படம் | Reuters Photo, BUSINESS INSIDER
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்து விட்டது என்பதையே இது எடுக்காட்டுகின்றது.
மாற்றங்களை எற்படுத்தினார்களா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான உறவிலும் மாற்றங்களை எற்படுத்தியிருந்தன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் மஹிந்த ராஜபக்ஷ உறவை பேணி வந்தார் என்றும் கூறலாம். ஆகவே, இந்த நிலைமைதான் அப்போதைய இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தீவிரப்படுத்தியது எனலாம்.
அவ்வாறு நோக்குமிடத்து மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தினாரா? அல்லது ஏற்கனவே இருந்த நடைமுறைகளுக்கு மாறாக செயற்பட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாக இலங்கையில் வெளியுறவுக் கொள்கை என்பது பதவியில் இருக்கும் அரசின் கொள்கைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்டு வருதையே காணமுடிந்தது. அவ்வாறு நோக்குமிடத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசும் தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.
சொல்வதைக் கேட்கும் பண்பு
ஆனால், நிலைமை அதுவல்ல மஹிந்த ராஜபக்ஷவோ மைத்திரிபால சிறிசேனவோ வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை எற்படுத்தினார்கள் என்று கூற முடியாது. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் போன்று எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கை என ஒன்று இலங்கையில் இல்லை. வல்லரசு நாடுகளின் போக்குக்கு ஏற்ப தமது வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்ற பண்பு இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு உள்ளது. அப்படி பார்க்குமிடத்து மஹிந்த ராஜபக்ஷ சீன சார்புத் தன்மையை கொண்டிருந்ததால் அந்த நாட்டின் நலன்களுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை பின்பற்றினார்.
அதன் காரணமாக சீன அரசின் கொள்கைக்கு ஏற்ப அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் உறவையும் அவர் பேணினார். இங்கு இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது என்று கூற முடியாது. நாடாளுமன்றத்தில் 201ஆம் ஆண்டு செப்டெம்பர் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய அப்போதைய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கவில்லை, தேவைக்கு ஏற்ப செயற்படுத்தி வருவதாக கூறினார். அப்படியானால் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கின்றது. ஆகவே, அதனை மாற்றியமைக்க அமெரிக்க சார்புத் தன்மையை பின்பற்றுங்கள் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தம்
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றுவதில்லை. ஆட்சியில் இருக்கும் அரசு சர்வதேச நாடுகளுடன் வைத்திருக்கும் உறவில் அது தங்கியுள்ளது என்று கூறினார். மீண்டும் குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க, அப்படியானால் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி சர்வதேச விசாரணையை தடுக்கக் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுப்போம் என்று யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். ஆகவே, இந்த விவாதத்தை நோக்கும் போது இலங்கைக்கு என்று எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கை இல்லை என்பதை அறிய முடிகின்றது.
இலங்கை அரசினுடைய இந்த பலவீனங்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிந்திருக்கின்றன. பொதுவாகவே சிறிய அரசுகளை பெரிய நாடுகள் மிரட்டுகின்ற போக்கு ஒன்றும் உள்ளது. அந்த அடிப்படையில் நோக்கும் போது மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசையும் அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகளினால் மிரட்டமுடியாத நிலை ஏற்பட்டிருந்ததை உணர முடிகின்றது.
அமெரிக்க சார்புத் தன்மை
இந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசை அமெரிக்கா மிரட்டியது என்று சொல்வதைவிட இந்த அரசு இயல்பாகவே அமெரிக்க, இந்திய சார்புத் தன்மையை பின்பற்ற ஆரம்பித்துள்ளது என்று கூறலாம். அதன் காரணமாகவே சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்ற வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது என்ற முடிவுக்கு வரலாம். ஆக இது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் எற்பட்ட மாற்றம் அல்ல. இயலாமையின் நிமித்தம் பெரிய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து போகின்ற இயல்பு என்றும் சொல்லாம்.
தமிழர் இன அழிப்பு விவகாரம் சர்வதேச மயப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணக்கரு ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரம் அல்ல, ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அனைத்து சிங்கள கட்சிகளிடம் அந்த எண்ணக்கரு உள்ளது. அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மையப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ அணி தமிழர் இன அழிப்பு விவகாரத்தை சர்வதேச மயப்படுத்த விரும்பியது என்று கூற முடியாது. சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளின் உதவியுடன் அதனை முடிந்தவரை தடுப்பதற்கு முயற்சி எடுத்திருந்தார்கள் என்று கூறலாம்.
மஹிந்த அணியை சமாதானப்படுத்தல்
எவ்வாறாயினும், இந்த இரண்டு தரப்பும் அதாவது, மஹிந்த அணியும் ரணில் விக்கிரமசிங்க அணியும் தமிழர் இன அழிப்பு விவகாரத்தை மூடிமறைக்கவே முற்படுகின்றன என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. ஆனால், கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள்தான் வேறாக அமைகின்றன. தற்போது உள்ளக விசாரணை என்று கூறி ரணில் விக்கிரமசிங்க அரசு அப்போது மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்வதாக அறிய முடிகின்றது.
ஆக உள்ளக விசாரணை இடம்பெறும்போது தங்கள் அரசு மீது மஹிந்த அணி இனவாதமாக குற்றம் சுமத்துவதை தவிர்ப்பதற்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான முயற்சியை கையாளுகின்றார் என்று கூறலாம். இந்த இடத்தில் உள்ளக விசாரணை என்றால் என்ன என்று அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விரிவுரையாளர், கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த போது நடத்தப்பட்ட தமிழ் இன அழிப்பை முடி மூடிறைத்தல் என்று கூறினார். அத்துடன், 1987இல் இந்திய இராணுவம் புரிந்த படுகொலைகள், இறுதிப் போருக்கு அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய உதவிகள் உள்ளிட்ட அனைத்து இரகசியங்களையும் பாதுகாத்தல் என்று கூறினாலும் பொருந்தும் என அந்த விரிவுரையாளர் பதிலளித்தார். அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளக விசாரணை என்றால் என்ன என்பது குறித்து ஒரு விரிவுரை நடத்துங்கள் என்று அந்த மாணவன் நகைச்சுவையாக சொன்னார்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.