படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS
ஒற்றையாட்சியை தாண்டி வருவேன் என மைத்திரிபால கூட்டமைப்பிற்கு உறுதியளித்தது உண்மையா? என்ற எனது ஜூன் 22, 2015 திகதிய கட்டுரைக்கு நிறான் அங்கிற்றல் ஜூன் 29, 2015 அன்று பதில் அளித்திருந்தார். அவரது பதிலுக்கான எனது எதிர்வினை இது.
நிறான் அங்கிற்றலின் பதிலின் சாரம் இதுதான்:
- ஒற்றையாட்சியை தாண்டி வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பற்றி எம்.ஏ. சுமந்திரன் கூறிய சந்தர்ப்ப சூழலை பற்றி நான் முழுமையாக வாசகர்களுக்கு வழங்கவில்லை.
- சிங்களப் பேரினவாதியான அசோக அபேகுணவர்த்தனவின் புத்தகத்தில் தங்கியிருப்பது, அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது பிழை.
- அரசியலமைப்பில் உள்ள பொதுசன வாக்கெடுப்பை கோரும் பிரிவுகளை மாற்ற மாட்டேன் என்று சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சம்பந்தமான அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு மட்டுமே பொருந்தும். அது ஒற்றையாட்சி பற்றியதல்ல.
இவை மூன்றிற்குமான எனது சுருக்கமான பதில்கள்:
- மைத்திரிபால ஒற்றையாட்சியை தாண்டி வருவார் என்ற எதிர்பார்ப்பை எம்.ஏ. சுமந்திரன் தமிழர் மத்தியில் உருவாக்குகிறார்; அவ்வாறு அவர் தாண்டி வருவார் என்ற எதிர்பார்ப்புக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற பதம் நீக்கப்பட்டமையை சான்றாதாரமாக கொள்ளலாம் என்கிறார். அத்தகைய எதிர்பார்ப்பை உருவாக்குவது சரியா என்பதே எனது கட்டுரையில் நான் கேட்கும் கேள்வி. கட்டுரையின் இந்தக் கருப்பொருளுக்கு சுமந்திரன் குறிப்பிடும் தேர்தலுக்கு முன் இடம்பெற்ற சந்திரிக்கா – ரணில் – மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு பற்றி சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது குறிப்பிட்டமையை நான் சொல்லத் தவறியமை வாசகர்களுக்கு தெளிவுக் குறைவை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
(அந்த விவாதத்தில் இன்னும் பல சுவாரசியமான விடயங்கள் சொல்லப்பட்டன. அவை பற்றி எல்லாம் நான் எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. உதாரணமாக ஒற்றையாட்சியை நீக்காவிடின் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க வேண்டி வரும் என சுமந்திரன் அந்த விவாதத்தில் குறிப்பிட்டார். அதனைக் கேட்டபோது நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன். மஹிந்தவிற்கு ஆதரவா? தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருவது மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது போன்றது என்று கூறியவர்கள் மஹிந்தவுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதைப் பற்றியும் சிந்தித்திருந்தார்கள் என்பதை எப்படி விளங்கிக் கொள்வதென்று தெரியவில்லை).
ஒற்றையாட்சியை தாண்டி மைத்திரி வருவார் வந்துவிட்டார் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து சுமந்திரன் உருவாக்குகின்றார் என்பதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் இன்னும் தரலாம். எனது கட்டுரை உதயன் பத்திரிகையில் வெளிவந்த அன்று இரவே (ஜூன் 21) தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்ட சுமந்திரன், “ஒற்றையாட்சிக்குட்பட்டு தீர்வு காணப்பட முடியாது என்று அரசிற்கும் தெரியும், மைத்திரிபாலவுக்கும் தெரியும், ஜாதிக ஹெல உறுமயவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது” என்று கூறினார். ஜாதிக ஹெல உறுமயவும் ஏற்றுக் கொண்டுவிட்டது என்பது யாழ்ப்பாண விவாதத்திலும் சொல்லப்படாத புதுச் செய்தி. அதை ஒரு பக்கம் வைப்போம். நிறானின் முக்கிய குற்றச்சாட்டுக்கு வருவோம்.
- அசோக அபேகுணவர்த்தனவின் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதால் நான் அவரையும் ஜாதிக ஹெல உறுமயவையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் என்று நிறான் கூறுகிறார். நான் அசோக கூறுவதை அப்படியே ஒப்புவிக்கவில்லை. அசோக தனது நூலில் தமிழ் வாக்குகளை சிறிசேன இழந்து விடுவார் என்பதற்காகவே ஒற்றையாட்சியை சுமந்திரன் நீக்கச் சொன்னதாகக் கூறுகிறார். அதனை ஒரு பொருட்டாக நான் எனது கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை. ஒற்றையாட்சியை மறைத்து வைத்தோம் என்று அவர் கூறுவதையே நான் எனது கட்டுரையில் பிரதான பொருளாக எடுத்துக் கொண்டேன். அசோக அபேகுணவர்த்தன சிறிசேனவின் ஆட்சியில் வகிக்கும் முக்கிய வகிபாகத்தைப் பற்றியும் ஹெல உறுமய சிறிசேன மீது செலுத்தும் ஆதிக்கம் பற்றியும் விரிவாக எனது கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அவற்றை நிறானால் மறுக்க முடியவில்லை. ஹெல உறுமயவும் அசோகவும் சிறிசேன மீது செலுத்தும் தாக்கமே அவரை ஒரு பொருட்டாக எனது கட்டுரையில் எடுத்துக் கொண்டமைக்கான பிரதான காரணம். ஆனால், நிறான் சொல்வது போல் அசோக சொல்வது பொய் என்றும் வைத்துக் கொள்வோம். மைத்திரிபால ஒற்றையாட்சியை தாண்டி வரும் வாய்ப்பில் ஹெல உறுமய தாக்கம் ஏற்படுத்தும் தன்மையது என்பதால், ஹெல உறுமய இதை எப்படி சிங்கள மக்களிடம் வியாக்கியானப்படுத்துகிறது என்பதனைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியம் என்றே கருதுகிறேன். ஹெல உறுமய மீது சிறிசேன கூடுதலான அளவு தங்கியிருப்பதால் இது இன்னும் கூடுதல் முக்கியமாகின்றது. சிறிசேனவின் இந்தப் பக்கம் வாசகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கருதியே இந்தக் கட்டுரை எழுதினேன். பிழையான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களை பிழையான வழியில் கொண்டு செல்லாதீர்கள் என மாமனிதர் தராகி சிவராம் ஒரு முறை எழுதினார். மக்களிடம் உண்மையான அரசியல் விழிப்புணர்வை கொண்டு செல்லுங்கள் என்றார். அந்த சிந்தனையின் தாக்கமே எனது கட்டுரை.
நிறான் வேண்டுமென்றே இன்னொரு விடயத்தையும் கடந்து வருகிறார். நான் அசோக அபேகுணவர்த்தனவை மட்டும் மேற்கோள் காட்டவில்லை. ஒற்றையாட்சியைத் தாண்டி சிறிசேன வரமாட்டார் என்பதற்கு ஹெல உறுமயவோடு சிறிசேன போட்டுக் கொண்ட ஒப்பந்தம் பற்றியும் அதில் ஒற்றையாட்சியைப் பற்றி வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளமையையும் எனது கட்டுரையில் குறிப்பிடுகின்றேன். ஐ.தே.கவினது 2013 அரசியலமைப்பு வரைபுகளையும், அதில் ஒற்றையாட்சி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டியுள்ளேன். இவை எல்லாம் நிறானின் கண்களுக்குபடவில்லை. ஜனவரி 8க்குப் பின்னரான ஒற்றையாட்சியைத் தாண்டி சிறிசேன வரமாட்டார் என்பதற்கும் பல உதாரணங்களையும் தரலாம். குறிப்பாக, இவ்வருட யுத்த கொண்டாட்டங்களின் போது சிறிசேன ஆற்றிய உரையில் (19 மே 2015), நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதுகாப்பேன் என ஜனாதிபதி சிறிசேன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமராக பதவியேற்று நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய முதல் உரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்டு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், ஒற்றையாட்சியைத் தாண்டி சிறிசேன வருவார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது பிழை என நான் வாதிடுகிறேன்.
- அரசியலமைப்பில் உள்ள பொதுசன வாக்கெடுப்பை கோரும் பிரிவுகளை மாற்ற மாட்டேன் என்று சிறிசேன கூறியமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சம்பந்தமாக மட்டுமே அன்றி ஒற்றையாட்சி பற்றியதல்ல என்று நிறான் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 14ஆம் பக்கத்தை மேற்கோள் காட்டி வாதிடுகிறார்.
நேரடியாக பொருள் கொள்ளும் இடத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் எந்த அரசியலமைப்பு சீர்திருத்தமும் பொதுசன வாக்கெடுப்பிற்கு விடுமளவிற்கு திருத்தங்கள் கொண்டு வர மாட்டோம் என்பது தொடர்பாகவே இந்தப் பந்தி என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அது ஒற்றையாட்சியை தக்கவைப்பது தொடர்பிலும் மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக அசோக வழங்கும் பொருள் கோடலுக்கு இந்தப் பந்தி உதவி வழங்காது என்று முடிந்த முடிவாகக் கூற முடியாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இப்பந்திக்கு இதுதான் பொருள் என மைத்திரியின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சார வலைத்தளத்திலும் செய்தி வந்தது என்பது நிறானுக்குத் தெரியாமல் போய்விட்டது.
இன்னொரு விடயத்தையும் நிறான் கவனிக்கத் தவறுகிறார். சிறிசேனவின் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு பற்றி ஒரு வார்த்தை தானும் இல்லை. அதற்கென்றொரு தனி அத்தியாயம் இல்லை. ஆகவே, முதல் வரைபில் எங்கிருந்து (எந்த அத்தியாயத்தில் இருந்து) ஒற்றையாட்சி என்ற பதத்தை சுமந்திரன் வாதாடி நீக்கினார் என்ற கேள்வி எழுகின்றது. அரசியலமைப்பு பற்றி பேசப்படும் இடம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை சீர்திருத்தும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே (தேர்தல் விஞ்ஞாபனத்தின் அத்தியாயம் 1). அங்கு தான் ஒற்றையாட்சி என்ற பதம் சுமந்திரனின் தலையீட்டுக்கு முன் அதனது முதல் வரைபில் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அரசியல் தீர்வு பற்றி முதல் வரைவில் இருந்த முழு அத்தியாயத்தையும் சுமந்திரனின் தலையீட்டின் பெயரில் நீக்கி இருக்க வேண்டும். ஆனால், சுமந்திரன் அந்த பதத்தை மட்டும் நீக்கியதாகவே கூறுகிறார். இது தவறென்றால் வேறெங்கு விஞ்ஞாபனத்தில் இருந்து ‘ஒற்றையாட்சி’ என்ற பதம் நீக்கப்பட்டது என்பதனை நிறான் அல்லது சுமந்திரன் எமக்கு சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த பந்தியை (பக்கம் 14) முழுமையாக இங்கு தருகிறேன்: (நிறான் ஒரு பகுதியை மட்டுமே தந்திருந்தார்):
“The new Constitutional structure would be essentially an Executive allied with the Parliament through the Cabinet instead of the present autocratic Executive Presidential System. Under it the President would be equal with all other citizen before the law. I guarantee that in the proposed Constitutional Amendment I will not touch any Constitutional Article that could be changed only with the approval at a Referendum. I also ensure that I will not undertake any amendment that is detrimental to the stability, security and sovereignty of the country. My amendments will be only those that facilitate the stability, security and sovereignty of the country”.
மேற்படி பந்தியில் “I also ensure that I will not undertake any amendment that is detrimental to the stability, security and sovereignty of the country. My amendments will be only those that facilitate the stability, security and sovereignty of the country” என்ற பகுதியைத் தான் நிறான் தனது பதிலில் உள்ளடக்காமல் விட்ட பகுதி. நாட்டின் இறைமை, பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட எந்தத் திருத்தத்தையும் செய்ய மாட்டேன் என சிறிசேன உறுதியளிக்கிறார். இறைமையையும் ஒற்றையாட்சியையும் ஒன்றாக சிங்கள பௌத்த அரசியல் சித்தாந்தம் பார்க்கும் தன்மையது. ஒற்றையாட்சியைப் பற்றி இப்பந்தியில்தான் குறிப்பு இருந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் நீக்கியும் இருக்க வேண்டும். ஆகவே, நிறான் கூறுவது போல் “அரசியலமைப்பில் உள்ள பொதுசன வாக்கெடுப்பை கோரும் பிரிவுகளை மாற்ற மாட்டேன் என்று சிறிசேன கூறியமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சம்பந்தமாக மட்டுமே அன்றி ஒற்றையாட்சி பற்றியதல்ல” என்று கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை – இவ்விரண்டுமே விஞ்ஞாபனத்தின் ஒரே பகுதியிலேயே இருந்திருக்க வேண்டும்.
அரசியலமைப்பில் உள்ள பொதுசன வாக்கெடுப்பை கோரும் பிரிவுகளை மாற்ற மாட்டேன் என்று சிறிசேன எங்கு தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்திருந்தார் என்பது ஒருபுறமிருக்க அதனை சேர்த்ததன் விளைவு என்ன என்று அவர்கள் கூறும் பகிரங்க வியாக்கியானம் அரசியல் ஆய்வில் முக்கியமில்லையா? சிறிசேன மேற்கூறியவாறு தனது யுத்த வெற்றி கொண்டாட்ட உரையில் ஒற்றையாட்சியை தான் பாதுகாப்பேன் என்கிறார். ஹெல உறுமய தாம் ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்கவில்லை என்கிறது. சிறிசேனவை தனது அரசியல் ஆதிக்கத்திற்குள்ளும் வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் “பொதுசன வாக்கெடுப்பை கோரும் பிரிவுகளை மாற்ற மாட்டேன்” என்பதற்கு ஹெல உறுமய கொடுக்கும் வியாக்கியானம் இதன் உண்மையான மறைபொருள் அரசியலை விளங்கிக் கொள்வதற்கு முக்கியமானது என்று நான் கூறுவது எந்த வகையில் தவறாகும்? அல்லாவிடில் ஹெல உறுமயவை விட தாமே சிறிசேன மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டமைப்பு சொல்ல வேண்டும். இதை எத்தனை பேர் நம்பத் தயார்?
தமிழ் மக்களின் வாக்கு வேண்டும். அதற்காக மட்டுமே ஒற்றையாட்சி என்ற பதத்தை நீக்கினார்கள். அதேவேளை சிங்கள மக்களை கோவித்துக் கொள்ளக் கூடாது. அதற்காக அரசியல் தீர்வு பற்றி மௌனம் சாதித்தார்கள். (மறைமுகமாக ஒற்றையாட்சியை நீக்க மாட்டோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லியுள்ளதாக வியாக்கியானம் கொடுத்தார்கள்). இதைப் பற்றி கேள்வி கேட்ட வீரவன்சவிற்கும் விளக்கம் கொடுத்தார்கள். தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வெளிப்படையாகவே ஒற்றையாட்சி என்கின்றனர். இதில் வாய்ப்பும், இடைவெளியும் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. வாசகர்களுக்குத் தெரிகிறதா என்பதை அவர்களிடமே விட்டு விடுகிறேன்.
இறுதியாக ஓர் விடயம். நிறானது பதில் கட்டுரையின் இறுதி இரு பந்திகளில் நான் அசோக அபேகுணவர்த்தனவை மேற்கோள் காட்டியதால் தமிழ் அரசியல் தரப்புக்கள் சிலவற்றிற்கும் பௌத்த அதிதீவிரவாதிகள் இடையில் உடன்படிக்கை ஒன்று உண்டோ என்று நிறானுக்கு மீள சந்தேகம் வருகின்றது என்று கூறுகிறார். இத்தகைய கற்பனை வேடிக்கையாகவும் இருக்கின்றன. அதேவேளை, ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது. கூட்டமைப்பினர் தம்மை விமர்சிப்போர் மீது காட்டும் பிற்போக்குத்தனமான அரசியல் அணுகுமுறைக்கு ஒத்ததாக உள்ளது நிறானின் இந்த அபத்தமான சந்தேகம். கூட்டமைப்பை, சிறிசேனவை, ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்போரை, ஜெனீவா தீர்மானத்தின் வலு போதாது என விமர்சிப்போரை மஹிந்த ஆதரவாளர்கள் என்று காட்டும் முயற்சி தம் மீதான விமர்சனத்தை, கருத்தை கருத்தால் எதிர்கொள்ள விருப்பமில்லாதவர்களின் வாதம். ஒன்றில் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் அல்லாவிடில் நீங்கள் சிங்களப் பேரினவாதிகள் பக்கம் என்று கூறுவது அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின், நீ என்னோடு அல்லது எதிரியோடு என்ற பிற்போக்குத்தனமான அரசியல் வகையறாவைச் சேர்ந்தது. கூட்டமைப்பின் ஜனநாயகத்தின் எல்லைப் பரப்பு தமக்கு சாமரம் வீசுபவர்களோடு நின்று விடுகின்றது. தம்மை தமது தாராண்மைவாத சகாக்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக துரோகிப் பட்டம் சூட்டும் அரசியலை தாம் கடந்து வந்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதே துரோகி அரசியலை அந்த வார்த்தையை வெளிப்படையாக உச்சரிக்காமல் செய்கிறார்கள். போருக்குப் பிந்திய தமிழ் அரசியலின் பிரதான சாபக்கேடு இதுவே.
குமாரவடிவேல் குருபரனின் ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு உறுதியளித்தது உண்மையா? என்ற கட்டுரைக்கான நிறான் அங்கிற்றலின் “ஒற்றையாட்சியை தாண்டிவருவாரா மைத்திரிபால? என்ற கட்டுரைக்கான பதில் கட்டுரை.