படம் | AFP Photo, ARAB NEWS

திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு தீவிரமடையக் கூடும். ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தாக்கமுள்ள பிரச்சாரங்கள் எதனையும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியவில்லை என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில்தான் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் இரா. சம்பந்தன் இம்முறை திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்று கூறி வருகின்றார். ஆனால், இது சாத்தியம்தானா? முன்னர் சம்பந்தன் தன்னுடைய வயது மற்றும் உடல்நிலை கருதி தேர்தலில் இருந்து ஒதுங்குவார் என்னும் நம்பிக்கையே மக்கள் மத்தியில் இருந்தது. சம்பந்தனும் அப்படியான அபிப்பிராயத்தைத்தான் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தார் ஆனால், இறுதி நேரத்தில் சம்பந்தன் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார்.

2004இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை பெற்றிருந்தது. இதன்போது கூட்டமைப்பு 63,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. இரா. சம்பந்தன் மற்றும் எந்தவொரு சமூக அறிமுகமும் தொடர்பும் இல்லாத துரைரட்ணசிங்கம் என்பவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகினர். ஆனால், அதே கூட்டமைப்பு 2010இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 33,000 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தை மட்டுமே வெற்றிகொண்டிருந்தது. 2004இல் 63,000 வாக்குகளை பெற முடிந்த கூட்டமைப்பால் ஏன் 2010இல் அதன் அரைவாசி வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது? பதில் ஒன்றுதான் – 2004இல் கூட்டமைப்பின் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தது, 2010இல் அது இல்லை. இந்த விடயங்களை திருகோணமலை தேர்தல் களத்தில் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் சுட்டிக் காட்டியிருந்தார். யதீந்திரா, நாங்கள் இன்று ஒரு கூட்டமைப்பாக ஓரணியில் நிற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவருகின்றார். கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு கிழக்கில் தங்களுடைய வேட்பாளர்களை களமிறக்கியிருக்கும் சூழலில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது உங்கள் அனைவரதும் கடமை. கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் நாங்கள் பலவீனப்படுத்திவிடக் கூடாது என்னும் வாதத்தையே யதீந்திரா முன்வைத்து வருகின்றார். சம்பந்தனும் இந்த விடயங்களை எதிர்க்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் முன்னாலுள்ள பிரதான சவால் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றே! முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. இது முஸ்லிம்கள் கடைபிடிக்கும் வழக்கமான உபாயம். இவ்வாறானதொரு சூழலில் சம்பந்தன் தற்போது புதிதாக ஒரு கதையையும் சொல்லி வருகின்றார். அதாவது, முஸ்லிம் மக்களில் ஒரு கணிசமான பகுதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள். இது தொடர்பில் சம்பந்தன் ஒரு சில கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருக்கின்றார். ஆனால், சம்பந்தனின் கருத்துக்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிரசு கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலேயே பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவில்லை. முஸ்லிம்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்பது ஒரு பெரியதொரு கேள்விக் குறியாகும் என்பதே அவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது. எவ்வாறெனினும் சம்பந்தன் நம்புவது போல் நடந்தால் அது கூட்டமைப்பிற்கு நன்மையே! ஆனால், கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன என்னும் கேள்வியிலிருந்துதான் அவர்கள் சிந்திப்பர். அதேவேளை, கூட்டமைப்பு போன்றதொரு தமிழ்த் தேசியவாத அரசியல் அமைப்புடன் முஸ்லிம்கள் இணைகின்றபோது, அது முஸ்லிம் தேசிய வாதிகள் மத்தியில் ஒரு துரோகச் செயலாக வர்ணிக்கப்படவும் வாய்ப்புண்டு. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடுதலைப் புலிச் சார்பு இப்போதும் மிகவும் தெளிவானது. சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஒருசிலர் அதற்கு மாறானவர்களாக இருக்க முடியும். ஆனால், கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் மீது மதிப்புக் கொண்டவர்கள்.

இம்முறை திருகோணமலை தேர்தல் களத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் நான்கு பேர் மூதூர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் திருகோணமலையில் போதிய அறிமுகம் இல்லாதவர்கள். திருகோணமலை தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் சம்பந்தன், யதீந்திரா மற்றும் திருமதி தர்மராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், எப்படியான பிரச்சார உக்திகளை பயன்படுத்தி கூட்டமைப்பினர் இரண்டு ஆசனங்களை பெறப் போகின்றனர் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு ஆசனம் இலகுவானது. ஆனால், இரண்டு கடினமானது என்பதுதான் தற்போதிருக்கின்ற நிலைமை. கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் 85 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அது நடக்குமா?

ஆனால், திருகோணமலை போன்றதொரு மாவட்டத்திற்கு இரண்டு தமிழ் பிரநிதித்துவங்கள் கட்டாயமானது. திருகோணமலை தமிழ் மக்கள், இரண்டு வகையான மேலாதிக்கத்திற்குள் சிக்கியிருக்கின்றனர். ஒருபுறம் சிங்கள மேலாதிக்கம், இன்னொரு புறம்; ஆட்சியாளர்களின் பங்காளர்களாக இருக்கின்ற முஸ்லிம் சமூகம். முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இப்படியானதொரு சூழலில் இரண்டு உறுப்பினர்கள் கிடைத்தால் அது நிச்சயம் திருகோணமலை தமிழ் மக்களுக்கு, முக்கியமாக பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நன்மையாக அமையும்.

இதேவேளை, மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப் புறங்களில் கடுமையான அதிருப்திகளும் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்திகளைத்தான் ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகின்றன. அண்மையில் தேர்தல் நிலைமைகளை அறிவதற்காக திருகோணமலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஊடக நண்பர் ஒருவர் குறிப்பிட்ட விடயம் மிகவும் மனவேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது. கட்டை பறிச்சான் பகுதியில் ஒரு முன்னாள் பெண் போராளி இரு காலையும் இழந்த நிலையில் ஒரு சிறிய கடையை நடத்தி வருகின்றார். இவருக்கு காலைக் கடன்களை கழிப்பதற்கு இன்னொருவரது உதவி தேவை. ஆனால், இவர் வசிக்கின்ற வீட்டில் மலசல கூட வசதியும் இல்லை. அதனை அமைப்பதற்கான வசதியும் அவர்களிடம் இல்லை. அருகில் இருக்கும் பற்றைக் காட்டிற்குள்தான் அவரை, அவரது தாயார் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இது தொடர்பில் ஒரு உள்ளூர் அரசியல்வாதி இதுவரை உதவ முன்வரவில்லை என்பதை கேட்ட போது கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் தொடர்பில் ஒருவருக்கு வெறுப்புத்தான் ஏற்படும். இப்படி கிராமப்புறங்களில் பல அதிருப்திகள் நிலவுகின்றன. இவையும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். திருகோணமலையில் இரண்டு உறுப்பினர்கள் இருக்கின்ற காலத்திலும் கூட பல விடயங்கள் நடக்கவில்லையே, இப்போது கிடைத்தால் போல் என்ன நடந்துவிடப் போகிறது என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சொல்லுவதும் உண்மைதான். இந்த விடயங்களை உற்றுநோக்கியதன் விளைவோ என்னவோ, திருகோணமலையிலுள்ள புத்திஜீவிகள் சரியானவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்னும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இரண்டு பிரதிநிதித்துவங்கள் என்பதல்ல முக்கியம், அவை சரியான பிரதிநிதித்துவங்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடம். அமெரிக்க மற்றும் இந்தியத் தரப்புக்கள் சதா அவதானித்துக் கொண்டிருக்கின்ற இடம். இப்படியானதொரு இடத்திலிருந்து நாடாளுமன்றம் செல்பவர்கள் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் குறித்து மட்டுமல்ல சர்வதேச அரசியல் முக்கியமாக புவிசார் அரசியல் விடயங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படியானவர்கள் நாடாளுமன்றம் சென்றால்தான் அரசை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்காமல் அமெரிக்க மற்றும் இந்திய தரப்புக்களின் உதவிகளை பெற்று தமிழ் மக்களில் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அப்படியானவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்னும் கருத்தும் வலுவடைந்து வருகிறது. முக்கியமாக சம்பந்தனுக்குப் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவரை அவரும் உருவாக்காத நிலையில்தான் இப்படியான அபிப்பிராயங்களை அவர்கள் வெளியிட்டுவருகின்றனர். எனினும், தற்போதைக்கு திருகோணமலை தேர்தல் களம் தொடர்பில் ஊகங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலைமையை அறிய தேர்தல் வரை காத்திருப்பது ஒன்றே தற்போதைக்கு ஒரே வழி.

நந்தன் அரியரத்தனம்