பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வட பகுதிக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின் போது நடந்தேறிய காரியங்கள் புதிய அரசின் ‘நல்லாட்சி’ குறித்து முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் பகுதியில் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் சேர்ந்து வட பகுதிக்கு சென்றிருந்த பிரதமர் விக்கிரமசிங்க, பிறகு ஒருவாரம் கடந்து தனியாக அதிகாரிகள் சகிதம் அங்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒருநாள் அல்ல மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைச் சந்திக்கவில்லை. பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் விக்னேஸ்வரனையும் காணமுடியவில்லை. ஆனால், அதற்கு முதல்வாரம் நடந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஏனைய தலைவர்களையும் அமைச்சர்களையும் முதலமைச்சர் முன்னின்று வரவேற்றதைக் கண்டோம்.
பிரதமர் பங்கேற்ற வைபவங்களில் முதலமைச்சரை மாத்திரமல்ல வட மாகாண சபையின் எந்தவொரு அமைச்சரையுமோ உறுப்பினரையுமோ கூட காணமுடியவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். பிரதமரின் அலுவலகத்திடமிருந்து தங்களுக்கு முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் தரப்பில் காரணம் கூறப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்துடன், அவ்வாறு தாங்கள் புறக்கணிக்கப்பட்டதால் முதலமைச்சர் அசௌகரியத்துக்கு உள்ளானதாகவும் தெரியவில்லை. இதேவேளை, தங்களது கட்சியின் நிர்வாகத்தில் இருக்கும் மாகாண சபையை பிரதமர் அவமதிக்கிறார் என்பதைத் தெரிந்திருந்தும் அவரின் நிகழ்வுகளில் பங்கேற்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கியதாகத் தெரியவில்லை. இது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலத்தில் எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. அது பின்னதாக ஆராயப்பட வேண்டிய விவகாரம்.
பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையேயான கசப்புணர்வுக்கான அடிப்படைக் காரணம் என்ன? விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை தமிழ்ப் பகுதிகளில் மட்டுமீறிய இராணுவப் பிரசன்னம் மற்றும் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து ஊசலாட்டத்துக்கு இடமில்லாத உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர். மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களின் போதும் சரி, பிறகு முதலமைச்சராக பதவியேற்றது முதல் இன்றுவரையிலும் சரி அதே நிலைப்பாட்டையே அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வடக்கில் அதீத இராணுவப் பிரசன்னம் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. அதனால், படை வாபஸ் அல்லது படைக்குறைப்பு இல்லாமல் வடக்கில் சிவில் நிர்வாகத்தை உருப்படியாக செய்ய முடியாது என்று அவர் ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாடுகளின் தலைவர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் இடையறாது கூறி வந்திருக்கிறார். வட மாகாண ஆளுநராக இராணுவப் பின்னணியுடைய ஒருவர் பதவி வகிப்பதற்கு எதிராக மாகாண சபையிலேயே தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் நிறைவேற்றியிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பிரதமர் விக்கிரமசிங்க வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டத் தயங்கவில்லை. அதுவே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கசப்புணர்வுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. விக்கிரமசிங்கவின் உறவுக்காரரான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வட பகுதி இராணுவ முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது படைக்குறைப்பை ஒருபோதும் செய்ய முடியாது என்று தெரிவித்த கருத்தை முதலமைச்சர் கடுமையாக கண்டனம் செய்திருந்தார். இத்தகைய பின்புலத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக தமிழ் நாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்த பிரதமர் விக்கிரமசிங்க, முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறித்து தனது அரசியல் அனுபவத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாதவகையில் கருத்துக்களை தெரிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முதலமைச்சரை ஒரு பொய்க்காரன் என்றும், யாழ்ப்பாணம் குறித்து நான் விக்னேஸ்வரனுடன் பேசுவதில்லை, நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேசுகிறேன் என்றும் அந்த நேர்காணலில் பிரதமர் கூறியிருந்தார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்குப் போகும்போது முதலமைச்சருடன் நான் பேசப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கசப்பு நிலையை நோக்கவேண்டும்.
அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடான நிலைப்பாடுகளும் இருந்தாலும் வட மாகாணத்தில் விவகாரங்களைக் கையாளும்போது பிரதமர் என்றவகையில், அதுவும் நல்லாட்சி பற்றி பரப்புரை செய்கின்ற ஒரு அரசை நடத்துகின்றவர் என்ற முறையில் விக்கிரமசிங்க மாகாண முதலமைச்சரையோ அவரது நிர்வாகத்தையோ அலட்சியம் செய்வதென்பது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறையாகும். வட மாகாண சபையை அதற்கு இருக்கின்ற அதிகாரங்களின் போதாமைகளுடன் என்றாலும் இயங்கவிடாமல் செய்த ராஜபக்ஷ ஆட்சியின் அடாவடித்தனமான அணுகுமுறையையே புதிய அரசும் கையாளுவதென்றால் ஜனவரி 8க்குப் பிறகு ஏற்பட்டிருக்கக்கூடிய மாறுதல் தான் என்ன?
மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு வடக்கிலிருந்து நேரடியாக அலரிமாளிகைக்கு வந்து அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டவர் விக்னேஸ்வரன். தமிழர் தரப்பில் பலத்த ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துடன் நல்லிணக்கப்போக்கை வெளிக்காட்டுவதற்கான முனைப்பில்தான் அவர் இவ்வாறு செய்துகொண்டார்.
அத்தகைய நயநாகரிகம் கொண்ட ஒரு முதலமைச்சருடன் நல்லிணக்கத்துடன் செயற்படுவதில் பிரதமருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தொடந்தும் விக்னேஸ்வரனைப் புறந்தள்ளும் வகையிலான கருத்துக்களையே பிரதமர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ராஜபக்ஷ ஆட்சியின் ஒருதலைப்பட்சமானதும் எதேச்சாதிகாரத் தனமானதுமான போக்கிலிருந்து முற்றிலும் விலகியதாக நல்லாட்சியை கொண்டுவரப்போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த விக்கிரமசிங்க, வட மாகாண விவகாரங்களைக் கையாளுவதற்கு பிரதமர் அலுவலகத்தில் விசேட அதிகாரியொருவரை நியமிக்கப்போவதாக தனது விஜயத்தின் இறுதியில் வடக்கில் வைத்தே அறிவித்திருந்தார். அப்படியானால், வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையும் முதலமைச்சரும் அமைச்சர்களும் எதற்கு? பிரதமர் சிந்திக்கக் கடமைப்பட்டவர்!
வீ. தனபாலசிங்கம்