படம் | AFP Photo, ARAB NEWS

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி 1983இல் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், அந்தப் போராட்டமும் 2009இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. ஆகவே, தமிழர்களை 2009இல் யுத்தத்தில் வெற்றி கொண்டனர். 2015இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசியல் ரீதியாகவும் தமிழர்களை வெற்றி கொண்டனர் என்று கூறலாம்.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இலங்கைத் தேசியம் என்பதை தமிழர்கள் ஏற்றுள்ளனர் என்று சர்வதேச நாடுகளுக்கு சிங்கள கட்சிகளினால் இலகுவாக சுட்டிக்காட்ட முடியும்.

அத்துடன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, 60 ஆண்டுகளுக்கும் மேலான உரிமைப் போராட்டம் இந்த அற்ப ஆசைகளுக்காகவா நடத்தப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது.

1997ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பின்னர் தனது பதவியை இராஜனாமா செய்துவிட்டார். அவர் கூறிய காரணம் என்ன? இலங்கையின் அரசிலமைப்பிற்குள் நின்று கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்த முடியாது என்றும், அந்த யாப்பின் கீழான எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் நிற்பதாகவும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல கொழும்பிலிருந்து தப்பியோடிய அமிர்தலிங்கம் பெண்வேடமிட்டு சென்னை வந்தார் என்றும் அவர் பின்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். நிலைமை அன்று அவ்வளவு கொடுரமாக இருந்தது.

குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் அன்று அமிர்தலிங்கம் செய்த தமிழர்சார்பான அரசியல் செயற்பாட்டுகளுக்கு மாறாக தற்போது சம்பந்தன் ஈடுபட்டு, இன்று இருக்கக்கூடிய குறைந்தபட்ச ஆதரவுத் தளத்தையும் மாற்றியமைத்துவிட்டார் எனலாம்.

சம்பந்தன் எல்லாத்தையும் கவுட்டுக்கொட்டிவிட்டார் என்றே சிலர் கூறுகின்றனர்.

சுருக்கமாக சொல்வதானால்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தமிழர்களை யுத்தத்தில் 2009இல் வெற்றி கொண்டார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தமிழர்களை அரசியல் ரீதியாக 2015இல் வெற்றி கொண்டார்.

2002 நோர்வேயைப் பயன்படுத்தி புலிகளுடன் செய்து கொண்ட அந்த உடன்படிக்கை மூலம் ரணில் விக்கிரமசிங்க எடுத்த அந்த இராஜதந்திரத்தின் இறுதி வெற்றி 2015இல் மைத்திரிபால சிறிசேன என்ற ஒரு பொறியால் நகர்த்தப்பட்டது எனலாம்.

2009இற்குப் பின்னரான சூழலில் யுத்தத்தில் மட்டும் தோல்வியடைந்த சமூகமாக இருந்த தமிழர்கள் 2015 செப்டெம்பர் மாதத்தின் பின்னர் அரசியலிலும் தோல்வி கண்ட சமூகமாக மாறிவிட்டது; மாற்றப்பட்டு விட்டது.

2009 மே மாதம் போராட்டம் முள்ளிவாய்காலில் அழிக்கப்பட்ட பின்னரும் கூட தொடர்ந்து ஜனநாயக வழியில் அஹிம்சையாக போராடக்கூடிய வழிமுறைகள் பல இருந்தும் சம்பந்தனின் மேட்டுக்குடி பிடிவாதம் தமிழர்களின் அரசியல் பாதையை மாற்றிவிட்டது.

பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரும் தமிழ் தலைமைகளிடம் இப்படியான அடகுவைக்கிற இராஜதந்திரம்தான் இருந்தது. 1920 இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்தது இன முரண்பாடு. 1921இல் தமிழர் மாகாண சபை உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், அன்றில் இருந்து இன்று வரை பட்டறிவு இல்லாத தமிழ் தலைமைகளைத்தான் தமிழ்ச் சமூகம் கண்டிருக்கின்றது.

இடையில் 30 ஆண்டுகள் பிரபாகரன் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. அதில் குறைகள் விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும், சம்பந்தனின் அடகு வைக்கும் இராஜதந்திரத்தை விட ஆயுதப் போராட்டம் மேலானது.

அந்தப் போராட்டத்தை நம்பிச் சென்ற பல இளைஞர் யுவதிகள் உலகியல் இன்பங்களை கொஞ்சமேனும் அனுபவிக்காமல் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டனர். வேறு சிலர் இன்று செய்வதறியாது தவிக்கின்றனர்.

சிலர் வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். ஆனால், ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்தே தமிழர் உரிமைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்ட தமிழ்த் தலைவர்கள் பலர் தொடர்ந்தும் இன்று வரை தமது வயதுபோன காலத்திலும் வீரவசனங்களை பேசிக்கொண்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.

தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

அ.நிக்ஸன்