படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS

குமாரவடிவேல் குருபரனின் “ஒற்றையாட்சியை தாண்டி வருவாரா மைத்ரிபால?” எனும் தலைப்பின் கீழ் ஓர் கட்டுரை வெளியானது. இதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற விவாதத்தினை மேற்கோள்காட்டி கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது.

இக்கட்டுரையிலே மைத்திரிபால சிறிசேன ஒற்றையாட்சியைத் தாண்டி வருவார் என சுமந்திரன் கூறியதாக எழுதப்பட்டு இருந்தது. இவ்வாறு குருபரன் மேற்கோள்காட்டும் இவ்விவாதத்தில் உண்மையிலேயே சுமந்திரன் என்ன கூறியிருந்தார் என்பதனை அவ்விவாதத்தின் காணொளியினை பார்வையிட்ட எவராலும் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும்.

குறித்த விவாதத்தில் சுமந்திரன் அரசியல் தீர்வு தொடர்பாக கூறிய கருத்துக்களின் சுருக்கத்தினை பகிர்தல் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். அவ்விவாதத்தினை இணையத்தில் பார்வையிடுபவர்களுக்கு அக்காணொளியின் 42ஆவது நிமிடத்திலிருந்து அவர் பகிரும் கருத்துக்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

அரசியல் தீர்வு தொடர்பான கேள்விக்கு சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் ஆதரவளிக்க முன் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக ஆகிய மூவரிடமும் எவ்வாறு ஓர் அரசியல் தீர்வு எட்டப்படலாம் என்று ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். பொதுத் தேர்தலுக்குப் பின்பதாக அதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு தரப்பினரும் இணங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் அவர் பேசுகையில் இவ்விணக்கப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஞாபகப்படுத்தியதன் விளைவாகவே ‘ஒற்றை ஆட்சி’ என்ற சொற்பதத்தினை ஜாதிக ஹெல உறுமயவின் செல்வாக்கினையும் மீறி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து ஜனாதிபதி சிறிசேன நீக்கியிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள், சில மத்திய அரச கட்டுப்பாட்டு அதிகாரங்களைத் தவிர்த்து, தாமாகவே தம்மை ஆளும் ஏனைய அதிகாரங்களை உடையவர்களாக தமது வாழ்க்கையினை கொண்டு நடாத்தக்கூடிய ஓர் தீர்வினையே வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ். விஜயத்தின்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் கேள்விக்குப் பதிலாக எதிர்கால தீர்வு தொடர்பாக இணக்கப்பாடொன்று இருப்பதாகவும், அதனை தான் நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்ததையும் சுமந்திரன் விளக்கியிருந்தார். அத்தோடு, சுமந்திரன் ஒரு திறவு அல்லது இடைவெளி ஒன்று நிகழ்காலத்தில் காணப்படுகின்றது என்றும், அது ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே என்பதுடன் அது நிறைவேறுமா அல்லது இல்லையா என்பதனை யாரும் உறுதிப்படுத்த முடியாது என்பதனை தெரிவித்திருந்தார். ஆனால், இச்சந்தேகங்களால், இருக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது விடுவது முட்டாள்தனம் என்பதனையும் விளக்கியிருந்தார்.

எனவே, குருபரனின் கட்டுரையில் “ஒற்றையாட்சியை தாண்டி சிறிசேன வருவார்” என்று சுமந்திரன் கூறியதாக கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது? சுமந்திரன் கூறிய கருத்தான அரசியல் தீர்வு தொடர்பான இணக்கப்பாட்டிற்கும்; (இது வாய்க்குமா இல்லையா என்று ஒருவராலும் உறுதியாக கூற முடியாது என சுமந்திரனே கூறிய பொழுதும்) குருபரன், சுமந்திரன் தெரிவித்ததாக கூறும் “ஒற்றை ஆட்சியை தாண்டி சிறிசேன வருவார்” என்ற கருத்திற்கும் இடையில் இருக்கும் பாரிய இடைவெளியினை வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

அது ஒருபுறமிருக்க சுமந்திரனுக்கு எதிராக குருபரன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டானது ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகர்களுள் ஒருவரான அசோக அபேகுணவர்தனவால் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, அதாவது சுமந்திரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தில் சுமந்திரன் நேர்மையான கருத்துக்களை பகிரவில்லை என்பதே. ஜனாதிபதி சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டமை குறித்து சுமந்திரன் கூறிய கருத்தோடு குறித்த புத்தகத்தில் அசோக அபேகுணவர்தன குறிப்பிட்டிருக்கும் “பொது வாக்கெடுப்பு தேவைப்படும் எந்தவொரு அரசியலமைப்புப் பிரிவையும் சிறிசேன மாற்ற மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது – இதன் மூலமாக ஒற்றையாட்சி என்ற வாசகத்தை எம்மால் மறைத்து வைக்க முடிந்தது” என்ற பகுதியை ஒப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்கு உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்திருக்கிறார் என்று குருபரன் குற்றம் சாட்டி இருக்கிறார். குருபரன் மேற்கோள் காட்டும் இப்புத்தகம் என்ன? அது ஜாதிக ஹெல உறுமய அமைப்பானது கடந்த ஜனவரி 2015 இல் அரசினை மாற்றி அமைக்க தாம் எவ்வாறு பங்களிப்பு செய்தோம் என்பதனை வெளிப்படுத்தி இருக்கும் ஒரு முயற்சியாகும். இதிலே ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களை வீரர்களாகவும் ஏனைய கட்சிகளின் பங்களிப்பை குறைவுபடுத்தியும் காண்பித்திருக்கிறது. இவையோ சாதாரண அரசியல் விளையாட்டுகள். ஆனால், அரசியல் ஆய்வாளர்களிடம், அதிலும் விசேடமாக தமிழ் அரசியல் ஆய்வாளர்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? ஜாதிக ஹெல உறுமய போன்றோரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதா? அல்லது அதன் குறை நிறைகளை ஆராய்வதா? துரதிஷ்டவசமாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரச்சாரங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அவசரத்தில் குருபரன் அப்புத்தகத்தின் குறை நிறைகளை ஆராய தவறியுள்ளார். அப்படி ஆராய்ந்திருப்பாராயின் அபேகுணவர்தனவின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்திருப்பார்.

இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாம் அதிகாரம் “ஓர் அரசியலமைப்பு சீர்திருத்தம்” குறித்து விளக்குகிறது. அதிலே மிக முக்கியமான மூன்று கருத்துக்கள் பகிரப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல், தேர்தல் முறை சீர்திருத்தம், மற்றும் சுதந்திரமாக இயங்கும் ஆணைக்குழுக்களை மீள் கொண்டுவருதல் என்பனவே. அதாவது, 19ஆம், 20ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றியதே. பொது வாக்கெடுப்பு குறித்தான பகுதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆங்கில பிரதியில் 14ஆம் பக்கத்தில் “எல்லையற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்” என்ற பகுதியிலேயே பேசப்படுகின்றது. (19ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பற்றியது)

அதிலே கூறப்பட்டிருப்பது:

“புதிய அரசியல் கட்டமைப்பானது, தற்போது இருக்கும் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி, அமைச்சரவையூடாக நாடாளுமன்றத்துடன் ஒன்றித்துச் செல்லும் நிறைவேற்றதிகார முறைமையை நிலைநாட்டும். இவ்வமைப்பில் ஜனாதிபதியும் சட்டத்தின் முன் ஏனைய பொதுமக்களுக்கு நிகராகவே இருப்பார். முன்மொழியப்பட்ட இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் பொது வாக்கெடுப்பு தேவைப்படும் எந்தவொரு அரசியலமைப்புப் பிரிவையும் தொடவே மாட்டேன் என்ற உறுதிமொழியினை வழங்குகின்றேன்.”

எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தை குருபரன் கவனமாக வாசித்திருந்தால், ஜாதிக ஹெல உறுமயவின் பிரச்சாரங்களை நம்புவதைக் காட்டிலும், பொது வாக்கெடுப்பு தேவைப்படும் எந்தவொரு அரசியலமைப்புப் பிரிவையும் தான் மாற்ற மாட்டேன் என்கின்ற ஜனாதிபதியின் கூற்று ஜனாதிபதி முறைமை தொடர்பான சீர்திருத்தத்துக்கு – அதாவது, அதிகாரப் பகிர்வுடன் தொடர்பில்லாத சீர்திருத்தத்துக்கு – மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்திருப்பார். ஜாதிக ஹெல உறுமய தங்களை சிங்கள பௌத்த வீரர்களாக காட்டிக்கொள்வதற்கு என்ன சொன்னாலும், ஜனாதிபதியின் இந்த உத்தரவு மறைமுகமாக ஒற்றையாட்சியை பின்கதவால் அறிமுகப்படுத்த கொண்டுவரப்பட்ட ஒன்றாக அமையவில்லை. மாறாக, ஜனாதிபதியின் இந்தக் கருத்தானது புதிய அரசில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அது ஒற்றையாட்சியுடன் தொடர்பற்ற ஆனால், பொது வாக்கெடுப்பை வேண்டிநிற்கும் ஜனாதிபதி முறைமை தொடர்பான அரசியல் அமைப்பு சட்ட மாற்றங்களை குறிப்பிடுவதாகவே பொதுவாகக் கருதப்பட்டது. இதனாலேயே 19ஆம் திருத்தச்சட்டத்தின் சில பகுதிகளுக்குப் பொது வாக்கெடுப்பு தேவை என உச்ச நீதிமன்றம் நிர்ப்பந்தித்தபோது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறு பொது வாக்கெடுப்பு தேவைப்படும் அம்சங்களை அகற்றுவதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக இந்த 19ஆம் திருத்தமானது ஓர் ஆரம்பம் மாத்திரமே என்றும், பொதுத் தேர்தலின் பின் புதியதொரு அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வந்திருந்தனர். அந்த புதிய சட்ட வரைபானது 19ஆம் திருத்த சட்டம் போலல்லாது பொது வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்படவேண்டும் என்பது தெளிவாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் பல தடவைகள் வலியுறுத்திய உத்தரவாதத்தை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக்கொள்ளவில்லை என்று தென்படவுமில்லை.

எனவே, இங்கு மூன்று விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவது, ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகர்களுள் ஒருவரான அசோக அபேகுணவர்தனவின் புத்தகமானது சுமந்திரன் ‘ஒற்றையாட்சி’ என்ற சொற்பதத்தின் நீக்கம் பற்றி கூறிய விடயங்களை உறுதிப்படுத்துகிறது. அதாவது, தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஒற்றையாட்சி’ என்ற சொற்பதம் ஏற்கனவே இருந்ததையும், பின்பு சுமந்திரனpன் தலையீட்டினால் அது நீக்கப்பட்டதையும், ஜாதிக ஹெல உறுமய கூட பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளது. இரண்டாவதாக, பொது வாக்கெடுப்பு தேவைப்படும் எந்தவொரு அரசியலமைப்புப் பிரிவும் மாற்றப்படாது என்ற கூற்று ஜனாதிபதி முறைமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுமே ஆகும். மூன்றாவதாக, தமிழ் அரசியல் விவாதங்கள் மீது ஜாதிக ஹெல உறுமயவின் துரதிஷ்டவசமான செல்வாக்கு, சிங்கள பேரினவாத தரப்பினருக்கும் சில தமிழ் தரப்பினருக்குமிடையே யாதேனும் உடன்படிக்கை இருக்கின்றதா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை தொடர்பான நகல் வரைபை எதிர்த்தும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதனை பகிஷ்கரிக்கவும், மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக கொண்டுவர சில தமிழ் தரப்பினர் செயற்பட்டமையினாலும் இவ்வாறான சந்தேகங்கள் மீண்டும் எழத்தொடங்கியது. யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து இன்றுவரை பேரினவாத அரசியல் சக்திகளுக்கு இடங்கொடாமல் விழிப்பாக இருந்த தமிழ் மக்கள், தொடர்ந்தும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டிய அவசியத்தினை சமீபகால அரசியல் விவாதங்கள் வலியுறுத்தி நிற்கின்றன.

இறுதியில், ஒரு விடயத்தில் குருபரனுடன் நான் உடன்படுகின்றேன் என்பதை சொல்லியே ஆகவேண்டும். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற வள்ளுவன் குரளை இறுகப் பற்றி இந்தத் தேர்தலை நாம் கடந்து வர வேண்டும்.

குமாரவடிவேல் குருபரன் எழுதி ‘மாற்றம்’ தளத்தில் வௌிவந்த “ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு உறுதியளித்தது உண்மையா?” என்ற கட்டுரை.

நிறான் அங்கிற்றல்