படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம்
அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பாத மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம் என உறுதியளிக்கின்றது. அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுகளும் அந்த உறுதிமொழியை நம்புகின்றன. இந்த அரசு மாத்திரமல்ல, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் இருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் அல்லது ஜனாதிபதிகளும் அரசியலமைப்பில் உள்ள ஏனைய சட்டங்களைக் கூட உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது வெளிப்படை.
இராஜதந்திர நகர்வு அல்ல
நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் இதுவரை 18 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் 13ஆவது திருத்தம் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களுக்கு அதிகாரங்களை பரவாலக்கம் செய்கின்றது. ஆனால், அது அதிகார பகிர்வு அல்ல. 13 உருவாகுவதற்கு காரணமாக இருந்த இந்திய அரசுக்கு அது அதிகார பரவலாக்கமா? அதிகார பகிர்வா? என்பது நன்கு தெரியும். இந்த நிலையில், அந்த 13ஆவது திருத்தச்சட்டத்தையே தீர்வாக முன்வைக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தீவிரமாக செயற்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 13 முக்கியம் பெறுகின்றமைக்கு இந்தியாதான் காரணம். 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா ஜெனீவாவில் அழுத்தம் கொடுக்கின்றது.
இங்கு கேள்வி என்னவென்றால் ஒரு நாட்டின் அரசியலமைப்பில் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அந்த நாட்டுக்கு சர்வதேச அளவில் வற்றுபுறுத்துவது இராஜதந்திரமா? இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா கவனம் செலுத்துகின்றது அல்லது ஆரம்பம் முதல் பங்களிப்பு செய்கின்றது என்பது வேறு. மறுபுறத்தில் இந்தியாவின் முயற்சிகள் பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. இலங்கை விவகாரத்தில் இந்தியா பற்றிய விமர்சனம் எதுவாக இருந்தாலும் ஒரு நாட்டின் அரசியலமைப்பில் ஏற்கனவே ஏற்கப்பட்ட சட்ட மூலம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேசுவது அல்லது அது பற்றி சர்வதேச அளவிலான கூட்டங்களில் பேசவைப்பது இராஜதந்திரம் அல்ல. அரசியல் நாகரீகமும் அல்ல. புதிதாக ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதற்குத்தான் சர்வதேச அழுத்தங்கள் அவசியம்.
வேறு அரசியல் நோக்கங்கள்
இந்த நிலையில், ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள சட்டம் ஒன்றைப் பற்றி பேசுவதை ஒரு புதிய இராஜதந்திரமாக இந்தியா தற்போது அறிமுகப்படுத்தி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவினால் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது என்ற விடயத்தை மன்மோகன் சிங்க அரசு வலியுறுத்தியிருந்தது. பிரேரணையிலும் அது சேர்க்கப்பட்டது. தற்போது இந்தியாவின் நரேந்திர மோடியின் புதிய அரசும் அதனையே கூறுகின்றது. ஆக, 13 என்பதை பயன்படுத்தி அதனை இலங்கையுடனான ஓர் இராஜதந்திர அணுகுமுறையாகவும் தமிழர்களுக்காக பாடுபடுவதாகவும் இந்தியா உலகத்திற்கு காட்ட முற்படுகின்றது. ஆயுதப் போராட்டம் ஒன்றினால் நாட்டை பிரிக்க அனுமதிக்க முடியாது என்ற அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கொள்கை பிராந்திய அரசியல் நலன் சார்ந்தது. தேவையானால் ஆயுதங்களை கொடுத்து தீவிரவாதிகளை ஓர் அரசுக்கு எதிராக தூண்டிவிடுகின்ற பண்பும் அமெரிக்க – இந்திய ஜனநாயகத்தில் உண்டு. அதற்கு பல உதாரணங்களும் உள்ளன.
ஆனால், ஆயுதப் போராட்டம் ஒன்றினால் நாட்டை பிரிக்க முடியாது என்ற கருத்து தமிழ் ஈழ போராட்டத்திற்கு மாத்திரம் சரியாக பொருந்தி விட்டது. இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் பிராந்தியத்தில் யாருக்கும் அவசியமற்ற ஒரு தேசமாக இருப்பதுதான் அந்த கொள்கையின் பொருத்தப்பாட்டுக்கு காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால், தற்போது அதுவல்ல பிரச்சினை. தமிழ் ஈழ கொள்கையை கைவிட்டு, சமஷ்டி கொள்கையும் கைவிடப்பட்டுள்ளது. தமிழத் தேசிய கூட்டமைப்பு ஈழ கோரிக்கையை கைவிடுவதாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் கூட செய்து விட்டது. இதனால், இருக்கின்ற அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினாலே பாதிப் பிரச்சினைக்கு தீர்வு வந்து விடும் என்ற கருத்தை தயான் ஜயதிலகவும் கூறியிருந்தார்.
நடைமுறை அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் ஏனைய சமூகங்களும் குறைந்தபட்சமேனும் சம உரிமையுடன் வாழ முடியும். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் இருந்து அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. யாப்பில் இருக்கின்ற ஏனைய சமூகங்களுக்கான சட்டங்களை பிடிங்கி எடுப்பதுதான் இலங்கை அரசின் வரலாறு. 1948இல் சோல்பரி யாப்பில் இருந்த சிறுபான்மையோர் பாதுகாப்புக்கான 29ஆவது சரம் 1972ஆம் முதலாம் குடியரசு யாப்பில் நீக்கப்பட்டது முதல் 13ஆவது திருத்த சட்டத்தில் இருந்து காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டது வரையும் அது தொடர் கதைதான். இந்த நிலையில், இந்திய அரசு 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி ஜெனீவாவில் பேசுவது எந்தளவுக்கு பொருத்தமானது.
கூட்டமைப்பின் நிலைப்பாடு
13ஆவது திருத்தம் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று கூறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் வற்புறுத்தலினால் அதற்கு தற்போது இணங்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. யாப்பில் உள்ள சட்டம் ஒன்றை அமுல்படுத்தவது நாடாளுமன்றத்தின் வேலை. அதற்கு பேச்சு நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால், 13 என்பதை வைத்துக் கொண்டு இந்தியாவும் இலங்கையும் அதை ஒரு சர்வதேச மட்டத்திலான இராஜதந்திர பார்வைக்குள் கொண்டு சென்று இனப்பிரச்சினையை வேறு திசைக்கு மாற்றுகின்றன. இது ஒரு கோமளித்தனமான இராஜதந்திரம் என பகிரங்கமாக எடுத்துக் கூறுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் தயங்குகின்றது? முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட நடைமுறை அரசியலமைப்பில் இருக்கின்ற சட்டங்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்றுதான் கூறுகின்றார். ஆனால், அதற்குக் கூட அரசு இடமளிக்கவில்லை என்று கூறும் விக்னேஸ்வரன், இதனால்தான் ஆயதப் போராட்டம் எழுந்தது என்பதைக் கூட சொல்லாமல் சொல்லுகின்றார்.
13தான் விடையா?
30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினுடைய நியாயப்பாடு சம்பந்தனுக்கும் மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கும் ஏன் புலி எதிர்ப்பாளர்களுக்கும் கூட தற்போது புரிய ஆரம்பிக்கின்றது. அதனை அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அறியாமல் இல்லை. ஆனால், ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்ட முறை குறித்த விமர்சனங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை புதைக்க தமிழ்த் தலைமைகள் ஏன் இடமளிக்கின்றன? 1948இல் இன முரண்பாடு தொடங்கியது என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூட கூறப்பட்டுள்ளது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினால் ஒரு நாட்டை பிரிக்க இடமளிக்க முடியாது என்ற கருத்தை நியாயப்படுத்தும் தமிழ்த் தலைமைகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை இராஜதந்திர போராக மாற்றிய கோமாளித்தனத்தை ஏன் விமர்சிக்கத் தயங்குகின்றனர்? ஜனநாயக மறுப்பினால் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அந்தச் சமூகத்திற்கு ஜெனீவா சொல்லப் போகும் பதில் என்ன? 13 தானா?
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.