படம் | US Embassy Colombo Official Facebook Page

ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனீவாவிலே இடம்பெறுவதற்கு ஒருசில வாரங்களே உள்ள நிலைமையிலே அவர் விடுத்துள்ள கருத்துக்கள் இலங்கைக்குள்ளும் வெளியேயும் முக்கியமான கண்டனக் கண்ணோட்டங்களை எழுப்பியுள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசு செப்டெம்பரிலே இடம்பெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலே ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாயும், அந்தத் தீர்மானமானது இலங்கையிலே உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஆதரிக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக்கூற்றைத் தொடர்ந்து திருகோணமலையிலே டொம் மலினோவ்ஸ்கி விடுத்த கூற்றிலே அரசின் பொறிமுறை நம்பகத்தன்மையானதாக இருந்தால் மாத்திரமே அதனை அமெரிக்கா ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். அத்தகைய பொறிமுறை நம்பகத்தன்மையானதாக இருப்பதற்கு அது அரசியல் தலையீடற்ற சுயாதீனமானதாயும், சிறுபான்மை இனத்தவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களால் நடாத்தப்படுவதாயும், மேலாக அது சர்வதேச ஈடுபாட்டைக் கொண்டதாயும் இருக்கவேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்களைப் பற்றிய ஊடகச் செய்திகள் தமிழ் சமூகத்தினரிடையே அதிர்ச்சி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச விசாரணையை அமெரிக்கா புறந்தள்ளி, உள்நாட்டு விசாரணைக்கு வக்காலத்து வாங்கி, தமிழர்களைக் கைவிட்டுவிட்டதாக பல ஊடகங்கள் முடிவுகட்டிவிட்டன. தமிழர்கள் தமது அரசியல் போராட்டத்திலே பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். தமிழ்த்தலைவர்கள் அவர்களது சிங்களச் சகபாடிகளால் பல சந்தர்ப்பங்களிலே ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்திலும் அதே பழைய விளையாட்டுத்தான் இடம்பெறும் என அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சாத்தியம் உள்ளது. அப்படிச் சிந்திக்கத் தலைப்படுவது இயல்பானதே. இருந்தாலுங்கூட, ஜெனீவாவிலே இடம்பெறக்கூடிய நிகழ்வுகள் மற்றும் பொறுப்புக்கூறுதல் விடயத்திலே அதன்பின்பு இடம்பெறக்கூடியவைகள் போன்றவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, நாம் உண்மைகளை நிதானமாகக் கருத்திற்கொள்ளவேண்டும். இதற்கெனப் போர்க்குற்றங்கள் தொடர்பிலே, யுத்தத்துக்குப் பிந்திய காலத்திலே இடம்பெற்ற சர்வதேச நகர்வுகள் பற்றிய அண்மைய சரித்திரத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

போர்க்குற்றச்செயல்கள் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சர்வதேச சமூகத்தின் ஈடுபாடானது மே மாதம் 2009 இலே, யுத்தம் முடிவுக்கு வந்த சொற்ப காலத்திற்குள்ளாகவே, ஐ.நா. செயலாளர் நாயகன் பான் கீ மூனும் மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒரு கூட்டறிக்கையிலே கைச்சாத்திட்டதுடன் ஆரம்பித்தது. அந்தக் கூட்டறிகையிலே சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றின் மீறுதல்களையிட்டுப் பொறுப்புக்கூறவைக்கும் ஒரு செயன்முறையை இலங்கை ஸ்தாபிக்கும் எனும் தனது எதிர்பார்ப்பினை பன் கீ மூன் தெரிவித்தார். அந்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்‌ஷவும் இணங்கினார். அதே மாதத்திலே ஜெர்மனி மனித உரிமைகள் பேரவையிலே இலங்கையைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்தும் வாக்களிப்பிலே தோல்விகண்டது. பேரவையிலே உள்ள தனது பங்காளிகளுடன் இணைந்து இலங்கை தனக்கு விரும்பிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டது.

ஆயினும், அர்த்தமுள்ளதும் நம்பகத்தன்மையானதுமான முறையிலே இலங்கை போர்க்குற்றங்களைக் கவனத்திற் கொள்ளத் தவறியதால், இறுதியிலே மார்ச் 2012இலே மனித உரிமைகள் பேரவையிலே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றக் கூடுமாய் இருந்தது. இந்தத் தீர்மானம் மிகவும் எளியதாகவே இருந்தது. அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படியும், அதற்கும் அப்பாற் சென்று நம்பத்தகுந்த உள்ளூர்ப் பொறிமுறையை நிலைநாட்டும்படிக்கும் இலங்கை அரசைக் கோருவதாக இருந்தது.

மீண்டும் ஒரு தடவை இலங்கை சர்வதேச சமூகத்துக்குச் செவிமடுக்கத் தவறிவிட்டது. எனவே, மார்ச் 2013 பேரவையிலே அதேபோன்ற ஆனாலும், மிகவும் கண்டிப்பான தோரணையிலே அமைந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, மார்ச் 2014இலே, சர்வதேச விசாரணை கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்ற தீர்மானம் பேரவையிலே நிறைவேற்றப்பட்டது. ஒரு சில சிறு தமிழ் அரசியற் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அந்தத் தீர்மானத்துக்கு எதிராக விடுத்த கண்டன விமர்சனங்களின் மத்தியிலும் அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வலிமையானதாயும் வல்லமையான சர்வதேச விசாரணையை உருவாக்குவதாயும் இருந்தது. ஆயினும், அதே தீர்மானத்திலேயே நம்பத்தகுந்த ஒரு உள்ளூர்ப் பொறிமுறையை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இருந்தது. சிலர் இதனைக் கண்டித்து, ஒரே பிரேரணையே சர்வதேச விசாரணையை நிலைநாட்டும் அதேவேளை, உள்ளூர்ப் பொறிமுறையை எவ்வாறு நிறுவும்படியாக அரசுக்கு அழைப்பு விடுக்கலாம்? எனக் கேள்வி எழுப்பினர். ஆயினும், நம்பத்தகுந்த ஒரு உள்ளூர்ப் பொறிமுறையை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுப்பதே சர்வதேச சமூகத்தின் நாட்டமாக இருந்தது என்பதுதான் நிஜமே ஒழிய மற்றப்படியல்ல. இதனாலேதான் மார்ச் 2014 தீர்மானமானது சர்வதேச விசாரணையை நிலைநாட்டும் அதேவேளை, குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அதற்காகப் பொறுப்பேற்கச் செய்யும்படிக்கும் இலங்கை அரசுக்கும் அழைப்பு விடுவதாய் இருந்தது. “மீறுதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்வது…” எனும் பதமானது வெறுமனே விசாரணை நடத்தும் கடப்பாட்டுக்கும் அப்பால், அவர்கள் மீது வழக்குத்தொடுத்து குற்றச்செயல்கள் புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் வேண்டிநின்றது.

இந்த இடத்திலேதான் நாம் ‘விசாரணை’க்கும் ‘பொறிமுறை’க்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டைக் குறித்துக்கொள்ள வேண்டும். விசாரணை என்பது வெறுமனே சாட்சிகளுடன் பேசி, சான்றுகளைச் சேகரித்து, குறிப்பிட்ட சில கண்டுபிடிப்புகளுக்கு வரும். ஆயினும், பொறிமுறையானது மிகவும் அகன்றுபட்டதான ஒரு கொள்கையாகும். அது யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிமன்றத்திலே முற்படுத்தி, உண்மையைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளை வழங்கி, அவர்களை வேதனைக்கு உள்ளாக்கிய கடந்த கால நிகழ்வுகள் மீள இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவைகளை உள்ளடக்கியது. தெளிவுறத் தெரிவது எதுவென்றால், சர்வதேச விசாரணையானது தற்போது பூர்த்தியானது மட்டுமன்றி, மேலதிக விசாரணைக்குத் தேவை இல்லை என்பதாகும். மேலும் உண்மையைக் கூறவும் நீதியை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் ஒரு புதிய பொறிமுறையை நிலைநாட்டவேண்டியதாக தேவை தற்போது உள்ளது.

எனவே, சர்வதேச விசாரணையை அமெரிக்காவோ அல்லது வேறு எவருமோ புறந்தள்ளிவிட்டன எனும் வாதமானது சர்வதேசச் சட்டம் அல்லது மனித உரிமைகள் பேரவை ஆகியவை எப்படிச் செயற்படுகிறது என்பதையிட்டதான சரியான விளக்கத்திலே சார்ந்தது அல்ல. மாறாக, மார்ச் 2014 முதல் இடம்பெற்றுவந்த சர்வதேச விசாரணையானது தற்போது செப்டெம்பரிலே அறிக்கையினை வழங்கும். அந்த விசாரணை அறிக்கையானது பின்பு ஒரு புதிய பொறிமுறையை வேண்டி, புதிய பொறிமுறையானது அதன் பரிந்துரைகளுக்கு ஏற்பவே அமுல்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தும்.

இந்தக் கட்டத்திலேதான் இந்தப் புதிய பொறிமுறையானது பரிந்துரைகளை எப்படி அமுல்படுத்தப்போகிறது என்ற கேள்வி எழுகின்றது. நாட்டுக்குள்ளே மேற்கொள்வதா அல்லது நாட்டுக்கு வெளியேயா? நாட்டுக்கு உள்ளேயானால் அந்தப் பொறிமுறை மீதான சர்வதேச பங்களிப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்?

உண்மை அறிதல் மற்றும் நட்ட ஈடுகளை வழங்குதல் போன்றவற்றையிட்டு விவாதிப்பதற்கு இடமில்லை. இந்த நாட்டுக்குள்ளேயே பொறிமுறையானது பூர்த்திசெய்யப்படவேண்டும் என்பது தெளிவு. உண்மை நாடும் முன்னெடுப்புகளுக்கு, குறிப்பாக காணாமற்போனோர்களைப் பொறுத்த விடயங்களுக்கு பாரிய புதைகுழிகள் தோண்டப்படவேண்டும். தடுத்து வைத்திருக்கும் இடங்கள் யாவும் பரிசோதிக்கப்படவேண்டும். அரசக் கோவைகளைப் பார்த்தாகவேண்டும். இவை அனைத்துமே இலங்கைக்குள்ளான ஒரு பொறிமுறையை வேண்டிநிற்கும். பிரான்ஸிலோ அல்லது ஜெனீவாவிலோ உள்ள பொறிமுறைகளால் இவற்றைச் செய்ய இயலாது. நட்ட ஈட்டைப் பொறுத்தவரைக்கும் அரசே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான பணம் நியூயோர்க்கிலோ அல்லது லண்டனிலேயோ விநியோகித்திட முடியாது. அது களத்திலே உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்படுதல் வேண்டும்​

நீதியைப் பொறுத்தவரைக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஒரு சர்வதேசப் பொறிமுறையை மாத்திரமே நாம் வலியூட்டவேண்டும் எனச் சிலர் வாதிப்பதுண்டு. ஆயினும், நான் முன்னர் எழுதிவந்ததைப்போலவே, இலங்கையை சர்வதேசக் குற்றவியல் மன்றத்துக்கு அனுப்பிவைப்பது என்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில், ஐ.நா. பாதுகாப்புப் பேரவையிலே ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தமது வீட்டோ அதிகாரத்தை அவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு எதிராக பாவிப்பார்கள் என்பது தெரிந்த விடயம். மேலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான வழக்குகள் நடைபெற்றாலும் கூட, குற்றவாளி வசிக்கும் நாடானது ஒத்துழைத்தாலே ஒழிய, மற்றப்படி அந்த நபரை (நபர்களை) சிறைவைப்பதற்கான சாத்தியம் சொற்பமானதே. உதாரணமாக, சூடான் நாட்டின் ஜனாதிபதி பஷீர் பலவருட காலமாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் தேவைப்படுபவராக இருந்தார். ஆயினும், சூடான் ஒத்துழைக்காதபடியால், பஷீர் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தொடர்ந்து நிலைகொண்டுள்ளார். மேலும், சர்வதேசக் குற்றவியல் மன்றமானது அது இடைப்படும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து ஓரிரு நபர்களை மாத்திரமே வழக்குக்கு முற்படுத்துவதுண்டு. எனவேஅ போர்க்குற்றம் செய்த அநேகர்களை குற்றங்கள் இழைக்கப்பட்ட நாட்டினுள்ளேயே வழக்குத்தாக்கல் செய்யவேண்டிய தேவைகள் இன்னமும் உண்டு.

இந்தக் காரணங்களாலேதான் இலங்கைக்குள் ஒரு நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியது அவசியமானதாகும். டொம் மலினொவ்ஸ்கி எனும் அமெரிக்க அதிகாரி கூறியதைப்போலவே, அந்தப் பொறிமுறைகள் நம்பத்தகுந்ததாயும், சர்வதேசப் பங்கேற்பினைக் கொண்டதாயும், தமிழ் சமூகத்தைத் திருப்திப்படுத்துவதாயும் அமையவேண்டும். ஒரு தனி உள்நாட்டு பொறிமுறை (purely domestic mechanism) தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இராது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். ஒரு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறை (சர்வதேச பங்கெட்டுப்புடனான இலங்கை பொறிமுறை) தான் காலத்தின் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்களின் கூற்றுகளை இந்த கண்ணோட்டத்தில் தான் பார்வையிட வேண்டும். எனவே, சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி, இலங்கையின் பொறிமுறையிலே சர்வதேசப் பங்களிப்பை உறுதிசெய்து மேம்பட்ட நம்பகத் தன்மையை உறுதிசெய்துகொள்வது அவசியமானதாகும். ஜெனீவா கூட்டத்தொடரின் விளைவீடுகள் எப்படி இருக்கும் என்பது எமக்கு இன்னமும் தெரியாது. நீதியே உருவாக்குவதற்கு இட்டுச்செல்லும் சர்வதேச பங்களிப்புடனான ஒரு சர்வதேசமயமாக்கப்பட்ட இலங்கை பொறிமுறை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா? அல்லது அங்கே ஒரு பலவீனமான தீர்மானந்தான் நிறைவேற்றப்படுமா? இதுபற்றிய விபரங்கள் இன்னும் தெரியாது. ஆயினும், பாதிக்கப்பட்டோர் மனந்தளர்ந்திடக்கூடாது. நேரியதான ஒரு விளைவு ஏற்படுவது இன்னமும் சாத்தியமே. நீதியை நோக்கியதான முன்னேற்றம் துரிதமாயும் இலகுவாயும் இருக்கும் என நான் சொல்வதில்லை. ஆயினும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னைய காலத்திலே என்றும் இருந்திராத விதத்திலே நீதிக்கான சாத்தியங்கள் தற்காலத்திலே மிகவும் அதிகமாக உள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும். நீதி இறுதியிலே வந்தாகவே வேண்டும். வரும்.

நிறான் அங்கிற்றல்