படம் | Colombo Telegraph

சாந்த‌சீலன் கதிர்காமரின் மறைவினைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நான் கல்வி கற்ற பாடசாலையான யாழ்ப்பாணக் கல்லூரிக்கு விசுவாசமான ஒரு பழைய மாணவனை இழந்து விட்டதாக உணர்ந்தேன். அது மட்டுமல்லாது எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக செயற்பாட்டு இயக்கங்கள் நீதிக்கான போராட்டத்துக்கு மிகவும் முக்கியமானவை என்பதனைத் தனது சமூகச் செயற்பாட்டின் மூலமாக நிரூபித்த ஒரு செயற்பாட்டாளரினையும் நாம் இழந்து விட்டதாக உணர்ந்தேன்.

எனது நண்பர் அகிலனின் தந்தை என்ற ரீதியில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணக் கல்லூரி, சமூக செயற்பாடு ஆகிய தளங்களுக்கு சீலன் வழங்கிய பங்களிப்பு நான் அவருடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுவதற்கான சந்தர்ப்பங்களை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிருவாகக் குழுவில் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு 2009ஆம் ஆண்டிலே தெரிவு செய்யப்பட்ட போது சீலனுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு முதன் முதலாகக் கிடைத்தது. பழைய மாணவர் சபையின் நிருவாகக் குழுவுக்கு நான் என்னை அறிமுகம் செய்த போது நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலே கல்வி பயில்வதாகத் தெரிவித்தேன். அதனைக் கேட்டதும் சீலன் என்னுடைய பல்கலைக்கழகக் கல்வி பற்றியும், கல்வி ஆர்வங்கள் பற்றியும் ஆவலுடன் கேட்டறிந்தார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர் சீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய கூட்டத்தின் பின்னர் சீலனும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையின் வரலாறு பற்றி நீண்டநேரம் உரையாடினோம். அப்போது சீலன் தன்னுடைய பல்கலைக்கழகக் காலத்திலே ஆங்கிலத் துறையில் படித்த தனது நண்பர்கள் பற்றியும் குறிப்பிட்டார். பேராதனைப் பல்கலைக்கழகமும், மானிடம் சார் கற்கைகளிலே நாம் இருவரும் கொண்டிருந்த ஆர்வமும், இடதுசாரி அரசியலில் நாங்கள் கொண்டிருந்த பொதுவான நம்பிக்கையும் பழைய மாணவர் சங்கத்தினுள்ளும் வெளியேயும் எமக்கிடையிலான நட்பினை உறுதியாக்கின.

பழைய மாணவர் சங்கத்தின் இளைய உறுப்பினர்களைப் பாடசாலையின் எதிர்கால நலனுக்குப் பங்களிப்பதனை சீலன் எப்போதும் ஊக்குவித்தார். அத்துடன், என்னைப் போன்ற அண்மைய வருடங்களிலே பாடசாலையிலே கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் பாடசாலை, அதன் வரலாறு, அதன் சாதனைகள் பற்றி எவ்வாறான மதிப்பீட்டினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனைக் கேட்டறிவதிலே சீலன் ஆர்வம் காட்டினார். பழைய மாணவர் சங்கத்தில் நடைபெறும் உரையாடல்களிலே சீலன் ஜனநாயகமான முறையிலும் உற்சாகமாகவும் பங்குபற்றினார். அத்துடன், யாழ்ப்பாணக் கல்லூரியிலே கடந்த காலங்களிலே வளர்த்தெடுக்கப்பட்ட ஜனநாயகப் பாரம்பரியங்கள் தொடர்பான தனது நினைவுகளை சீலன் அடிக்கடி மீட்டிப் பார்த்து அவற்றினை பழைய மாணவர் சங்கத்தின் இளையோருடனும் பகிர்ந்துகொள்ளுவார்.

2009ஆம் ஆண்டிலே நான் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிருவாகக் குழுவிலே உறுப்பினராக இருந்த வேளையிலே, 1995ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலே நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வு தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையினை எழுதிக் கொண்டிருந்தேன். எனது ஆய்வின் போது சீலன் கதிர்காமர் எழுதிய மிகவும் முக்கியமான, ஆர்வம் ஊட்டக் கூடிய இரண்டு கட்டுரைகளை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவற்றிலே ஒரு கட்டுரை தேசிய நல்லிணக்கத்திலே கிறிஸ்தவத் திருச்சபைகளின் பங்களிப்புப் பற்றியதாக இருந்தது. மறைந்த முன்னாள் பேராயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க போன்ற பல்வேறு கிறிஸ்தவ சமயத் தலைவர்களாலும் குழுக்களாலும் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பாராட்டி எழுதிய‌ சீலன், ஓர் இடதுசாரி அறிஞர் என்ற ரீதியிலே திருச்சபையின் அரசியல் நிலைப்பாடுகளிலே தான் அவதானித்த குறைகளினைச் சுட்டிக்காட்ட ஒரு போதும் தயங்கவில்லை. உதாரணமாக இலங்கை சுதந்திரம் பெற்றதனை அடுத்து வந்த ஆண்டுகளிலே ஆங்கிலக் கல்வி கற்ற மேல்தட்டு வர்க்கத்தினைச் சேர்ந்த திருச்சபைத் தலைமைத்துவத்தின் வர்க்க வேறுபாடு காட்டும் மனோநிலையினை சீலன் விமர்சித்தார். அதேபோல பிற்பட்ட காலங்களிலே வடக்கிலும், தெற்கிலும் இயங்கிய பல திருச்சபைகள் குறுகிய தேசியவாத அரசியலுக்கு முண்டு கொடுத்தமையினையும் சீலன் சுட்டிக்காட்டினார்.

சீலன் ஆடம்பரமற்ற, வெளிப்படையாகப் பேசும் ஒரு செயற்பாட்டாளராக இருந்தார். அந்த வகையிலே தான் ஒரு காலத்திலே தமிழ்த் தேசியவாதத்தினையும், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினையும் ஆதரித்த ஒருவர் என்பதனை அவர் ஒருபோதும் பொதுத் தளங்களிலே மறைக்க முற்பட்டதில்லை. இடதுசாரிப் புலமைத்துவ மரபுக்கு இணங்க, மாறுகின்ற சமூக நிலைமைகளைக் கருத்திலே கொண்டு சீலன் தனது அரசியல் கருத்துக்களை எப்போதும் மதிப்பிட்டு அவற்றினை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தினார். விடுதலைப் புலிகள் தெற்கிலே அப்பாவிச் சிங்கள மக்களையும் வடக்குக் கிழக்கிலே மாற்றுக் கருத்தாளர்களையும் கொலை செய்ய ஆரம்பித்தமையினைச் சீலனால் சகிக்க முடியவில்லை. அதனாலே அவர் புலிகளின் அரசியலினைக் கேள்விக்குட்படுத்தினார். ஆயுதப் போராட்டத்தினையும் குறுகிய தேசியவாத அரசியலினையும் சீலன் விமர்சித்த போதிலும், தமிழ் மக்களுக்கும் நாட்டில் உள்ள ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும் எதிராக அரசு மேற்கொண்ட வன்மமான‌ செயல்களைச் சீலன் தொடர்ந்தும் கண்டித்தார். சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சமஷ்டி அரசியல் முறையே ஒரே வழி என சீலன் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

“இலங்கைத் தமிழர் அரசியலில் இடதுசாரிப் பாரம்பரியம்” (The Left Tradition in Lankan Tamil Politics) என்ற தனது கட்டுரையிலே சீலன் தமிழ்ச் சமூகத்தினைச் சேர்ந்த பல்வேறு தர்ப்புக்களால் காலனித்துவக் காலப்பகுதியிலும் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட முற்போக்கான சமூக இயக்கங்கள் பற்றியும், அனைத்து சமூகங்களின் நலன்களினையும் உள்வாங்கிய‌ தேர்தல் அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றியும் எழுதுகிறார். அத்துடன், 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலே தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறையும், தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சியும் இந்த அரசியல் முன்னெடுப்புக்களினை எவ்வாறு முடக்கின என்பதனைப் பற்றியும் சீலன் இந்தக் கட்டுரையிலே குறிப்பிடுகிறார். காலனித்துவத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற முற்போக்கான அரசியல் மரபு பற்றியும், வட இலங்கையிலே மதச் சார்பற்ற அரசியல் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதனைப் பற்றியும் நாம் விளங்கிக்கொள்ளுவதற்கு சீலன் எழுதிய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தொடர்பான நூல் முக்கியமானது. சீலனின் வாழ்வும், இலங்கையிலே நீதியும் சமாதானமும் நிலவுவதற்காக இயங்கிய சர்வமத செயற்பாட்டுத் தளங்களிற்கு அவர் வழங்கிய பங்களிப்பும், சமயங்களுக்கும் சமூக நீதிக்கான போராட்டங்களுக்கும் இடையில் ஓர் ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற முடியும் என்பதனையும், சமூகத்திலும் அரசிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு சமயங்கள் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதனை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

நாட்டின் இன்றைய அரசியல் நிலையினை எடுத்து நோக்குகையில் நாம் இப்போது ஒரு ‘மாற்றத்தின்’ விளிம்புகளிலே நிற்கிறோம் என்று கருதலாம். இந்த மாற்றத்தினை கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் நாட்டு மக்கள் ஏற்படுத்தினர். ஆனால், இந்த மாற்றத்திற்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சரியான உருவத்தினை வழங்கி இந்த மாற்றத்தினை நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக வறியவர்கள், சமூகத்தின் அடித் தட்டுக்களில் வாழ்வோர், பெண்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கு அர்த்தம் உள்ள ஒன்றாக மாற்றுவதற்கு நாம் எம்மாலும், அரசாலும் கடந்த காலங்களிலே எம்மை ஒருவரிடம் ஒருவர் பிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தடுப்புச் சுவர்களினை உடைத்தெறிய வேண்டும். மாற்றத்தினை உருவாக்குவதற்கும், பல தரப்புக்களினையும் உள்ளடக்கிய, சமத்துவம் மிக்க ஓர் எதிர்காலத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் நாம் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படுவது அவசியம்.

இன்றைய வரலாற்றுத் தருணம் எம்மிடம் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாட்டின் தன்மை குறித்து சிந்திக்கையிலே சீலன் 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் ஆரம்ப வருடங்களிலும் இணைந்து செயற்பட்ட இரண்டு சமூக இயக்கங்களினைப் பற்றி குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தக் காலப்பகுதியிலே தலைவிரித்தாடிய அரச ஒடுக்குமுறைக்கு எதிராக இனங்களுக்கு இடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கமும் (Movement for Inter-Racial Justice and Equality), யாழ்ப்பாண பிரஜைகளின் குழுவும் (Jaffna Citizens’ Committee), மிகவும் கடினமான அரசியல் சூழலிலே, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே செயற்பட்டார்கள். இனங்களிடையிலே பிரிவினையைத் தூண்டாத வகையில் செயற்பட்ட இந்த இயக்கங்களும், அவற்றிலே பணியாற்றிய சீலன் போன்ற துணிச்சலான செயற்பாட்டாளர்களும் ஒப்பீட்டளவிலே அமைதி நிலவும் இன்றைய நாட்களில் நாம் பல்லினங்களையும் உள்ளடக்கிய சமூக இயக்கங்களினைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் எம்மத்தியிலே உருவாக்குகின்றனர்.

சீலனினை ஒரு நண்பராகவும், அரசியற் தோழராகவும், நான் படித்த பாடசாலையின் சக பழைய மாணவனாகவும் நினைவுகூருகின்ற அதேவேளை, தேசிய ரீதியிலும், பிராந்திய ரீதியிலும் சீலன் இணைந்து செயற்பட்ட பல்வேறு இனங்களினை உள்ளடக்கிய சமூக இயக்கங்களினையும், அந்த இயக்கங்கள் அரசினையும் எமது சமூகங்களினையும் ஜனநாயகப்படுத்துவதிலே கொண்டிருந்த பற்றுறுதியினையும், அதன் பொருட்டு அவை ஆற்றிய பணிகளையும் நான் நினைவில் நிறுத்த விரும்புகிறேன். சீலனும் இந்த இயக்கங்களும் கொண்டிருந்த விடுதலை பற்றிய பார்வை எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் நீண்ட காலப்பகுதியிலும் எமது அரசியல் மற்றும் சமூக ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பில் அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

சீலன் கதிர்காமரின் வாழ்வினை நயக்கும் வகையிலும், அவரது சமூகப் பணிகள் பற்றி சிந்திப்பதற்காகவும் ஒரு நிகழ்வு நாளை, ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி அன்று பிற்பகல் 5.30 மணிக்கு இலக்கம் 60, இராம​கிருஷ்ணா வீதி, கொழும்பு – 06 இல் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மண்டபத்திலே நடைபெறவுள்ளது. சீலனின் நண்பர்கள், அரசியற் தோழர்கள், யாழ்ப்பாணக் கல்லூரிச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்விலே கலந்துகொள்ளும் படி பணிவுடன் அழைக்கப்படுகிறார்கள்.

மகேந்திரன் திருவரங்கன்