடன், திருகோணமலை மாவட்டத்துக்கான அரச அதிபரையும் சிங்களவராக நியமித்ததும் ஜே.ஆர்தான். ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது. 1983ஆம் ஆண்டில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அதனை கண்டித்தார்கள்.

ஆனால், 1994 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் போர் ஆரம்பித்தது. சிங்கள குடியேற்றங்கள் நீடித்தன. கிழக்கு மாகாணத்தில் சிங்கள அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சி புரிந்தார். போரை முடிவுக்குக் கொண்டுதார். வவுனியா, மன்னார் மாவட்டங்களில் சிங்கள அரச அதிபர்களை நியமித்தார். அதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிட்டது. பின்னர் அந்தக் கட்சி தலைமையிலான அரசு 2015இல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்றுவரை மேற்படி மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்ட சிங்கள அரச அதிபர்கள் நீக்கப்பட்டு தமிழ் அரச அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ் அரச அதிபர்களை நியமிப்பதாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

சம்பந்தன் செய்ய வேண்டியது

ஆகவே, தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன? இந்த வரலாறுகளை சர்வதேசத்துக்கு ஆவணப்படுத்த வேண்டும். இனப்பிரச்சினை என்பது இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சார்ந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் நடந்த போர்க்குற்றங்கள் என்பது இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் பண்புக்குரியது. அந்த இடத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடத்திருக்கும் என்பதற்கு 83ஆம் ஆண்டில் இருந்து வரலாறுகள் உள்ளன. ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை சிங்கள அரசியல்வாதிகள் போன்று பயன்படுத்தாமல் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப செயற்படுத்த வேண்டிய காலகட்டம் இது.

தீர்மானங்கள் எடுக்கப்படும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவைக் கூட்டி ஆராய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூடி ஆராய வேண்டும். வெறுமனே தனித்து எடுக்கப்படும் முடிவுகள் கட்சி அரசியல் பண்புகளுக்கு மாறானவை என்பதை பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகவே, சர்வதேச மட்டத்தில் இரண்டு பதிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தமிழர்சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு சம்பந்தனின் தலைமை பதவியும் காரணமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இராஜதந்திரிகள்

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து ஆணையாளரின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சம்பந்தன் முன்வைக்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அந்தப் பணியை செய்யும்போது ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள் அதனை விரும்புவார்கள் என்று கூற முடியாது. ஆனால், அந்த எதிர்ப்புகள் மூலம் இலங்கையில் வாழும் ஏனைய தேசிய இனங்களின் பிரச்சினைகளை சிங்கள அரசியல் கட்சிகள் எப்படி நோக்குகின்றனர் என்பதை வெளிப்படுத்த முடியும். ஆகவே, சம்பந்தனுக்கு இருக்கக்கூடிய பொறுப்புகள் தற்போது அதிகமாகவே உள்ளன. அதற்கு ஏற்ப தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் புதிய தலைமை ஒன்றையும் அவர் உருவாக்க வேண்டும்?

அ. நிக்‌ஸன்